திசை மாறிய பறவை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
00:00

அம்மா ஹாலுக்குள் நுழைந்ததும், 'அம்மா... நாங்க கேள்விப்பட்டது நிஜமா?'
'வீட்டை வித்துட்டீங்களா?'
'எங்களுக்கு சொல்ல வேணாமா... நாங்கள்லாம் செத்தா போயிட்டோம்...' பிள்ளைகள் ஆளாளுக்கு எகிறினர்.
தேனம்மைக்கு ஆயாசமாக இருந்தது. நான்கு பேரில் ஒருவர் கூட, 'ஏம்மா முதியோர் இல்லத்திற்கு வந்திருக்கிறே... என் வீட்டுக்கு வாம்மா... உயிருக்கு போராடிக்கிட்டிருந்த அப்பா, இப்போ எப்படி இருக்கிறார்'ன்னு ஒரு வார்த்தை கேட்கலை.
பாசத்தைக் கொட்டி, சுயநல பேய்களை வளர்த்து இருக்கிறோமே என்று எண்ணி, அவர்களையே வெறித்து பார்த்தாள், தேனம்மை.
குங்குமமும், திருநீறும் துலங்கும் முகம்; மூக்குத்தி பளிச்சிட, கிள்ளி வைத்திருந்த கொஞ்சூண்டு மல்லிகைப் பூ, சிறிய கொண்டையில் சரிய, எளிய காட்டன் சோலையில் மங்களகரமாக திகழும் தேனம்மையின் வதனம், இன்று, வெறுப்பையும், விரக்தியையும் ஏந்தியிருந்தது.
''வாயைத் திறந்து பேசும்மா,'' படபடத்தான் மூத்தவன்.
''எவ்வளவுக்கும்மா வீட்டை வித்தீங்க,'' சீறினான் இளையவன்.
''நான் எவ்வளவுக்கு வித்தா உங்களுக்கென்னடா?''
''எங்களுக்கு என்னவா... நாங்க, உங்க பிள்ளைக இல்லயா?''
''நீங்களா என் பிள்ளைக...'' ஏளனமாக சிரித்த தேனம்மை, ''நான் வீட்டை வித்த விஷயம் தெரிஞ்சதுமே, இப்படி அடிச்சு புடிச்சு ஓடி வந்துருக்கீங்களே... பெத்த அப்பா, உயிருக்கு ஆபத்தான நிலையில போராடிக்கிட்டு கிடக்கிறார்ன்னு சொன்னப்போ... நீங்க, எங்க பிள்ளைகள்ன்னு உங்களுக்கு ஞாபகமே வரலயாப்பா... பக்கத்திலே இருக்கிற இவதான் அடிச்சு பிடிச்சு வந்துட்டாளா...''
''ஆபிசுல லீவு கிடைக்க வேணாமா...'' என்று மூத்தவனும், ''உடனே ஓடி வரணும்ன்னா, கையில பணம் வேணாமா...'' என்று இளையவனும் சொல்ல, ''புகுந்த வீட்டுல, 'பர்மிஷன்' வாங்கிட்டு தானே வரணும்,'' லேசாய் முணகினாள், மகள்.
''சரி... இப்போ என்ன விஷயமா, எல்லாரும் ஒண்ணா கூடி வந்து நிக்கிறீங்க?''
''நான் பில்டரை கூப்பிட்டுட்டு வந்து விலை பேசுனப்போ, 'வேணாம், முடியாது'ன்னு சொன்னே...''
''ஆமாம்... நீ யாருடா, என் வீட்டை விலை பேச...'' முகத்தில் அறைந்தது, தேனம்மையின் கேள்வி.
நால்வரும் விக்கித்து நின்றனர்; தேனம்மையின் இந்த முகம் இவர்களுக்கு புதுசு.
''அம்மா... நீ ரொம்பவே மாறி போயிட்டே,'' முணுமுணுத்தாள், மகள்.
''என்ன, பிள்ளைங்க நீங்கள்லாம்... செத்துப் பொழைச்சிருக்கிறாரு உங்க அப்பா... அவர பத்தி ஒரு வார்த்தை கேக்கல; வந்ததுல இருந்து, 'வீட்டை வித்துட்டியா, வித்துட்டியா'ங்கிற பாட்டை தான் படிக்கிறீங்களே தவிர, 'எப்படிம்மா இருக்கீங்க, அப்பா நல்லா இருக்காரா'ன்னு ஒரு வார்த்தை கேட்கல...'' என்றாள், வெறுப்புடன்!
