கொட்டிக்கிடக்கிறது, வாய்ப்புகள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
கொட்டிக்கிடக்கிறது, வாய்ப்புகள்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

09 செப்
2018
00:00

ஊரிலிருந்து வந்திருந்தார், பெரியவர், மாணிக்கம். அவரை வரவேற்று, குடிக்க மோர் கொடுத்து, ''ஊர்ல விசேஷம் உண்டா,'' என்று கேட்டாள், பானு.
''வெயில்தான் விசேஷம்... தெற்கு சீமையில் அடிச்சு கொட்ற மழை... நம்ம பக்கம் வர மறுக்குது,'' என்று மோரை குடித்து, வாய் துடைத்துக் கொண்டார். அந்நேரம், பைக்கில் வந்து இறங்கினான், ரகு.
''எல்லா இடத்திலும் தேடிட்டேன்... அப்பாவக் காணம்,'' என்றவன், மாணிக்கத்தைப் பார்த்து, ''எப்ப வந்தீங்க பெரியப்பா?'' என்றான்.
''என்ன சொல்றான் இவன்... மூர்த்திய காணமா?''
''அதை ஏன் கேட்கறீங்க... காலைல, இவனோட, பிளஸ் 2 மார்க் பட்டியல் வந்தது. ரகு, 90 சதவீதத்துக்கு குறையாமல் மார்க் எடுப்பான்னு நினைச்சாரு... வந்ததோ, 60 பர்சன்ட். பையன் மேல கோவிச்சுகிட்டு வெளியில் போனவர், இன்னும் காணோம். போன் செய்தாலும், 'ஸ்விட்ச் ஆப்'ன்னு பதில் வருது... அதான், இவனைப்போய் தேடிப் பாத்துட்டு வரச் சொன்னேன்.''
''ஏண்டா நீ மார்க் குறைச்சலா வாங்கிட்டேன்னு அவன் வருத்தப்பட்டு போயிருக்கான்; நீ கவலையில்லாமல், 'வீடியோ கேம்' விளையாடிட்டு இருக்கே...''
''என்னை விட குறைவா மார்க் வாங்கினவங்க ஜாலியா தான் இருக்காங்க,'' என்றான்.
''ஒரு வேளை கோவில் பக்கம் எங்காவது போயிருக்கானான்னு பாக்கறேன்... ஒரு முறை, தேனுபுரீஸ்வரர் கோவிலைப் பத்தி சொல்லி, தனக்கு அது பிடித்தமான இடம்ன்னு சொன்னதாக நினைவு,'' என்று, ரகுவின் சைக்கிள் எடுத்து புறப்பட்டார், மாணிக்கம். வழியெல்லாம் பார்த்துக் கொண்டே கோவிலை அடைந்தார்.
'மூர்த்தி இங்கேதான் இருக்கியா... உன்னை காணாமல் ஊரெல்லாம் தேடினேன்,' என்றபடி, சைக்கிளை குளக்கரையில் விட்டு, படிகளில் இறங்கி வந்தார், மாணிக்கம்.
நீர் வற்றிய குளத்தின், நான்காவது வரிசை படியில் அமர்ந்திருந்தான், மூர்த்தி.
வருத்தமும், கோபமும் அவன் முகத்தை இருளாக்கியிருந்தது.
மாணிக்கத்தை ஒரு நொடி ஏறிட்டு பார்த்தான்.
அவன் அருகில் வந்து அமர்ந்த மாணிக்கம்,''என்னடா இது... சின்ன புள்ள மாதிரி செய்யற... பரீட்சையில மார்க் குறைவா எடுத்ததுக்கு, பையந்தான் அப்பாவுக்கு பயந்து ஓடி ஒளியணும்... இங்கே தலை கீழா இருக்கு. பையன் தைரியமா வீட்ல, மொபைல் போன்ல, 'கேம்ஸ்' விளையாடிட்டு இருக்கான்... அவனை கோவிச்சுகிட்டு, நீ இங்க வந்து உட்கார்ந்திருக்கே... இதைதான் கால மாற்றம்ன்னு சொல்றாங்க போல இருக்கு,'' என்றார்.
''நீங்க எப்ப வந்தீங்க?'' தளர்ந்த குரலில் விசாரித்தான், மூர்த்தி.
