'நேர நிர்வாகமும் - வாழ்க்கை வெற்றியும்' நுாலிலிருந்து: ஒரு பெரிய பத்திரிகை ஆசிரியரின் மேஜை மீது, சிறு அட்டையில், வாசகம் ஒன்று எழுதி வைக்கப்பட்டிருந்தது...
'எனக்கு நிறைய வேலை இருக்கிறது; உங்களுக்கு?' என்பது தான் அந்த வாசகம்.
இவரை சந்திக்க வரும் நபர், நாற்காலியில் அமர்ந்ததும், அந்த வாசகத்தை படிப்பார். அப்புறம், வந்த விஷயத்தை ஒன்றிரண்டு வாக்கியங்களில் முடித்து, புறப்பட்டு விடுவார். அனாவசிய பேச்சுக்கும், அரட்டைக்கும் அங்கு இடமில்லை.
இன்னொரு பிரமுகர், சில நேரங்களில் அலுவலகத்திற்கு தன்னை தேடி வருவோர் அதிகமாகி விட்டால், உடனே, தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று, ஒவ்வொருவராக அழைத்து பேசுவார். வருபவரும் நின்று கொண்டே பேச நேரும்; அதனால், வந்த விஷயத்தை சொல்லி, உடனே விடைபெற்றுச் சென்று விடுவர்.
கவிதா பதிப்பகம் வெளியீடான,'எம்.ஜி.ஆர்., என்றொரு மாயக் கலைஞன்' நுாலிலிருந்து: கடந்த, 1977ல் ஆட்சிக்கு வந்தார், எம்.ஜி.ஆர்., அவரது ஆட்சியை, ஒன்றரை ஆண்டுகளில், கலைத்தது, மத்திய அரசு. செய்தவர்: இந்திரா காந்தி. எனவே, மீண்டும் தன் சினிமா நடிப்பை தொடர முனைந்த, எம்.ஜி.ஆர்., தன், எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ் கதை இலாகாவை அவசரமாக வரவழைத்து, ஒரு கதை தயார் செய்யச் சொன்னார்.
'எப்படியோ, எனக்கு ஓய்வு கிடைத்தது; ஆட்சி போனதிலே, என்னைத் தவிர எல்லாருக்கும் கவலை. காலையிலிருந்து ஆயிரம் போன்... எல்லாருக்கும் பதில் சொல்லணும்; ஏன்னா, ஆட்சியை கொடுத்தவங்க மக்கள்; பறிச்சுக்கிட்டது டில்லி. இதுக்கு நான், மக்களுக்கும் பதில் சொல்லணும்; மத்திய அரசை கேள்வி கேட்கணும். அப்படி ஒரு கதை, ரெண்டு நாளில் வேணும்...' என்றார்.
இதில், எம்.ஜி.ஆருக்கு எப்படிப்பட்ட பாத்திரம் அமைப்பது என்பதையும் அவரே சொன்னார்...
'மக்களால் தேர்ந்தெடுக்கக் கூடிய பதவியில் இருப்பவராய் இருக்கணும்; உதாரணத்துக்கு பஞ்சாயத்து தலைவராக கூட இருக்கலாம்...' என்றார்.
கதை இலாகாவினர் தயங்கி, 'வேணாம்... முதலமைச்சர் பதவி பறிபோயிடுச்சு; அதனால, பஞ்சாயத்து தலைவர் பதவி போதும்ன்னு சொல்லி படமெடுத்திருக்கிறார்ன்னு எதிர்க்கட்சிக்காரங்க கேலி பேசுவாங்க. முதல்வர், முதல்வராகவே இருக்கட்டும்; கல்லுாரி பிரின்ஸ்பாலுக்கும் முதல்வர் என்று தானே பெயர்... அதனால், உங்களுக்கு கல்லுாரி முதல்வர் பாத்திரம் அமைத்து, கதை தயார் செய்கிறோம்...' என்றனர்.
இரண்டே நாளில், கதை ரெடியானது; மூன்றே நாளில், அக்கதைக்கு, திரைக்கதை எழுதினார், நீலகண்டன். நான்கே நாளில்,வசனம் எழுதினார், ரவீந்தர். எட்டே நாளில், ஆறு பாடல்களை பதிவு செய்து கொடுத்தார், எம்.எஸ்.விஸ்வநாதன்.
நடிகர்கள் தேர்வும் நடந்து முடிந்து, முன் பணமும் கொடுத்தாகி விட்டது; திடீரென, தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டது. என்ன செய்வது... தேர்தல் பிரசாரத்திற்கு போக வேண்டுமே... 'பகலில் பிரசாரம்; இரவில் படப்பிடிப்பு...' என்றார், எம்.ஜி.ஆர்.,
அது சாத்தியமா... ஊர் ஊராக பிரசாரம் செய்து கொண்டே, இரவில் எந்த ஊரில், எங்கே படப்பிடிப்பு நடத்துவது... மற்ற நடிகர், நடிகையர் ஒத்துழைக்க இயலுமா... அதனால், திரைப்பட தயாரிப்பு முடிவை ரத்து செய்து, அரசியல் பிரசார வேலைகளில் இறங்கினார்; வென்றார். இரண்டாம் முறையும் முதல்வர் ஆனார். அண்ணா என் தெய்வம் என பெயரிடப்பட்ட அந்த படம், அத்தோடு சரி!
பிரான்ஸ் நாட்டு தலைநகரான, பாரீஸ் நகருக்கு இந்திரா காந்தி சென்றிருந்தபோது, அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு, 'இந்நகரில், புகழ்பெற்ற புனித இருதய மாதா கோவிலின் படிக்கட்டில் தான், என்னை திருமணம் செய்து கொள்ள வாக்கு கொடுத்தார், பெரோஸ் காந்தி...' என, பேட்டியளித்தார்.
நடுத்தெரு நாராயணன்