ரங்கநாதன் வீடு -
ஹாலில் அமர்ந்திருந்தோரை நோட்டம் விட்ட அட்வகேட் பாஷ்யம், ''எல்லாரும் வந்தாச்சா...'' என்று, கேட்டார்.
முதல் மனைவி மூலம் பிறந்த விஷால்; துணையாக இருந்து, இரண்டாவது மனைவியானவளின் மூலம் பிறந்த விவேக், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, எல்லாரும் இருந்தனர்.
பிரபல தொழிலதிபர் ரங்கநாதன் காலமாகி, காரியங்கள் முடிந்திருந்தன.
சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த ரங்கநாதன், படித்து, டிகிரி வாங்கியதும், 'மகன் பொறுப்பாக, ஏதாவது ஒரு வேலைக்குப் போய், தன் சுமையைக் குறைப்பான்' என்று ஆவலுடன் காத்திருந்த அவன் தந்தைக்கு, ஏமாற்றமே மிஞ்சியது.
காலை முதல் மாலை வரை, டேபிளைத் தேய்த்து, மாத சம்பளம் வாங்கும் அரசு உத்தியோகமோ அல்லது அதிருப்தி காரணமாக, முதலாளி எப்போது வேலையை விட்டு துாக்குவாரோ என, அச்சத்துடன் பணி புரியும் சூழல் கொண்ட தனியார் நிறுவன வேலைக்கு செல்வதோ தனக்கு சரிவாரது என்று நினைத்தார், ரங்கநாதன்.
அதனால், சிறு தொழில் செய்ய நினைத்து, அப்பளம், ஊறுகாய் மற்றும் பருப்புப் பொடி விற்க ஆரம்பித்தார். அவர் மீது லட்சுமி கடாட்சம் பட, சில ஆண்டுகளில், குடியிருந்த வீட்டை, வங்கியில் பிணையாக வைத்து, கடன் வாங்கி, இப்பொருட்களை பெரிய அளவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் கம்பெனிக்கு அதிபராகி, 'ஓகோ'வென்று ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்தார்.
குடும்ப வாழ்க்கை, அவருக்கு திருப்தியாக அமையவில்லை. மனைவி ஓர் அசமஞ்சம்; சமையல் செய்வது, அக்கம்பக்கத்தில் வம்படிப்பது, சினிமா பார்ப்பது என, பொழுதைக் கழித்தாள்.
அதனால், கம்பெனியில் வேலை செய்யும் ருக்மணி மீது, அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டு, இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். அவளுடைய பொலிவான தோற்றம், சுறுசுறுப்பு, கனிவான பேச்சு, எல்லாரிடமும் பழகும் விதம் என, எல்லாம் அவருக்கு பிடித்து போனது.
இருவருக்குமிடையே, 'கெமிஸ்டிரி ஒர்க் அவுட்' ஆகி, ஒரு கட்டத்தில், கோவிலில், அவளை திருமணம் செய்து கொண்டதாக தகவல். இருவரும் மறுக்கவில்லை; அவருடைய மனைவிக்கு, இந்த செய்தி போய் சேர்ந்தாலும், அவள் அலட்டிக்கொள்ளவில்லை. செக்கு மாடு போல, தன் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினாள்.
முதல் மனைவி மூலம் பிறந்த விஷால், படிப்பு ஏறாமல், பந்தா பண்ணி, சோம்பித் திரிந்தான். பணத்தை அனாவசியமாக செலவழித்து, ஊர் சுற்றினான்; சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அப்பா சொத்தை அழிப்பதையே குறிக்கோளாக வைத்திருந்தான். ரங்கநாதனுக்கு, அவனால், மனக் கஷ்டம் தான்.
அதே சமயம், இரண்டாவது மனைவி மூலம் பிறந்த விவேக், கடவுள் பக்தி, கல்வியறிவு, விளையாட்டு என்று எல்லா விஷயங்களிலும் ஈடுபாட்டுடன், அவருடைய அன்புக்கு பாத்திரமானான். இந்நிலையில் தான் திடீரென காலமானார், ரங்கநாதன்.
