சித்ராவை தேடி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2011
00:00

உள் இணைப்பு தொலைபேசி மூலம், உதவி ஆசிரியை மல்லிகாவை தன் அறைக்கு வரச் சொன்னார் எடிட்டர் பூவரசன்.
கதவு மும்முறை நளினமாக தட்டப்பட்டது.
""எஸ் கமின்,'' என்றார் பூவரசன்.
உள்ளே வந்த மல்லிகா, ""சொல்லுங்க பாஸ்!'' என்றாள்.
""எம்.ஜி.ஆர்., நினைவு தினத்துக்காக, ஒரு பேட்டி கட்டுரை எடுத்து வரச் சொன்னேன். பேட்டியாளர், பேட்டி காண்பவரிடம் எம்.ஜி.ஆருடனான அனுபவங்களை கேளாமல், அவரின் சொந்தக் கதை, சோகக் கதைகளை கேட்டு வந்துள்ளார்... கவனித்தீர்களா?''
மல்லிகா மவுனித்தாள். பின், ""வேறொரு பேட்டி எடுத்து வரச் சொல்லிடவா?'' பாஸ்.
""தேவையில்லை. பேட்டியை எட்டு பக்கங்கள் எடுத்து வந்துள்ளார். அதில், நான்கு பக்கங்கள், எம்.ஜி.ஆர்., நினைவுகள் உள்ளன. நீங்கள் பேட்டியை எடிட் பண்ணி, நான்கு பக்கங்களாக சுருக்கி, "ரீ-ரைட்' பண்ணி வாருங்கள்!''
""நானா?''
""இதற்காக உங்க சித்தப்பா, பெரியப்பா பெண்களை வரவழைக்க முடியாது. திருத்தியமைக்கப்பட்ட கட்டுரை, இன்று மாலை ஐந்து மணிக்குள் என் டேபிளுக்கு வந்து விட வேண்டும். நீங்கள் போகலாம்!''
எடிட்டர் கொடுத்த, டி.டி.பி., பக்கங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் மல்லிகா. மதியம் சாப்பிடாமல், தொடர்ந்து ஐந்து மணி நேரம் உழைத்து, கட்டுரையை திருத்தி, எழுதினாள். எழுதி முடித்ததும், "ஹப்பா!' என்றாள். மற்ற உ.ஆ.,க்கள் கிண்டலாய் பார்ப்பது போல பிரமை கூடியது. தமிழிலுள்ள, 247 தமிழ் எழுத்துகளும், "குத்தடி குத்தடி ஜெயினக்கா...' பாட்டு பாடின.
மணி 4.50. எடிட்டர் அறைக்குள் பிரவேசித்து, கட்டுரையை நீட்டினாள். கட்டுரையை வாங்கி படித்தார் பூவரசன். அவரது சிவப்பு இங்க் பால் பாயின்ட் பேனா, பக்கங்களில் சிறுசிறு திருத்தங்கள் செய்தது.
பதைபதைப்புடன் நின்றிருந்தாள் மல்லிகா. நிமிர்ந்தார் பூவரசன்.
""குட்... சித்ராவின் நிழல், இன்னைக்கி உங்க, "ரீ-ரைட்டிங்' மேல படிஞ்சிருக்கு!''
""யார் பாஸ் அந்த சித்ரா?''
""சித்ரா, சப் - எடிட்டராக நம் பத்திரிக்கையில், 15 வருடங்களுக்கு முன் இருந்தவர். எள்ளுன்னா எண்ணெயை கொண்டு வரமாட்டார்; எள்ளுன்னா எள்ளுல சிறப்பான எள்ளை கொண்டு வருவார். பத்திரிக்கைக்குள் நுழையும் போது, அவரிடம் பெரிய படிப்போ, அனுபவமோ இல்லை. பதிலாக கற்றுக் கொள்ளும் ஆர்வமும், பணிவும் குழுவாய் சேர்ந்து, பணி செய்யும் மனோபாவமும் இருந்தன!''
""சித்ரா பார்க்க எப்படி இருப்பார்?''
