ரத்னா! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
ரத்னா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2018
00:00

''அம்மா... உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்கார்... பேரு உலகநாதனாம், உங்களை அவருக்குத் தெரியுமாம்... அவரை உங்களுக்கும் தெரியுமாம்,'' செங்கம்மா சொன்னபோது, ஆச்சரியத்துடன் பார்த்தாள், ரத்னா.
''எப்ப வந்தார்... இப்ப தானே கதவை திறக்கிறோம்.''
''வாசலை பெருக்கி, கோலம் போடலாம்ன்னு கதவைத் திறந்தேன்... இந்த அய்யா வந்தார்.''
''உலகநாதனா... அவர் ஏன்... எப்படி... எதற்கு, அவர் தானா அல்லது வேறு யாராவதா... இது என்ன புது கதை! சரி... வரச்சொல்!''
உலகநாதன் தடுமாறியபடி உள்ளே வந்தார். கையில் தடி, தாடி, நைந்து போன வேட்டி, சட்டை. தன்னையறியாமல் எழுந்து நின்றாள், ரத்னா.
''வாங்க... உட்காருங்க!''
''ரத்னா... லேசாகக் குழறியபடியே, எப்படி இருக்க ரத்னா?''
''உம்...'' அதற்கு மேல் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
''உன்னை கண்டுபிடிக்கறதுக்குள்ள, ரொம்ப கஷ்டமாப் போச்சு.''
அவள் பேசாமல் இருந்தாள். செங்கம்மா இருவருக்கும் காபி கொண்டு வந்தாள். உடனே வாங்கி குடித்தார்.
''அப்பப்பா... இப்ப தான் தெம்பு வந்தது!''
''நீ இங்க இருக்கறது எனக்கு எப்படி தெரிஞ்சுது தெரியுமா... உன் தம்பி பாரி தான் சொன்னான்... எதுவுமே சொல்லாம கிளம்பிட்ட... சரி, கொஞ்ச நாள்ல திரும்பி வந்துடுவேன்னு நினைச்சேன்!''
அவள் பேசாமல் இருக்கவே, அவரே மேற்கொண்டு பேசினார்...
ரத்னாவிற்கும், உலகநாதனுக்கும் கல்யாணமான போது, அவரின் குடும்பம் பெரிதாக இருந்தது. அவரின் பெற்றோர், விதவை அத்தை, அண்ணன், அவர் மனைவி, குழந்தைகள், தம்பி, தங்கைகள், பாட்டி என்று 15 பேர். உலகநாதனின் மனைவியாக இருப்பதை விட, அத்தனை பேருக்கும் வேலைக்காரியாக மாறிப் போனாள், ரத்னா. சின்ன வயசு, அத்தனை பேரையும் அனுசரித்துப் போக தெரியவில்லை.
பாலை காய்ச்சி வைத்தால், மாமியார் தான் காபி கலக்க வேண்டும். ஏனென்றால், அவள் பாட்டுக்கு, திக்காக காபி கலந்து குடித்து விடுவாளோ என்று பயம். ரத்னாவிற்கு மட்டும் அரை கப் கழுநீர் காபி. மிக்சி, கிரைண்டர் இருந்தும், அம்மி, கல்லுரலில் தான் அரைக்க வேண்டும்; பொடி இடிக்க வேண்டும். இத்தனைக்கும், ரத்னா கல்யாணமாகி வரும்போது, புதிதாக எல்லா சாமான்களும் கொண்டு வந்திருந்தாள்.
அடுத்தது, அண்ணன் குடும்பத்தினர் ரத்னாவை ஆட்டி வைப்பது. அதுதான் அவளை மிகவும் வருத்தமுற செய்தது. அவள் வாய் மூடி வேலை செய்தாலும், வாயைத் திறக்க வைத்து, வம்படி செய்து, மாமியாரிடம் திட்டு வாங்க வைப்பது... மாமனார் அதற்கு மேல்.
மாமியார், 'தோப்புக்கரணம் போடு...' என்றால், 'எண்ணிக்கோ...' என்று சொல்லும் ரகம். இரண்டு அண்ணன்கள். அவர்களின் மனைவி, குழந்தைகள். அண்ணன் மனைவியைக் கண்டால் எல்லாருக்குமே பயம். அவள் வாய்க்கு பயம். அதைக் கேட்டு, அண்ணன் ஆடும் ஆட்டத்திற்கு பயம். இத்தனைக்கும் ரத்னா, அண்ணன் மனைவியை விட படித்தவள். பல போட்டிகளில் பரிசு வாங்கியவள்.
ஊருக்கு இளைத்தவன் கதையாக, எல்லாரும் ரத்னாவை ஆட்டுவிப்பதைப் பார்த்து, உலகநாதனின் தம்பியும், தங்கையும், அவள் கணவரும், ஏன், அண்ணனின் மாமியாரும் கூட ரத்னாவை வாய்க்கு வந்தபடி திட்டுவர். ஒரு பொழுதுகூட அவளுக்கு நிம்மதியாக இருந்ததில்லை.