அப்போதுதான் நால்வருக்குமே உறைத்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்; சங்கடம் நிறைந்த அமைதி, அவ்விடத்தில் சூழ்ந்தது.
''கேட்கணும்ன்னு தான் நினைச்சேன்...'' என்று இழுத்தான், மூத்தவன்.
''அப்பா எப்படிம்மா இருக்காங்க?'' என்றான், கடைசிகாரன்.
''தப்பா எடுத்துக்காதம்மா... ஏதோ ஒரு டென்ஷன்,'' என்றான், இரண்டாமவன்.
எதையும் காதில் வாங்காதவளாய் அமர்ந்திருந்தாள், தேனம்மை.
அன்று, கணவரை, மருத்துவமனையில் சேர்க்கும் வரை, 'நமக்கு ஒண்ணுக்கு மூணு ஆம்பள பசங்க இருக்காங்க. அப்பாவுக்கு முடியலன்னதுமே, ஓடோடி வந்து தாங்க மாட்டாங்களா...' என்று தைரியமாகவே இருந்தாள், தேனம்மை. வெறும் ஜுரம் என்பது, சிறுநீரக பிரச்னை என்று தெரிந்ததுமே, நால்வருக்கும் தனித்தனியே போன் செய்து கதறித் தீர்த்தாள்.
அப்போது கூட, பிள்ளைகள் தோள் கிடைக்கும் என்றுதான் பெருமையாக நினைத்திருந்தாள். ஆனால், 'அட்மிட்'டாகி ஒரு வாரம் கழித்து, ஒருமுறை, 'டயாலிசிஸ்' ஆனதும், நால்வரும் குடும்பத்தோடு ஒன்றாக வந்து சேர்ந்த போதும் கூட, நம்பிக்கை இழக்கவில்லை, தேனம்மை. யானை பலம் வந்தது போல உணர்ந்தாள்.
'நால்வரில் ஒருவர் சிறுநீரகம் கொடுத்தால் கூட, உயிருக்கு ஆபத்தின்றி போகும்...' என்று டாக்டர் சொன்னதும், சந்தோஷமாக தலையாட்டினாள், தேனம்மை.
ஆனால், நடந்தது வேறு; ஏதேதோ காரணம் சொல்லி, நால்வருமே இதிலிருந்து விலகுவதிலேயே குறியாக இருந்தனர். சுலபமாக, 'புகுந்த வீடு அனுமதிக்காது...' என்று கூறி விட்டாள் மகள். மூவருடைய மனைவியரோ, தத்தம் கணவன்மாரை அடை காத்தனர்.
ஒரு தடவை, 'டயாலிசிஸ்' பண்ண ஆகும் செலவு, மூவரையும் பயமுறுத்தியது. தம் தலையில் விழுமோ என்ற பயம் பகிரங்கமாகவே தெரிந்தது. தவித்துப் போனாள் தேனம்மை; இதில், மூத்தவன், 'என்னம்மா இது... இவ்ளோ நாளா ஒரேயொரு கிட்னியை வச்சுதானா அப்பா மேனேஜ் பண்ணியிருக்கிறாரு... இன்னொன்னு என்னாச்சு, தொலைச்சிட்டாரா...' என்று சிரிக்க, கூடவே, மற்றவர்களும் சிரித்தனர்.
அப்போது தான் வெடித்தாள் தேனம்மை...
'எப்படிடா இருக்கும்... அந்த ரெண்டில ஒண்ணை வித்துதாண்டா உன்னை காப்பாத்துனாரு உங்கப்பா... தலைப் பிள்ளே சாகக் கிடக்கிறான்னு தெரிஞ்சதுமே, கொஞ்சம் கூட யோசிக்காம, கர்ண மகாராஜா, தன் உடம்புலேயிருந்து கவச குண்டலத்தையே அறுத்துக் குடுத்தாற் போல, தன்னோட உடல் உறுப்பையே அறுத்து, உனக்காக வித்தவருடா உங்கப்பா... அந்த பணத்துலே தான் உனக்கு உயிர் பிச்சை கிடைச்சுது...' என்று பொரிந்த போது, நால்வருமே அதிர்ச்சியில் உறைந்தனர்.
சட்டென சுதாரித்த மூத்தவனின் மனைவி, 'இவருடைய சிகிச்சைக்கு, மாமா கிட்னியை வித்தது எல்லாம் பழைய கதை; ஆனா, இப்போ இவருக்கு, பி.பி., சுகர்ன்னு ஆயிரம் கம்ப்ளைன்ட்; என்னா பண்றது... இவர நம்பி நாங்க மூணு பேரு இருக்கோமே...' என்று நீட்டி முழக்கினாள்.
