எல்லாப் பூக்களும் எனக்கே! (தொடர் கதை)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2010
00:00

- மனுனிகா ராணி
தொடர் - 23
முன்கதைச் சுருக்கம்!
தாங்கள் கைது செய்து வைத்துள்ள குற்றவாளிகளில், யாத்ராவை கொல்ல முயன்றவன் யார் என்பதை அடையாளம் காட்டச் சொல்லி, யாத்ராவுக்கு தகவல் அனுப்பியிருந்தார் காவல்துறை ஆய்வாளர். அதன்படி, காவல் நிலையத்துக்கு சென்ற யாத்ரா, அங்கிருந்த குற்றவாளிகளில், தன்னை கொல்ல முயற்சி செய்த அனிதா ரெட்டியின் கணவரை கண்டும், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
காவல்துறை ஆய்வாளரிடம், இவர்களில் ஒருத்தரும், தன்னை கொல்ல முயற்சிக்கவில்லை என்று கூறிவிட்டான். அதன்பின், அனிதா ரெட்டியின் வீட்டுக்குச் சென்று, அவளையும் அழைத்துக் கொண்டு, திருநங்கை அபர்ணா நாயுடு பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிலையத்துக்கு சென்றான் யாத்ரா.


இனி...
கிசும்புவை போஸ்மார்ட்டம் பண்ணிவிட்டு கால்நடை மருத்துவர் அறிவித்தார்...
"பூனையை ட்ராங்குலைசர் கன்னின் விஷ ஊசி மூலம் கொன்றி ருக்கின்றனர். பூனை இறந்த நேரம், நள்ளிரவு இரண்டு மணி. பூனையை கொலையாளி கொல்வதற்கு முன், சித்திரவதை செய்யவில்லை. கொலையாளியின் ஒரே நோக்கம், இந்த வீட்டு அங்கத்தினர்களை மிரட்டுவதே!'
இரு கைகளால், தலையில் அடித்துக் கொண்டு கதறினாள் இசையருவி. ""எந்தப் பாவி என் பூனையைக் கொன்றான்? என் பூனை கிசும்பு அப்பிராணியானது. அதைப்போய் கொல்ல கொலை கார சண்டாளனுக்கு புத்தி எப்படி வந்துச்சு? பூனையைக் கொல்றது பச்சைக் குழந்தைய கொல்ற மாதிரி. என் பூனையைக் கொன்னவன் கைல கிடைச்சா அவனை கைமா போட்ருவேன்.''
""அமைதி படு இசை!'' என்றான் யாத்ரா.
""எப்படிடா அமைதிபடுறது... என் பூனை செத்திட்டதா நினைக்காதே; அது, ஆவியா நம்ம வீட்டை தான் சுத்திக்கிட்டு இருக்கும்!''
""உண்மை தான்!''
""இந்த வீட்ல யாரை மிரட்ட இந்த கொலை நடந்துச்சு? என் ஜிங்கிள்ஸ் மியூசிக் பிடிக்காம, ரசிகன் யாராவது பூனைய கொன்னுட்டானா? உன் ஆவணப் படங்களால் பாதிக்கப்பட்ட பார்ட்டி யாராவது பண்ணாங்களா? அப்பாவின் பழைய எதிரிகள் யாராவது... அம்மா சொந்தத்துல யாராவது... யாரு, யாரு, யாரு?''
நேசியும், கடலும், ரெட்டியும், அகராதியும், இசையை சமாதானப் படுத்த முயன்று தோற்றனர்.
இன்ஸ்பெக்டரும், இரு கான் ஸ்டபிள்களும், இசை கூக் குரலிடுவதை நின்று வேடிக்கை பார்த்தனர்.
ஒரு கான்ஸ்டபிள், ""யாராவது நரிக்குறவர்கள் இந்த பொண்ணு பூனையை கொன்னிருக்கலாம். இதை நிஜ மர்டர் மாதிரி, சீன் பில்டப் பண்ணுது இந்தப் பொண்ணு!''
இன்ஸ் முறைத்தார். ""எப்பா ஞானசூன்யங்களா... கொஞ்சம் உங்க திருவாய மூடுறீங்களா... இந்த சம்பவத்தின் குற்றநோக்கம் என்னன்னு ஆராய வேண்டியிருக்கு!''
ராஜகுமாரன், யாத்ராவிடம், ""என்னப்பா தம்பி... நடக்றதெல் லாம் துர்கா வேலையா... போலீசிடம் சொல்லிட வேண்டி யதுதானே?''
