அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2018
00:00

அன்று, மாலை ஏழு மணி-
குட்டி போட்ட பூனை போல, லென்ஸ் மாமா, அலுவலகத்துக்குள், அங்கும், இங்கும் நடந்து கொண்டிருந்தார் பொறுமை இழந்தவராக...
'ரஷீது பாய் இன்னிக்கு வரேன்னு சொன்னான்... அதிசயமா அவன் வீட்டுக்காரி சரஸ்வதி, (காதல் திருமணம்) இன்னிக்குத் தான், 'பர்மிஷன்' குடுத்து இருக்காங்க... பெசன்ட் நகர் பீச்சுக்கு போகலாம்ன்னு பிளான் பண்ணி இருந்தோம்... ஆனா, இன்னும் ஆளையே காணோம்...' என்றார்.
நான் அடுத்த நாள் காலை, வெளிவர இருந்த, 'டீ கடை பெஞ்சில்' கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
குனிந்து படித்துக் கொண்டிருந்த போது, ஜீன்ஸ் அணிந்த இரண்டு பெண்கள், கடந்து செல்வது தெரிய, 'நம்ம ஆபீசில் ஜீன்ஸ் அணியும் பெண்கள் ஏது?' என, எண்ணியபடியே தலையைத் துாக்கிப் பார்த்தேன்.
எனக்குப் பிடித்த கறுப்பு நிறத்தில் ஒரு பெண்ணும், சிவப்பாக ஒரு பெண்ணும் கறுப்பு ஜீன்ஸ், வெள்ளை டி - ஷர்ட் அணிந்து, 'பேஜினேஷன்' எனப்படும், செய்தித்தாள் வடிவமைக்கும் அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்புறம் தான், 'சட்' என உறைத்தது... நேர்முகப் பயிற்சிக்காக வந்துள்ள இதழியல் பயிலும் மாணவியர் என்பது. அந்த இருவரில், கறுப்பு நிறமுடைய பெண்ணுக்கு, என் மீது ஒரே சந்தேகம், 'இந்த ஆசாமி தான் அந்துமணியாக இருக்க வேண்டும்' என்று! யாரிடமாவது விசாரித்து இருக்க வேண்டும் அல்லது யாராவது போட்டுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், பயிற்சி முடிந்து கிளம்பும் வரை, நேரடியாக என்னிடம் எதுவும் கேட்கவில்லை.
கம்மிங் பேக் டு த பாயின்ட்... திடீரென மீண்டும் என் அருகே வந்த லென்ஸ் மாமா, 'ரஷீது போன் பண்ணாம்ப்பா... அவன் இங்கே வரலியாம்... நம்மை நேரடியாக பெசன்ட்நகர் பீச்சுக்கு வரச் சொல்லிட்டான்...' என்றார்.
கிளம்பினோம்!
அங்கு, பெரியசாமி அண்ணாச்சியும் ஆஜராகி இருந்தார். சிறிது நேரத்தில் ரஷீதும் வந்து சேர்ந்தார்.
இங்கு, நண்பர் ரஷீதைப் பற்றி கூறியாக வேண்டும்... வங்கி ஒன்றில் பணியாற்றிய அவர், தமிழ் சினிமா பாடல்களின் சுரங்கம் என்று தான் சொல்ல வேண்டும். கண்ணதாசனை கரைத்துக் குடித்தவர். கண்ணதாசனின் பாடல் வரிகளின் உட்பொருளை புட்டுப் புட்டுச் சொல்லும் திறமை கொண்டவர். மற்ற பல கவிஞர்களின் பாடல்களையும் ஆராய்ந்தவர்...
'பொட்டு வைத்த வட்டமுகம் என்ன முகமோ... அதைத் தொட்டு விடத் துடிப்பதிலே என்ன சுகமோ...' என்ற பாடல் வரிக்கு, அவர் கொடுக்கும் இன்னொரு பொருளைக் கேட்டால், 'அடடா... இப்படியும் ஒரு சேதி அதில் பொதிந்து உள்ளதே...' என ஆச்சரியப்பட்டுப் போவோம்.
வசதியாக அமர்ந்து கொள்ள லென்ஸ் மாமா பின்புறம் செல்ல, டிரைவர் சீட்டில் நான் அமர, என் இடதுபுறம் முன்பக்கத்தில் அண்ணாச்சி அமர, லென்ஸ் மாமா அருகே உட்கார்ந்தார் ரஷீத்.
எப்.எம்., அலைவரிசையில், கண்டசாலா பாடிய, 'வீத்தினிலே வெண்ணிலா விளையாத போகுது... வண்ணப் புதாமதியின் மீது தாவுது' என்று, தமிழைக் கொலை செய்து கொண்டு இருந்தார்.
பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரஷீத் பாய் தலையில் அடித்து, 'ஏம்ப்பா மணி... ரேடியோவை, 'ஆப்' செய்யுறியா...' என்றார். அதன்படியே செய்தேன்.
ஆரம்பித்தார், ரஷீத்:
பொதுவா, தமிழ் சினிமா பாடல் எழுதும் கவிஞர்கள், தங்கள் சொந்த மனோபாவத்தை, 'டூயட்' பாட்டில் கூட வெளிப்படுத்திடுவாங்க... அந்த மனோபாவம் உண்மையிலேயே உறுதியுடன் அவங்களுக்கு இருக்குமானால்...