இரு கை சேர்த்து கும்பிட்டு,'போதும்மா... போதும்; என் புருஷனை நான் காப்பாத்திக்கிறேன்; வந்தீங்க, பார்த்தீங்கள்ல இப்ப கிளம்புங்க... ' என்றாள் தேனம்மை.
பின், தன் கணவரின் பால்ய சினேகிதரும், வக்கீலுமான சட்டநாதன் பக்கம் திரும்பி, 'அண்ணே... மண் குதிரைகளை நம்பிட்டேன்; 'டோனர்' கிடைக்கிறாங்களான்னு எங்காவது முயற்சி பண்ணுங்க...' என்றாள், உடைந்த குரலில்!
நால்வரும் எதுவுமே பேசவில்லை; மறுநாள், வீட்டை விற்பதற்காக, பில்டர் ஒருவரை அழைத்து வந்தான், மூத்தவன்.
ரவுத்திரமானாள், தேனம்மை.
அதிலும், இளையவன் அசால்ட்டாக, 'டயாலிசிஸ் பண்ணிக்கிட்டே இருந்தா செலவு தாங்காதும்மா... இந்த வீட்டை ஒரு கோடிக்கு பேசியிருக்கேன்; உங்களுக்கும் ஒரு, 'ப்ளாட்' கொடுத்துடுவார். ஒரு கோடியை, அஞ்சு பங்கா பிரிச்சு கொடுத்திடுங்க. அப்புறம் ஒரு விஷயம், அப்பாவை கவர்ன்மென்ட் ஆஸ்பிடலில் சேர்த்துடுங்க; அதுதான் நல்லது...' என்று பேசிக் கொண்டே போனவனை, 'நிறுத்துடா...' என்ற அம்மாவின் குரல்,
மிரள வைத்தது.
'நீ யாருடா... என் வீட்டை விக்கிறதுக்கும், பங்கு போடவும்...' என்றாள்.
'பளீர்' என்று கன்னத்தில் அறைந்தது போன்று இருந்தது, அவனுக்கு!
'அப்படி மூர்க்கமாய் இருந்தவள், இப்போது எப்படி வீட்டை விற்றாள்... அந்த பணம் எங்கே... ஏன் இப்படி, 'ஓல்ட் ஏஜ் ஹோம்'க்கு வந்தாள்... அப்பாவுக்கு சரியாகி விட்டதா, 'டோனர்' கிடைத்து விட்டாரா...' மனதை பல கேள்விகள் வண்டு போல குடைந்தன.
அப்போது அங்கு வந்த வக்கீல் சட்டநாதன், ''தேனும்மா... இங்கேயா இருக்கே... இந்தா இதில, ஒரு கையெழுத்து போடு,'' என்று எதையோ நீட்டினார்.
அவற்றில் கையெழுத்திட்டாள், தேனம்மை. ஒவ்வொருவர் பெயரிலும், லட்சம் ரூபாய் என்று கையெழுத்திடப்பட்ட காசோலைகளை எடுத்து அவர்களிடம் நீட்டினாள்.
வாங்கி, அதன் மீது கண்களை ஓட்டிய மூத்தவன், ''என்னம்மா... பிச்சை போடறீங்களா...'' என்றவாறே மேஜை மீது காசோலையை விசிறினான்.
''ஒரு கோடி ரூபாய்க்கு வித்துட்டு, பிள்ளைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய பிச்சை போடற தாயை, நான், இப்போதுதான் பாக்கிறேன்,'' துள்ளினான், இளையவன்.
''ஏண்டா துள்ளுறீங்க... அமைதியா இருங்க; வீடு, 50 லட்சம் ரூபாய்க்குத் தான் போச்சு,'' என்றார், சட்டநாதன்.
'என்ன...' என்று அவர்கள் அதிர்ச்சியுடன் கூவ, ''ஆமாம்பா... உங்கம்மாவே இஷ்டப்பட்டு, 50 லட்சம் ரூபாய்க்கு வேத பாடசாலைக்கு கை மாத்திட்டாங்க,'' என்றதும், 'உங்களுக்கு பைத்தியமாம்மா...' என்றனர், கோரஸாக!
''ஆமாம்... அப்படிதான் வச்சுக்கங்க. என் வீடு, என் இஷ்டம்; இது கூட உங்களுக்கு தரணும்ங்கிற அவசியம் இல்ல; போனாப் போகுதுன்னு தரேன்,'' என்றாள், தேனம்மை.
'எங்களுக்கு இந்த பிச்சைக் காசு தேவையில்ல...' என்றனர்.