லேட்டாக எழுந்தால், 'ஏன்டி... படுக்கையை விட்டு எழுந்திருக்க மனசு வரலையா... இப்படிக்கூட ஒரு பொம்பளை இருப்பாளா... வெக்கங்கெட்டவ...' என, மாமியார் அர்ச்சனை.
தாமதமா படுக்க போனால், 'மாமியார் கொடுமைன்னு எல்லாருக்கும் தெரியணுமாக்கும்... கல்யாணமாகி ஒரு வருஷமாகிறது... இன்னும் மொட்டை மரமா நின்னா எப்படி... தனி மரம் தோப்பாகுமா... எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்...' என்று அடுத்த அம்பு.
உலகநாதன் எதையுமே காதில் போட்டுக்கொள்ள மாட்டார். 'அவனை மதிக்கலை, இவளை மதிக்கலை...' என்று அவளை மேலும் வறுத்தெடுப்பார்.
இருபத்தைந்து ஆண்டு போராட்டத்துக்குப் பின், பெண்ணுக்கும், பிள்ளைக்கும் நல்லபடியாகக் கல்யாணம் செய்து முடித்தாள். அதற்குள், எத்தனை மாற்றங்கள்... பெரியவர்கள் இறந்து, மற்றவர்கள் தனிக் குடித்தனம் துவங்கி, ரத்னா வேலையிலிருந்து விலகி... ஆனால், உலகநாதன் மட்டும் மாறவேயில்லை. அதே சிடுசிடுப்பு, எரிச்சல், கோபம்.
தன் குழந்தைகளின் பிறந்த நாள், அவருக்கு முக்கியமல்ல... அண்ணன் குழந்தைகள், அவர்களின் மனைவிமார் உறவுகளுக்கெல்லாம் வாழ்த்து சொல்வதும், பரிசு வழங்குவதும், அவர்களிடம் ரத்னாவைப் பற்றி இல்லாததை சொல்வதும் அவருக்கு கைவந்த கலை.
அதை கேட்டு, அவர்கள், இவளை இடித்துரைப்பதும், விசேஷங்களில் ஒதுக்கி வைப்பதும் வாடிக்கை.
அதைவிடக் கொடுமை, தன் குழந்தைகளின் திருமண விசேஷங்களில் கூட, அவளை ஒதுக்கி வைத்து, அண்ணன் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை மேடையில் ஏற்றியது தான் ரத்னாவிற்கு தாங்க முடியாத மன வருத்தத்தை தந்தது.
அழைப்பிதழ் அச்சடிப்பது, உறவுகளுக்குப் புது துணிகள் வாங்குவது, சத்திரம் பார்ப்பது, சாப்பாடு ஏற்பாடு, எல்லாமே அண்ணன் குடும்பத்தினருடன் தான்... துக்கம் பொங்க, மனதிற்குள் அழுதபடி, தன் குழந்தைகளின் கல்யாணத்தில் கலந்து கொண்டாள், ரத்னா.
பல்லைக் கடித்து, பொறுத்து, பெண்ணுக்கும், பிள்ளைக்கும் திருமணம் செய்து முடித்தவள், சரியான நேரத்திற்காக காத்திருந்தாள்.
வழக்கம்போல, ஆர்ப்பாட்டமாக வந்த உலகநாதன், 'ஏய்... ரெண்டு பேருக்கு இத்தனை பெரிய வீடு வேண்டாம்... வீட்டை விற்க ஏற்பாடு பண்ணிட்டேன்... சின்னதா ஒரு வீடு பார்த்து, பால் காய்ச்சி விட்டேன். இரண்டு நாளில் இந்த வீட்டை காலி பண்ணனும்... ரெடியா இரு...' என்றார்.
'எப்ப நடந்தது இதெல்லாம்?'
'எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லணும்ன்னு அவசியம் இல்ல...'
'எனக்குத் தெரிய வேண்டியது தெரிஞ்சு தான் ஆகணும்...'
'என்னடி, வாய் நீளுது?'
'ஆமாம்... ஒரு வார்த்தை சொல்லாமல், எல்லாத்தையுமே முடிச்சுட்டு வந்து சொன்னா என்ன அர்த்தம்?'
'இங்க பார், அப்படித்தான் செய்வேன்... இஷ்டமிருந்தா இரு... இல்லேன்னா தாராளமா வெளில போகலாம்...'
'ஓ... சரி, நான் போறேன்...'
'கிளம்புடி... பயமுறுத்துறியா?'
வெகு நாட்களாகவே மனதில் திட்டம் போட்டு வைத்திருந்தாள். உடனே, தன் தோழியை தொடர்பு கொண்டாள்.
ஒரு இல்லத்தின் பொறுப்பாளியாக வேலை செய்து வந்தாள் தோழி, விமலா. அது அவளின் சொந்த இல்லம் என்று கூட சொல்லலாம். ஏற்கனவே ரத்னாவின் கதையை அறிந்தவளாதலால், உடனே வரச் சொல்லி விட்டாள்.