ரங்கநாதன் தான் சம்பாதித்த ஏராளமான சொத்தை, யார் யாருக்கு, எப்படி பங்கு போட்டிருக்கிறார் என்பது சற்று நேரத்தில் தெரிந்து விடும்.
ஆம்... கோர்ட்டில், 'உயில்' பதிவு செய்து, சொத்துகளை சம்பந்தப்பட்டோரிடம் சேர்க்க, அவர் நண்பரும், வக்கீலுமான பாஷ்யத்திடம் ஒப்படைத்திருந்தார், ரங்கநாதன்.
உயிலைப் படிக்க ஆரம்பித்தார் பாஷ்யம்...
உயிலின் முன்னுரையில், உடனடி உணவு தொழிலில் தான் கொடி கட்டிப் பறப்பதற்கு, நகர மயமாதல் மற்றும் கூட்டுக் குடும்பங்களின் சிதைவு தான், மறைமுக காரணமாக அமைந்தது எனும் வருத்தத்தை பதிவு செய்திருந்தார். கூட்டுக் குடும்பங்கள் இருந்திருந்தால், அத்தையோ, சித்தியோ அல்லது பாட்டியோ, வடாம், ஊறுகாய் மற்றும் பொடி வகைகளை தாங்களே தயாரித்து தந்திருப்பர். வயதானோர், முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டதால் தான், வேலைக்கு போகும் தம்பதியரின் பார்வை, 'ரெடிமேட்' உணவு வகைகள் மீது திரும்பியது. அதனால், முதியோர்களிடம் மனதார மன்னிப்பு கோருவதாக எழுதியிருந்தார், ரங்கநாதன்.
முன்னுரைக்கு பின், உயிலின் ஷரத்துக்களை படித்தார் பாஷ்யம்...
'என் இரண்டு பங்களாக்களும், முதியோர் இல்லத்துக்கு அளிக்கப்பட வேண்டும்; காரணத்தை, முன்னுரையில் சொல்லியிருக்கிறேன்...
'அடுத்து, என் மனைவியர் இருவரும் இறைவனடி சேர்ந்துவிட்ட நிலையில், தர்ம காரியங்களுக்காக, தனியாக ஒதுக்கப்பட்ட சொத்துகள், நிறுவன ஊழியர்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பெருந்தொகை, இவை போக, இதர சொத்தில், என் மகன்களான விஷால் மற்றும் விவேக் இருவருக்கு மட்டுமே பங்கு உண்டு. இருவருமே என் மகன்கள் தான்; சொத்தில் சம உரிமை பெற்றவர்கள். என் சொந்த விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி, இருவருக்கும் கணிசமான அளவு மதிப்புள்ள சொத்து கிடைக்குமாறு, 'உயில்' எழுதியுள்ளேன்.
'என் சொத்துகளை மூன்று பாகமாக பிரித்திருக்கிறேன்; ஒவ்வொரு பாகத்திலும் இரண்டு சொத்துகள் இருக்கும். இவற்றிலிருந்து, முதல் மனைவி மூலம் பிறந்த விஷால், ஒன்றை தேர்வு செய்யும் உரிமையை முதலில் பெறுகிறார். மற்றது, என் இரண்டாவது மனைவியின் மூலம் பிறந்த இளைய மகன் விவேக்குக்கு போகும்.
'முதல் பாகத்தில் உள்ள சொத்துகள்: செங்கல்பட்டிலிருந்து, 75 கி.மீ., தொலைவில் உள்ள இரண்டு கிரவுண்டு நிலம்; மற்றொன்று, தாம்பரத்தில் உள்ள மூன்று கிரவுண்டு நிலம்...'
வாசிப்பதை நிறுத்தி, விஷாலைப் பார்த்த பாஷ்யம், ''எதை செலக்ட் செய்யப் போறே விஷால்... எதுவாக இருந்தாலும், எழுத்து மூலம் பதில் தரணும்,'' என்றார்.
