படத்தில் நீங்கள் பார்க்கும், பி.எம்.டபிள்யூ., கார், வித்தியாசமாக இருக்கிறதா? உண்மைதான். இது ஒரு வித்தியாசமான கார்தான். இந்த கார் முழுவதும் செங்கற்களால் உருவாக்கப்
பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த பிரபல கலைஞர் டைஜெங். இவருக்கு ஏதாவது புதுமையாக படைக்க வேண்டும் என ஆசை வந்தது. மிகவும் சொகுசான, விலை உயர்ந்த, பி.எம்.டபிள்யூ., கார் போன்று ஒரு காரை கற்களால் உருவாக்க வேண்டும் என ஆசைப் பட்டார். தன் கலை சிற்பத்தை உருவாக்க செங்கற்களே போதும் என முடிவுக்கு வந்தார்.
கடந்த, 2010ல், இவர், இதற்காக செங்கற்களை சேகரிக்க துவங்கினார். பின், காரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். ஒரு ஆண்டு முயற்சிக்குப் பின், சமீபத்தில் இந்த கார் முழுமை அடைந்து உள்ளது. இந்த காரில், கண்ணாடியைத் தவிர, மற்ற அனைத்துமே செங்கற்கள் தான். காரின் கதவை திறக்க பயன்படுத்தப்படும் இணைப்பு கூட, கற்களால் ஆனதுதான். கார் கதவு, ஸ்டியரிங் வீல், புகை போக்கி என எல்லாமே செங்கலால் அமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தென் கிழக்கு பகுதியில் குவாங்டாங் மாகாணத்தில், ஷென்செங் என்ற நகரில் இந்த கார், இப்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த காரை உருவாக்க டைஜெங்கிற்கு, 60 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. சீனாவில் பல நகரங்களில் காட்சிக்கு வைக்கப்பட உள்ள இந்த காரை, சீனாவில் புதிதாக உருவாகி வரும் கோடீஸ்வரர்கள், தங்கள் வீட்டின் முன் பூங்காவில் அழகுக்காக வைக்க வாங்குவர் என்கிறார் டைஜெங்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை கூட வெறும் சைக்கிள் மட்டுமே வைத்திருந்த சீனர்கள், இப்போது எல்லா வித சொகுசு கார்களையும் வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளனர். உலகில் பிரபலமாக உள்ள எல்லா வித சொகுசு கார்களும், சீனாவில் இப்போது விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது. எனவே, இந்த ஓடாத செங்கல் காரையும், சீனர்கள் விட்டு வைக்க மாட்டார்கள்.
***
எச்.கே.ஜெபர்சன்