உயிரே உனக்காக... (15)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2011
00:00

இதுவரை:
நாட்டிய நிகழ்ச்சிக்காக, ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகருக்கு சென்றாள் மதுரிமா. அவளது நாட்டியத்தைப் பார்ப்பதற்காக நரேனின் சி.இ.ஓ., வைத்தீஸ்வரன் அங்கு சென்றிருப்பதை அறிந்து, நரேனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. விமானப் பணிப்பெண்ணான கவிதா, நரேனை சந்திக்க வந்திருப்பதை அறிந்து, கலக்கமடைந்தாள் மதுரிமா —

மனித மனம், மிகவும் வித்தியாசமானது. எந்த நேரத்தில், எந்த விதமாக செயல்படும் என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியாது. மனம் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அதன் செயல்பாடுகள் எதிர்மாறாக இறங்கி விடுவது ஒரு வகை; அந்த பாதிப்பில் இருந்து தன்னை விலக்கி, அந்த நினைவுகளிலிருந்து விடுபட, வேறு ஏதோ ஒன்றில் முழுவதுமாய் அர்ப்பணித்துக் கொள்வது இரண்டாம் வகை.
மதுரிமா, இதில் இரண்டாம் வகை.
மதுரிமாவின் அப்போதைய மனநிலையில், வேறு எந்தப் பெண்ணாக இருந்திருந்தாலும், அத்தனை பெரிய கூட்டத்தின் முன் நாட்டியம் ஆடி இருக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
மதுரிமா அப்படி இல்லை. ஆனால், தன்னை பாதிக்கும் வேறு எந்த விஷயமும், தான் ஆடும் நாட்டியத்தை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது என்பதில் மிகவும் அக்கறையும், கவனமும் கொண்டவள். இதுவரையில் அவள் மேடை ஏறி ஆடிய எந்த ஒரு நிகழ்ச்சியும் பாதித்தது இல்லை. அவள் நாட்டியம் பற்றி இதுவரை யாரும் தவறாக விமர்சித்ததில்லை.
அதன் காரணமாகவே நாட்டிய உலகில், அவளை மணந்து கொண்ட நரேனைப் போல, இதோ கடல் கடந்து வந்து முன்வரிசையில் அமர்ந்திருக்கும் வைத்தீஸ்வரனைப் போல, ஏராளமான ரசிகர்களை மதுரிமா பெற்றிருந்தாள்.
மதுரிமாவின் நினைவிலிருந்து நரேனும், கவிதாவும் முழுவதுமாய் விலக்கப்பட்டு, அவளது மனம் முழுக்க அவள் ஆடும் நாட்டியம் மட்டுமே வியாபித்துக் கொள்ள, மதுரிமா ஆஸ்திரேலியாவின், சிட்னி ஆப்ரா ஹவுஸ் அரங்கில் சுழன்று ஆடினாள்.
மதுரிமா ஆடி முடித்த போது, ரசிகர்களின் கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது. அனைவருக்கும் கைகூப்பி வணக்கம்
தெரிவித்து, ஒப்பனையை கலைக்க கிரீன் ரூமுக்குள் வந்து, நிலைக்கண்ணாடி முன் அமர்ந்தாள்.
எதிரே இருந்த நிலைக் கண்ணாடியில், மதுரிமாவின் அழகிய உருவம், ரவிவர்மாவின் ஓவியத்தைப் போல பிரதிபலித்துக் கொண்டிருக்க, திடீரென்று கண்ணாடியில் அவளுக்குப் பின் அகன்று விரிந்து சிவப்பேறிய கண்களுடனும், கோரமான சிரிப்புடனும் கவிதா அவளை நெருங்கி வருவதைப் போல் பிரமை ஏற்பட்டது.
"மறுபடியும் கவிதா எதற்காக என் நினைவில் தோன்றுகிறாள்?'
கவிதாவைப் பற்றிய நினைப்பே மதுரிமாவிற்கு கசந்தது. கவிதாவின் நினைப்பிலிருந்து விடுபட, மதுரிமா ஒரு சிலிர்ப்புடன் தன் தலையை உலுக்கி, மீண்டும் கண்ணாடியைப் பார்த்தாள்.
