உழுதுண்டு பின்செல்வேன்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2018
00:00

வாசலில் 'பைக்' சத்தம் கேட்டு, கட்டிலில் துாங்கிக் கொண்டிருந்த, கணவன் முருகேசனை, ''என்னங்க... எழுந்திருங்க... வண்டி சத்தம் கேட்குது... மாப்பிள்ளை வந்துட்டாரு,'' என்றாள், பாக்கியம்.
மெல்ல எழுந்து, துண்டால் முகத்தை துடைத்து, தோளில் போட்டு, கண்ணாடி எடுத்து மாட்டிக் கொண்டார், முருகேசன்.
''வாங்க மாப்பிள்ளை... ஏன் இந்த வேகாத வெயிலில் அரக்கப்பரக்க ஓடி வர்றீங்க... வெயில் தாழ வந்திருக்கலாமே... உட்காருங்க, குடிக்க மோர் எடுத்து வர்றேன்,'' என்று சொல்லி, உள்ளே போனாள், பாக்கியம்.
''போன காரியம் என்னாச்சு, மாப்புள,'' என்றார், முருகேசன்.
''ஏங்க... வந்த புள்ளைகிட்ட, பொண்ணு எப்படி இருக்கா... பேர புள்ளைங்க எப்படி இருக்காங்கன்னு விசாரிக்காம... உங்க வேலை முடிஞ்சுதான்னு மட்டும் கேட்கறீங்க,'' என்றாள், பாக்கியம்.
''இவ ஒரு கூறு கெட்டவ... ஏய்... நான் அப்படி கேட்டா, அது, நம்ம மாப்பிள்ளையை கேவலப்படுத்தற மாதிரி... இந்த ஐந்து ஆண்டுல, நம்ம பொண்ணு, என்னைக்காச்சும் கண்ண கசக்கிட்டு வந்து நின்னுருக்கா... இல்ல, ஏதாவது குத்தம் குறை சொல்லியிருக்கா... மாப்புள நல்லா இருக்கார்னா, பொண்ணும், புள்ளைங்களும் நல்லா தான் இருப்பாங்க,'' என்றார்.
குறுக்கிட்ட இளங்கோ, ''அத விடுங்க மாமா... திலகவதி, பசங்க பைந்தமிழ், இலக்கியா மூணு பேரும் நல்லா இருக்காங்க... 'தாத்தா, பாட்டிய பாக்கணும், கூட்டிட்டு போங்க...'ன்னு அடம் புடிச்சாங்க... நான் தான், பள்ளிக்கூடம் இருக்கு, லீவுல கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டேன்...
''அப்புறம் மாமா... புரோக்கர்கிட்ட, பத்திரத்தை காட்டி பேசிட்டேன்... அவங்களுக்கு நம்ம நிலத்தை ரொம்ப புடிச்சுருக்கு... ஊரை ஒட்டி, 10 காணி நிலம், ஒரே இடத்தில இருக்கு... ரோடு வசதி, வடக்கால பாசன வாய்க்கா, தெற்கால வடிகால் வாய்க்கா...
''அவங்க எதிர்பார்க்குற மாதிரி இருக்குறதால, நேர்ல வந்து பார்த்துட்டு வாங்கிக்கறதா சொல்லிட்டாங்க... 10 காணிக்கும், 70 லட்சம், பத்திர செலவெல்லாம் அவங்களோடதுன்னு பேசிட்டேன்... இருந்தாலும், நீங்க மறுபடியும் யோசிச்சு முடிவெடுங்க மாமா,'' என்றார், இளங்கோ.
''இதுல யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு மாப்புள... நான், படிக்காம தற்குறியா இந்த வயகாட்டுலேயே கிடந்துட்டேன்... என் புள்ளையாவது டாக்டராவணும்... அவனுக்கு, இந்த ஊரிலேயே ஒரு மருத்துவமனை கட்டிக் கொடுத்து, கொறஞ்ச செலவுல எல்லாருக்கும் வைத்தியம் பார்க்கணும்ன்னு ஆசைப்பட்டேன்...
''சின்ன வயசுலேர்ந்து, திருமாறங்கிட்டே, 'நீ டாக்டரா ஆவணும்'ன்னு சொல்லிகிட்டே இருப்பேன்... ஒருநாள் கூட, அவன வயக்காட்டுல சேத்த மிதிக்க விட்டதில்லே... டாக்டருக்கு படிக்கறதுன்னா, அரசு கல்லுாரியில, ஜாதி அடிப்படையில, இடம் கிடைக்கும்... படிப்பு செலவ மட்டும் பார்த்துக்கலாம்ன்னு நெனச்சேன்...
