அந்துமணி பா.கே.ப.
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2011
00:00

"என்ன அந்து... வாசகியர் எவரும் இப்போ கடிதம் எழுதுவது இல்லையா? அவர்களுக்கு பிரச்னைகள் எதுவும் எழவில்லையா? உன் அட்வைஸ் இப்போ அவர்களுக்குத் தேவைப்படுவதில்லையா?' என, ஆண் வாசகர்கள் பலரும் கடிதம் எழுதி உள்ளனர்.
இதோ இந்த வாரம் ஒரு கடிதம்:
...சிறந்த மனோதத்துவ நிபுணரை விட - ஒரு பத்திரிகையாளர், மிகச் சிறந்த அனுபவசாலி என்பதாலும், எங்களைப் போன்ற பெண்கள் விஷயத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன், சரியான தீர்வு நீங்கள் அளிப்பதாலும், இந்த கடிதத்தை மனம் திறந்து எழுதுகிறேன்.
நான் ஒரு அரசாங்க ஊழியை. திருமணமாகி, இரண்டு வருடங்களாகி, ஒரு குழந்தையும் உள்ளது. என் திருமணம், "கட்டாயத் திருமணம்!' வாழ்க்கையில், மன நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்த நான், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக, ஒரு வாலிபரிடம் மனதை பறிகொடுத்து, பழகி வருகிறேன். எங்கள் இருவர் பக்கத்திலும் பல பிரச்னைகள் - எங்களுடைய உறவு எல்லாருக்கும், குறிப்பாக, என் கணவருக்கும் தெரிந்து விட்டது. இருப்பினும், எங்களால், ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியவில்லை.
என்னுடைய குழந்தையையும், என்னையும் மிகவும் நேசிக்கிறார். என்னை விவாகரத்து செய்து கொள்ளச் சொல்கிறார். அந்த முடிவை நானெடுத்தால், என்னுடைய கணவர் தற்கொலை செய்து கொள்வது உறுதி. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. என் கணவருடன், ஒரு யந்திர வாழ்க்கை வாழ்கிறேன். என்னுடைய புதிய காதலர், என் மீது உயிரையே வைத்திருக்கிறார். ஒரு நாள் கூட நாங்கள் சந்தித்து பேசாமல் இருந்தால் மிகவும் தவித்து விடுகிறோம். எங்களால், பிரியவே முடியாது என்ற சூழ்நிலை இருவருக்குமே. இருவருமே தவித்துக் கொண்டுள்ளோம்.
என்னுடைய காதலர் அப்பழுக்கற்றவர், அவரைப் பற்றி, பலரிடம் நன்கு ஆரம்பத்திலேயே விசாரித்து விட்டேன். என்னைத் தவிர, இதுவரை வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மிகவும் தரமான குடும்பத்தில் பிறந்த, நன்கு படித்த, அழகிய, வசதியான இளைஞர். அவருடைய தகுதிகளுடன் ஒப்பிடும்போது, எனக்கு சிறு யோக்கியதையும் கிடையாது. மதம், ஜாதி, படிப்பு, அழகு, வசதி, செல்வாக்கு எல்லாவற்றிலும் என்னை விட அதிகமுள்ள சொந்தத் தொழில் செய்பவர். என்னைத் திருமணம் புரிந்து கொள்ளச் சொல்கிறார். என்னாலும் இரட்டை வாழ்க்கை வாழ இயலவில்லை. அவருக்கும் பல பிரச்னைகள் என்னால் ஏற்பட்டாலும், அவர் திருமணமாகாதவர் என்பதால், நிறைய பாதிப்பு இல்லை. நான் தான் தவித்துக் கொண்டுள்ளேன், என்ன முடிவெடுப்பது என்று.
என்னுடைய காதலரை, பலவாறு சோதித்து விட்டேன். என்னிடம் செக்சுக்காகப் பழகவில்லை. என்னுடைய ஒவ்வொரு நலனிலும், அக்கறை காட்டுகிறார். அவரை கணவனாக அடையாதது என் துரதிர்ஷ்டம் தான். நாங்கள் இணைவதால் நிறைய பிரச்னைகள் ஏற்பட்டு விடுமோ என்று பயமாக உள்ளது. ஒரே குழப்பத்தில் உள்ளேன். எனக்கு ஒரு சரியான முடிவை, உடனடியாக தெரியப்படுத்துங்கள் ப்ளீஸ்...
கடிதங்கள் வந்து கொண்டு தான் உள்ளன; தீர்வுகள் - அறிவுரைகள் பதிலாகச் சென்று கொண்டு தான் உள்ளது. இந்த வாசகியின் கடிதத்திற்கும், தனித் தபாலில் தீர்வு எழுதியுள்ளேன்.
