மோய் பின் பை! (2) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
மோய் பின் பை! (2)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2018
00:00

மூன்று நாடுகளுக்கு சுற்றுலா செல்லப் போகிறோம் என்றதுமே, வயிறு மற்றும் காதில் புகை வந்தவர்களிடம், 'நீங்க எல்லாம் குடும்பத்தோடு பல இடங்களுக்கு சென்று வந்துட்டீங்க... அவங்க போயிட்டு வரட்டும்...' என்று சமாதானப்படுத்தினார், கே.ஆர்.,
மே மாதம்...
எங்கள் நால்வர் வாழ்விலும் ஒரு பொன்னாள்... பயணத்துக்கு முதல் நாள், கே.ஆர்., அறையில் அனைவரும், அவரது வாழ்த்து மற்றும் வழிகாட்டலை எதிர்பார்த்து, குழுமி இருந்தோம்.
அவரவருக்கு உரிய பாஸ்போர்ட், விசா மற்றும் டிக்கெட் அடங்கிய, 'பைலை' டூர் ஏற்பாட்டாளரான கலா, கே.ஆரிடம் கொடுக்க, அவர், எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதித்து, எங்களது வயதை கிண்டலடித்து, இறுதியாக, அவரவர் பெயரை குறிப்பிட்டு, பயணம் சிறப்பாக அமைய, வாழ்த்துகளை கூறி, 'பைலை' எங்களிடம் கொடுத்தார்.
நன்றியுடன் பெற்றுக் கொண்டு, அவர் ஏற்கனவே அந்நாடுகளுக்கு சென்று வந்ததால், அதைப் பற்றி விசாரித்தோம்.
'வியட்நாம் நாட்டுக்கு போறீங்க... பார்த்து செலவழியுங்க; ஒரு கப் காபியின் விலை, 1 லட்ச ரூபாய்...' என்றதும், 'என்னது, 1 லட்சமா...' என்று அனைவரும் வாயை பிளந்தோம். கையில் கொண்டு போகும் பணமே அவ்வளவு தானே! காபிக்கே செலவழித்து விட்டால், மற்றவைகளுக்கு என்ன செய்வது என்று திகைத்தோம்.
'அட... அறிவுக்கொழுந்துகளே... நம்மூர் பணம், 100 ரூபாய்க்கு, அவர்களது பணத்தில், 32,000 டாங்க்குக்கு சமம்...' என்றதும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.
நாங்கள் செல்லும் நாடுகளில் இருந்து, அவரவர் வீடு மற்றும் கே.ஆரிடம் பேச வேண்டும் என்பதற்காக, ஒருவரது மொபைலில், 'இன்டர்நேஷனல் ரோமிங்' வசதியை செய்து கொண்டோம். அது தவிர, 'மேட்ரிக்ஸ் கார்டு' எனப்படும், எங்கிருந்தாலும் பேசும்படியான, 'சிம்'மை வாங்கிக் கொண்டோம்.
'டூர்' போகப் போகிறோம் என்றதுமே, டிரஸ் முதல், தக்காளி சட்னி வரை லிஸ்ட் தயாரித்து, பக்காவாக நான்கு நாட்களுக்கு முன்பாகவே, 'பேக்' செய்து விட்டோம்.
வழக்கம்போல், புறப்படும் நாள் முதல், 'டூர்' நாட்கள் முழுவதற்கும், ஒரே ஸ்டைலில் ஆடை அணிந்து கொள்வது என்று தீர்மானித்தோம்.
இனி, பயணத்தை தொடர்வோம்...
இரவு, 1:10 மணிக்கு, 'தாய் ஏர்லைன்ஸ்' மூலமாக, தாய்லாந்து தலைநகரான, பாங்காக் செல்ல, இரவு, 9:30 மணி அளவில், சென்னை, 'அண்ணா இன்டர்நேஷனல்' விமான நிலையத்தில் நால்வரும் மூட்டை முடிச்சுகளுடனும், மனம் நிறைய குதுாகலத்துடனும் ஒன்று கூடினோம்.