''ஆனா, இப்ப தான், 'நீட்... கீட்'டுன்னு ஏதோ பரீட்சையெல்லாம் எழுதணுமாமே... பாவம், தோல்வி அடைந்துட்டான்... அதுக்காக, நான் குடுத்த வாக்க காப்பாத்தாம இருக்க முடியுமா... வேற கல்லுாரியிலாவது படிக்க வச்சு, எம் புள்ளைய, ஒரு டாக்டரா ஆக்கி காட்டுவேன்... அதனால தான், அந்த தனியார் கல்லுாரியில விசாரிக்க சொன்னேன்,'' என்றார், முருகேசன்.
''ஆமாம் மாமா... இருக்கறதிலேயே அது தான், புகழ்பெற்ற கல்லுாரியாம்... அங்க, மதிப்பெண் பத்தியெல்லாம் கவலை இல்லை... 45 லட்ச ரூபாய் கட்டிட்டா போதும்... நாலு ஆண்டு கழிச்சு, டாக்டரா வெளியிலே வந்துடலாம்,'' என்றார் இளங்கோ.
''அவ்ளோ பணத்துக்கு நான் எங்க போறது மாப்புள... அதனால தான், இந்த நிலத்த விக்க சொன்னேன்... என்ன ஒரு வருத்தம்ன்னா, யாராவது விவசாயம் செய்றவங்க, இந்த நிலத்த வாங்கியிருந்தா, கொஞ்சம் சந்தோஷமா இருந்திருக்கும்...
''ஆனா, ஏதோ, குளிர்பான கம்பெனின்னு சொல்றீங்களே, அது தான் வருத்தமா இருக்கு... என் பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே, இந்த ஊருக்கே சோறு போட்ட தாய் நிலம்... அத விக்க வேண்டியதா போயிடுச்சேன்னு தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு, மாப்புள...'' என, வருத்தப்பட்ட முருகேசனே தொடர்ந்தார்...
''ம்ம்ம்... அதுவும் சரி தான். மொத்தமா இவ்ளோ பணம் கொடுத்து, 10 காணியையும் வாங்குற அளவுக்கு, இந்த ஊரிலே எவனுக்கு திராணி இருக்கு...'' அந்த காலத்துல, நான் படிச்ச பள்ளிக்கூடத்துலே, வண்ட்ராயன்பட்டு வாத்தியார்ன்னு ஒருத்தர் இருந்தாரு...
''என்ன, ரெண்டு, மூணு வருஷம் தான் பள்ளிக்கூடம் போயிருப்பேன்... எனக்கு படிப்பு வரலைன்னு சொல்லி, எங்க அப்பாவ கூப்பிட்டு, 'உன் புள்ள, படிக்கவெல்லாம் லாயக்கில்ல, பேசாம கூட்டிட்டு போய் மாடு மேய்க்க விடுங்க'ன்னு அனுப்பிட்டாரு... அதுக்கு, எங்க அப்பா ஒண்ணும் பேசல, என்னைய கூட்டிட்டு நேரா வயலுக்கு வந்து, ஏர் கலப்பையை புடிக்க சொன்னாரு...
''ஏர் கலப்பையிலே, அவரு கையோட சேர்த்து, என் கையையும் புடிக்க வச்சு, 'ஓட்டுடா'ன்னு... ஏரோட்ட கத்துக் கொடுத்தாரு... 'படிப்பு வரலைன்னா என்னடா, படிச்சவனுக்கு சோறு போடுறது நாம தாண்டா... இந்த தொழில நல்லா கத்துக்க... 10 பேருக்கு நீ வேலை குடுக்கலாம்... 100 பேரோட பசியாத்தலாம்'ன்னு சொன்னாரு...
''நானும், வெள்ளாம பண்ணுறத ஆர்வத்தோட கத்துக்கிட்டேன்... எங்க அப்பா, நெல்லு அளக்கும்போது, லாபம், இரண்டு, மூணு, நாலுன்னு தான் சொல்லுவாரு... அத பார்த்து தான் எண்ணிக்கையை கத்துக்கிட்டேன்...