""சித்ரா பணியில் வந்து சேர்ந்த போது, அவருக்கு வயது 20; டிகிரி முடித்திருந்தார்; மாநிறம் தான். தலை கேசத்தை படிய வாரி, சீவியிருப்பார். உலக அறிவைத் தேடும் கண்கள். மூக்குத்தி துளை தூர்ந்த மூக்கு. சிரிக்கும் வாய். மேல்வரிசை பற்கள் சற்றே தெற்றியிருக்கும். கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களை உருட்டுவது போலொரு குரல். புடவைதான் அணிவார்; ஹை-ஹீல்ஸ் கிடையாது. பவுடரோ, மேக்கப்போ போட்டுக் கொள்ள மாட்டார்!''
தலையாட்டினாள் மல்லிகா.
""அலுவலகத்திற்கு முன்னதாக வந்து, கடைசியாக வீடு திரும்புவதும் அவர்தான். "அந்த உ.ஆ., என்னை கிள்ளிட்டா... இந்த உ.ஆ., என் பேனாவை திருட்டிட்டா...'ன்னு புகார் செய்ய மாட்டார். சில எழுத்தாளர்கள் ஜல்லிக்கட்டு மாடுகள் போல, கூரிய கொம்புகளுடன் எடிட்டோரியலை குத்த வருவர். "என் கதைல இந்த வரியை ஏன் எடுத்தீர்கள்? அந்த பாராகிராப்பை ஏன் எடிட் செய்தீர்கள்?' என்று. அவர்களுக்கு சிரித்தபடி பதில் கூறி அனுப்புவார்.''
""ம்!''
""பத்திரிகை, பெண்களுக்கான பத்திரிகை, பெண்களுக்கு எதிராய் எதுவும் வெளியாகி விடக் கூடாது என்பதில், கவனமாய் இருப்பார். ஓவியர்கள் ஆபாசமாக படம் வரைந்து அனுப்பியிருந்தால், ஒன்று திருத்தி வரைந்து அனுப்புங்கள் என்பார் அல்லது ஆபாசமான இடத்தின் மீது கறுப்பு டின்ட் அடிப்பார். ஒரு கதையின் முடிவு சரியில்லை அல்லது ஒரு கதையின் லாஜிக் சரியில்லை என்றால், மிகச் சரியாக கணிப்பார். நூற்றுக்கு நூறு என் கணிப்பும், அவரது கணிப்பும் பொருந்தி வரும்!''
""திறமைசாலி பாஸ் அவங்க!''
""நான் வெளியூர் அல்லது வெளிநாடு போனால், "டாடி - மம்மி வீட்டில் இல்லை...' என, குதியாட்டம் போட மாட்டார். இரட்டிப்பு பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுவார். வீட்டு பிரச்னையை அலுவலகம் கொண்டு வர மாட்டார்; அதே மாதிரி, அலுவலக பிரச்னைகளை வீட்டுக்கு கொண்டு சென்றிருக்க மாட்டார்ன்னு நம்புறேன். பாராட்டினால், விரால் மீன் போல் வழுக்கி ஓடி விடுவார்; திட்டினால், அதே தப்பை மீண்டும் செய்யாமலிருக்க நின்று, ஊன்றி கவனிப்பார்.''
""உஹ்!''
""சிறுகதைகளுக்கு சுருக்கமும், உ.ஆ., குறிப்பும் அழகாக எழுதுவார். நம் பத்திரிகை நடத்திவரும் சிறுகதைப் போட்டியின் முதல் ஒன்பது வருடங்களில், அவரது பங்களிப்பு அதிகம். அந்த ஒன்பது வருடங்களில், வெற்றி பெற்ற பல புதுமுகங்கள் இன்று பிரபல எழுத்தாளர்களாய் திகழ்கின்றனர்.''
""இவ்வளவு திறமைசாலி ஏன் நம் பத்திரிக்கை யிலிருந்து விலகினார்?''
""விலகவில்லை; திருமணம். திருமணத்திற்கு பின்னும் வந்து பணிபுரிய சொல்லி யிருந்தேன். திருமணமும், என் தலைமையில்தான் நடந்தது. திருமணத்திற்கு பிந்தைய குடும்ப பாரங்கள் நிமித்தம் அவர், உ.,ஆ., பணிபுரிய வரவில்லை என நினைக்கிறேன். திருமணத்திற்கு பின், ஒரு வருடம் தொலைபேசியில் பேசினார். பின், அதுவும் இல்லை. அவர் எங்கிருந்தாலும், இருக்கும் இடத்தை சிறக்க செய்து கொண்டிருப்பார். ஒரு துறைமுகத்தின் கலங்கரை விளக்கு போல அவர்!''