அப்போது, அவளுக்குப் பின், சபா காரியதரிசி பணிவாக நின்று கொண்டிருந்தார். அவசரமாக அவர் பக்கமாகத் திரும்பினாள் மதுரிமா.
""மேடம்... உங்களைப் பார்க்கணும்ன்னு ஒருத்தர் வெளில காத்திட்டிருக்கார். உள்ளே அனுப்பட்டுமா?''
""என்னை பார்க்கணுமா... யாராச்சும் ரசிகரா இருக்கும். இப்ப நான் இருக்கிற மனநிலையில் யாரையும் பார்க்க விரும்பல.''
""இப்ப நீங்க டயர்டா இருப்பீங்கன்னு எங்களுக்கும் தெரியும் மேடம். ஆனா, அவர் உங்கள பாத்தே ஆகணும்ன்னு அடம் பிடிக்கிறாரு.''
""எதுக்காகப் பார்க்கணுமாம்?''
""தெரியல மேடம்... அத்தோட அவர் நம்ம ஊர்க்காரர்; தமிழகத்தைச் சேர்ந்தவர்...''
சில வினாடிகள் யோசித்தாள் மதுரிமா. நாடு, இனம், மொழி என்றதும், நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு ஒட்டுதல் ஏற்படத்தான் செய்கிறது.
""பேர் ஏதாச்சும் சொன்னாரா?''
""எஸ் மேடம்... மிஸ்டர் வைத்தீஸ்வரன் ப்ரம் கும்ப கோணம்.''
கும்ப கோணம்... மிஸ்டர் வைத்தீஸ்வரன். ஊரும், பேரும் மதுரிமாவின் மனதில் சுளீரென உறைக்க, "இது ஏற்கனவே, நாம் கேள்விப்பட்ட பேர் ஆச்சே. ஓ மை காட்... இவர் என் கணவர் நரேன் பணிபுரியும் அமெரிக்க நிறுவனத்தின் சி.இ.ஓ., '
வைத்தீஸ்வரனை உள்ளே வரச் சொல்வதற்கு பதிலாக, அவளே பரபரப்புடன் எழுந்து வெளியே வந்தாள். தன் அனுமதிக்காக வெளியே வாசலில் காத்து நிற்கும் வைத்தீஸ்வரனைப் பார்த்தாள். அவரும், மதுரிமாவைப் பார்த்து கை கூப்பினார்.
""வணக்கம்... சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ்!''
மதுரிமாவும், இவரைப் போய் காக்க வைத்து விட்டோமே என்ற உள்ளுணர்வில் வெட்கமும், பயமும் கலந்த குரலில் அவரை நமஸ்கரித்தாள்.
""இந்த இடத்துல நான் உங்கள கொஞ்சம் கூட எதிர்பாக்கல; சர்ப்ரைஸ்!''
""வாழ்க்கையோட சுவாரசியமே அதுல சம்பவிக்கிற, நாம எதிர்ப்பார்க்காத விஷயங்கள்தான். மே ஐ கம் இன்?''
மதுரிமாவிடம் மிகவும் பவ்யமாக அனுமதி கேட்டார் வைத்தீஸ்வரன்.
""வித் பிளஷர்... கம் இன் சார்.''
கிரீன் ரூமுக்குள் வந்தார் வைத்தீஸ்வரன். அவரை நாற்காலியில் அமரச் சொல்லி, எதிரே நாற்காலியில் அமர்ந்தாள் மதுரிமா.
""இங்கே நீங்க எப்படி?''
""உன்னோட நாட்டியத்தை பார்க்கத்தான்... நானும், நரேனைப் போலவே உன்னோட பரம ரசிகன்.''
வயதின் காரணமாகவோ அல்லது அவருக்கே உரிய சுபாவம் காரணமாகவோ மதுரிமாவை ஒருமையில் அழைத்தே பேசினார் வைத்தீஸ்வரன்.