''எங்கம்மா மடியிலே படுத்தத விட, இந்த நிலத்துல தான் அதிகமா படுத்திருக்கேன்... ஒரு வெத, மண்ண பொளந்துகிட்டு, ரெண்டு இலைய வச்சுகிட்டு நிக்குமே, அப்பவே அது என்ன செடி, கொடி, மரம்ன்னு, 10 - 12 வயசுலேயே சொல்லிடுவேன்...
''அந்த காலத்துல தோட்டத்துல குழி வெட்டி, ஆண்டு முழுக்க, சாண எருவ போட்டு வெப்போம்... அது, அப்படியே மக்கி, எருவாயி, மண்புழு நெறைய இருக்கும்... வைகாசி மாசத்திலே, அத வண்டியிலே ஏத்தி, வயல்ல முட்டு முட்டா கொட்டிடுவோம்... ஆடியிலே, காவிரி தண்ணி திறந்து, வாய்க்கா வழியா வயலுக்கு சேட பாயும்... அப்போ, அந்த எருவ, வயல் முழுக்க கலக்கி விடுவோம்... அப்புறம், ஏர் ஓட்டி, கொத்தி, நாத்தங்கால் தயார் பண்ணி விதைப்போம்...
''தண்ணிக்குள்ள நெல்லு வெத விழும்போது, 'களுக் களுக்'குன்னு சத்தம் கேட்கும் பாரு... அத கேட்டா, உள்ளுக்குள்ளே அப்படி ஒரு சந்தோஷமா இருக்கும்... அப்புறம், 15 - 20 நாள் கழிச்சா, காத்தடிக்கும்போது, நாத்து அலை அலையா அசையும்... அதோட சேர்ந்து பசுமையான ஒரு வாசனையும் வரும்... அத அனுபவிச்சா தான் தெரியும்... அதுக்காகவே அடிக்கடி நாத்தங்கால்ல போய் உட்கார்ந்திடுவேன்...
''அப்புறம் நாத்து முத்தியதும், வயல உழுது, நொச்சி, நொனா, வேம்பு, பூவரசு மற்றும் ஆடாதொடான்னு எல்லா தழையையும் தோட்டத்திலிருந்து கழிச்சிட்டு வந்து, சேத்துல போட்டு மிதிப்போம்... அது தான் அந்த காலத்துல உரம், பூச்சி மருந்தெல்லாம்...
''அப்பவெல்லாம் வெளச்சல் நல்லா இருந்துச்சி... குறுவை, சம்பா, தாளடின்னு மூணு போகம் வெளயும்... கூடவே உளுந்து பயிறும் போடுவோம்... இப்ப, கண்ட கண்ட உரத்த போட்டு, நிலமும் கெட்டு போச்சு, தண்ணியும் நின்னு போச்சு... விவசாயமும் குறைஞ்சு போச்சு... விவசாய வேலை பார்த்தவனெல்லாம் சோத்துக் கூடையை துாக்கிட்டு, 'டவுனு'க்கு கட்டட வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க,'' என்று புலம்பினார், முருகேசன்.
''ஆமாம் மாமா... வந்ததிலிருந்தே திருமாறனை காணோமே... எங்க அவன்?'' என்றார், இளங்கோ.
''இங்க தான் எங்காவது போயிருப்பான்... வந்துடுவான்,'' என்றார், முருகேசன்.
''வாங்க மாமா... எப்ப வந்தீங்க... திடீர்ன்னு வந்திருக்கீங்க... இன்னிக்கு ஆபீஸ் போகலையா,'' என, எல்லா கேள்விகளையும் ஒரே நேரத்தில் கேட்டான், திருமாறன்.
''எல்லாம் உனக்காக தான் மச்சான்... உன்னை டாக்டராக்கி பார்க்கணும்ன்னு, மாமா ஆசைப்படுறாருல்ல... அது விஷயமா தான் வந்தேன்.''
''சும்மா கிண்டல் பண்ணாதீங்க மாமா... அதான், 'நீட்' தேர்வுல, 'பெயில்' ஆயிட்டேனே... அப்புறம் எப்படி?'' என்றான், திருமாறன்.
''அதனால என்ன... தனியார் கல்லுாரி இல்லியா?''
''இருக்கு மாமா... ஆனா, அந்த கல்லுாரியில் சேரும் அளவுக்கு நம்மகிட்ட பணம் எங்க இருக்கு?'' என்றான், திருமாறன்.