ஒரு வேகத்தில், புடவை, துணிகள், முக்கியமான சில பேப்பர்களுடன் கிளம்பினாள், ரத்னா. ஏதோ பயமுறுத்துகிறாள் என்று நினைத்த உலகநாதன், அரண்டு போனார். ஆனாலும், வீம்பு விடவில்லை. போகட்டும் என்ற நினைப்பு.
'நான் கிளம்பறேன்... நாம நல்லபடியா பிரியணும்ன்னு நினைக்கிறேன்... நான் ஏதும் தப்பு பண்ணலை... அப்படி ஏதும் பண்ணியிருந்தா, உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்...'
'சரிதான் போடி... நீ இல்லேன்னா நான் செத்து போயிட மாட்டேன்...'
அன்று வீட்டை விட்டு இறங்கி, விமலா இல்லத்தில் தஞ்சம் புகுந்தவள். இன்று, அந்த இல்லத்தின் மற்றொரு நிர்வாகியாகி விட்டாள்.
பிள்ளையும், பெண்ணும் வந்து அழைத்தபோது, உறுதியாக மறுத்தாள்.
இதோ, இன்று, உலகநாதன் அவளை தேடி வந்திருக்கிறார்.
''ரத்னா... எனக்கு வயசாயிடுச்சு.''
''ஓ... அப்படியா!''
''என்னால தனியா இருக்க முடியல.''
''அது சரி... அண்ணன் குடும்பம் என்னாச்சு?''
''போனது போகட்டும், நீ வீட்டுக்கு வந்துடேன்.''
''எதற்கு?''
''உன் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு...''
''என் சமையல் சகிக்க முடியாதே...''
''வேலைக்காரி கூட சரியா வர்றதில்ல... எல்லாமே நானே செய்ய வேண்டியிருக்கு.''
''ஓ... அதுதானா விஷயம்?''
''காய் வாங்க, மின் கட்டணம் கட்ட, கடைக்குப் போகன்னு எல்லாம் ஒண்டியா செய்ய வேண்டியிருக்கு.''
''ஓ...''
''அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடுது; வயசாகலியா? நீ வந்துட்டா, எனக்கு ரொம்ப வசதியா இருக்கும்.''
''அப்படி வாங்க விஷயத்துக்கு... இப்பவும் உங்க வசதி தான் முக்கியம்... இல்லையா?''
''என்ன யோசிக்கற... இப்பவே கிளம்பலாம்... வீடு, குப்பையும், கூளமுமாக கிடக்கு... நீ வந்ததும் நிறைய வேலை இருக்கு.
''உனக்கு இன்னும் கோவம் தீரலை போலிருக்கு... நியாயம் தான். நீ மன்னிச்சுடுன்னு என்கிட்டே கெஞ்சினபோது, நான் உன்னை மன்னிச்சிருக்கலாம்... எனக்கும் வீம்பு தான். என்ன செய்யறது?''
ஒரு நிமிடம் அவரை உற்று பார்த்தாள், ரத்னா.
''ஆக... உங்களைக் கெஞ்சினது, நான் தான் தப்பு செய்தேன் என்பதால் தான், இல்லையா?''
''பின்ன, சொல்லாம, கொள்ளாம ஒரு குடும்பப் பொம்பள வெளில கிளம்பிப் போனா, என்ன அர்த்தம்?
''திடீர்னு இப்படி போட்டது போட்டபடி கிளம்பறோமே... அடுத்த வேளை சாப்பாட்டுக்கு நான் என்ன செய்வேன்னு கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தியா நீ?''
''அதாவது, நான் போனது கூட பெரிசில்லை... உங்களை கவனிக்காம போனது தான் பெரிசு... இப்பவும் உங்க வசதியும், நிம்மதியும் தான் உங்களுக்கு முக்கியம்... இல்லையா? உங்க மனசுக்கு நான் இன்னும் நெருக்கமாக வரவில்லை...
''பரவாயில்லை... நான் மறுபடியும் உங்களுடன் வந்து வாழ்வதை மறந்து விடுங்கள். வேண்டுமானால், இந்த இல்லத்தில் உங்களுக்கு ஒரு இடம் தரேன்... அது கூட, பணம் கட்டி தான் சேர வேண்டும்... மாதா மாதம் பராமரிப்புத் தொகை செலுத்த வேண்டும்... உங்களுக்காக எந்த விதமான சிறப்பு சலுகையும் கிடையாது. இதற்கு சம்மதமானால், மேற்கொண்டு பேசலாம்.
''முக்கியமான விஷயம்... இனி, நான் இந்த இல்லத்தின் நிர்வாகியாகத் தான் உங்களிடம் பேசுவேன்... ரத்னாவாக அல்ல!
''யோசித்து, செங்கம்மாவிடம் சொல்லிடுங்க... அவள் ஏற்பாடு செய்வாள்... எனக்கு வேறு வேலை இருக்கு.''
கம்பீரமாக எழுந்து நடந்தாள், ரத்னா.
வினை விதைத்து, வினையை அறுவடை செய்ய வந்திருப்பதாக கருதி, மனம் வலிக்க, செய்வதறியாது, சிலையாக நின்றார், உலகநாதன்.

- சுந்தராம்பாள் கணேசன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X