உயிரை காப்பாற்றிய ஓலை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
உயிரை காப்பாற்றிய ஓலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
00:00

வடமொழியில், காவியங்கள் எழுதிய பலரில், குறிப்பிடத் தகுந்தவர், மகா கவி பாரவி.
இவர், தன் மனைவி ரசிகாவுடன், மாமனார் வீட்டில் வாழ்ந்த காலத்தில், மாடுகள் மேய்ப்பது வழக்கம்.
மாடுகளை மேய்ச்சலில் விட்டு, மரத்தடியில் அமர்ந்து, இலைகளில் எழுத்தாணியால், பாடல்களை எழுதிக் கொண்டிருப்பார், பாரவி. அப்போது உருவானது தான், வடமொழியில் பிரபலமான, 'கிராதார்ஜுனியம்' எனும் காவியம்.
ஒருநாள், பாரவியிடம் வீட்டு செலவிற்குப் பணம் கேட்டார், ரசிகா; பாரவியிடம் காசில்லை. அதனால், ஓர் ஓலையில், தாம் எழுதி வைத்திருந்த பாதி ஸ்லோகத்தை மனைவியிடம் தந்து, 'இதை யாரிடமாவது விற்று, பணத்தைப் பெற்றுக்கொள்...' என்றார்.

அவர் தந்த பாடலின் கருத்து... 'ஆராயாமல் எதையும் செய்யக் கூடாது; அவசரமாகச் செய்யும் செயல் ஆபத்தை உருவாக்கும்; ஆராயாமல் செய்பவர், பின் வருத்தப்பட நேரிடும்...' - என்பதே!
கணவர் தந்த பாதி பாடலைப் பெற்ற ரசிகா, வர்த்தமான் எனும் வியாபாரியிடம் அதை விற்க சென்றார். ஆனால், வீட்டில் வியாபாரி இல்லை. அவர், வெளியூர் போய், பல ஆண்டுகள் ஆகியிருந்தன. அதனால், அவர் மனைவியிடம் கொடுத்து, பணம் பெற்றுத் திரும்பினார்.
வியாபாரியின் மனைவியும், பாரவி எழுதிய அப்பாடல் அடங்கிய ஓலையை, தான் உறங்கும் படுக்கையின் மேல் இருந்த ஒரு குச்சியில் மாட்டி வைத்தார்.
வெளியூர் சென்றிருந்த வியாபாரி, அன்றிரவு வீடு திரும்பினார்.
யாரோ ஓர் ஆண் மகனுடன் தன் மனைவி, ஒரே கட்டிலில் துாங்குவதைப் பார்த்ததும் கொதித்து எழுந்தார்.
வியாபாரி வெளியூர் புறப்பட்ட சமயத்தில், அவர் மனைவி கர்ப்பிணியாக இருந்தார். அதன்பின், ஆண் குழந்தை பிறந்து, அவன் வளர்ந்து இப்போது, வாலிப தோற்றத்தில் இருந்தான். இப்போது போல வசதிகள் இல்லாத காலம் அது என்பதால், சொல்லியனுப்ப வழியில்லை. ஆகையால், குழந்தை பிறந்த தகவல் வியாபாரிக்குத் தெரியாது.
செல்லமாக வளர்த்த பிள்ளையும், தாயும், இரவில் ஒரே கட்டிலில் படுத்துத் துாங்குவர். இதை அறியாத வியாபாரி, கோபத்தில், இருவரையும் கொன்று விடும் எண்ணத்தில் வாளை எடுத்தார்.
அந்த நேரம் பார்த்து, மேலே கட்டியிருந்த ஓலை கீழே விழுந்தது. அதை எடுத்துப் படித்த வியாபாரி, நிதானத்திற்கு வந்து, மனைவியை எழுப்பினார்.
பல ஆண்டுகளுக்கு பின் கணவரைப் பார்த்ததும், வியாபாரியின் மனைவி பரபரப்படைந்தாள்; கணவரின் கால்களில் விழுந்து வணங்கியவர், 'மகனே எழுந்திரு... உன் தந்தை வந்திருக்கிறார் பார்...' என்று மகனையும் எழுப்பினாள்.
அப்போது தான், வியாபாரிக்கு உண்மை உறைத்தது... 'ஆகா... நாம் போன போது, இவள் கர்ப்பிணியாக இருந்தாளே... இவன் நம் பிள்ளை அல்லவா... என்ன பாவம் செய்ய இருந்தேன். நல்லவேளை, இந்த ஓலை, நம்மைக் காப்பாற்றியது...' என்று நினைத்துக் கொண்டார்.
மனைவியிடம் ஓலையைக் காட்டி, விவரம் கேட்க, அவள் நடந்ததைச் சொன்னாள்.
'ஒரு கொலை பாதக செயலிலிருந்து என்னைக் காப்பாற்றிய இப்பாடலை எழுதிய கவி, பாரவியை உடனே தரிசிக்க வேண்டும்...' என்று சொல்லி, ஏராளமான செல்வத்தோடு போய், பாரவியின் திருவடிகளில் வைத்து வணங்கினார், வியாபாரி.
கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர ஆராய்வதே மெய். இந்த உண்மையை உணர வேண்டுமானால், எதிலும் நிதானம் வேண்டும்!

பி.என்.பரசுராமன்

அறிவோம் ஆன்மிகம்!
பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?
ஒரே பரம்பொருளின் பல்வேறு சகுன தோற்றங்களே, இந்துக்கள் வணங்கும் அனைத்து தெய்வங்களும்! பரம்பொருளின் ஆற்றல் தான் கணபதி, சூரியன், சிவன், சக்தி, விஷ்ணு போன்று பல்வேறு நிலைகளில் வெளிப்படுகிறது. இந்த ஐந்து தெய்வங்களுக்கான பூஜையே, பஞ்சாயதன பூஜை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X