முருகனின் திருவடி பதிந்த இடம்! - ஞானமலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2011
00:00

முருகனுடைய இளம் திருவடிகளே மயில் மீதும், தேவர்கள் தலைமீதும், திருப்புகழ் ஏட்டின் மீதும் பட்டன என்று அருமையாகச் சொல்கிறார் அருணகிரிநாத சுவாமிகள்.
தேவர், முனிவர் போற்றும் திருமுருகனின் திருப்பாதங்கள், வள்ளியின் அன்புக்காக காடும் மலையும் நடந்தன. அவளது அன்பை ஏற்று அவளை மணந்தான் ஆறுமுகன். அருணகிரியாரின் திருப்புகழ்ப் பாடல்களுக்கு மனமுவந்து இரங்கி, அவரது பக்தியை மெச்சி, அவருக்குத் திருவடி காட்டி தீட்சை அளித்தான், முருகன். அத்தகைய அரிய பேறு நமக்கும் கிடைக்க வேண்டும் அல்லவா? அதற்கு என்ன வழி? அருணகிரிநாதர் சென்று தரிசித்து திருவடி தரிசனமும் யோகாநுபூதியும் பெற்ற ஞானமலை என்னும் தலத்திற்கு நாமும் சென்று, திருப்புகழ் பாடி அவன் திருவருளைப் பெறலாம் வாருங்கள்!
திருவண்ணாமலையிலிருந்து அருணகிரிநாதர், "வயலூருக்கு வா!' என்றழைக்கப்பட்டு அங்கே பொய்யாக் கணபதியின் அருளால் திருப்புகழ் பாடும் முறை உபதேசிக்கப் பெற்றார். அங்கிருந்து பல மலைகளையும், பல தலங்களையும் தரிசித்துச் செல்லும் வழியில், பலப்பல இடங்களில் அருட்செயல் புரிந்து அவரை ஞான மலைக்கு அழைத்தார் ஞான பண்டித சுவாமியான முருகன்.
ஞானமலைக்கு வந்த அருணகிரிநாதருக்கு திருவண்ணாமலைக் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. "மலைவி பரிகாசம் செய்ய சுற்றத்தார் மனம் வெறுப்படைய ஊரில் உள்ள பலரும் நகைக்க, அனைவரும் பழிச்சொற்களை ஆராயாது பேசிட, அதனால் அருணகிரியார் மனத்தில் துன்பம் மிகுந்து, "நான் எடுத்த பிறப்பு இதற்குத்தானோ' என்று நாள்தோறும் நினைத்து, முடிவில் அருணை கோபுரத்தின் மீதிருந்து குதித்து அவர் உயிரைவிடத் துணிந்த சமயத்தில், அவர் முன் தோன்றி தீட்சை செய்த' முருகனின் திருப்பாதத்தை மீண்டும் தரிசித்திட விரும்பினார்.
திருவண்ணாமலையில் அருளியதை இங்கு நினைவுகூர்ந்து அந்த அனுக்ரஹத்தை மீண்டும் ஞானமலையில் வேண்டினார். ஒரு பாடலையும் பாடினார். அவரது பிரார்த்தனைப்படி ஞானமலையில் மீண்டும் திருவடிக்காட்சி நல்கி அவருக்கு யோகாநுபூதியை அருள்பாலித்தார் ஞானவடிவேலன்.
ஞானமலை எங்கே இருக்கிறது? இந்தக் கேள்விக்கான விடை 1997-ம் ஆண்டு வரை யாருக்குமே தெரியாதிருந்தது. 1998-ம் ஆண்டு செய்தித்தாளில் வெளிவந்த செய்தி ஒன்றில், "காளிங்கராயன் என்பவன் ஞானமலைக்குப் படிகளை அமைத்தான்' என்று, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றைப் பற்றிய தகவலே முருகனருள் கொண்டு, ஞானமலையின் இருப்பிடத்தைக் அறிய உதவியது.
காளிங்கராயன் (1322-1340) சம்புராயர் காலத்தில், தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதிக்கு அதிகாரியாக இருந்தவன். இக்கல்வெட்டு வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகில் உள்ள கோவிந்தச்சேரி கிராமத்தில் உள்ள மலைமேல் இருக்கும் சுனை அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஆதாரமாகக் கொண்டே அருணகிரிநாதர், தெய்வானை காவலனின் திருவடி தரிசனம் பெற்ற ஞானமலை தலத்தை உறுதி செய்ய முடிந்தது.