***
அன்றைய மீட்டிங்கில்... "ஆடும் வரை ஆட்டம்... ஆயிரத்தில் நாட்டம்...' என்ற கண்ணதாசனின் பாட்டைப் பாடிக் கொண்டிருந்தார் பெரியசாமி அண்ணாச்சி... அந்த நேரத்தில், "சேடப்பட்டியார்' என அன்புடன் நண்பர்களால் அழைக்கப்படும் நண்பர், தாம் வாங்கிய புதுக்காருடன் வந்து சேர்ந்தார்.
மத்யஸ்தம் செய்வதிலும், சபையை சுமூகமாக நடத்திச் செல்வதிலும் திறமை கொண்டவர் என்பதால், "சேடப்பட்டியார்' என்ற காரணப் பெயர், முந்திய, "அம்மா' ஆட்சி காலத்தில், அந்த நண்பருடன் ஒட்டிக் கொண்டது.
"வாங்க... வாங்க... சேடப்பட்டியாரே...' என தம், "டிரேட் மார்க்' கட கட சிரிப்புடன், அவரை வரவேற்றார் அண்ணாச்சி, "இது என்ன சார்...
பெட்ரோலா, டீசலா, உள்நாட்டுத் தயாரிப்பா, வெளிநாட்டுக்காரா?' என்பதையெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டவர், "இந்தக் காருக்கு கேஸ் போட்டால் என்ன?' என, திடீர் குண்டைத் தூக்கிப் போட்டார்.
அனைவரும் அதிர்ந்து அண்ணாச்சியை நோக்க, லென்ஸ் மாமா, "ஹைகோர்ட்ல போடணுமா, சுப்ரீம் கோட்டுல போடணுமா?' எனக் கேட்டார்.
"அட... நீங்க வேற கிண்டல் பண்ணாதீங்கப்பா... கேஸ்ப்பா... அதான் கேஸ்... சிலிண்டருல வருமுல்லா... அந்த கேஸ்...' என விளக்கம் கொடுத்து, "கேஸ் போட்டா செலவு கம்மி தான...' என்றார் அப்பாவியாக...
"அண்ணாச்சி... இங்கிலீஷை விட்டு ஒழியுங்கன்னு எத்தனை முறை சொல்றது உங்கள்ட்ட... அது கேஸ் இல்லே காஸ்...' என விளக்கம் கொடுத்தார் லென்ஸ் மாமா...
"ஓஹோ... கேஸ்ன்னா இங்கிலீஷா... சரியா போச்சுப்பா... நா தமிள்ன்னுல்லா நெனச்சுக்கிட்டுக் கெடக்கேம்...' எனக் கூறி, கட கடவென சிரித்தார்.
"அசாம் எந்த நாட்டுல இருக்கு எனக் கேள்வி கேட்டவர் நம்ம அண்ணாச்சி... அவரு கையில ரொம்ப வெச்சுக்காதே பா...' என இடையில் புகுந்தார் அன்வர் பாய்.
நம் பாரத முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி ஒரு செய்தி சொல்லட்டுமா என்றார் குப்பண்ணா. சபையோர் ஒட்டு மொத்தமாக குப்பண்ணா பக்கம் திரும்ப, "புளிச்' என வெற்றிலையைத் துப்பி, சுற்றுப்புறத்தை அசிங்கம் செய்து, சொல்ல ஆரம்பித்தார்...
வாஜ்பாய், உத்திரபிரதேசத்துல, கான்பூர் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போ என்னாச்சு தெரியுமோ... அவரோட தோப்பனார் (தந்தை) ரிட்டயர் ஆகிட்டார்... அவர், டிஸ்டிரிக்ட் எஜுகேஷன் ஆபிசரா இருந்தவர், அவ்வளவு நாள் சுறுசுறுப்பா இருந்துட்டு, திடீர்ன்னு ஓய்வு எடுக்கணும்ன்னா எப்படி... அவரால சும்மா இருக்க முடியலே...
என்ன செஞ்சார் தெரியுமோ? தன் புள்ளயோடவே, "லா காலேஜுல' சேர்ந்துட்டார். இதுலே இன்னொரு கூத்து என்ன தெரியுமோ? வாஜ்பாயோட மூத்த சகோதரர் அதே காலேஜுலே, பைனல் இயர் படிச்சுண்டு இருந்தார்...