கல்யாணப் பரிசு பாடல் கேட்டு இருக்கீங்க இல்லே... அதில் ஒரு காதல் பாட்டு... பட்டுக்கோட்டையார் எழுதியது... 'பொறுமையை இழந்திடலாமோ... பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ!' என்று காதலி, காதலனை கோபித்துக் கொள்வதாக எழுதி இருக்கிறார்; அவர் பொதுவுடைமை புரட்சிக் கவிஞர்.
தமிழையும், திருவள்ளுவரையும் ஆத்மார்த்தமாக நேசித்தவர் பாரதிதாசன். அவர், 'ஓர் இரவு' படத்தின் காதல் பாட்டு ஒன்றில், காதலன், காதலியிடம், 'இறையனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா... கண்ணே...' என்று எழுதியுள்ளார்... என்று ரஷீத் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, 'பாய்... கொஞ்சம் நிறுத்து... கடலை வண்டிக்காரன் வரான் பாரு... பத்து ரூவாய்க்கு மசாலா கடல வாங்கு...' என்றார், லென்ஸ் மாமா.
அந்த நேரத்தில், கண்களை காரின் வெளியே செலுத்தினேன். துாரத்தில் அரை டவுசர் அணிந்த ஒரு மனிதர், அவர் அருகே வெள்ளை சுரிதார், நீலச் சுரிதாரில் இரு பெண்கள்... வெள்ளைச் சுரிதார் அணிந்தவர் கர்ப்பிணி போலும்... ஆடி அசைந்து நடந்து வந்து கொண்டிருந்தார். எங்களைக் கடந்து செல்லும் போது, 'க்யூரியசாக' பார்த்துக் கொண்டே சென்றனர்... நாமும் உத்துப் பார்ப்பது நாகரிகம் அல்லவே என நினைத்து, முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.
'ம் ஹும் ஹும்' எனத் தொண்டையைச் செருமிக் கொண்டு, கண்ணாடிக் கோப்பையை இரு கால்களுக்கும் நடுவே இருக்கையில் வைத்துக் கொண்டு ஒரு கைப்பிடி, அவித்த மசாலா கடலையை வாயில் போட்டுக் கொண்டார், லென்ஸ் மாமா.
ரஷீத் தொடர்ந்தார்...
கண்ணதாசன் நாத்திகம், ஆத்திகம் இரண்டிலும் புரண்டு எழுந்தவர். அவர், பாட்டு ஒன்றில்:
'வீட்டை விட்டு வெளியே வந்தால்
நாலும் நடக்கலாம் அந்த
நாலும் தெரிஞ்சு
நடந்துக்கிட்டா
நல்லாயிருக்கலாம்!'
என்று எழுதி இருக்கிறார். கேட்டவுடன், 'அடடா... எதையும், முன் எச்சரிக்கையுடன் தெரிந்து கொள்ள வேண்டும்...' என்ற பகுத்தறிவு சிந்தனையைச் சொல்லி, கேட்பவனை நம்பிக்கையுடன் துாக்கி நிறுத்துகிறாரே கவிஞர்...' என்று எண்ணத் தோன்றும்...
அவரே அடுத்த வரியில், 'உன்னைக் கேட்டு, என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா... அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?' என்று எழுதி, துாக்கி நிறுத்தியவனை, உடனடியாக குப்புறத் தள்ளி விடுகிறார் கண்ணதாசன்...' என்று ரஷீத் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அண்ணாச்சி இடையே புகுந்து, 'கண்ணதாசன் என்னிக்கிய்யா, உறுதியோட ஒரே கச்சில இருந்திருக்காரு? அதான் பாட்டும் அப்படியே எதிரொலிக்கி...' என்றார்.
அப்போது, பென்சில் ஒன்றை கையில் பிடித்த சிறுவன், துள்ளியபடியே ஓடி வந்து வண்டியின் அருகே தயங்கி நின்றான். பின், திரும்ப ஓடி திரும்ப வந்து, அண்ணாச்சியைப் பார்த்து, 'நீங்க தானே அஞ்சுமணி அங்கிள்?' எனக் கேட்டான். 'பொக்' என, எனக்கு சிரிப்பு வர, 'அது யாருடே அஞ்சுமணி... அப்படி யாரும் இங்ஙன இல்லேல்லா...' என்றார்.
சிறுவன் மீண்டும் ஓடினான். அவன் அடைந்த இடம் சற்று துாரத்தில் இருந்தது... அங்கே, ஏற்கனவே சொன்ன கர்ப்பிணிப் பெண் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி அவரது உறவினர் கூட்டம் ஆணும், பெண்ணுமாக... முகத்தில், தென் தமிழ்நாட்டவர் என்பது எழுதி ஒட்டப்பட்டு இருந்தது...
சிறிது நேரத்தில் நீல நிற மாருதி காரில் அவர்கள் சந்தேகத்துடனே கிளம்பிச் செல்ல, 'ஒனக்கெல்லாம் வாழ்வுடா...' என்றபடியே, தன் கோப்பையை மீண்டும், 'பில் - அப்' செய்து கொண்டார், லென்ஸ் மாமா.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X