முடக்கு வாதம் எனப்படும் ருமடாய்டு ஆர்த்ரடீஸ், ஆண்களைக் காட்டிலும், 10 ஆண்டுகள் முன்னதாகவே பெண்களை பாதிக்கிறது. காரணம், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன். இந்த சுரப்பியினால், நன்மையும் உண்டு. கெடுதலும் இருக்கிறது.
'மெனோபாஸ்' எனப்படும், மாதவிடாய் முடியும் காலத்திற்கு, சில ஆண்டுகள் முன், அல்லது முடிந்த பின், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைய துவங்கும். இந்தப் பருவத்தில் தான், முடக்கு வாதம் பெண்களை அதிகம் பாதிக்கும்.
பிரச்னைக்கு, பொதுவான இரண்டு காரணிகளை கவனிக்க வேண்டும். ஒன்று, பிரச்னையை உண்டு பண்ணும் மரபணு, பிறவியிலேயே, நம் உடலில் இருக்க வேண்டும். அடுத்தது, அந்த குறிப்பிட்ட மரபணுவை துாண்டுவதற்கான நோய்த் தொற்று, உணவுப் பொருட்களில், சுவை, நிறம், மணத்திற்காக, சேர்க்கப்படும் பொருட்கள், சிகரெட் போன்ற வெளிக் காரணிகளாக இருக்கலாம்.
உடலில், டி செல், பி செல் என்று இரண்டு வகையான செல்கள் உள்ளன. பி செல்கள், தேவையில்லாத நேரத்தில் வேலை செய்வதால், முடக்கு வாதம் வரலாம். இந்த செல்களின் வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் காரணம்.
முடக்கு வாதத்தை உண்டு பண்ணும் மரபணு, உடலில் இருந்தால், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், அசாதரணமாக வேலை செய்து, பி செல்களின் வாழ் நாட்களை அதிகப்படுத்தும். பி செல்கள், ஆன்டிபாடிஸ் எனப்படும், நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்குபவை. 10 நாட்கள் மட்டுமே இருந்து, அழிய வேண்டிய இந்த செல்கள், கூடுதலாக, 20 நாட்கள் இருப்பதால், எதிர்ப்பு அணுக்களை அதிகம் உருவாக்கும்.
தேவைக்கு அதிகமான எதிர்ப்பணுக்கள், முடக்கு வாதத்தை துாண்டும், வெளிக்காரணிகள் அனைத்தும் நமக்கு எதிரானவை என்று தவறாக நினைத்து, நம் உடலில் உள்ள செல்களையே அழிக்கத் துவங்கும்.
அறிகுறிகள்
மூட்டுகளில் குறிப்பாக, கை விரல், மூட்டுக்களில் வலி, ஆறு வாரங்களுக்கு மேல் இருக்கும். தற்போது உள்ள நவீன பரிசோதனை வசதியில், ஆறு வாரங்களுக்கு முன்பே கூட கண்டுபிடிக்கலாம். காலையில், துாங்கி எழுந்தவுடன், கை, கால்களில் இறுக்கம் இருக்கும். அரை மணி நேரத்தில் சரியாகி விடும். ஒவ்வொரு நாளும் துாங்கி எழும் போது, இதே பிரச்னை வரும். கை மூட்டுக்கள் மட்டுமல்லலாமல், உடலில் உள்ள எல்லா மூட்டுக்களிலும் பிரச்னை வரலாம்.
இது ஹார்மோன் பிரச்னை என்பதை விடவும், பெரும்பாலும் மரபியல் காரணங்களால் வருவது. எனவே, தடுக்க முடியாது. ஆனால், வாழ்நாள் முழுவதும் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன. 50 சதவீதம் மருந்துகள், 50 சதவீதம் உடற்பயிற்சி மூலம் கட்டுப்படுத்தலாம்.
புகைப் பிடிக்கவே கூடாது. இதுதான் பிரச்னையின் முக்கியமான வெளிக் காரணி. முடக்கு வாதத்திற்கான மரபணு இருந்தால், ஆன்டிபாடிஸ் மூன்று இடங்களில் உருவாகும். பல், நுரையீரல், வயிறு இவை வெளிப்புறச் சூழல் உள்ள நோய்த் தொற்றுளோடு, நேரடியாகத் தொடர்புடையது. முடக்கு வாதம் இருப்பவர்களுக்கு, கண்டிப்பாக பல்லில் சொத்தை அல்லது வேறு தொற்றுகள் இருக்கும்.
இதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும்.
துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு சாப்பிடவே கூடாது. முதல், 20 நாட்களிலேயே ஆர்த்ரடீஸ்சை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். மூட்டுக்களில் வலி என்றால், அதற்கான சிறப்பு மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. நீண்ட நாட்களாக முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், கண்கள், இதயம், சிறுநீரகங்களை பாதிக்கும் அபாயம் அதிகம். துவக்கத்தில் சிரமமாக இருந்தாலும், உடற்பயிற்சி தான் இதில் முக்கியம். ஒரு முறை கட்டுக்குள் வந்து விட்டால், தொடர்ந்து, அப்படியே பராமரிக்க முடியும்.
டாக்டர் எஸ். ஸ்ரீராம்
ருமடாய்டு ஆர்த்ரடீஸ் சிறப்பு மருத்துவர்
ra12283@yahoo.co.in
தொலைபேசி: 9962554591