''சரி... வேணாம்ன்னா குடுங்க... எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்ல.''
''எதுக்காக வேத பாடசாலைக்கு அடிமாட்டு விலைக்கு வித்தே... எங்ககிட்ட சொல்லியிருந்தா, நல்ல விலைக்கு வித்துருப்போம்ல்ல...'' என்றான், கடைசி மகன்.
''இங்க பாருங்கடா... அந்த வீடு, என் புருஷன் சொந்த சம்பாத்தியத்திலே கட்டினது. அதுல இருக்கிற ஒவ்வொரு கல்லிலும் எங்க வியர்வையோட வாசம் இருக்கு. அதை, சும்மா கூட கொடுப்பேன்; அதை கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. உங்களுக்கு செய்ய வேண்டிய கடமைய செஞ்சு முடிச்சாச்சு; கிளம்புங்க,'' என்றாள், தீர்க்கமாக!
''என்ன மாமா இது...''
''இங்க பாருங்கப்பா... உங்கம்மாவுக்கு தோட்டத்தை, வீட்டை இடிச்சு ப்ளாட் போடறதுல இஷ்டமில்ல; உங்கப்பாவுக்கு உடம்பு முடியாத இந்த நிலையில, 'பென்ஷனை' மட்டும் வைச்சு, அவங்களால சமாளிக்க முடியல.
''நீங்களும் எனக்கு என்னன்னு போயிட்டீங்க; ஒருத்தருமே பணம், சரீர உதவின்னு செய்ய முன் வரல. உங்கம்மா என்ன செய்யும், புருஷனை காப்பாத்திக்க வேணாமா... ஒரு, 'டோனர்' கிடைச்சார்; அவருக்கு பணமுடை. அந்த சமயம், வேத பாடசாலைக்காரங்க படிக்கிற பிள்ளைகளுக்கு இந்த இடம் தோதா இருக்கும்ன்னு கேட்டாங்க... வேத பாடசாலைதானே... அதென்ன, கான்வென்ட் ஸ்கூலா... அவங்க, '50 லட்சம் தான் தரமுடியும்; அவ்ளோதான் வசதியிருக்குன்னு சொன்னதும், உங்கம்மாவும் மன திருப்தியோட போதும்ன்னு சொல்லிருச்சு. செலவு போக, மிச்சத்தை வங்கியிலே போட்டாச்சு. அதுலதான், உங்களுக்கு ஆளுக்கொரு லட்சம்,'' என்றார், சட்டநாதன்.
''நான்சென்ஸ்; வேத பாடசாலையாம்... எந்த காலத்துலே இருக்குறீங்க...'' என்றாள் மூத்தவன்.
''கலி காலம்தான்; சுயநலக்கார பிள்ளைகளை பெத்த பாவத்தை கரைச்சுக்க வேணாமா...'' பட்டென்று சொன்னாள், தேனம்மை.
''நான் வாழ்ந்த வீட்டுல, வேத கோஷம் முழங்கினா, போற வழிக்கு புண்ணியம்ன்னு தோணுச்சு; காசாசை பிடிச்சவன் எவனும், நான் பார்த்து பார்த்து வளர்த்த தோட்டத்தை அழிச்சுட்டு, கட்டடம் கட்ட வேணாம்ன்னு நினைச்சேன். சும்மாவே குடுத்திருக்கலாம்; ஆனா, என் பூவையும், பொட்டையும் காப்பாத்திக்கணுமே...
''நாலு பெத்து என்ன பிரயோஜனம்... மனசுலே ஈரம் இல்லாத ஜென்மங்கள்... எனக்கு உதவறதுக்கு வந்த இன்னொரு பாவப்பட்ட ஜென்மத்தையும் காப்பாத்துற பொறுப்பு இருந்தது. பேராசைப் படாம, கிடைச்சதே போதும்ன்னு வாங்கி திருப்தி பட்டுக்கிட்டேன். 'தென்னைய வச்சா இளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீருன்னு' சும்மாவா பாடி வச்சாங்க... போதும்டா சாமி; போயிட்டு வர்றீங்களா... எனக்கு நிறைய வேலை இருக்கு,'' தேனம்மையின் கை, வாசலை நோக்கி நீண்டது.
கனிந்து நின்ற தாய்மை மறைந்து, புதிய கம்பீர இறுக்கம் நிறைந்த புதுமை அவதாரம் அங்கு காட்சியளித்தது.

