* நான் திருமணத்துக்கு முன்பு மார்பக புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இப்பொழுது எனக்கு திருமணமாக உள்ளது. நான் ஒட்டுறுப்பு மார்பக சிகிச்சை செய்து கொள்ளலாமா? அதனால் பலன் கிடைக்குமா?
மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையை கண்டிப்பாக செய்து கொள்ளலாம். இதற்கு நமது உடலில் உள்ள தசையை அல்லது செயற்கை மார்பக உபகரணத்தை பயன்படுத்தி ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். இதனால் உள்களின் தோற்றமும், மன திடமும் அதிகரிக்கும்.
* நான் மூன்று மாத கர்ப்பிணி.எனது மார்பங்களில் சில நாட்களாக வலி இருக்கிறது. நான் மேமோகிராம் எடுத்துக் கொள்ளலாமா?
கர்ப்பிணிகள் மேமோகிராம் எடுத்து கொள்வது நல்லதல்ல. இதனால் வயிற்றில் வளரும் சிசுவிற்கு கதிரியக்க பாதிப்பு ஏற்படலாம். அதற்கு பதிலாக மார்பகத்திற்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து கொள்ளலாம்.
* நான் 50 வயது நிரம்பிய பெண். எனக்கு பல ஆண்டுகளாக புகையிலை, மூக்குப்பொடி பழக்கம் உள்ளது. இதனால் எனக்கு மார்பங்களில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?
மூக்குப்பொடி மற்றும் புகையிலை பழக்கம் உள்ளவர்களுக்கு அனைத்து வகையான புற்றுநோய்களும் வரும் வாய்ப்புகள் உள்ளன. அதில் மார்பக புற்று நோயும் ஒன்று. எனவே, நோயில் இருந்து விடுபட மூக்குப்பொடி, புகையிலை பழக்கத்தை உடனே நிறுத்துவது நல்லது.
* எனக்கு சில ஆண்டுகளுக்கு முன் வலது மார்பகத்தில் புற்று நோய் ஏற்பட்டுஅதற்கான அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டேன். தற்போது எனது வலது கை வீக்கமாக உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது. சிகிச்சை முறைகள் என்ன
மார்பக புற்றுநோய் சிகிச்சையில் அக்குளில் உள்ள நெறிக் கட்டிகளை அகற்றும்போது கை வீக்கம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதை பற்றி பயப்பட வேண்டியதில்லை. முறையான பிசியோதெரபி பயிற்சி செய்வதன் மூலமும், இரவு நேரத்தில் கைகளை சற்று உயரமாக வைத்திருப்பதன் மூலமும் வீக்கத்தை குறைக்கலாம்.
* நான் 50 வயது நிரம்பிய பெண். எனக்கு மேமோகிராம் செய்து பார்த்தத்தில் மார்பகங்களில் நீர்க்கட்டிகள் இருப்பதாக கூறுகின்றனர். இது மார்பக புற்று நோயாக மாறுமா
மார்பகத்தில் ஏற்படும் கட்டிகள் எல்லாம் புற்று நோய் அல்ல. பல பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரப்பதினால் மார்பகங்களில் நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றன. மருந்து, மாத்திரைகள் மூலம் பூரண குணமாக்கி விடலாம். அது புற்று நோயாக மாறும் என்ற பயம் தேவையில்லை.
* நான் மார்பக புற்று நோயால் குணமான பெண். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அவர்களுக்கு மார்பக புற்று நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் ?
உங்களது பெண்களுக்கு சிறிய ரத்தப் பரிசோதனை மூலம் மார்பக புற்று நோய் வருவதற்கான வாயப்புகள் உள்ளதா, இல்லையா என எளிதாக கண்டுபிடித்து விடலாம். அவ்வாறு இருப்பின் அதற்குறிய உணவு பழக்கம், உடற்பயிற்சி, வாழ்க்கைத் தர மாறுதல்கள் ஆகியவற்றால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கலாம்.
* செயற்கை மார்பகம் பொருத்தியவர் அதன் வழியாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியுமா?
செயற்கை மார்பகம் மூலம் தாய்ப்பால் கொடுக்க முடியாது.மற்றொரு மார்பகம் மூலம் தாய்ப்பால் கொடுக்கலாம்.
- டாக்டர் மோகன் பிரசாத்,
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர், மதுரை.
98430 50822