'உணவகம் துவக்கணும்'ங்கிறது சின்ன வயசுல இருந்து கனவு. 'நினைச்சதை சாதிக்கணும்னா, சம்பந்தப்பட்ட துறையில எல்லாமும் தெரிஞ்சிருக்கணும்'னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. நான் சர்வர் வேலைக்குப் போன காரணமும் அது தான்!'
- வாழ்வில் தான் மேற்கொண்ட அதிரடி முடிவுகளை மிகச் சாதாரணமாய் சொல்லும், 25 வயது சரண்யா ஈரோட்டுக்காரர்; பொறியியல் பட்டதாரி; தற்போது, விழுப்புரம் சட்டக்கல்லுாரி மாணவி; திருச்சி, தில்லை நகர், 'ஈரோடு ஸ்பெஷல் நாட்டுப்புற சமையல்' மையத்தின் உரிமையாளர்.
படிப்புக்கு இடையில எதற்காக தொழில்?
'ஆண்களுக்கானவை'ன்னு இந்த சமூகம் குறிப்பிடுற வேலைகளை நான் செய்றதால, 'பொண்ணு மாதிரியா அது வளர்ந்திருக்கு!'ன்னு என்னைப் பார்த்து சொல்றவங்க நிறைய பேர். தைரியம் இல்லாத ஆண் பிள்ளையை நிராகரிக்கிற இந்த சமூகம், தைரியமான பெண்ணை ஏன் ஏத்துக்க மறுக்குதுன்னு எனக்கு இன்னும் புரியலை.
இந்த சூழல்ல, பெண்கள் நாம குறைந்தபட்சம் நம்ம தேவைகளை பூர்த்தி செஞ்சுக்கிற அளவுக்காவது சம்பாதிக்கணும். 'என்னால சுயமா வாழ முடியும்'ங்கிற எண்ணம் தான் நமக்கான நம்பிக்கை!
கணவரின் மிதமான சம்பாத்தியம் ஒருபுறமிருக்க, சிறு தொழில்கள் மூலம் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தி, இன்று ஓட்டுனர் பயிற்சி மையத்தை சொந்தமாக துவக்கியிருக்கும் தாய் பூங்கொடியே தன் நம்பிக்கைக்கு வேர் என்கிறார் சரண்யா. தன் சமையல் மையத்தின் மூலம், மாதம் ஒன்றுக்கு சில ஆயிரங்களில் வருமானமும் பார்க்கிறார்.
பெண்கள்னா இப்படித்தான் இருக்கணும்னு...
யார் சொல்றா; இந்த சமூகம்; அப்படித்தானே? இன்னும் எத்தனை நாளைக்கு இதுக்கு காது கொடுத்துட்டு இருக்கப் போறோம்? நாமளும் வெளி உலகத்தை பார்த்தாச்சு. நல்லது கெட்டதை பிரிச்சுப் பார்க்கிற பக்குவம் நமக்கிருக்கு. அதனால, இந்த துரு பிடிச்ச கூண்டை விட்டு முதல்ல பெண்கள் வெளியே வரணும்; நான் வந்துட்டேன்.
சரண்யாவின் புதுப்புது அர்த்தங்கள்
உழைப்பு: கனவின் திறவுகோல்.
நம்பிக்கை: வெற்றிக்கான உரம்.