விமான நிலைய சம்பிரதாயங்களை நிறைவேற்ற, வரிசையில் நின்றோம். விசா மற்றும் பாஸ்போர்ட் சரி பார்த்த விமான நிலைய அதிகாரி ஒருவர், நாங்கள், 'ராட்சசிகள்' என்று தெரியாமல், நான்கு பெண்கள் மட்டும் தனியாக பயணம் செய்வதை ஆச்சரியமாக விசாரித்ததோடு, எங்கள் பயணம் இனிதாக அமையவும், வாழ்த்தினார்.
கே.ஆரின் வாழ்த்து, எங்கள் குடும்பத்தாரின் வாழ்த்து மற்றும் விமான நிலைய அதிகாரியின் வாழ்த்துகளுடன், இரவு, 12:30 மணி அளவில், விமானத்தினுள் செல்ல படிகளில் ஏறினோம். விமான நுழைவு வாயிலில் வித்தியாசமான முறையில் சேலை கட்டிய விமான பணிப்பெண்கள், 'இண்டி தந்த்ராப்' என்று தாய்லாந்து மொழியில், வரவேற்றனர்.
'ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டுறாங்கப்பா... வா வா உள்ளே போயிடுவோம்' என்று கல்பலதா கூறியதும், 'கொல்' என்று சிரித்தப்படி, விமானத்தினுள் சென்று எங்கள் இருக்கையில் அமர்ந்தோம்.
சுற்றிலும் கண்ணை சுழற்றியதில், பலர், நம்மூர் முகங்களாக தெரிந்தனர். விடுமுறையை கழிக்க, குடும்பத்துடன் தென் கிழக்காசிய நாடுகளுக்கு செல்கின்றனர் போலிருக்கு என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம்.
சரியாக, 1:10 மணியளவில் விமானம் கிளம்பியது. அடுத்த, 20வது நிமிடத்தில் உணவு பரிமாற துவங்கினர். தாய்லாந்து ஸ்பெஷல் அரிசியான, 'ஸ்டிக்கி ரைஸ்'ல் சமைக்கப்பட்ட சோறு ஒரு கப், சப்பாத்தி ஒன்று, பாலக் பனீர் மற்றும் பருப்பு வழங்கினர். திரும்ப எப்போது சாப்பாடு கிடைக்குமோ... நடு இரவானாலும் பரவாயில்லை என்று அதை சாப்பிட்டோம்.
சிறிது நேரத்தில், அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டனர். அவர்கள் கொடுத்த தலையணையை வைத்து, கம்பளியை போர்த்தி சுகமாக துாங்கினோம். மூன்றரை மணி நேர பயணத்தில், தாய்லாந்து தலைநகரான பாங்காக்கை அடைந்தோம். அப்போது, அவர்கள் நேரப்படி, காலை, 6:10 மணி. நமக்கும், அவர்களுக்கும், ஒன்றரை மணி நேர முன் கூட்டிய வித்தியாசம்.
பாங்காக், 'சுவர்ணபூமி' விமான நிலையம், மின்னொளியில் காட்சியளித்தது. 'ஏரோ பிரிட்ஜ்' எனப்படும், விமானத்திற்கும், விமான நிலையத்திற்கும் இடையில் அமைக்கப்பட்ட பாலம் வழியே, விமான நிலையத்திற்குள் சென்றோம்.
விமான நிலையம் பிரமாண்டமாக இருந்தது. விமான நிலையத்தின் முகப்பில், தேவர்களும், அசுரர்களும், பாற்கடலை கடையும் காட்சி, தத்ரூபமாக பெரிய அளவில் அழகிய சிற்பமாக வடிவமைத்திருந்தனர். விளக்கொளியில், ஜெகஜோதியாய் ஜொலித்தது.
அங்கு வரும், சுற்றுலா பயணிகள் அனைவரும், அச்சிற்பத்தின் முன் நின்று, புகைப்படம் மற்றும், 'செல்பி' எடுத்துக் கொள்கின்றனர்; நாங்களும் தான்.