''ஒரு மணி நேரம் இருக்கும்; வந்ததும், நடந்ததை பானு சொல்லிச்சு... 'ஏண்டா மார்க் குறைஞ்சது'ன்னு கேட்டால், 'நிறையப் பேர் என்னை விட குறைவா மார்க் எடுத்திருக்காங்க'ன்னு சொல்றான்,'' என்று சிரித்தார்.
''என் எதிர்பார்ப்பு, கனவு எல்லாத்தையும் உடைச்சுட்டான்... என் தப்பு, இவன் நல்லா படிக்கணும்ன்னு, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். மொபைல்போன், கம்ப்யூட்டர், பைக், செலவுக்கு பாக்கெட் மணி, ஆயிரமாயிரமாய் பணம் கட்டி டியூஷன், பால், பழம் ஊட்டச்சத்து பானம், புது புது டிரஸ்ன்னு செலவழிச்சேன். நைன்ட்டி பர்சண்டுக்கு மேல வாங்குவேன்னு அடிச்சு சொன்னான்; அவனை இன்ஜினியராக்கி அமெரிக்காவுக்கு அனுப்பணும்னெல்லாம் கனவு கண்டேன். நம்ம பங்காளிங்க எல்லாம் தங்கள் பசங்களை சர்வசாதாரணமா, டாக்டருக்கும், இன்ஜினியருக்கும் படிக்க வச்சு, இன்னைக்கு தலை நிமிர்ந்து நடக்கறாங்க... அவங்க முன் நம் மகனையும் ஆளாக்கி காட்டணும்ன்னு மனசுல வைராக்கியம் இருந்தது. இவன் வாங்கின மார்க்குக்கு, சாதாரண, 'ஆர்ட்ஸ் காலேஜ்'ல கூட, 'சீட்' கிடைக்காது போலிருக்கு... அப்படியே கிடைச்சாலும், விரும்பின, 'கோர்ஸ்' கிடைக்காது. இந்த விஷயம் தெரிஞ்சா ஊர்ல எவன் மதிப்பான்...” என்று வருந்தினான்.
''உன் கவலை புரியுது. என்ன செய்ய... ரகுவால முடிஞ்சது அவ்வளவு தான். கழுதையை குதிரையாக்க முடியுமா... அப்படி பாக்காத, அந்த நாள்ல நீ எப்படி இருந்தியோ அப்படி தான், இப்ப உன் மகனும் இருக்கான்... ஒரு வகுப்பிலாவது ஒழுங்கா படிச்சிருப்பியா நீ... எந்த சப்ஜெக்டிலாவது நிறைய மார்க் எடுத்திருப்பியா... எத்தனை வருஷம் பெயிலாகி, பெஞ்சு தேய்ச்சிருப்பே... கோவப்படாத... விதை ஒண்ணு போட்டு சுரை ஒண்ணா காய்க்கும்...''
''அப்பன்காரன் சரியா படிக்கலனா, பையன் நல்லா படிக்க கூடாதா... படிப்பறிவே இல்லாத குடும்பத்திலிருந்து வர்ற பசங்க எத்தனையோ பேர், ஐ.ஏ.எஸ்., படிச்சுட்டு, கலெக்டர் வேலைக்கு போறாங்க... நம்ம பக்கத்து கிராமத்துல, ஆடு வளர்க்கற குடும்பத்தை சேர்ந்த குடிசைவாசி மகன் கலெக்டராயிருக்கான்... இதுக்கென்ன சொல்றீங்க... இத்தனைக்கும் அவனுக்கு நல்ல சாப்பாடோ, துணிமணியோ இருந்திருக்காது... இரவல் புஸ்தகம் வாங்கி, தெரு விளக்கு வெளிச்சத்தில் படிச்சான்... இவனுக்கு ஆயிரமாயிரமாய் செலவு செய்தேனே...''
''பணம் செலவு பண்ணினால் மட்டும் படிப்பு வந்திருமா... விடு; உன் சிக்கல், பையன் நிறைய மார்க் எடுக்காதது அல்ல; அவனை இன்ஜினியராக்கி, பங்காளிகள் முன், 'கெத்து' காட்ட முடியாம போகுதே... அசிங்கமாயிடுச்சே என்பது தான். நீ ஒண்ண மறந்துட்டே... உன்னுடைய உயரம், உன் சாதனை, உனக்கு மறந்து போச்சு... எத்தனையோ பசங்களுக்கு நீ, 'ரோல்' மாடல்... நீ சொல்ற பங்காளிகள் எல்லாம் அந்த நாளில் உன்னை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்தவங்க தான்... அது என்ன தெரியுமா... அதைப்பற்றி எப்போதாவது நினைச்சு பார்த்ததுண்டா...'' என்று கேட்டார், மாணிக்கம்.
கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தான், மூர்த்தி.
அவர் அடிக்கடி சொல்லி பாராட்டும் விஷயம் தான் அது!
சோர்வு ஏற்படும்போதெல்லாம் அந்த வார்த்தைகள், 'டானிக்' போல உற்சாகம் தரும். அதையே மாணிக்கம் இப்போதும் ஆரம்பித்தார்...
''ஒரு நேரத்துல நீ உருப்பட மாட்டே, உனக்கு வேலை கிடைக்காது; வருமானத்துக்கு வழி இருக்காது... உள்ளூரிலும் குப்பை கொட்ட முடியாது... ஆதரிக்கவும் ஆள் இல்லாமல், 'அட்ரஸ்' இல்லாமல் போயிடுவேன்னுதான் எல்லாரும் நினைச்சாங்க, நான் உட்பட.
''காரணம், அந்நாளில், வெட்டியா ஊரை சுத்திக்கிட்டிருந்தே... உள்ளூரில் விமர்சனம் பொறுக்க முடியாமல், ஒரு நாள் ஊரை விட்டு போய்ட்டே... அக்கம் பக்கம் தேடிப் பார்த்தோம். 'மெட்ராஸ்' போய்ட்டேன்னாங்க...
''அங்கே, உனக்கு யாரையும் தெரியாது. ஆள் தெரியாத ஊர்ல போய் எங்கே அலைறாயோ என்ன ஆகிறாயோன்னு கவலைப்பட்டோம்... ஆனால், ஒரு வருஷம் கழிச்சு, நீ புது, 'டிரஸ்' போட்டு, கையில் புது பை, காலில் ஷூ, பாக்கெட்டில் பணம்ன்னு திரும்பி வந்த பாரு... சூப்பர் ஸ்டார், 'ஸ்க்ரீன்ல என்ட்ரி' கொடுக்கும் போது, ரசிகனுக்கு ஒரு பரவசம் உண்டாகும் பாரு... அது மாதிரி ஊரே வியந்து போச்சு.''
''அதை மறக்க முடியுமா?''
ஊரை விட்டு ஒரு வேகத்தில் வந்துட்டாலும், சென்னை அவனை கலவரப்படுத்தியது. அப்போது யாரோ சொன்ன ஒரு வாசகம் நினைவில் வந்தது. 'சென்னையில் பேப்பர் பொறுக்கியாவது, தினசரி, 100 ரூபாய் பார்த்துடலாம்; மூட்டை சுமந்து, கூலி வாங்கலாம்... கார்களை கழுவினாலும் காசு. ஸ்கூல் சர்டிபிகேட் இருந்தால், செக்யூரிட்டி வேலைக்கு உடனே உத்தரவாதம். உழைக்க தயாராக இருந்தால் போதும், சென்னை வீதிகளில் கொட்டிக் கிடக்குது வாழ்க்கை...' என்று!
அப்படி ஒரு செக்யூரிட்டியாக, ஓட்டல் வாசலில் நின்று, வருவோர் போவோருக்கு, 'சல்யூட்' வைக்க ஆரம்பித்ததில் துவங்கியது சென்னை வாழ்க்கை. ஆனால், ஒரு கவலை... 'இந்த தோற்றத்தில் ஊர்க்காரர் யாரும் பார்த்து விட்டால் மானம் போகும்; அதற்குள் ஏதாவது ஆபீஸ் வேலை கிடைத்தால் தேவலாம்' என்று வேண்டிக் கொண்டான். அந்நேரம், ஓட்டலுக்கு வந்த ஒருவருக்கு ஏனோ அவன் மீது ஒரு ஈர்ப்ப்பு ஏற்பட்டு, விசாரிக்க, சொன்னார்; கார்டு கொடுத்தார்.
இரண்டு நாள் கழித்து போய் பார்த்தபோது, ஓர் அலுவலகத்தில் சேர்த்து விட்டார்.
''அந்த வாய்ப்பை நீ கெட்டியாக பிடிச்சுகிட்டே... கிடைத்த சந்தர்ப்பத்தை, வாய்ப்பை நீ கெட்டிக்காரத்தனமா பயன்படுத்தி, வேலை செய்யும் இடத்திலேயே, 'ரூம்' எடுத்து, சமையல் செய்து சாப்பிட்டு, வேலை பார்த்தே... ஆறாம் மாசம் வேலை உறுதியாச்சு.
