சுதந்திரம்
பாரதம் மகுடம் சூடிய
சுய ராஜ்யம் என்பதற்கான
அடையாளம்!
அஹிம்சை கொள்கைக்கு
அவனி பரிசாய் கொடுத்த
அட்சய பாத்திரம்!
சமாதான வாழ்வுக்கு
சரித்திரம் போட்ட
சபாஷ்!
படைகளை விடவும்
பவித்திரமானது
பாரதத்தின் துணிவு என்பதை
பதிவு செய்ததற்கான பரிசு!
விடுதலை வேள்வியில்
தலைவர்கள் சிந்திய
குருதிக்கான கொடை!
பகல் - இரவு பாராமல்
ஒன்றி உழைத்ததை
உறுதி செய்யும்
உத்திரவாதம்!
காஷ்மீர் துவங்கி
கன்னியாகுமரி வரை
பரந்த தேசம் என்பதற்கான
பட்டா பதிவு!
எள்ளி நகையாடிய
அன்னிய சக்திகளின்
அகங்காரத்துக்கு
விழுந்த அடி!
சர்வ வல்லமை
கொண்டது
சத்யாகிரகம் மட்டுமே
என்பதற்கான சாட்சி!
இப்படி -
சுதந்திரத்திற்கான
சொல் விளக்கத்தை
சொல்லிக் கொண்டே
போகலாம்!
சுதந்திரம் என்ற சொல்
பல எழுத்துகளின்
இணைவாக இருக்கலாம்
சுதந்திரத்திற்காக
இழந்த கழுத்துகளின்
கணக்கை
கணக்கிடவே முடியாது!
எல்லா பேதங்களையும்
எடுத்தெறிந்து
ஓர் குலமாக ஒன்றி நின்றதால்
இந்தியா வென்றது!
இந்த அட்சய பாத்திரத்தில்
கை விட்டு எதையும்
எடுத்தவர்கள் இல்லை!
மாறாக -
கொடுத்தவர் கூட்டமே
கொண்டாடப்படுகின்றனர்!
இந்தியா -
எடுப்பவரை அல்ல
கொடுப்பவரையே
தன், ஆத்மாவாக எண்ணி
ஆராதிக்கிறது!
யுகங்கள் கோடியானாலும்
இந்தியா
இரும்பு அரணால் காக்கப்படும்!
அதன் மக்கள்
அன்னை தேசத்திடம்
தேவைக்கு கை விரிப்பவர்கள் அல்ல...
தேச சேவைக்கு கை கொடுப்பவர்கள்!
வாழ்க சுதந்திரம்...
வாழ்க இந்தியா!
— வளர்கவி, கோவை.