ஞானமலை அடிவாரத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கும் ஞானசக்தி கணபதியை தரிசனம் செய்துவிட்டு 150 படிகள் ஏறி ஞானபண்டித சுவாமி திருக்கோயிலை அடைகிறோம். கொடிமரம் அருகில் வீழ்ந்து வணங்கி, பலிபீடம், மயில்வாகனம் ஆகியவற்றை தரிசித்து மகாமண்டபத்திற்குள் நுழைகிறோம்.
கருவறையில் ஞானகுஞ்சரி, ஞானவல்லி சமேத ஞானபண்டிதசுவாமி அருட்காட்சி அளிக்கிறார். ஒருமுகம் நான்கு கரங்களுடன் பின் இரு கரங்களில். கமண்டலம், ஜபமாலை ஏந்தி முன்வலக்கரத்தில் அபயமுத்திரை காட்டி முன் இடக்கரத்தை இடுப்பில் வைத்தபடி நின்ற கோலத்தில் கந்தப்பெருமான் காட்சியளிக்கிறார்.
இவ்வடிவை "பிரும்மசாஸ்தா வடிவம்' என்று ஆகமங்களும் சிற்ப நூல்களும் குறிப்பிடுகின்றன. பிரணவத்திற்குப் பொருள் தெரியாத பிரம்ம தேவனை சிறையிலிட்டு சிருஷ்டித் தொழிலைத் தாமே மேற்கொண்ட அருட்கோலமே பிரம்ம சாஸ்தா வடிவமாகும். ஞானமலையில் அமைந்துள்ள இவ்வடிவம், பல்லவர் காலத்தது. இது 1300 ஆண்டுகள் முற்பட்டது என்பதை இவ்வடிவ சிற்ப அமைதியைக் கொண்டு தீர்மானிக்க முடிகிறது.
தெற்குச் சுற்றில் அருணகிரிநாதருக்குக் காட்சியளித்த "குறமகள் தழுவிய குமரன்' வடிவம் அற்புதமாக உள்ளது. நீல மயிலில் அமர்ந்த கோலக் குமரன் இடது மடிமீது வள்ளியை அணைத்தவாறு காட்சியளிக்க, அருகில் அருணகிரிநாதர் கூப்பிய கரங்களுடன் நின்று அழகு முருகனை கண்டுகளிக்கும் எழிற்காட்சி. தெற்குச் சுவரில் ஞானமலைக்குரிய இரண்டு திருப்புகழ், பதிகம், வரலாறு முதலானவை கல்வெட்டுகளாகப் பதிக்கப்பெற்றுள்ளன.
மலையின் மேற்புறம் ஏறிச்செல்லும் வழியில், வேல்முருகன் உண்டாக்கிய "வேற்சுனை' இடதுபுறம் உள்ளது.
மலைமீது ஏறிச் சென்றால் அங்கே ஞானப்பூங்கோதையுடன் ஞானகிரீச்வரர் காட்சியளிக்கிறார். அருணகிரிநாதரைப் பரமகுருவாகக் கொண்டு திருவண்ணாமலையில் வாழ்ந்தவர், ஞானவெளிச்சித்தர். இவரை பாலைச் சித்தர் என்றும் மக்கள் அழைத்தனர். ஞானமலையில் பல்லாண்டுகள் அவர் தவமியற்றினார். மக்களின் உடற்குறைகளை நீக்கி நோய்களுக்கு மருந்தளித்து, ஞானத்தைப் போதித்து வாழ்ந்தவர். கார்த்திகை மாதம் மூல நட்சத்திர நாளில் இவர் ஞானமலை முருகன் திருவடியில் கலந்தார். இவரது திருவுருவை, ஞான பண்டிதசுவாமி கோயில் உள் மண்டபத்தூணில் தரிசிக்கலாம். அவர் ஞானசமாதி கொண்டுள்ள இடத்தில்தான் ஞானகிரீச்வரப் பெருமான் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இம்மலையில் இரண்டு குகைகள் உள்ளன. பாலைச் சித்தருக்குப் பிறகு சில நூற்றாண்டுகள் முன்பு மற்றொரு சித்தர் இங்கு தவமியற்றியுள்ளார். இவரும் அடியார்களுக்கு மூலிகைகளும் திருநீறும் அளித்து நோய்களை குணப்படுத்தியுள்ளார் என்ற அறிய முடிகிறது. அவரது சமாதி, மலை அடிவாரத்தில் உள்ளது.
ஞானகிரீச்வரர் திருக்கோயிலின் பின்புறம் ஞான பண்டித சுவாமியின் திருவடி பதிந்துள்ள புனிதமான இடத்தை தரிசிக்கும்போது நமக்கு பக்திப் பரவசம் மேலிடுகிறது. அருணகிரியாருக்கு முருகன் திருவடிக்காட்சி தந்து யோகாநுபூதி அளித்ததற்கான சான்று இங்கே பதிந்துள்ள முருகனது பாதச்சுவடுகளே! "ஞானம்' என்பதற்கு திருவடி என்றும் பொருள் உண்டு. ஞானமலை என்பதைத் திருவடி பதிந்துள்ள மலை என்றும் கூறலாம். வேதங்களும் காணாத வேலனின் திருப்பாதங்கள் பதிந்த மிகப் புனிதமான