* வலி நிவாரண மாத்திரைகளால் பக்கவிளைவு ஏற்படுமா
ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தலைவலி அதிகளவு ஏற்படுகிறது. குறிப்பாக ஒரு பக்க தலைவலியால் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதற்கு வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்பவராக இருந்தால் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரகங்கள் பாதிப்பு, வயிற்று புண் பிரச்சனைகள் விரைவாக ஏற்படும் வாய்ப்பு உள்ளன. மேலும் கல்லீரல் பாதிப்பு, கருச்சிதைவு, மன தளர்ச்சி மற்றும் ரத்தம் மெலிந்து போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே மருத்துவரின் ஆலோசனை இன்றி வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்.
ஓமியோபதி மருத்துவ முறையில் தலைவலிக்கு மட்டுமல்லாது அனைத்து வகை வலிகளுக்கும் சிகிச்சை பெற வரும் அனைவருக்கும் ஒரே மாதிரியான வலி நிவாரண மாத்திரைகள் வழங்குவதில்லை. தலைவலி தோன்றியதற்கான காரணம், வலியின் தன்மை, நோயாளியின் உடலமைப்பு, வலியின் போது உருவாகும் மனநிலை, மன உணர்ச்சியில் ஏற்படும் மாறுபாடுகள், என முழு மனதையும் ஆய்வு செய்து மாத்திரைகள் வழங்குகிறோம்.
* இடுப்பு, மூட்டு வலிக்கு தீர்வு என்ன?
இடுப்பு வலி என்பது ஒரு நரம்பியல் கோளாறு. காலையில் படுக்கையை விட்டு எழுந்திரக்கும் போது திடீரென ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு, குனிந்து குனிந்து வேலை செய்யும் பெண்களுக்கும், கார் ஓட்டுபவர்களுக்கும் முதுகு வலி வரலாம்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதுகு தண்டில் மயக்க ஊசி போட்டு கொண்டவர்களுக்கும் வரலாம். முதுகின் நடுப்பகுதியிலும், அடி முதுகிலும், இடுப்பு பகுதியிலும் தான் பெரும்பாலும் முதுகுவலி அதிகமாக வருகிறது. சத்துணவு, உடற்பயிற்சி, ஓய்வு என சரியாக பின்பற்றினால் முதுகு வலியிலிருந்து தப்பிக்கலாம். உடல் குண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல் நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகுபடும்படி உட்கார வேண்டும்.
கால்களை தரையில் வைப்பதை விட, சற்று உயரமான ஒரு சிறிய ஸ்டூலின் மீது வைத்துக் கொண்டால், முதுகு வலி வருவதை தவிர்க்கலாம். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லையென்றால், சிறிது வகை தளர்வு பயிற்சிகளான குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்து கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யலாம்.
இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைகள் தளரும். வாக்கிங் நீச்சல் அடித்தல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்யலாம்.
* நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க வழி என்ன
தயிருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்க் கிருமியை அழிக்கிறது. வயிற்றுப் போக்கினை தடுக்கும் ஆற்றலும் தயிருக்கு உண்டு. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது. தினமும் தயிரை உண்டு வந்தால் வயற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. பாலில் இருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களை விட தயிரில் அதிகளவு கால்சியம் உள்ளது. எனவே தயிரை உண்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைகின்றன. எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தயிர் தடுக்கிறது.
- டாக்டர் மதுமிதா
ஓமியோபதி மருத்துவ நிபுணர்,
மதுரை. 89392 66767