""உங்களிருவருக்கும் இடையே ஆன உறவுமுறை என்ன?''
""குரு - சிஷ்யையா, திருமணமான அண்ணனின் வீட்டைத் துலங்க செய்த கடைக்குட்டி தங்கையா, சிறிய தந்தையின் தொழில் சிறக்க செய்த மகளா, ஆண் ஒப்பனை யிலிருக்கும் தாய்க்கு கிடைத்த தலைமகளா நானறியேன். ஆனால், என் வாழ்க்கையில் மறக்க முடியாத, 10 மனிதர்கள் இருந்தால், அவர் களில் சித்ராவும் இருப்பார். டேக் ஹர் அஸ் யுவர் ரோல்மாடல் மல்லிகா!''
""எஸ் சார்... ஒரு கேள்வி!''
""என்ன?''
""பல வருஷமா நீங்க சித்ராவை பார்க்கல, பேசல. இப்ப நீங்க அவரை சந்திச்சு எதிர்பாரா பரிசுகள் குடுத்திட்டு வரலாமே பாஸ்?''
பூவரசனின் முகம் பிரகாசமானது.
""நல்ல யோசனை... சித்ராவின் பழைய முகவரியை ரிப்போர்ட்டர் களிடம் கொடுத்து, அவரின் தற்போதைய முகவரியும், தொடர்பு தொலைபேசி எண்ணும் சேகரிங்க.''
மல்லிகா சென்ற பின்னும், எடிட்டர் பூவரசன், சித்ரா தொடர்பான பழங்கால நாட்டத்தில் திளைத்தார்.
எடிட்டர் பூவரசனின் கார் வேளச்சேரிக்குள் புகுந்தது.
சித்ராவின் வீட்டை கண்டுபிடிக்க பெரிதாய் சிரமப்படவில்லை அவர்.
இடதுகையில் பொக்கேயை அணைத்தபடி, அழைப்பு மணியை அழுத்தினார்.
""யாரு?'' என்ற வினவலுடன் கதவு திறந்து, "பாஸ்!' என திகைப்பாய் அலறினார் சித்ரா. அந்த அலறலில் ஆனந்தம் பீரிட்டது.
"நிற்பது சித்ராவா?' சற்றே கனத்திருந்தார். மாநிறம் பூசு மஞ்சள் தூளால் பளபளத்தது. அதே சிரிப்பு. சித்ராவின் இரு கைகளிலும் சமையல் பாத்திரங்கள்.
சித்ராவின் கண்கள் கலங்கின. ""போ... போன் பண்ணிருந்தா நானே வந்து பாத்திருப்பேனே பாஸ்?''
""நான் இன்னுமா உங்களுக்கு பாஸ்?''
""என் அடுத்த, 10 பரம்பரைக்கும்!''
பாத்திரங்களை போட்டு வந்து, ஒரு சேரை தூசி தட்டி போட்டார் சித்ரா. பொக்கேயையும், வெள்ளி பிள்ளையார் சிலையையும் கையளித்தார்.
""இதெல்லாம் எதுக்கு பாஸ்?''
அமர்ந்தார்.
பக்கத்து அறையிலிருந்து இருமலுடன் வெளிப்பட்ட மாமியாரை அறிமுகப்படுத்தி வைத்தார் சித்ரா.
""உங்க கணவர்?''
""வேலைக்கு போயிருக்கிறார் பாஸ்!''
""குழந்தைகள் எத்தனை?''
""ஒண்ணே ஒண்ணு. பெண் குழந்தை. ஒன்பதாவது படிக்கிறா. பள்ளிக்கூடம் போயிருக்கா. பின்னாளில் ஜர்னலிசம் படிச்சு நம்ம... சாரி... உங்க பத்திரிக்கைல சப் - எடிட்டரா சேந்தாலும் சேருவா!''
""காத்திருக்கிறேன்!''
