படையப்பா - இரண்டாம் பாகத்தில் ரஜினி!
பெரும்பாலும், இரண்டாம் பாகம் படங்களில் நடிக்க விரும்பாத ரஜினி, பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை, சுரேஷ் கிருஷ்ணா சொன்னபோது மறுத்தார். இப்போது, கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன கதை பிடித்து விட, அடுத்தபடியாக, அவர் இயக்கத்தில், படையப்பா-2வில் நடிக்க தயாராகி விட்டார். கபாலி மற்றும் காலா படங்களில், ரஜினிக்கான, 'மாஸ் ஓப்பனிங்' மற்றும் 'பில்டப்' காட்சிகள் இல்லாத நிலையில், இப்படத்தில், ரஜினியை அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் பாணியிலேயே, 'செம மாசாக' காண்பிக்கப் போவதாக கூறுகிறார், கே.எஸ்.ரவிக்குமார்.
— சினிமா பொன்னையா
'கெஸ்ட் ரோலில்' நடிக்கும் நடிகைகள்!
சிவகார்த்திகேயனுடன், ரஜினிமுருகன் மற்றும் ரெமோ படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தற்போது, சிவகார்த்திகேயன் நடித்துள்ள, சீமராஜா படத்தில், நட்புக்காக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். அதேபோல், விஜய சேதுபதியுடன், பீட்சா மற்றும் சேதுபதி படங்களில் நாயகியாக நடித்த ரம்யா நம்பீசனும், தற்போது, விஜயசேதுபதி நடித்து வரும், சீதக்காதி படத்தில், அவருக்காக ஒரு, 'கெஸ்ட் ரோலில்' நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆள் அறிந்து ஆசனம் போடு, பல் அறிந்து பாக்குப் போடு!
— எலீசா
சூரியின் பரோட்டா சென்டிமென்ட்!
சினிமாவில் காற்றுள்ளபோதே துாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து, மதுரையில் ஓட்டல் திறந்துள்ளார், தமாசு நடிகர், சூரி. அதனால், படப்பிடிப்பு இல்லாத நாட்களில், விமானத்தில் மதுரைக்கு பறந்து விடுகிறார். மேலும், தன் திரையுலக வாழ்வில் பரோட்டா காமெடி தான் திருப்புமுனையாக அமைந்தது என்பதால், அந்த சென்டிமென்ட், ஓட்டல் வியாபாரத்திலும், 'ஒர்க்-அவுட்' ஆகும் என்று பரோட்டாவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அந்த வகையில், சூரியின் ஓட்டலில், பரோட்டா ஸ்பெஷல் உணவு!
— சி.பொ.,
தமிழில் ஆல்பம் தயாரிக்கும், மடோனா!
பிரேமம் மலையாள படத்தில் நடித்து பிரபலமானவர், மடோனா செபஸ்டியன்; இவர், காதலும் கடந்து போகும் மற்றும் கவண் படங்களைத் தொடர்ந்து, தற்போது, தமிழில், ஜூங்கா படத்தில் நடித்துள்ளார். மேலும், நடிப்பு மட்டுமல்லாமல், பாடுவதிலும் திறமையுள்ளவர். அதனால், தான் நடிக்கும் படங்களில் பாட வாய்ப்பு கேட்டு வரும் அவர், விரைவில், தமிழில் ஓர் ஆல்பம் தயாரிக்கப் போவதாகவும், தன் இசை திறமையை இசையமைப்பாளர்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக, இந்த ஆல்பத்தின் அனைத்து பாடல்களையும் தானே பின்னணி பாடப் போவதாகவும் கூறுகிறார். ஆசை பெருக அலைச்சலும் பெருகும்!
— எலீசா
பாடகியை கவர்ந்த, ஏ.ஆர்.ரஹ்மான்!
ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் 127 ஹவர்ஸ் ஆகிய ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்திருப்பவர், ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசையில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்பது உலகப் புகழ் பெற்ற பாடகி, செலினா கோமசின் ஆசை; இதை, ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள செலினா கோமஸ், 'உலக அளவிலான எத்தனையோ இசையமைப்பாளர்களின் இசையில் பாடியபோதும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், ஏதோ ஒருவித ஈர்ப்பு என்னை இழுத்துக்கொண்டே இருக்கிறது. அதனால், அவரது இசையில், லயித்து பாட வேண்டும் என்ற பேரார்வத்தில் இருக்கிறேன்...' என்று கூறியுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
மூன்றாம் தட்டிலேயே நிற்கும் டார்லிங் நடிகையை, இரண்டாம் தட்டில் ஏற்றி விட யாருமே முன்வரவில்லை. அதனால், சில நடிகர்களை நம்பி, ஓர் ஆண்டை விரயம் செய்த நடிகை, தற்போது, நரைமுடி தயாரிப்பாளர்கள் சிலரது, 'அன்பு'க்கு பாத்திரமாகி, அடுத்த கட்டத்துக்கு பயணிக்கத் துவங்கியுள்ளார்.
''ஹலோ... நிக்கி கல்ராணி மேடமா... நான் உங்க ரசிகன் பேசறேன். மரகத நாணயம் படத்துக்கு பின், வேறு எந்த படத்திலேயும் உங்கள காணலயே...''
''நான், இப்ப, சார்லி சாப்ளின் - 2 படத்தில் நடிச்சிட்டு இருக்கேன்,'' என்று கூறியிருக்கிறார்!
புது வரவு நடிகைளால் மார்க்கெட்டில் பின்தள்ளப்பட்டுள்ளார், பையா நடிகை. இருப்பினும், அவரது திறமையை பாராட்டி, சில கோலிவுட் இயக்குனர்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர். அதனால், மொத்தமாக மும்பைக்கு ரயிலேறி விடவேண்டியது தான் என்று நினைத்திருந்த நடிகை, 'இத்தனை காலமும், 'கவர்ச்சி' நடிகையாக வலம் வந்தோம்; இனி, திறமைசாலி நடிகையாக இன்னொரு ரவுண்டு வருவோம்...' என்று கோலிவுட்டில் மீண்டும், கூடாரம் போட்டுள்ளார்.
''டைரக்டர் சார்... நான் தமன்னா பேசறேன்; என் திறமையை மதிச்சு, உங்க படத்துல நடிக்க கூப்பிட்டதற்கு நன்றி, சார்... நீங்க சொன்னபடியே, துக்கடா உடைகளுக்கு குட்பை சொல்லிட்டு, தமிழ்நாட்டு, தமிழச்சி போல சேலை கட்டிக்கிட்டே நடிச்சிடுறேன்,'' என்று கூறியுள்ளார்!
அவ்ளோதான்!