இளநீரில், சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புகள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
தினமும் இளநீர் சாப்பிட்டால், அது, நம்மை இளமையாக வைத்திருக்கும்; குறிப்பாக, கோடைக் காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற சத்துக்களும் உடலில் இருந்து வியர்வையாக வெளியேறுவதால் உடல் வெளிறிவிடும்.
மயக்கம், நாடித் துடிப்பு தளர்ந்து, தசைகள் இறுகி விடும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம், உடலில் உள்ள உப்பு, அதிகமாக வெளியேறுவது தான். இளநீரில் இருக்கிற உப்புச்சத்து, நம் உடலின் வெப்ப நிலையை சமச்சீராக பாதுகாப்பதோடு மட்டுமின்றி, உடலின் வெப்ப நிலையை உள்வாங்கி, சரிவர வெளியே தள்ளுகிறது. இதனால், கோடை வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைக்கு நல்ல மருந்தாகிறது.
மரத்திலிருந்து இளநீரை பறித்து, உடனடியாக குடித்து விடுவது தான் நல்லது; இரண்டு மூன்று நாட்கள் கடந்தோ, பிரிஜ்ஜில் வைத்திருந்தோ அல்லது இரண்டு, மூன்று மணி நேரம் கழித்தோ குடிப்பது நல்லதல்ல. இளநீரின் மருத்துவ குணம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால், அதை வெட்டிய அரை மணி நேரத்திற்குள் பருக வேண்டும்.
இதில், எலுமிச்சை சாறு, குளுகோஸ் போன்ற எதையும் கலந்து குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைவாக குடிக்கலாம்; சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கவே கூடாது; இதய நோயாளிகளுக்கு இளநீர் இதம்.
கோடையில் தினசரி குறைந்தது, 3 முதல், 4 லிட்டர் வரை குடிக்கலாம். ஒரே நேரத்தில் நிறைய நீரை குடிப்பதற்கு பதிலாக, சிறிது சிறிதாக குடித்து வரலாம். ஒரே நேரத்தில், அதிகபட்சமாக அரை லிட்டர் வரை குடிக்கலாம்.
- கோவிந்தராஜன்