ராமர் கடை பிடித்த விரதம்! - ராமர் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2011
00:00

தேவலோக தச்சன் மயன். இவன் ஒரு சமயம் பூலோகம் வந்து விஷ்ணுவை நோக்கி தவம் செய்தான். சங்கு சக்கரங்களுடன் அவனுக்குக் காட்சி தந்தார் மகா விஷ்ணு.
அவரைக் கண்டு மகிழ்ந்த மயன், "இறைவா! எனக்கு ராமபிரானாக காட்சி தரவேண்டும்' என்று கேட்டான். உடனே விஷ்ணு தன்னிடமிருந்த சங்கு சக்கரங்களை அருகே இருந்த கருடாழ்வாரிடம் கொடுத்துவிட்டு மயனுக்கு ராமபிரானாக காட்சி தந்தார்.
கும்பகோணம் - அணைக்கரை சாலையில் உள்ள திருவெள்ளியங்குடியில்தான் ராமர் இப்படிக் காட்சி தந்தார்.

* நாகை மாவட்டத்தில் பூந்தோட்டத்திற்கு அருகே உள்ள ஊர் திலதர்ப்பணபுரி. இந்த ஊர் சிதலைப்பதி, செதில்பதி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இங்கு முக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆலயத்திற்கு வெளியே சந்திர தீர்த்தம் உள்ளது. இங்கு அரிசிலாறு பாய்கிறது. ராமரும் லட்சுமணரும் தம் தந்தை தசரதருக்கு தர்ப்பணம் செய்த இடம் இது என்கிறது தலபுராணம்.

* கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி ஆலயத்தில் ராமகாதை தொடர்பான சிற்பங்கள் உள்ளன. தஞ்சாவூர் தெற்கு வீதியில் உள்ள கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில் ராமகாதையை கல்லில் சிற்பமாக வடிவமைத்துள்ளனர். இது நாயக்கர் கால திருப்பணி என்கின்றனர்.

* சீதை இலங்கையில் அசோக வனத்தில் வாடிக் கொண்டிருந்தபோது அவளை மீட்டு வர வேண்டுமே எனக் கவலைப்பட்டார் ராமர். இடையில் உள்ள கடலை எப்படிக் கடப்பது என்று விபீஷணரிடம் ஆலோசனை கேட்டார். அவரது ஆலோசனைப்படி தர்ப்பப் புல்லைப் பரப்பி, அதன் மீது படுத்த நிலையில் வருணபகவானை நோக்கி ஏழு நாட்கள் தவம் இருந்தார் ராமர். ராமபிரான் தவமிருந்த இத்தலமே தர்ப்பசயனம் எனும் திருத்தலமாகும்.

* கைகேயியின் சூழ்ச்சியால் ராமன் காட்டிற்குச் சென்றான். அரசுரிமையை இழந்தான். வனவாசத்தின்போது சீதையையும் பிரிந்தான். ராமன் சந்தித்த சோதனைகள் ஏராளம். இதனால் ராமனுக்கு மனச்சோர்வு ஏற்பட்டது. பின்னர் மனச்சோர்வும் கலக்கமும் நீங்கி இலங்கை செல்ல பாலம் கட்டி, ராவணனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடினான். இதற்குக் காரணம் ராமபிரான் அம்பிகையை வேண்டி கடைப்பிடித்த நவராத்திரி விரதத்தின் பலன்தான் என்கிறார் சூத மகரிஷி.

* தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அபூர்வ சுவடி நூல்களில் சப்தார்த்த சிந்தாமணி என்பதும் ஒன்றாகும். கி.பி. 1684 முதல் 1712 வரை தஞ்சையை ஆண்ட ஷாஜி என்ற மராட்டிய மன்னரின் அவைப் புலவராய் விளங்கிய சிதம்பரக்கவி என்பவரால் இது எழுதப்பட்டது. இந்த நூலக்குத் தனிச்சிறப்பு ஒன்று உள்ளது. வடமொழியில் உள்ள இந்நூலை முதல் சுவடியில் இருந்து படிக்கத் தொடங்கினால் ராமாயணமாகவும், கடைசி சுவடியிலிருந்து திருப்பிப் படித்தால் பாகவதமாகவும் அமைந்துள்ளதாம். இவ்வாறு அமைந்து இருப்பது அதிசயமல்லவா!

* ராமர் மூலவராக உள்ள ஸப்த (ஏழு) ராமர் கோயில்கள். 1. அயோத்தி, 2. திருப்புலாணி, 3. சீர்காழி, 4. திருவெள்ளியங்குடி, 5. திருஎவ்வுள் (திருவள்ளூர்), 6. புள்ளம் பூதங்குடி, 7. திருப்புட்குழி முதலியன.

* ஸ்ரீராமநவமியன்று பக்தர்கள் தம் சக்திக்குத் தகுந்தபடி பொன், வெள்ளி, செம்பு முதலியவற்றால் வடிக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலையை யாரேனும் ஒருவருக்கு தானமாகத் தருவது நல்லது. ஸ்ரீராமர் வழிபாடும், வரலாறும், பெருமைகளும் எங்கும் பரவவேண்டும் என்பது இவ்வகை தானத்தின் நோக்கம். சிலர் பலருக்கு விசிறிகளை தானமாகத் தருகின்றனர். ஸ்ரீராமருக்கு எல்லோரும், எப்போதும் அடிமைத் தொழில் புரியவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்ற ஓர் அடையாளம் விசிறி. அஷ்ட மங்கலப் பொருள்களில் விசிறியும் ஒன்று. ஸ்ரீராமரை வழிபட்டால் எங்கும் மங்கலம் பொங்கித் தங்கும் என்பதை விசிறி புலப்படுத்துகிறது.