""நீங்க சொல்றத கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு!''
""தேங்க் யூ... உன்னை மாதிரி கலைஞர்கள் எப்பவும் மனசுக்குள்ள சந்தோஷமாவே இருக்கணும். அப்பதான் நீ வெளிப்படுத்தற உன்னோட கலையில் அழகு இருக்கும்.''
அவர் சொல்வதில் உள்ள உண்மை மதுரிமாவுக்குப் புரிந்தது. கூடவே, "நான் இப்போது சந்தோஷமாக இருக்கிறேனா?' என்ற கேள்வியும் அவளுக்குள் எழுந்தது.
""என்ன யோசனை... நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?''
""நோ... நோ... நீங்க சொல்றது ரொம்பவும் சரி. நாட்டியம் பார்க்க வர்ற ரொம்ப பேர் மேம்போக்கா அந்த நாட்டியத்தை மட்டுமே ரசிச்சிட்டுப் போயிடுவாங்க. அந்த நாட்டியக் கலைஞர் களோட மன உணர்வுகளைப் பத்தி யோசிக்கறவங்க ரொம்பவும் குறைச்சல்.''
""ஆமா... நரேன் வரலையா?''
நரேன் வரவில்லை என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தும், அவர் தெரியாதவர் போல அந்தக் கேள்வியைக் கேட்டார்.
""வரலை சார்.''
""வரலையா... ஏன்?''
""இதைவிட அவருக்கு அமெரிக்காவுல வேற முக்கிய வேலை இருந்திருக்கலாம்.''
இதை சொல்லும் போது, மதுரிமாவிற்குள் உள் மனசு லேசாக வலித்தது. அந்த வலியை அவர் உணர்ந்து விடாதபடி, மிகவும் சாமாத்தியமாக சிரித்துக் கொண்டே சொன்னாள் மதுரிமா. ஆனால், வைத்தீஸ்வரன் விடுவதாக இல்லை.
""வாட் ஆர் யூ சேயிங்... இதைவிட முக்கியமான வேறு வேலையா... லுக் மதுரிமா... நான் அவனோட பாஸ்... அவனுக்கு ஆபிஸ்ல அப்படி எதுவும் முக்கியமான வேலை இல்லையே... நரேனும் உன்னோட வந்திருப்பான்னுதான் நான் நெனச்சேன்.''
அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல், மவுனமாக அமர்ந்திருந்தாள் மதுரிமா.
வைத்தீஸ்வரனே தொடர்ந்து பேசினார்...
""நீ தப்பா எடுத்துக்கலேன்னா ஓப்பனா ஒரு விஷயம் சொல்லட்டுமா?''
அவர் என்ன சொல்லப் போகிறார் என்ற பயம் மதுரிமாவுக்கு உள்ளூற தோன்ற, அதை மறைத்தபடி பொய்யான புன்முறுவலோடு, ""என்ன விஷயம் சார்... சொல்லுங்க,'' என்றாள்.
""நரேனை அமெரிக்காவில் தனியா விட்டுட்டு, நீ மட்டும் ஆஸ்திரேலியா வந்தது தப்பு... மிகப் பெரிய தப்பு.''
"தப்பு' என்ற வார்த்தையை வைத்தீஸ்வரன் மிகவும் அழுத்திச் சொன்னார்.
மதுரிமாவுக்குள் தோன்றிய பயம், மேலும் அதிகரித்தது. "என் கணவனைத் தனியே விட்டுவிட்டு வந்ததை, தப்பு என்று எந்த அர்த்தத்தில் இவர் இத்தனை அழுத்தமாகச் சொல்லி, எச்சரிக்கிறார்?'
மதுரிமாவிற்குள் மீண்டும் கவிதாவைப் பற்றிய நினைவுகள்... "எதற்காக இந்த கவிதா மீண்டும் மீண்டும் என் நினைவில் வந்து என்னை இம்சை படுத்துகிறாள்...'
""தப்பா... எந்த விதத்துல சார்?''
