எஸ்.தமிழ்நாயகி, பழனி: 'மேக்- - அப்' செய்து கொள்ளும் பெண்களை, ஆண்கள் விரும்புவதில்லை என்ற பேச்சு, எந்தளவுக்கு உண்மை?
நுாற்றுக்கு நுாறு உண்மை! தினமும் ஆபீஸ் வரும் வழியில் குறிப்பிட்ட ஒரு இடம் வரும் போது, ஒரு இளம் பெண்,'கிராஸ்' செய்கிறார். ஓவர் மேக் - அப்... லிப்ஸ்டிக், பவுடர், மை... அழகி என்ற நினைப்பு போலும்... சைக்கிளை நிறுத்தி கீழே இறங்கி, 'தாயே... இப்படி மேக் - அப் போட்டு வாழ்வை வெறுக்கடிக்காதே...' எனச் சொல்லி விட இப்போதெல்லாம் தோன்றுகிறது... அந்த தெரு முனையிலே இருக்கும் தொப்பை போலீஸ்காரரும் கண்ணில் படுகிறார்... சைக்கிளை வேக, வேகமாக மிதித்து விடுகிறேன்.
சு.செண்பகம், ஸ்ரீவில்லுபுத்துார்: என் காதலர், என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கள் காதல், கல்யாணத்தில் முடிய ஏதாவது வழி சொல்லுங்களேன்...
மூளையை சேட்டு கடையில் வைத்து விட்ட, 21ம் நுாற்றாண்டு பெண்ணே... 'டைம் -பாசிங்'கிற்கும், இலவசமாகக் கிடைக்கும் சுகங்களுக்கும் மட்டுமே அவர் உன்னை நாடுகிறார் என்பது புரியவில்லையா உனக்கு? பெரிய இழப்பு எதையும் சந்திக்கும் முன், 'டாட்டா' காட்டி விடு, அந்த மனிதருக்கு!
* எல்.அருணாசலம், சென்னை:அசைவம் உண்பது நல்லதா, கெட்டதா?
ஒரு உயிரைக் கொன்றுதான் நாம் உயிர் வாழ வேண்டுமா? இது ஒரு பக்கம் இருக்கட்டும்... 'ரெட் மீட்' எனப்படும் ஆடு, மாடு, பன்றி இறைச்சிகள் மாரடைப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவற்றை சரியான சூட்டில் சமைக்கா விட்டால், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகள் இந்த மாமிசங்களில் அழிவதில்லை என்றும் கூறுகின்றனர்!
ஆர்.பிரபு, பொள்ளாச்சி: ஒரு பெண்ணை காதலித்தால் தான் கவிதை எழுத வருமா?
வி.ஓ., ஆக (வெட்டி ஆபீசர்) இருந்தாலும் வரும்!
* பி.உஷாராணி, மதுரை: டில்லி, கொல்கத்தா, மும்பை போன்ற, 'மெட்ரோ' நகரங்களில் ஒரு மிடில் கிளாஸ் பேமிலி குடும்பம் நடத்த எவ்வளவு பணம் தேவை?
கணவன் - மனைவி, ஒரு கைக்குழந்தை இருந்தால், 50 முதல் 1 லட்சம் ரூபாய் கண்டிப்பாக தேவை. பற்றாக்குறை இல்லாமல் சமாளிக்கலாம். (என்ன, மாப்பிள்ளை தேடுகின்றனரா?)
எம்.பி.கங்கம்மாள், கோவை: வேலைக்குச் செல்லும் பெண்கள், திருமண வாய்ப்பு வந்ததும், தம் வேலையை ராஜினாமா செய்து விடுவது நல்லதா?
நல்லது அல்ல; வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக உள்ள இந்நாளில் வேலையை விட்டு விடுவது முட்டாள் தனம்! சுய சார்புக்காக, பெண்கள் வேலையில் இருந்தே ஆக வேண்டும்!
ஏ.எஸ்.ராஜேந்திரன், திருவள்ளூர்: என் நண்பன் ஒருவன், பெண்களைக் கண்டதும் இரட்டை அர்த்தம் உள்ள வசனங்களை அள்ளி விடுகிறான். அவனைத் திருத்துவது எப்படி?
நீங்கள் சொல்லி எல்லாம் கேட்கப் போவதில்லை... இக்காலப் பெண்கள் லேசு பட்டவர்கள் இல்லை... அவர்கள் ஒருநாள் தம் செருப்பால் திருத்துவர்... அதுவரை அப்படியே விட்டு விடுங்கள்.