இந்தத் தலத்தில் நாம் உடலால் வலம்வர (அங்கப்பிரதட்சணம் செய்ய) முருகன் திருவடிப்பூங்கோயில் மண்டபம் உருவாகியுள்ளது. ஏறக்குறைய 1500 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இம்மண்டபத்தில் அடியவர்கள் அமைதியாக தியானம் செய்யும்போது அற்புதமான பக்தி அதிர்வுகளை உணர முடிகிறது. இந்த தியான மண்டபம் அமைந்துள்ள இடமே ஞானவெளிச் சித்தர் தவம் செய்த இடமாகும். இங்கு அங்கப் பிரதட்சணம் செய்வதால் நோய்கள் நீங்கும்; எண்ணியவை கைகூடும்; மகிழ்ச்சியான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.
இம்மலையில் மிகுதியாகக் காணப்படும் வெப்பாலை என்னும் குடசப்பாலை மரம், அரிய மூலிகை மரமாகும்.
ஞானமலையின் வடமேற்குப் பகுதியில் வள்ளிமலையும், வடக்கில் சோழசிங்கபுரம் என்னும் சோளிங்கர் மலையும், வடகிழக்கில் தணிகை மலையும் அமைந்துள்ளன. வள்ளமலை, ஞானமலை, திருத்தணிகை மலை மூன்றும் முக்கோணவடிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இம்மூன்று மலைகளையும் முறையே காலை, பகல், மாலை என்று மூன்று வேளைகளில் தரிசிப்பது மிகவும் விசேஷமானது என்பது முருகனடியார்களது நம்பிக்கை.
ஆண்டு தோறும் ஆடிக் கிருத்திகையன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் காவடிகளுடன் ஞானமலை முருகனை தரிசனம் செய்ய வருகிறார்கள். ஆண்டு தோறும் குமாரசஷ்டி, ஆனிமாதம், சுப்ரமண்ய சஷ்டி கார்த்திகை மாதம் ஆகிய நாட்களில் இங்குள்ள ஆறு அடி உயரமுள்ள ஞானவேலுக்கு விசேஷ அபிஷேகம், சத்ருசம்ஹார திரிசக்தி அர்ச்சனை முதலியன சிறப்பாக நடைபெற்று வருகின்றன. "குறமகள் தழுவிய குமரனின்' பஞ்சலோக விக்ரகத்திற்கு விசேஷ அலங்காரம் முதலியன செய்து கிரிவலம் வரும் விழா கார்த்திகையில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருப்புகழ்த் திருப்படி திருவிழாவும் ஏகதின லட்சார்த்தனை வைபவமும் மாதம் தோறும் பிரதோஷ வழிபாடும் நடைபெறுகின்றன.
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஞானாச்ரமம் திருமாளிகையில் குமரனின் பஞ்சலோக விக்ரகம் வழிபாட்டில் உள்ளது. அடியார்கள் திருப்புகழ் பாடி வழிபாடு செய்யவும், அன்னதானத்திற்கும் இத்திருமாளிகை பயன்படுகிறது. அருணகிரிநாத சுவாமிகளுக்குத் திருவடிக் காட்சியளித்த ஆட்கொண்டதும் முருகனது திருப்பாதங்கள் பதிந்ததும் பாலைச் சித்தர் தவமியற்றி ஞானசமாதி கொண்டதுமான ஞானமலைக்கு அன்பர்கள் பெருமளவில் சென்று வழிபட்டு உடலும் உள்ளமும் இன்புற்று மகிழ ஞானபண்டித சுவாமி திருவருளை வேண்டிப் பணிகின்றோம்.

எங்கே இருக்கிறது?

சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப் பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில் மங்கலம் என்ற ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவிந்தச்சேரி கிராமம். சென்னையிலிருந்து 110 கிலோ மீட்டர். அரக்கோணம்-காட்பாடி ரயில் பாதையில் உள்ள சோளிங்கர் (பாணாவரம்) ரயில் நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவு. மங்கலம் கிராமத்தில் ஞானமலை அலங்காரவளைவு நமக்கு வழிகாட்டியாக உதவும்.

வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன், சென்னை - 100

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X