அன்புள்ள அம்மா —
என் வயது, 32; எம்.ஏ., படித்து, தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். கணவரின் வயது, 38; அரசு பணியில் உள்ளார். திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. திருமணமானதிலிருந்தே, என் மாமியாருக்கு என்னை பிடிப்பதில்லை. உட்கார்ந்தால், நின்றால், நடந்தால் என்று எதற்கெடுத்தாலும் குறை கூறுவார்.
ஆரம்பத்தில், பத்து பேர் அடங்கிய கூட்டுக் குடும்பத்தில் இருந்ததால், இதெல்லாம் சகஜம் என்று பொறுமையாக இருந்தேன். நிலைமை மோசமாக, என் மனமும், உடலும் மிகவும் பாதிக்கப்பட்டது. மாமியாரின் அடாவடி செயல்களை பற்றி என் கணவரிடம் சொன்ன போது, 'அம்மாவை எதிர்க்க முடியாது; நீயே சமாளித்துக் கொள்...' என்று ஒதுங்கி கொண்டார்.
ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளான்; வேலைக்கு செல்வதால், அவனை பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும் என்று, பொறுத்து போனேன்.
என் கணவருடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன், தம்பி மற்றும் தங்கை; அண்ணன் மற்றும் தம்பிக்கு திருமணமாகி விட்டது.
இந்நிலையில், ஒருநாள் என்னை பார்க்க வந்த என் பெற்றோரிடம், என்னைப் பற்றி மாமியார் தரக்குறைவாக பேச, தனிக்குடித்தனம் போயே ஆகணும் என்று பிடிவாதமாக நின்று, வாடகைக்கு வீடு பார்த்து, தனியாக வந்து விட்டோம்.
என் பெற்றோர் வீட்டுக்கு அருகிலேயே ஒரு வீடு விலைக்கு வர, வங்கிக்கடனில், அவ்வீட்டை வாங்கி, இப்போது அங்கு தான் குடியிருக்கிறோம். என் பிள்ளையை அம்மா பார்த்துக் கொள்ள, நிம்மதியாக போனது வாழ்க்கை. அவர் மட்டும் அவ்வப்போது, தன் வீட்டுக்கு சென்று, பெற்றோரை பார்த்து வருவார்.
சிறிது நாளில், என் கணவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இப்போது, எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார்; அடிக்கடி லீவு போட்டு, வீட்டில் விட்டத்தை பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறார். குழந்தையிடமும் கொஞ்சி பேசுவது நின்று விட்டது. இப்போது அவரது பெற்றோரிடமோ, உடன் பிறந்தவர்களிடமோ கூட பேசுவதை தவிர்க்கிறார்.
இரண்டொரு முறை அவர்கள் போன் போட்டு கூப்பிட்டும், போக மறுத்து விட்டார். முன்பெல்லாம் ருசித்து சாப்பிடுவார்; இப்போது ஏனோதானோவென்று கொறித்து விட்டு செல்கிறார். டாக்டரிடம் செல்லலாம் என்று அழைத்தாலும், வர மறுக்கிறார். என் பெற்றோருக்கு விஷயம் தெரியாது.
இப்போது நான் என்ன செய்ய வேண்டும்; தக்க ஆலோசனை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
உன் கணவரின் மன அழுத்தத்திற்கான அடிப்படை காரணங்கள் என்ன என்று பார்ப்போம்...
கூட்டுக் குடும்பத்தில் இருப்பது தான் உன் கணவருக்கு உவப்பான விஷயம். உன் மீது, அவருக்கு எவ்வளவு காதல் இருக்கிறதோ, அதே அளவு அவர் தாய் மீதும் இருக்கிறது. மனைவியை அனுசரித்து, தாயால் இருக்க முடியவில்லையே... தாயை அனுசரித்து, மனைவியால் இருக்க முடியவில்லையே என்கிற தார்மீக கோபம் அவருக்கு இருக்கிறது. ஆனாலும், பிரச்னைக்கு தீர்வு காணாமல் தப்பிக்க, தனிக்குடித்தன ஆசைக்கு பச்சைக்கொடி காட்டி விட்டார்.
ஒரு பிரச்னை என்றால், பெரும்பாலும் பெண்கள் அழுது தீர்த்து விடுகின்றனர். ஆனால், ஆண்கள் அழ வெட்கப்பட்டு, இறுக்கமாக, கமுக்கமாக இருந்து விடுகின்றனர். இதுவே, அவர்களின் மன அழுத்தத்திற்கு காரணம்!
மாமியாரை பற்றி, கணவரிடம் குற்றப் பத்திரிகை வாசிக்காதே... கணவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது, அவருடன், மனம் விட்டு பேசு. உன் செயல்பாடுகள் ஏதாவது அவரை பாதித்திருந்தால், உன்னை திருத்திக் கொள். வங்கி கடனை முன்னதாகவே, முழுவதையும் அடைக்க ஏதாவது வழி இருந்தால், கணவருடன் விவாதித்து செய்.
பணியிடத்தில் உன் கணவருக்கு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா என ஆராய்ந்து, கவுன்சிலிங் தேவைப்பட்டால், வற்புறுத்தி, மனநல ஆலோசகரிடம் கூட்டிச் செல்.
பணம், நகை மற்றும் வீடு பற்றி பேசாமல், ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். பிறரிடம் குற்றம் காணும் மனோபாவத்தை விட்டொழி; மாமியாரின் ஸ்தானத்தில் உன்னை பொருத்தி பார்த்து, அவர் தரப்பு நியாயங்களை உணர். சமையலின் தரத்தை, ருசியை உயர்த்து. கணவர் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பங்களை குறை. வார இறுதி நாட்களில், தன் தாயுடன் இருந்து, தாயின் சமையலை உண்டு, தாயின் அன்பில் நனைந்து வரட்டும், உன் கணவர்.
உன்னவரின் பிரச்னைகளுக்கு, உன்னிடமே நல்ல தீர்வுகள் உள்ளன. தீர்வை வெளியில் தேடி அலையாதே; விட்டுக்கொடு, சமரசம் செய், சுயம் தொலை. கொம்பு தேனாய் இனித்திடும் உன் வாழ்க்கை.
— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.