பாட்டி நிலாவில் வடை சுட்டுக் கொண்டிருக்கிறார். அதைத் திருட முடிவு செய்யும் ஒரு காகம், உயர, உயரப் பறக்கிறது. முதலில் துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டடத்தைப் பார்க்கிறது. பின்னர் மேகங்களைப் பார்க்கிறது, வானவில்லைப் பார்க்கிறது. இப்படியாக 16 கி.மீ. உயரம் பறந்து, அடிவளிமண்டலம் (Troposphere) பகுதி வரை செல்லும் காக்கைக்கு, விதவிதமான சந்தேகங்கள் வருகின்றன.
'மழை எப்படிப் பொழிகிறது?', 'வானவில்லுக்கு இத்தனை வண்ணங்கள் கிடைப்பது எப்படி?', 'காலநிலை மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன?' என்று ஒவ்வொரு கேள்வியாக எழுப்புகிறது. அப்போது அங்கே தோன்றும் 'ஜீனி' என்ற அலாவுதீனின் பூதம், காகத்தின் சந்தேகங்களைத் தீர்த்துவைக்கிறது. இப்படித் தனது புதுவித நாடகங்கள் மூலம், அறிவியலைப் பரப்பி வருகிறார் ஜகதீஷ் கண்ணா.
தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட ஜகதீஷ், ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் முதுகலைப் படிப்பை முடித்துள்ளார். படிக்கும்போதே, பகுதி நேரமாக, நாடகம் எழுதியும், நடித்தும் வந்தார்.
வேலைக்குச் சென்றபோதும், நாடகத்தின் மீது இருந்த ஈர்ப்பால், வேலையுடன் ஒன்ற முடியவில்லை. வேலையை விட்டுவிட்டு, மீண்டும் நாடகத்துக்குள் நுழைந்தார்.
அப்போதுதான், பொறியியல் அறிவை நாடகக்கலையுடன் ஒருங்கிணைக்கும் யோசனை அவருக்குத் தோன்றியது. நாடகங்கள் மூலம் அறிவியலைப் பரப்பலாம் என்ற ஜகதீஷ் கண்ணாவின் முயற்சியை, மெட்ராஸ் ஐ.ஐ.டி.யின், கிராமிய தொழில்நுட்ப வணிக இன்குபேஷன் (RTBI) சென்டர் அங்கீகரித்துள்ளது. அவர் தொடங்கியுள்ள, 'வாயுசாஸ்த்ரா ஏரோஸ்பேஸ்' (Vaayusastra Aerospace) நாடக நிறுவனத்தில், 7 நாடகக் கலைஞர்கள் மற்றும் 8 ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயர்கள் உள்ளனர்.
அவர்கள் மூலம், ஏரோஸ்பேஸ் அறிவியலை விளக்கும் நாடகங்களைப் பள்ளிகள்தோறும் அரங்கேற்றி வருகிறார் ஜகதீஷ்.
“புராணக் கதைகளைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு அறிவியல் சொல்லிக்கொடுக்கும்போது, அவர்கள் விருப்பத்துடன் கற்கின்றனர். உதாரணத்துக்கு, கிரேக்க புராணக்கதையான தேடலஸ் - இக்காரஸ் கதையில் தந்தை தேடலஸ், புறாக்களின் இறகுகளைச் சேகரிப்பார். அவற்றை, நார் மற்றும் மெழுகால் இணைத்து, ராட்சத சிறகுகளைச் செய்து, மகன் இக்காரசுடன் சேர்ந்து பறப்பார்.
இக்கதையை மையமாக வைத்து, அழுத்த வேறுபாடு குறித்தும், அதனால் கிடைக்கும் உயர உந்துதல் பற்றியும் தன் மகனிடம் தேடலஸ் பேசுவது போல், நாடகத்தை அமைத்துள்ளோம். இதேபோல், இராமாயணத்தில் வரும் புஷ்பக விமானத்துக்கும், நவீன விமானத்துக்கும் என்ன ஒற்றுமை? மகாபாரதத்தில் வரும் நாகாஸ்திரத்துக்கும் நவீன ஏவுகணைக்கும் என்ன தொடர்பு? என ஒப்பிட்டுச் சொல்கிறோம். இக்கதைகளின் வழியாக, விமானங்களின் பாகங்கள், இயங்கு முறை போன்றவற்றைப் புரியவைப்போம். கதை வடிவில் சொல்லும்போது, மாணவர்கள் கற்பனை செய்து கொள்ள இலகுவாக இருக்கும்.
4 வயதுக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை, வயதுக்கேற்ப நாடகக் கதாபாத்திரங்களை அமைத்து, இயற்பியல், வேதியியல் போன்ற அறிவியல் பாடங்களைச் சொல்லிக்கொடுக்கிறோம். அப்படி நாங்கள் கற்பிக்கும் அறிவியலும் தொழில்நுட்பமும் ஏரோஸ்பேஸை மையப்படுத்தியே அமைந்திருக்கும்.
கிராமப்பகுதி மாணவர்கள் பலரும், விமானத்தை ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். ஆனால், அது எளிமையான விதிகளால்தான் இயங்குகிறது என்பதை மாணவர்களுக்குப் புரியவைக்க விரும்புகிறேன். பேப்பர் விமானமும் நிஜ விமானமும் எப்படி இறக்கை அமைப்பால், இயங்குமுறையால் ஒன்றுபடுகின்றன என்பதை மாணவர்களுக்குச் செயல்வழியில் உணர்த்தும்போது, அவர்களுக்கு விமானத்துடன் நெருக்கம் ஏற்படுகிறது. விமான வடிவமைப்பில், தொழில்நுட்பத்தில், மாணவர்கள் ஈடுபாடு அதிகரிக்கும்” என்கிறார் ஜகதீஷ்.
தற்போது ஆங்கிலம் மற்றும் தமிழில், பள்ளிகளுடன் இணைந்து, மாணவர்களுக்காக வாரந்தோறும் நாடக வகுப்புகளை நடத்தி வருகிறது வாயுசாஸ்த்ரா குழு. நாடு முழுவதும் இதை விரிவிடையச் செய்வதே ஜகதீஷின் நோக்கமாக உள்ளது.