அவன் நக்கலாக சிரித்து, ''செங்கல்பட்டு ஒரு, 'டொக்கு' ஏரியா; அங்கிருந்து, 75 கி.மீ.,ல் உள்ள ரெண்டு கிரவுண்டு நிலம் எதுக்கு... விவசாயம் பண்ணவா... தாம்பரம் நிலத்தை எடுத்துக்கறேன்; என் பாசக்கார தம்பி விவேக்குக்கு, 'டொக்கு' நிலத்தை தாரை வார்த்து கொடுத்துடுங்க,'' என்றான்.
அறையில் ஒரே சிரிப்பலை.
உயிலைத் தொடர்ந்து படித்தார், பாஷ்யம்...
''முதலில் சொல்லப்பட்ட நிலம், அண்ணா நகரில் உள்ளது; செங்கல்பட்டிலிருந்து, அண்ணா நகர், 75 கி.மீ., துாரத்தில் உள்ளது,'' என்று பாஷ்யம் சொன்னதும், கடுப்பான விஷால், 'சே... ஏமாந்துட்டோமே!' என்று மனதுக்குள் புலம்பினான்.
அடுத்த பாகம்... 'ஐம்பது லட்ச ரூபாய் ரொக்கம் அல்லது என் ரூமில், புக் ஷெல்பில் இருக்கும் நுாற்றுக்கணக்கான ஆன்மிகப் புத்தகங்கள்...'
''ஆன்மிக புத்தகங்களை வைச்சு பஜனை மடமா நடத்தப் போறேன்... எனக்கு, 50 லட்சம் ரூபாய் தான் வேணும்,'' என்றான் விஷால்.
பாஷ்யம் மேலே படிக்கலானார்... 'ஒவ்வொரு ஆன்மிக புத்தகத்தின் அட்டைக்குள்ளும், லட்ச ரூபாய் மதிப்புள்ள, 'கிசான் விகாஸ்' பத்திரம் உள்ளது; மொத்தமாக சில கோடி மதிப்புள்ளவை...' என்றதும், மீண்டும் நொந்து போனான் விஷால்.
சொத்தை முதலில் தேர்வு செய்யும் உரிமை என்பது, நிச்சயம், தனக்கு நல்லது செய்ய அல்ல என்று உணர்ந்து, 'அப்பா நம்மள நல்லா ஏமாத்திட்டாரு...' என்று கடுப்பானான்.
அறையில் மயான அமைதி நிலவியது.
கடைசியாக மூன்றாவது பாகம்: 'பெயின்ட் உதிர்ந்து போன, பழைய ஸ்டீல்
பீரோ மற்றும் 200 சவரன் தங்க நகை...'
உஷாரானான் விஷால்.
'இரண்டு முறை ஏமாந்துட்டோம்; அப்பா லேசுப்பட்டவர் இல்ல. ஏதோ ஐடியா செய்து, அதிக மதிப்புள்ள சொத்தெல்லாம் தம்பிக்கு போகும்படி தந்திரமாக உயில் எழுதியிருக்கிறார். இந்த தடவை ஜாக்கிரதையாக இருக்கணும்; பீரோவின் தோற்றத்தை பார்த்து ஏமாறக் கூடாது. அதில், 200 சவரனை விட, அதிக மதிப்புள்ள விஷயம் இருக்கும்...' என்று நினைத்து, ''நான் பீரோவை எடுத்துக்கறேன்,'' என்றான்.
கை நடுங்க சாவியை வாங்கி, படபடக்கும் இதயத்துடன் மெல்ல திறந்தான்.
உள்ளே காலி அட்டைப் பெட்டிகள், பழைய துணிமணிகள், கட்டை பைகள், ஒன்றுக்கும் பயன்படாத தட்டு முட்டு சாமான்கள் இருந்தன.
மயங்கி விழுந்தான், விஷால்.
புகைப்படத்திலிருந்து சிரித்தார், ரங்கநாதன்.
ஆர்.மாலதி