""துர்கா விஷயம் போலீசுக்கு போக வேணாம்; நான் டீல் பண்ணிக்கிறேன்!''
""வெறி நாய் கடிக்க ஆரம்பிச்சா அது, ஆளும், தரமும் பாக்காது; துர்காவும் அப்படித்தான். அடுத் தடுத்து என்னென்ன ஏடாகூடங்கள் பண்ண காத்திருக்கிறாளோ!''
""நான் பாத்துக்கிறேன்ப்பா... ப்ளீஸ்!''
""அப்டின்னா போலீஸ்ல என்ன சொல்லப் போற?''
""எங்களுக்கு எந்த எதிரியும் இல்லை; எங்களுக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை; நாங்கள் போலீசில் புகார் எதுவும் கொடுக்க விரும்பவில்லை என சொல்லப் போகிறேன்!''
தந்தையிடம் சொன்னதையே இன்ஸ்பெக்டரிடம் ஒப்பித்தான் யாத்ரா.
""நல்லா சிந்திச்சுதானே சொல் றீங்க?''
""ஆமா இன்ஸ்பெக்டர்!''
""நல்லது, நாங்க கிளம்புகிறோம்!'' போலீசார் கிளம்பிப் போயினர்.
யாத்ராவின் முகத்தில் குழப்ப ரேகைகள் கூடாரமிட்டன. இனி துர்காவை எப்படி வெற்றிகரமாக சமாளிப்பது என, தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.
ஒரு பிரம்பு கூடையுடன் ஒபிலியா, யாத்ரா வீட்டுக்கு வந்தாள். இன்னுமே இசை இடிந்து போய் அமர்ந்திருந்தாள்.
ஜீவிதா எட்டிப் பார்த்தாள். ""யாரம்மா நீ?''
""யாத்ராவின் ப்ரண்ட்; யாத்ரா எங்க?''
""யாத்ராவுக்கு எத்னி ப்ரண்டுகள்? உள்ளே வாம்மா... புது ஆவணப்படம் எடுப்பது சம்பந்தமாக போயிருக்கிறான். அவன் வர நைட் கூட ஆகும்!''
""நான் இசையருவியைப் பாக்கணும்!''
""அதோ அந்த ரெண்டாவது அறைலதான் இருக்கா... போய் பாரம்மா!''
இசை அருகில் அமர்ந்து, அவளது தலை கேசத்தை கோதிக் கொடுத்தாள் ஒபிலி. "அழாதம்மா... உன் வளர்ப்பு பூனை இறந்ததின் பிரிவுத்துயர் எப்படி யிருக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். பூனைக்கு பூனை இழந்த மகிழ்ச்சியை குடுத்திராது; இருந்தாலும், என் பூனைகளிலேயே பெஸ்ட் பூனையை கொண்டு வந்திருக்கேன்!''
கூடையிலிருந்து ஒரு பூனையை எடுத்தாள்; அதனிடம் பேசினாள்.
""புஸ்சி! இனி நீ இந்த பொண்ணு கூட தான் இருக்கப் போற!''
புஸ்சி ஓடிப்போய் இசை மடியில் பம்மியது. மடிக்குள் உருண்டு, புரண்டு <லூட்டியடித்தது. பின் எகிறி இசை கன்னத்தில் முத்தமிட்டது.
""இசை! உன் பூனையைக் கொன்னது யாருன்னு எனக்குத் தெரியும். வுடு, மந்திரம் பண்ணி அவர்களை பஸ்பம் ஆக்கிடுறேன்!''
""மந்திரம்கிந்திரம் எனக்கும், எங்கண்ணனுக்கும் பிடிக்காது... தப்பு செஞ்சவங்களை கடவுள் பாத்துப்பான். உங்க பெயர் ஒபிலியா தானே?''
""ஆமா!''
""உங்க அன்புக்கு நன்றி. புஸ்சி என் கிட்ட இருக்கட்டும்,'' பூனையை தடவிக் கொடுத்தாள்.
""நான் கிளம்புறேன் இசை!'' மொபெட்டில் புறப்பட்டாள் ஒபிலியா.
தி.நகரிலுள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றின் பாரில், சமர், ஆசை, அகராதியுடன் அமர்ந் திருந்தான் யாத்ரா.
அகராதிக்கு ப்ளடி மேரி; மீதி மூவருக்கும் பீர்.
""புதுசா நாம எடுக்கப் போற ஆவணப்படத்தின் டைட்டில், "காடு!' சத்தியமங்கலம் காடுகளில் தான் ஷூட் பண்ணப் போறோம்... ஒரு வாரத்திற்கு குறையாம, பத்து நாளைக்கு கூடாம!''