""சரிம்மா... அதை வீடு... நரேன் உங்கிட்ட எப்படி நடந்துக்கிறான்; ஆர் யூ ஹேப்பி?''
"உன் கணவன் உன்னிடம் எப்படி நடந்து கொள்கிறான்... என்றும், நீ சந்தோஷமா இருக்கிறாயா? என்றும் கேள்வி எழுப்பும் நபர் யாரோ ஒரு மூன்றாவது மனிதர் அல்ல. என் கணவனைப் பற்றி என்னைக் காட்டிலும் அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கும் அவனுடைய மேலதிகாரி.
"நரேனைப் பற்றி எனக்குத் தெரியாத, இவருக்குத் தெரிந்த விஷயங்கள் ஏதாவது இருக்குமோ! இந்த வைத்தீஸ்வரன் சாதாரண ஆசாமி இல்லை. இவர், என் வாயைக் கிளறி, வார்த்தைகளைப் பிடுங்கப் பார்க்கிறார். நானாக எதையாவது உளறி வைத்து, வம்பில் மாட்டிக் கொள்ளக் கூடாது...' என, சுதாரித்துக் கொண்டாள் மதுரிமா.
""நான் மறுபடியும் கேக்கறேன்... உன் திருமண வாழ்க்கை சந்தோஷமா இருக்கிறதா?''
""வெரி வெல்... எங்கள் வாழ்க்கை சந்தோஷமாகவே இருக்கிறது.''
இவரை இதற்கு மேலும் பேசவிடுவதா, வேண்டாமா என்ற குழப்பம் அவளுக்குள் தோன்றிய நேரத்தில், மதுரிமாவின் அம்மா அங்கே வந்தாள்.
""மது... நேரமாவுதும்மா... புறப்படலாமா?''
""இதோ வந்துடறேன். நீ போய் கார்ல வெயிட் பண்ணும்மா.''
அம்மா புரிந்து கொண்டவளாய் வெளியேறினாள்.
""சாரி... நான் எப்பவுமே இப்படித்தான்... பேச ஆரம்பிச்சா எல்லாத்தையும் மறுந்து பேசிக்கிட்டே இருப்பேன். ஓ.கே., இன்னைக்கு உன்னோட டான்ஸ் ரொம்ப பிரமாதமா இருந்தது... என்னோட வாழ்த்துக்கள்.''
""தேங்க் யூ சார்... நீங்க நரேனைப் பத்தி எதையோ சொல்ல வந்த மாதிரி தோணுது.''
""யெஸ்... யூ ஆர் ரைட்... ஆனா, அதுக்கான நேரம் இதுவல்ல. நரேனைப் பத்தி நான் சொல்றதுக்கும், நீ தெரிஞ்சுக் கறதுக்கும் நிறைய விஷயங்கள் இருக்கு. இன்னொரு நாள் சாவகாசமா பேசுவோம். நான் வர்றேன். குட் நைட்!''
வைத்தீஸ்வரன் அவளுக்கு குட் நைட் சொல்லி, அவளது பதிலுக்குக் கூட காத்திருக்காமல் எழுந்து போய் மறைந்து விட்டார். சில வினாடிகளுக்கும் முன்பாக வைத்தீஸ்வரன் என்ற ஒருவரோடு தான் பேசிக் கொண்டிருந்ததெல்லாம் நிஜமா அல்லது கனவா என்று சந்தேகிக்கும் விதமாக, வைத்தீஸ்வரன் புயலைப் போல் வந்து, மின்னலாய் மறைந்து போயிருந்தார்.
யோசனையுடன் கார் பார்க்கிங்கை நோக்கி நடந்து வந்தாள் மதுரிமா. ஏற்கனவே காரில் அமர்ந்திருக்கும் அம்மாவின் அருகே மதுரிமா ஏறி அமர, கார் வேகமாக ஆப்ரா ஹவுசிலிருந்து வெளியே கிளம்பி, சிட்னியில் அழகிய தெருக்களில் வேகமாக சென்று கொண்டிருந்தது.
