மாலை சூட வா! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
மாலை சூட வா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2018
00:00

விநாயகர் ஸ்தோத்திரம் சொல்லி, சாமி கும்பிட்டு வெளியே வந்த மனைவியிடம், இரண்டு ஜாதகத்தையும், போட்டோவையும் கொடுத்தார், மகேசன்.
''நம் ப்ரியாவுக்கு வரன் வந்திருக்காங்க,'' ஆவலுடன் கேட்டு, இரண்டு போட்டோவையும் பார்த்தாள்.
''இந்த பையன், சற்று மாநிறமா இருக்கான்... இந்த பையன், பார்க்க அம்சமா, களையா இருக்கான்!''
''இரண்டு பேரும் எங்கே வேலை பார்க்கிறாங்க... இதை தந்தது யாருங்க?''
''என் ப்ரெண்ட் ஆனந்தனை, ஒரு கல்யாணத்தில் பார்த்தபோது, 'ப்ரியா, படிப்பை முடிச்சுட்டா... வரன் பார்க்கணும்... நல்ல இடமாக இருந்தா சொல்லு'ன்னு சொல்லியிருந்தேன்... அவன் தான் கொடுத்தான்.
''மாநிறமா இருப்பவன் பேர், ஸ்ரீதர். ஐ.டி., கம்பெனியில், 'டீம் லீடரா' இருக்கான்... இந்த பையன் பேர், பிரணவ், சொந்தமா பிசினஸ் பண்றான். பாங்க்ல லோன் போட்டு, வாட்டர் ப்ளான்ட் போட்டிருக்கான். இரண்டு ஜாதகமும் பொருத்தம் பார்த்தாச்சு...
''உனக்கு, எந்த வரன் சம்மதம் பேசி முடிக்கலாம்ன்னு சொல்லு... எனக்கு வேண்டியவங்க தான்... நான் இருந்து, முடிச்சு தரேன்னு சொன்னான்... ப்ரியாவுக்கு கல்யாண நேரம் வந்தாச்சு ஜானகி!'' புன்னகைத்தார், மகேசன்.
''சரி... நீங்க யாரை முடிவு பண்ணுனீங்க?''
''உன்னையும், ப்ரியாவையும் கேட்காமல், நானா எப்படி முடிவு பண்ணுவேன்... முதலில் உன் அபிப்பிராயத்தை சொல்லு!''
சிறிது யோசித்து, ''மாநிறமா இருந்தாலும், ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும், ஸ்ரீதரையே முடிச்சுடுவோம்ங்க... வேலையில் இருப்பவன் தான் சரி வரும்... என்ன சொல்றீங்க?''
''சரி... உன் இஷ்டம்... ப்ரியா வரட்டும், அவகிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுடு.''
இரண்டு போட்டோவையும் மகளிடம் காட்டி, அபிப்பிராயம் கேட்க, ''இவ்வளவு நாள் எனக்கு தேவையானதை, நீயும், அப்பாவும் தான் பார்த்து பார்த்து செஞ்சீங்க... இதையும் நீங்களே முடிவு பண்ணுங்க!''
''பார்த்தீங்களா... என் மகள், என்ன சொல்றா கேட்டீங்களா... பெரியவங்க பேச்சுக்கு மதிப்பு தர்ற மாதிரி மகளை வளர்த்திருக்கேன்,'' பெருமையுடன் மகள் கன்னத்தை வழித்து, திருஷ்டி வைத்தாள்.
நண்பன் உள்ளே வர, ''ஜானகி... ஆனந்தன் வந்திருக்கான் பாரு!'' சொன்னவர், வரவேற்றார்.
''அப்புறம் சொல்லு... மகேசன், நீங்களும் ஜாதகம் பார்த்திருப்பீங்க... எந்த வரன் பொருத்தமா இருக்கு?''
காபியுடன் வந்த ஜானகி, ஆனந்தனிடம் தந்தாள்.
''இரண்டு ஜாதகமும் பொருத்தம் இருக்கு... இருந்தாலும், எங்களுக்கு அந்த பையன், ஸ்ரீதரை தான் பிடிச்சிருக்கு... அந்த வரனையே பேசி முடிச்சிருங்க அண்ணா!'' சொன்னாள், ஜானகி.
''ரொம்ப நல்லதும்மா... ப்ரியாகிட்ட சம்மதம் வாங்கிட்டியாம்மா?''
''நாங்க முடிவு பண்றது தான், அவ முடிவு... அவளுக்கும் சம்மதம் தான்!''
''சரிம்மா... நாளைக்கே மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை பார்த்து பேசிடறேன்!'' காபியை ருசித்தபடி சொன்னான் ஆனந்தன்.