''உழைப்பு உழைப்பு உழைப்பு... மனை வாங்கினே... நாலு காசு சேர்த்து கல்யாணம் பண்ணி, வீடு கட்டி, குழந்தைகள் பெற்று, ஆளாயிட்டே...
''வெளிப் பார்வைக்கு இது சாதாரணமா தெரியலாம்; ஆனால், உன்னை அருகிலிருந்து பார்த்த எனக்குத்தான் உன் அருமை தெரியும்.
''மத்தவங்க, அப்பன் தயவுல, அப்பன் பணத்துல நோகாம வாழ்ந்துகிட்டிருந்தாங்க... வீடு வாங்கினது அப்பன் காசுல... கல்யாண செலவு அப்பன் காசுல... நீ மட்டும் தான் சொந்த உழைப்புல, அனைத்தையும் சாதிச்சே...
''நான் ஒண்ணும் உன்னை சமாதானப்படுத்த உயர்த்தி சொல்லல; அதுதான் உண்மை.
''அந்த வகையில் ஒரு பின்னணியும் இல்லாத நீ, சுயமாக உயர்ந்திருக்கே... உன் மகன் ரகுவுக்கு இப்போ நல்ல, 'ப்ளாட்பாரம்' அமைஞ்சிருக்கு... கை கொடுக்க, நீ இருக்கே.
''ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைச்சா, அவன், உன்னை விட கெட்டிக்காரத்தனமா மேல வந்திட மாட்டானா... 'தகப்பன் எட்டடி பாய்ஞ்சால் மகன் பதினாறு அடி பாய மாட்டானா...' அப்படி நினைச்சு சந்தோஷப்படு. அடுத்தவங்களோடு ஒப்பீடு செய்துக்காதே...
''ஒப்பிடுவதால் தான் துன்பமும், துயரமும்... அவங்க வாழ்க்கை அவங்களுக்கு... நம்ம வாழ்க்கை நமக்குன்னு போகணும்...
''எங்கேயோ போவானேன்... உன் மகன் தான், உனக்கு குரு; எந்த கவலையும் இல்லாமல் விளையாடிக்கிட்டிருக்கான். 60 பர்சன்ட் வாங்கிட்டோம்ன்னு சந்தோஷமா இருக்கான்.
''அவனை, 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' படிக்க வை... ஏறக்குறைய இன்ஜினியர் படிப்புக்கு சமம். கூடவே ஒரு, எம்.பி.ஏ., பண்ணட்டும்... சென்னைய விலைக்கு வாங்கிடுவான்,'' என்று முதுகை தட்ட, மூர்த்தியின் கவலை, நொடியில் பொடிப்பொடியாக உதிர, பெருமூச்சு விட்டான்.
''போவமா...'' என்றார் மாணிக்கம்.
படிகள் ஏறி கரைக்கு வர... அங்கே, பைக்கில் வந்தான் ரகு.
அப்பாவை பார்த்து, ''ஏம்பா, இப்படியா பண்ணுவ... வீட்ல அம்மா கவலையா இருக்காங்க... போன் செய்தாலும் எடுக்கல; கோபம்னா வீட்டோடு வச்சிக்க வேண்டியது தானே... குழந்தை மாதிரி குளத்தாண்ட வந்து உட்கார்ந்துகிட்ட... வா, வண்டியில உட்காரு,” என்றான்.
'பாத்தியா... பையன், இப்பவே அதிகார மையத்தை கையில் எடுத்துகிட்டான்...' என்பதை போல், மாணிக்கம், மூர்த்தியை பார்க்க, ஒரு புன்னகையுடன் பின் இருக்கையில் தொற்றிக் கொண்டான், மூர்த்தி.
''பெரியப்பா... நாங்க போறம்; நீங்க சைக்கிள்ள பத்திரமா வந்து சேருங்க... எங்கும் தொலைஞ்சிராதீங்க... அப்புறம், உங்கள தேட வேண்டியிருக்கும்,'' என்று சொல்லி, ரகு வண்டியை ஓட்டி முன்னால் போக, ''நேரம்டா,'' என்று செல்லமாக நினைத்தபடி, சைக்கிளில் ஏறினார், மாணிக்கம்.

படுதலம் சுகுமாரன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X