அறைக்கு வந்து வெகுநேரம் ஆகிவிட்டது. அறை கடிகாரம் இன்னிசையாக பதினொரு முறை ஒலித்து ஓய்ந்தது. வேறு நேரமாக இருந்தால், ஆடிய களைப்பில் மதுரிமா அயர்ந்து தூங்கி இருப்பாள். ஆனால், இன்று... மதுரிமா தூக்கம் வராமல் அவளது அறைக்குள், யோசித்தபடியே படுக்கையில் அமர்ந்திருந்தாள். அப்போது...
மதுரிமாவின் மொபைல் போன் ஒலித்தது. அவசரம் அவசரமாய் போனை எடுத்துப் பார்த்தாள் மதுரிமா. அறையின் மயங்கிய ஒளியில் நரேனின் பெயரும், மொபைல் நம்பரும்... மதுரிமாவின் மனதுக்குள், படபடப்பு அதிகரித்தது.
""மது தூங்கிட்டியா? டிஸ்டர்ப் செய்து விட்டேனா?''
""தூங்கல... விழிச் சிட்டிருக் கேன்; நீங்க தூங் கலையா?''
""தூக்கம் வரல மது.''
""ஏன்?''
""நீ தான் மது... கண்ணை மூடினா உன் முகம்தான் தெரியுது.''
""அப்போ... கண்ணைத் திறந்தா என் முகம் தெரியலையா... விழிச்சிட்டிருந்தா வேற யாரோட முகம் தெரியுது?''
மதுவின் குரலில் தொனிக்கும் கோபத்தை நரேனால் உணர முடிந்தது.
""என்ன கேள்வி இது மது? நான் சொன்னதுக்கு அதுவா அர்த்தம்?''
""வேறு என்ன அர்த்தம்?''
""சரி... சரி... சண்டை போடாதே. இன்னைக்கு உன்னோட புரோகிராம் எப்படி இருந்தது?''
""ம்... நல்லாவே முடிஞ்சுது.''
""என்ன... ஒரு மாதிரியா இழுக்கற... இன்னைக்கு புரோகிராம்ல எனிதிங் ஸ்பெஷல்?''
""யெஸ்... இன்னைய டான்சுக்கு ஒரு வி.ஐ.பி., வந்திருந்தார்.''
""வி.ஐ.பி.,யா... யார் மது?''
""வைத்தீஸ்வரன்... கும்பகோணம் வைத்தீஸ்வரன்.''
நரேன் உடனே பதில் பேசவில்லை. அவன் எதையோ யோசிக்கிறான் என்பது போல் மதுரிமாவிற்குப் பட்டது.
""என்ன யோசிக்கறீங்க... நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல... டான்ஸ் பார்த்துட்டு பாராட்ட நேரா கிரீன் ரூமுக்கே வந்துட்டார். ரியலி சர்ப்ரைசிங்.''
""ரொம்பவே பாராட்டினரா?''
""பின்னே... அவரும், என்னோட ரசிகராம். நீங்க ஏன் வரலேன்னு கேட்டார்.''
""நீ என்ன சொன்ன மது?''
""உங்களுக்கு அங்கே முக்கியமான வேலை இருப்பதாக சொன்னேன்.''
""அதுக்கு அவர் என்ன சொன்னார்?''
""உங்க மேல ரொம்ப கோபப்பட்டார். உன்னைவிட அப்படி அமெரிக்காவில் நரேனுக்கு என்ன முக்கியமான வேலைன்னு கேட்டார்?''
சில வினாடிகள் மவுனத்திற்குப் பிறகு, நரேனே தொடர்ந்தான்...
""சரி... நீ அதுக்கு என்ன பதில் சொன்னே?''
""என்னங்க இது... என்னமோ குவிஸ் புரோகிராம் மாதிரி கேள்வி கேட்கறீங்க?''
மதுரிமா பொய்யான ஒரு கோபத்துடன், சிணுங்கலாகக் கேட்டாள்.
""மது... அவரோட கேள்விக்கு நீ என்ன பதில் சொன்னேன்னு நான் தெரிஞ்சுக்க ஆசைப்படறேன். சொல்லு மது... நீ என்ன சொன்னே?''