""நம் யூனிட்ல யாராரை கூட்டிட்டுப் போகப் போறம் தெரியுமா?''
""தெரியாது... நீயே சொல்லு!''
""கேமராவுக்கு அகராதி, நாம தங்கிறதுக்கு கூடாரம் அமைக்கப் போறது சமர். சமையல் பொறுப்பு ஆசைக்கு. டைரக்டர் நான். வேற யார் வேணும்?''
""காட்டுக்குள் நம்ம பயணச் சுமைகளை எடுத்து வர, கூட மாட உதவி செய்ய, இரு பணியாட்கள் அமர்த்திக் கொள்வோம். காட்டுப் பகுதியை நன்கு தெரிந்த ஒரு ஆண், ஒரு பெண். அவர்கள், ஆதிவாசிகளாக இருந்தால் பரவா யில்லை!''
""சரி!''
""இருபது நாளைக்கு பேட்டரி தாக்குபிடிக்கும் மொபைல் போன்களை கொண்டு செல்வோம். பிரட், ஜாம், பேரீச்சம்பழங்கள், உலர்ந்த திராட்சை பழங்கள், க்ளுகோஸ், பதப்படுத்தப்பட்ட மீன் இறைச்சி, பழரசப் பாட்டில்கள், டார்ச், கத்தி, ஒரு கோடலி, நைலான் கயிறுகள், பர்ஸ்ட் எய்ட் மருந்து பொருட்கள், டிஸ்யூ பேப்பர், இதர, இதர கொண்டு செல்வோம்!''
""சரி!''
இன்னும் பலவகையாக விவாதித்து, பயண திட்டத்தை உறுதி செய்தபின், தலையைச் சொறிந்தான் ஆசை.
""என்னடா ஆசை... தீபாவளி இனாம் வேணுமா?''
""அதில்ல செல்லம்... எங்களுக்கு தேவையான, உனக்கு அறவே ஆகாத ஒரு பொருளை கொண்டு வர விரும்புகிறோம்... நீ அனுமதிச்சா...''
""என்னடா பீடிகை போடுறீங்க... என்ன பொருள்டா அது?''
""சொன்னா திட்டக் கூடாது; அடிக்கக் கூடாது!''
""நீங்க சொல்லுங்கப்பா... யாத்ரா அடிக்காம நான் பாத்துக்கிறேன்!'' அகராதி.
""வீடியோகார் வீடியோகார்!... நாங்க எங்க கூட பியூலான்னு ஒரு விஷயத்தை கொண்டு வர விரும்புறோம் வீடியோகார்!''
""அய்யோ பொண்ணா?'' அகராதி.
""நீயும், அகராதியும் படம் எடுப்பீங்க. உங்களுக்கு பொழுது ரெக்கை கட்டி பறந்திடும். எங்களுக்கு? எங்களுக்கு பேச்சு துணையாக பியூலா என்ற பொண்ணை கூட்டி வர விரும்புகிறோம்!''
""யாரந்த பியூலா?''
""அவள் ஒரு பாலியல் தொழிலாளி. அவ நினைச்சா, ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் கூட சம்பாதிப்பா... ஆனா, எங்க நட்புக்காக வர்றா.''
""நோ!''
""அவசரப்படாதே... நீ அவ பக்கம் திரும்ப வேணாம்; அவ உன் பக்கம் திரும்ப மாட்டா. சமையல்ல டென்ட் கட்றதில உதவுவா. எம்.எஸ்சி., பாட்னி படிச்சவ. சந்தர்ப்ப சூழ்நிலையால பாலியல் தொழிலாளி ஆய்ட்டா. பெண்களின் நியாயத்தை எப்பவும் உரக்க அறிவிக்கும் நீ, ஒரு பாலியல் தொழிலாளியின் நியாயங்களை உணர மாட்டாயா? பல்வேறு மன உளைச்சல்களில் தவிக்கும் அவளுக்கு, இந்த காட்டுச் சுற்றுலா குதூகலம் ஏற்படுத்தும்!''
""சாரி... வேணாம் விடுங்கடா!''
""கொஞ்சம் பொறுமையா காதைக் குடுத்து கேள்... பியூலாவை இங்க வரச் சொல்லிருக்கம். வருவா. அவளை நேர்ல பார். அப்பவும் அவளை பிடிக்கலைன்னா, அவளை கூட்டிட்டு போக வேண்டாம்!''