ஜே.செல்லம் ஜெரினா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
13-ஆக-201803:06:06 IST Report Abuse
Manian நல்ல நடை முறையில் ரை உள்ள நன்றி கெடட பிள்ளைகளின் கதை. தன கணவனின் சுய சம்பாத்தியம், ஆகவே இந்த நாதாரிகளுக்கு எதுவும் தர வேண்டாம் என்று புரிந்து கொண்ட அந்த தாய் உண்மையிலேயே போற்றத்தக்கவள். அமெரிக்காவில் உயில் எஸ்குத்தும்போது, சண்டை போடும் பிள்ளைகளுக்கு எந்த சொத்தும் கிடையாது என்று எழத முடியும் என்றும், தான் அவ்வாறு செய்ததகா நன்பர் ஒருவர் சொன்னார். பரம்பரை சொத்தில்தான் பங்குண்டு உண்டு என்பது நம் நாட்டு சட்டம். இதை புரிந்து கொள்ள வாய்த்த வக்கீலும் போராதாக்கவரே. ஒரு நல்ல கதை மூலம் சடட நுணுக்க அறிவுரைகளை கதை மூலம் எழுதிய ஆசிரியர் போற்ற தக்கவர். எஸ்ஸ்த்துதால் சமுதாயத்தை மற்ற முடியும் என்பது இதுதான். பெற்று தனக்கு கிட்னி தந்த தகப்பனை மதிக்காத, அது பழய கதை என்று சொன்ன மருமகளை வேலைக்கு மாற்றாமல் விட்டது தேனம்மை செய்யாத தவறு. கணவன் இருக்கும்போதே தாயை மதிக்காத ஜென்மங்கள் தாயையும் தெருவில் நிறுத்துவார்கள் என்பதை புரிந்து கொண்ட படிக்காத மேதை. இன்னொரு உண்மையும் இருக்கிறது. இரெண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால், நடுக்குழந்தைகள் தாங்கள் தகப்பன்-தாய் அன்பை பெறவில்லை என்று நண்பர்களி நாடுவார்கள், இது போல் நடப்பார்கள் என்று மேல் நாட்டு ஆராச்சியும் கூறுகிறது. சம்மர் முப்பதுக்கும் மேற்படட குடும்பங்களில் இதை நேரில் கண்டுள்ளேன். பாசம் என்பது வேறு, அன்பை புரிந்து கொண்டு பதில் அன்பு செலுத்துவது வேறு. இது போன்று ஒவொரு பிரச்சினைக்கும் ஆக்கப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக எழுத்தாளர்கள் எழுவார்களானால், வரும் காலா அச்சுமுதாயம் அதை உணர்ந்து கொள்ளும். ஆசிரியருக்கு நன்றி.
Rate this:
Manian - Chennai,இந்தியா
17-ஆக-201807:46:00 IST Report Abuse
Manianசில காலம் முன்பு வரை,ஒருவர் இறந்துவிடடால், அவரது வாரிச்சுக்களுக்கு எதுவுமே கிடைக்க விடாமல், அவநேர போயாச்சு, அதிர்ஷ்டம் கெடடவளே. இதெல்லாம் ஒனக்கெதுக்கு என்று விதவையிம்ன் பொருல்களை நில புலங்களை சொந்தங்கறார்களே- அன்னான், தம்பி, நாத்திகள் திருடுகிக கொள்வார்கள். இதில் ஜாதி-மத-பேதம் கிடையாது. தற்போது படித்த பெண்கள் ஒருவாறு சமாளித்துக் கொள்கிறார்கள். கணவனையம் இழந்த பல பெண்கள் வாழ்வை இந்த சமுதாயம் சப்தம் இல்லாமல் நாசம் செய்திருக்கிறது. தேனாம்பிகையும், அவர்களுக்கு உதவி செய்த வக்கிலும் தற்போதும் தேவை என்பதை இந்த கதை சொல்லிவிட்ட்து. இதை நமக்கு தெரிந்த வயதான நாலு பேர்களுக்கு சொல்வதே நாம் அப்பாவி பெற்றோர்களுக்கு செய்ய்யும் உதவி. ஒரு குடும்பத்திடம் இந்த கதையை காட்டி அந்தமாவை காப்பாறிவிடடேன் . நான் நேரில் சொல்வதை விட இந்த கதை அதை செய்துவிட்ட்து....
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
12-ஆக-201816:36:04 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> FUNTAAAAASTIK REJINA ELLORUKKUM THEIRIYAVENDUM INTHA AVALAKASHANAM KAASU VERIPITICHCHAPILLAIKALAIN PERAASAIKKU VACHCHANGAMMA ANDH DHENU AMMAAL
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
12-ஆக-201806:47:43 IST Report Abuse
 nicolethomson செம ஜெரினா மேடம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X