""நீங்க தானே அவரோட சி.இ.ஓ., என்னைவிட அவருக்கு அப்படி என்ன முக்கியமான வேலைன்னு நீங்கதான் சொல்லணும்ன்னு சொன்னேன்.''
""சரி... வைத்தீஸ்வரன் வேற என்ன சொன்னார்?''
""எங்கிட்ட உங்களப்பத்தி சொல்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு; மறுபடியும் இன்னொரு நாளைக்கு மீட் பண்ணும் போது சொல்றேன்னு சொன்னார்.''
நரேனுக்கு, வைத்தீஸ்வரன் மேல் கோபம் கோபமாய் வந்தது.
""மது... அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே பேசு.''
""ஏன்... என்ன விஷயம்?''
""அவர் கொஞ்சம் வித்தியாசமான ஆள். ஒரு விஷயத்தைப் பத்தி பேசணும்ன்னா அவருக்கு அல்வா சாப்பிடுற மாதிரி.''
""அல்வா சாப்பிடுற மாதிரியா... அது என்ன விஷயம்?''
""செக்ஸ்!''
நரேனின் பதில், மதுரிமாவை மவுனமாக்கியது. நரேன் தொடர்ந்தான்...
""ஆமா... செக்ஸ் பத்திய அவரது கருத்துக்கள் ரொம்பவும் வித்தியாசமா இருக்கும். ஆனா, அவர் என்னமோ இன்னமும் கல்யாணம் ஆகாதவர்தான்... முடிஞ்சா ட்ரை டு அவாய்ட் ஹிம்.''
மதுரிமாவை எச்சரிப்பதைப் போல பேசினான் நரேன். இப்போதும் எதையும் பேசாமல் யோசனையில் இருந்தாள் மதுரிமா.
""ஓ.கே., மது... குட் நைட். மறுபடியும் நாளைக்குப் பேசறேன்.''
மதுரிமாவின் பதிலுக்குக் காத்திராமல், போனைத் துண்டித்தான் நரேன். அன்பான மனைவியிடம் பேசுகிறோம் என்ற நினைப்பே அற்றவனாய், யாரோ ஒரு மூன்றாவது நபரிடம் பேசுவதைப் போல, ஏதோ ஒப்புக்கு வேண்டா வெறுப்பாக விசாரித்துவிட்டு, போனைத் துண்டிப்பது போல மதுரிமாவிற்குப் பட்டது.
கூடவே மதுரிமாவிற்கு வேறு ஒரு நினைப்பும் தோன்றியது.
வைத்தீஸ்வரன் குறிப்பிட்ட தப்பு என்பதற்கும், இதோ, இப்போது நரேன் சொன்ன செக்ஸ் என்பதற்கும் அவள் கணவன் நரேனுக்கும் எதாவது தொடர்பு இருக்குமோ என்ற அச்சம் அவளுக்குள் எழுந்தது.
அதே நேரத்தில் வைத்தீஸ்வரன், மதுரிமாவை சந்தித்துப் பேசியிருப்பது நரேனுக்குள் வேறு விதமான சிந்தனையை ஏற்படுத்தி இருந்தது. மறுநாள் பொழுது விடிந்து, முதல் வேலையாக கவிதாவைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதுக்குள் அரும்புவிட்டு, மெல்ல மெல்ல மலரத் தொடங்கியது.
தொடரும்.
தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
டாக்டர் தயாளன் கோபால் - கோலாலும்பூர்மலேசியா,மலேஷியா
20-மார்ச்-201110:32:28 IST Report Abuse
டாக்டர் தயாளன் கோபால் நமது பரதம்; உடல், உயிர், உள்ளம், ஆத்மா மற்றும் பரம்பொருள் ஆகிய கலவை கொண்ட மிக பெரிய பொக்கிஷம், மதுரிமா தமிழருக்கும் தமிழ்மன்னுக்கும் பெருமை தரும் கதாபாத்திரம். நன்றி uyi
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X