""என்ன சாப்பிடுகிறீர்கள் பாஸ்!''
""மோர் கொடுங்க!''
மோர் எடுக்கப் போன நேரத்தில், வீட்டை நோட்டமிட்டார். வீட்டின் பராமரிப்பு நேர்த்தியாக தெரிந்தது. ஒரு விழாவில் சித்ராவுக்கு எடிட்டர் பூவரசன் நினைவுப்பரிசு வழங்கிய காட்சி புகைப்படமாய் சுவற்றில் தொங்கியது.
மோர் குடித்துவிட்டு, ""நம்ம இதழ், "செண்பகம்' வாசிக்கிறீர்களா?''
""சந்தாதாரர் நான். அதன் அனைத்து இணைப்பு களையும் வரி விடாம வாசித்து வருகிறேன்!''
""தரம் கூடியிருக்கா, குறைந்திருக்கா?''
""கூடியிருக்கு பாஸ். இடைபட்ட வருடங்களில் எத்தனை ஏகலைவன்கள் உருவாகியிருப்பர்!''
""நாம இருந்தா, பத்திரிக்கையை இன்னும் சிறப்பாக கொண்டு வரலாம்ன்னு நினைச்சது உண்டா?''
""இல்லை பாஸ்!''
""இப்ப வாழ்க்கை எப்படியிருக்கு?''
""நல்லாயிருக்கு பாஸ். சிறந்த ஹவுஸ் மேக்கராக இருக்க முயற்சி செய்து வருகிறேன் பாஸ். மாமியாரிடமும், கணவரிடமும் இப்படி ஒவ்வொரிடமும் எதாவது கற்று என்னையும், என்னை சுற்றியுள்ளவற்றையும் சகல விதத்திலும் மேம்படுத்த முயற்சி செய்து வருகிறேன் பாஸ்!''
பூவரசனின் குடும்பத்தினர் நலன்களை விசாரித்தார் சித்ரா.
""ஓய்வு நேரத்தில் என்ன செய்கிறீர்கள் சித்ரா?''
""சித்ரா மாமி - என்ற கையெழுத்து பிரதி நடத்தி வருகிறேன் பாஸ். வேளச்சேரி பெண்களிடம் என் கையெழுத்து பிரதி பிரபலம்!''
""பிரதி ஒண்ணு குடுங்க. எடிட்டர் யார்?'' பழைய பிரதி ஒன்றை கையளித்தார் சித்ரா.
""எடிட்டர் நீங்க. சப்-எடிட்டர் நான். எப்பவுமே நான் உ.ஆ., தான் பாஸ்!''
""நான் வருவேன்னு எதிர்ப்பார்த்தீங்களா சித்ரா?''
""நேத்து நெனச்சேன் பாஸ்... கடந்த, 15 வருடங்களாக, "செண்பகம்' மூலம் பேசிக்கிட்டிருந்த நீங்க, இன்னைக்கி நேர்ல பேசியிருக்கீங்க பாஸ். பிரிவு இல்லை. நான் வாழ்க்கையை தத்துவார்த்தமாக அணுகுகிறேன். எதில் இருக்கிறேனோ அதை சிறக்க செய்வது. உங்க உ.ஆ.,களுக்கு என் வாழ்த்துக்கள்!'' புறப்பட்ட பூவரசன், ""சித்ரா... உங்க பொண்ணு பேரு சொல்லலையே?''
""செண்பகம்'' என்றார் சித்ரா.
***
மகிழ்ச்சி மன்னன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கணேஷ் - மாலத்தீவுகள்,மாலத்தீவு
24-மார்ச்-201121:26:25 IST Report Abuse
கணேஷ் உ ஆ என்ன? ஒண்ணுமே புரியல்லே
Rate this:
Share this comment
Cancel
புன்னகைசெல்வன் - அல்ஜுபைல்,சவுதி அரேபியா
22-மார்ச்-201122:41:28 IST Report Abuse
புன்னகைசெல்வன் nice nice .....
Rate this:
Share this comment
Cancel
புவனேஷ் - சென்னை,இந்தியா
22-மார்ச்-201118:36:17 IST Report Abuse
புவனேஷ் கதைக்கெல்லாம் ஜனாதிபதி அவார்டு குடுப்பாங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X