''என்னம்மா... கல்யாண பொண்ணு, மாப்பிள்ளை போட்டோவ பார்த்தியா... பிடிச்சிருக்கா?'' ப்ரியாவிடம் கேட்டார்.
''இரண்டுமே பிடிச்சிருக்கு அங்கிள்!''
''அட கடவுளே... அதுக்காக, இரண்டு பேரையும் பார்க்க முடியுமா?''
''அதனால தான்... முடிவை, அம்மா - அப்பாகிட்டே விட்டுட்டேன்!'' சிரித்தாள் ப்ரியா.
ஜானகியையும், மகேசனையும் பார்த்தவர், ''எதனால், ஸ்ரீதரை தேர்ந்தெடுத்து, அந்த பையன் ப்ரணவை வேண்டாம்ன்னு முடிவு பண்ணீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?''
''தாராளமா... வேலை பார்ப்பதில் கிடைக்கும் பாதுகாப்பும், நிம்மதியும் பிசினசில் கிடைக்காது... எல்லாத்துக்கும், 'ரிஸ்க்' எடுக்கணும்... பொறுப்புகளை சுமக்கணும்... ஐ.டி., கம்பெனியில வேலை பார்ப்பவனை கட்டி வச்சா, என் மகள் நிம்மதியா இருப்பா... பெண் கொடுப்பவங்களுக்கும் நிம்மதியும், சந்தோஷமும் தானே முக்கியம்,'' சொன்னாள், ஜானகி.
''அப்ப பிசினஸ் பண்றவங்க நிம்மதியா வாழ முடியாதுன்னு சொல்றியாம்மா?''
''அப்படி இல்லை அண்ணா... அது கொஞ்சம், 'ரிஸ்க்'கான சமாசாரம் தானே... நமக்கெதுக்கு வம்பு... அதனால் தான்!''
''தப்பும்மா... இப்படி உங்களை மாதிரி பெண்ணை பெத்தவங்க, சுய வேலை வாய்ப்பு தேடிக்கிற இளைஞர்களை சரியான கண்ணோட்டத்துல பார்க்கறதில்லை... அடுத்தவங்ககிட்ட கை நீட்டி, சம்பளம் வாங்கறவங்களை கொண்டாடறீங்க... சொல்லப் போனா, சுயதொழில் செய்றவங்ககிட்டே தான் திறமையும், தைரியமும் அதிகம் இருக்கு... வாழ்க்கையில முன்னேறணும்ங்கிற உத்வேகம் இருக்கு... இந்த இளைஞர்கள், தங்கள் பிசினஸ் மூலம், இன்னும் நாலு பேருக்கு வேலை கொடுத்து, கைதுாக்கி விடறாங்க...
''ஐ.டி.,யில் வேலை பார்க்கிறாங்கன்னு சொல்றோம், நாளைக்கே வேலை இழக்கும்படி ஆச்சுன்னா... அடுத்த வாய்ப்பை தேடி, அவங்களும், அதை சவாலா எடுக்கத்தான் வேணும்... தேடல்கள் தான் வாழ்க்கையை சுவாரசியமாக்கும்... இப்படிப்பட்ட இளைஞர்கள், தொழிலில் எப்படி முன்னேறலாம்ன்னு பலவிதத்தில் வாய்ப்புகளை உருவாக்கி, முன்னேறுவாங்க... அந்த பையன், இப்பவே பத்து பேருக்கு சம்பளம் தர்ற முதலாளியா இருக்கான்... அவனை கட்டிக்க, எந்த அதிர்ஷ்டசாலிக்கு கொடுத்து வச்சுருக்கோ... சரி... நான் கிளம்பறேன்மா!''
ஆனந்தன் எழ, ''அங்கிள்... ஒரு நிமிஷம்!''
ப்ரியாவை பார்த்தார்...
''அந்த அதிர்ஷ்டசாலி, நானாக இருக்க விரும்பறேன் அங்கிள்... தேடல்களோடு முன்னேறத் துடிக்கும், தன்னம்பிக்கை நிறைந்த அவருக்கு மனைவியானால், என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்ன்னு நினைக்கிறேன்,'' என்று சொன்னவள், ''என்னம்மா... நான் எடுத்த முடிவு, உங்களுக்கும், அப்பாவுக்கும் சம்மதம் தானே?''
''எங்க மருமகன், 'பிசினஸ் மேன்'னு சொல்லிக்கிறதில் நாங்களும் பெருமைப்படறோம், ப்ரியா!''
''ஆனந்தன்... ப்ரணவ் வீட்டில் பேசி, இந்த சம்பந்தத்தை முடிச்சுடு!''
திருப்தியுடன் சொல்லும் அப்பாவை, புன்னகையோடு பார்த்தாள், ப்ரியா.

- பரிமளா ராஜேந்திரன்

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X