அங்கிருந்து, வியட்நாம் நாட்டுக்கு செல்ல, மற்றொரு விமானத்தில் செல்ல வேண்டும். விமான நிலையத்திற்குள், 2 கி.மீ., துாரத்திற்கு, பெட்டிகளை சுமந்தபடி நடந்து சென்றோம். பெட்டிகளை, 'ஸ்கேன்' செய்து, டிக்கெட் மற்றும் விசாவை சரி பார்த்தனர். விமானத்திற்குள் தண்ணீர் பாட்டிலை கொண்டு செல்லக் கூடாது என்று தடை விதித்து, நாங்கள் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலையும் துாக்கி குப்பை கூடையில் போட்டனர். எல்லாம் முடிந்து, 'தாய் ஏர்லைன்ஸ்' விமானத்தில் ஏறி அமர்ந்தோம்.
வியட்நாம் தலைநகர், ஹனாய் செல்ல, இரண்டு மணி நேர பயணம்.
விமானத்தில், காலை உணவு வழங்கினர். சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால், பேருக்கு சாப்பிட்டு, எப்போது வியட்நாம் செல்வோம் என்ற எதிர்பார்ப்புடன் பயணித்தோம்.
வியட்நாம் தலைநகரான, ஹனாய் விமான நிலையத்தில் இறங்கி, பெட்டிகளுடன், எங்களுக்கு வழிகாட்டியாக வர இருந்தவரை தேடி அலைந்தோம். 'மாய்' என்ற பெயருள்ள வழிகாட்டி, எங்கள் பெயர்களை எழுதிய அட்டையை துாக்கி காட்டியபடி, புன்முறுவலுடன் வரவேற்றார்.
எங்கள் நான்கு பேருக்காக, 10 பேர் அமரக்கூடிய பிரமாண்டமான சொகுசு, 'டொயோட்டோ' வேன் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஏறி அமர்ந்ததும், பசியும், களைப்பும் அலைக்கழித்தது. முதலில் மதிய உணவை சாப்பிட்ட பின், ஓட்டலுக்கு செல்லலாம் என்று கூறி, 'நமஸ்தே' என்ற பெயருள்ள, ரெஸ்டாரன்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு, தலை வாழை இலையில், நம்மூர் சாப்பாட்டை ஒரு பிடி, பிடித்தோம்.
பசி அடங்கியதும், வியட்நாமில், நம்மூர் சாப்பாட்டை வழங்கும், ஓட்டல் உரிமையாளரைப் பற்றி விசாரித்தோம்.
'நமஸ்தே' ஓட்டலை நடத்துபவர், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். கனடாவில் செட்டிலாகி, ஆறு மாதம், வியட்நாம், ஆறு மாதம், கனடா என்று, மாறி மாறி வசிப்பவர். தமிழகத்திலிருந்து சென்ற சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில், 'பிராமணாள்' சாப்பாடு முதல், வட மாநில சப்பாத்தி, 'நான்' உட்பட, தந்துாரி ஐயிட்டங்களை வரை கிடைக்கிறது.
சர்வர்கள் அனைவரும் வியட்நாமை சேர்ந்த இளம்பெண்கள். காலை, 11:00 மணி முதல் மதியம், 2:30 மணி வரையிலும், மாலை, 6:00 மணி முதல் இரவு, 10:30 மணி வரை மட்டுமே ஓட்டல் இயங்கும் என்று குறிப்பிட்டார்.
இதற்கு என்ன காரணம் என்று கேட்க, 'எல்லா நேரமும் சமையல் கலைஞர்கள் அடுப்படியில் வெந்து கொண்டிருந்தால், உடல் சூடேறி ஆரோக்கியம் கெடும் என்பதற்காகவே இந்த முறை...' என்றார்.
எங்களுக்கு பதிவு செய்யப்பட்ட, 'ப்ளவர் கார்டன்' ஓட்டலுக்கு சென்று, சிறிது நேரம், 'ரிலாக்ஸ்' செய்தோம். அன்று, என்னென்ன பார்க்க போகிறோம் என்பதை கூறி, ஆவலை துாண்டினார், வழிகாட்டி. அது என்ன என்று, அடுத்த வாரம்...
— தொடரும்.
- ந. செல்வி

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X