""யாத்ரா! பியூலா வரட்டும். நேர்ல பாப்பம், பேசுவம்!''
"அதோ அவளே வர்றா!'' ஆசை சுட்டினான்.
ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்த ஒருத்தி நடந்து வந்து கொண்டிருந்தாள். பாப் தலைகேசம். ஹை-ஹீல்ஸ் இல்லாத, ஆண்கள் அணியும் டைப்பில் காதிம் செருப்பு. வயது 28 இருக்கக் கூடும்; உயரம் 165 செ.மீ., இருப்பாள்.
ஒற்றை ரோஜா பொக்கே நான்கு கொண்டு வந்திருந்தாள். அகராதி, ஆசை, சமருக்கு கொடுத்த அவள், நாலாவது பொக்கேயை யாத்ராவுக்கு கொடுக்காமல் நிறுத்தினாள்.
""இவன்தான் யாத்ராவா? இவன் என்னை பாக்ற பார்வையே சரியில்ல. அப்படி இருப்பான், இப்படி இருப்பான்னு பில்டப் குடுத்தீங்க; சுமாரா இருக்கான். இவனோட தாடி, இவனோட சோம்பேறித்தனத்தை காட்டுது. அறிவுஜீவின்னு பாவ்லா காட்றானா? ஒருத்திக்கு சொன்ன அதே ரெடிமேட் ஜோசியத்தை, எல்லா பெண்களுக்கும் சொல்லி ஏமாத்தறானா? ஆவணப்படம் எடுத்தா இவன் பெரிய கொம்பனா? நாலு ஆவணப்படம் கோவணப்படம் எடுத்திட்டு, ஜேம்ஸ் காம்ரூன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் <<லுக் விடுறான். நான் கிளம்புறேன் ஆசை. விளக்கெண்ணெய் குடிச்சவன் மாதிரி மூஞ்சை வச்சுக்கிட்டு என்னை இவன் பாத்தா, இவன் யூனிட்ல நான் எப்படி பத்து நாள் குப்பைக் கொட்டுறது?''
""சரியான கவுன்ட்டர் அட்டாக்!'' முணுமுணுத்தாள் அகராதி.
""நீ ஒரு தாவரவியல் மாணவி. உனக்கு காட்டை பற்றி என்ன தெரியும் சொல்லு!''
""இன்டர்வியூ பண்றியா நீ? வேலைக்கு வர்றேனா, கம்பனிக்கு வர்றேனா?''
""கண்ணுக்குட்டி கண்ணுக்குட்டி! உனக்கு தெரிஞ்சதை சொல்லிடேன்!''
கெஞ்சினான் ஆசை.
காடுகள் பற்றி புகுந்து விளையாடினாள் பியூலா.
""மனப்பாடம் கினப் பாடம் பண்ணிட்டு வந்தியா?''
""ஆவணப்படங்கள் பத்தி நான், நாலு கேள்வி கேட்டா துண்ட காணோம், துணிய காணோம்ன்னு ஓடிடுவ. பாலியல் தொழிலாளின்னவுடனே என்னை கேவலமா பாக்காதே... நான் ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா!''
""தற்பெருமை!''
""விளம்பர உலகில் சுய அறிமுகம் தேவைப்பா. சிங்கம் தன்னை சிங்கம்ன்னு சொல்லிக்கிறது தப்பா? இதுவரைக்கும் உன் வாழ்நாள்ல, என்னளவுக்கு அழகான பொண்ணை பாத் திருக்கியா? (அகராதியை சுட்டி) இதுதான் உன் ஸ்டாண்டர்ட் ஸ்பெசிமனா?''
ஒரு நொடி யோசித்தான் யாத்ரா.
""சரி, இவ வரட்டும். பட், ஒன் கண்டிஷன்... இவ என்னை தொடக் கூடாது; என் அனுமதி இல்லாம என்னோட பேசக் கூடாது!''
""எனக்கும் ஒரு கண்டிஷன்டா ஆசை!'' பியூலா.
""என்ன?''
""இவன் இங்க இப்படிதான் பேசுவான். காட்டுக்குள்ள போய், என் அழகை பாத்திட்டு பிளேட்டை திருப்பி போட்றப் போறான். இவன் என் அனுமதியில்லாம என்னை தொடக் கூடாது; என் கூட பேசக்கூடாது!''
""டன்!''
""டன் டன்!'' என அறிவித்தான் யாத்ரா, காட்டுக்குள் நடக்கப் போவது அறியாமல்!
— தொடர்ந்து பூக்கும்.
* * *


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X