அப்பாவும், புள்ளையும் ஒரே கிளாசுலே படிச்சா, பையன்கள் சும்மா இருப்பாளோ? கிண்டல் பண்ணா... உடனே, அப்பா வேற செக்ஷனுக்கு மாத்திண்டு போயிட்டார்...
ஆரம்பத்துலே, எல்லா ஸ்டூடண்ட்சுக்கும் இருக்கற மாதிரி, வாஜ்பாய்க்கும் கம்யூனிஸ்ட் அபினிட்டி இருந்தது... அதனாலே, கம்யூனிஸ்ட் பின்னணியுள்ள ஒரு இயக்கத்துலே சேந்து, விடுதலை போராட்டத்துலே ஈடுபட்டார்...
கம்யூனிஸ்ட் பின்னணி அந்த இயக்கத்துக்கு இருந்ததாலே பேரன்ட்ஸ் ரொம்ப எதிர்ப்பு தெரிவிச்சா... வாஜ்பாய் கண்டுக்கலே... பலன் : 16 வயசுலே ஜெயில் வாசம் அனுபவிச்சார்.
காலேஜ் படிப்பு முடிஞ்சதும், பெட்டி, படுக்கையோட டில்லிக்குப் போய் சேர்ந்தார் வாஜ்பாய்.
அங்க போய், "வீர் அர்ஜுன்' என்ற தினப் பத்திரிகையையும், "பாஞ்ச சைன்யா' என்ற வாரப் பத்திரிகையையும் துவங்கி நடத்தினார். ஒரு எழுத்தாளரா... மணி உன்னைப் போல தான் வாழ்க்கையைத் துவங்கினார்.
ஒரு தடவை காந்தியை சந்திக்கப் போனார். அப்போ, அங்கிருந்த, காந்தியோட மனைவி, கஸ்தூரிபா அம்மையார், வாஜ்பாயாண்டே என்ன சொன்னாங்களாம் தெரியுமா?
"அம்பி... இனிமே நீ வரும்போது, கதர் ஆடை போட்டுண்டு வா... அப்போ தான் பாபுஜி (காந்தி) சந்தோஷப்படுவார்!'ன்னாங்களாம்! அன்னிக்கு கதர் ஆடை போட ஆரம்பிச்சுது தான்... இன்னி வரை தொடர்ந்து கதர் தான் போடறார் வாஜ்பாய்.
இன்னொரு முக்கியமான செய்தி தெரியுமோ?
கவிஞர், மேடைப் பேச்சாளர்ங்கற தகுதிகளோட, சமையல் கலையிலும் அவர் எக்ஸ்பர்ட் ஆக்கும்... சைனீஸ் உணவு வகைன்னா அவருக்கு உயிர்... அதையும், அவரே சமைச்சு குடுத்தா, தேவாமிர்தமா இருக்குமாம்...
— என்று, அண்ணாச்சிக்கும், மற்றவர்களுக்கும், வாஜ்பாய் பற்றி அறியாத செய்திகளைக் கூறினார் குப்பண்ணா...
"அப்போ சைனீஸ் ரெஸ்டரண்டுல போயி, "வாண்டான் சூப்' ஒண்ணு அடிச்சிட்டு, நூடுல்ஸ் சாப்பிடலாம் வாங்க...' என நண்பர் கூப்பிட, சபையோர் காலி கிளாஸ்களை கழுவி, பத்திரப்படுத்தி கிளம்பினர்...
நான் பஸ்சைப் பிடித்தேன் எதிர் திசையில் செல்ல!
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஸ்ரீதேவி - tiruvannamalai,இந்தியா
24-மார்ச்-201113:22:33 IST Report Abuse
ஸ்ரீதேவி குடும்பத்தில் ஈடுபாடு இல்லாத பெண்களின் நிலை இதுதான்.
Rate this:
Share this comment
Cancel
ராதா கிருஷ்ணன் - chennai,இந்தியா
23-மார்ச்-201112:42:48 IST Report Abuse
ராதா கிருஷ்ணன் இந்த வாரமலர் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி அந்துமணி பா.கே.ப.. மிகவும் சுவாரசியமான பகுதி . ஆனால் ஒரே ஒரு குறை என்னவென்றால் அவருடைய முகம் பார்க்க முடியவில்லை . மிகவும் திறமையானவர் என்று நினைக்கிறன்
Rate this:
Share this comment
Cancel
friend - india,இந்தியா
23-மார்ச்-201109:02:09 IST Report Abuse
friend நீங்கள் அந்த பெண்மணிக்கு கொடுத்த அறிவுரையை எங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாமே. சமூகத்தில் இதே போல் தடுமாறும் ( தடம் மாறும் ) சகோதரிகளுக்கு அது உதவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X