* மதுரை மீனாட்சி கோயில், கூடலழகர் கோயில், திருவாதவூர்க் கோயில்களில் இசைத்தூண்கள் உள்ளன. தாராசுரத்தில் சங்கீதப் படிக்கட்டுகள் உள்ளன. மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரே தூணில் 22 சங்கீதத் தண்டுகள் உள்ளன. அவைகளில் ஒன்று சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் கும்பேசுவரர் மங்களாம்பிகா சன்னதியில் உள்ள தூண்களில் கற்களாலான சங்கிலி உள்ளன. சிம்மத்தின் வாயில் உள்ள ஒரு கல்பந்து சுழலும் வகையில் அமைந்துள்ளன. இது போன்ற அற்புதங்களை வடித்த சிற்பிகளின் கைவண்ணம் பிரமிக்க வைப்பவை.

* நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள திருத்தலம் தில்லை விளாகம். இங்கு பஞ்சலோகத்திலான ஸ்ரீகோதண்ட ராமர், சீதாபிராட்டியார், இலக்குவன், அனுமன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். இந்த விக்கிரகங்களின் கையிலும், காலிலும் உள்ள பச்சை நிற நரம்புகள், விரலில் உள்ள ரேகைகள், கை, கால்களில் உள்ள நகங்கள் மற்றும் அனுமனின் திருமேனியில் மண்டிக் கிடக்கும் உரோமங்கள், தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஸ்ரீராமர் கானகம் செல்லும் போது அவருடைய அன்னை கௌசலை இடது மணிக்கட்டில் கட்டிய ரட்சா பந்தன், இடது முட்டியின் கீழே கட்டப்பட்டுள்ள ரட்சை, எழுத்துக்களுடன் கூடிய தனுசு போன்றவையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

* சீதா-ராம கல்யாணம் முடிந்து அயோத்தி வந்த ராமரை எல்லோரும் வாழ்த்தி விலை உயர்ந்த பரிசுகளை அளித்தனர். அப்போது மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி அழகிய பாதுகைகளை மிகவும் சிரத்தையுடன் செய்து கொண்டு வந்தான். பின்னர், உயரிய பரிசுகளை பலர் தரும் போது நாம் அற்ப பாதுகைகளையா தருவது என வருந்தி பின் வாங்கினான். இதைக் கவனித்த ராமர், "உண்மையான உழைப்பில் உதித்த உன் பரிசுதான் உயர்ந்தது' எனக் கூறி பாதுகைகளை ஏற்றுக்கொள்ள, மித்ரபந்து மகிழ்ந்து போனான். ராமர் காட்டுக்குப் புறப்பட்ட போது, "வனவாசம் போகும் போது எதையும் உடன் எடுத்துப் போகக் கூடாது தான். இருந்தாலும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்கிறேன்' என்று கைகேயியிடம் கூறிவிட்டு, கண்ணீருடன் நின்ற மித்ரபந்துவை பார்த்து, "விலை உயர்ந்த பரிசுகள் எனக்குப் பயன்படவில்லை. உன்னுடைய பாதுகைகள்தான் கல்லும், முள்ளும் குத்தாமல் காக்கப் போகிறது' என்றார். அந்தப் பாதுகைகள்தான் 14 வருஷம் அயோத்தியையும் ஆண்டது.

தொகுப்பு:
கே. சங்கீதா, இராசநாயக்கன்பட்டி.
எஸ். சுரேந்திரன், சென்னை.
எஸ். நிரஞ்சனி, போரூர்.
தேதியூர் பாலு, சென்னை.
வத்சலா சதாசிவன், சென்னை - 64.
மல்லிகா அன்பழகன், சென்னை - 78.

சஞ்சீவையா!

* காசியில் "அனுமன் காட்' என்னும் இடத்தில் ஆஞ்சநேயருக்குப் பெரிய திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஸமர்த்த ராமதாசர் அனுமனைப் பிரதிஷ்டை செய்தார் என்று கூறுகின்றனர்.

* வைணவ சித்தாந்தத்தில் அனுமனை "சிறிய திருவடி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஞ்சநேய வழிபாடு செய்பவர்களை சனி பகவான் துன்புறுத்துவது இல்லை.

* கையைப் பிடித்துக் கொள்வதும் ஆரத்தழுவுவதும் அன்பின் வெளிப்பாடுகள். ராமபிரான் அனுமனையே தான் பெற்ற எல்லா செல்வங்களுக்கும் ஈடு இணையாக எண்ணி ஆரத்தழுவினான் என்று ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

* சஞ்சீவையா என்பது ஆந்திரப் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெயர். அனுமன் மருந்து மலையான சஞ்சீவி மலையைத் தூக்கி வந்து, போர்க் களத்தில் மயங்கிய லட்சுமணனைக் காப்பாற்றினார். இச்செயலால் ஆந்திர தேசத்தார் அனுமனை சஞ்சீவையா என்று அழைக்கின்றனர்.

- கே. சங்கீதா, இராசநாயக்கன்பட்டி.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X