''அதனால தான் நிலத்தை விக்க போறோம்... அது விஷயமா தான் இங்க வந்தேன்... 10 காணியையும், 70 லட்சத்துக்கு விக்க போறோம்,'' என்றார், இளங்கோ.
''மாமா சொல்றதெல்லாம் உண்மையா... நிலத்தை விக்க போறீங்களா?'' அதிர்ச்சியில் உறைந்த திருமாறன், அப்பாவிடம் கேட்டான்.
''ஆமாம்பா உண்மை தான்... உன்னை டாக்டர் ஆக்க, எனக்கு வேற வழி தெரியல... உனக்கு கொடுத்த வாக்க காப்பாத்தணும்,'' என்றார், முருகேசன்.
''அப்பா... நான் சொல்றத கோபப்படாம கேளுங்க... டாக்டருக்கு படிக்கணும்ங்கிறது, என் விருப்பம் இல்ல... அது, உங்க ஆசை... உங்களுக்காக தான் டாக்டருக்கு படிக்க, நானும் ஒத்துக்கிட்டேன். 'சீட்' கெடச்சிருந்தாலும், ரொம்ப கஷ்டப்பட்டு தான் படிக்க வேண்டியிருக்கும்...
''ஏன்னா, பிளஸ் 2 படிக்கிற வரை, அரசு பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படிச்சேன்... டாக்டருக்கு படிக்கும்போது, எல்லாமே ஆங்கிலத்துலே இருக்கும்... அது, எனக்கு கஷ்டமாத் தான் இருக்கும்... பரம்பரை பரம்பரையா நமக்கு சோறு போட்ட நிலத்தோட மதிப்பு, ஒரு டாக்டர்ன்னா... அந்த டாக்டர் படிப்பு எனக்கு வேணாம்பா...
''கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிக்கிறத விட, இஷ்டப்பட்டு விவசாயத்த படிக்கிறேம்பா... 'பி.எஸ்சி., அக்ரி' படிப்புல சேர்த்து விடுங்க... நல்லா படிச்சு, நிச்சயமா அதுல ஏதாவது புதுசா சாதிச்சு காட்டுறேன்... ஏன்னா, விவசாயம் என் ரத்தத்துல இருக்குப்பா...
''மண், மரம், செடி, கொடி, காத்து, மழை, வெயில்ன்னு, எல்லாமே நான் ரசிச்சு, அனுபவிச்சது... மண்ணுக்குள்ளேயிருந்து விதை முளைச்சு வரும்போதே, அது எந்த ரகம்ன்னு என்னால சொல்ல முடியும்பா... நீங்க என்னை, நம்ம வயல்ல தான் இறங்க விடல... ஆனாலும், விவசாயத்த பார்த்து, கேட்டு, நிறைய தெரிஞ்சு வச்சிருக்கேன்...
''டாக்டருக்கு படிக்கிறதுக்கு திறமை, விருப்பம், வசதியுள்ள எத்தனையோ பேர் இருக்காங்க... ஆனால், விவசாயத்த விரும்பி படிக்கிறதுக்கு, என்ன மாதிரி ஒரு சிலர் தான் இருப்பாங்க... எல்லா விவசாயிகளும், தன் பிள்ளை வயல்ல கஷ்டப்படக் கூடாதுன்னு, பெரிய படிப்பெல்லாம் படிக்க வெச்சு, வெளியூருக்கு அனுப்பிட்டு, விவசாயம் அழியுதுன்னு புலம்பறதுல எந்த அர்த்தமும் இல்லப்பா...
''நம்ம முன்னோரெல்லாம் விவசாயம் தானே பார்த்தாங்க... அவங்க யாரும், தன் பிள்ளை, வெயிலிலும், மழையிலும், சேத்துலயும் கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கலியே... ஆனா, உங்க தலைமுறைய சேர்ந்த அப்பாங்க தான், தங்களோட பிள்ளைகளை படிக்க வைக்கிறதுல தான் கவுரவம் இருக்குன்னு, தப்பா நினைச்சு, விவசாயத்த சுருக்கிட்டீங்க...
''வள்ளுவர் என்ன சொல்லியிருக்கார்ன்னு தெரியுமா... 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்' என, குறிப்பிட்டுள்ளார். உண்மையிலேயே கவுரவமான தொழில், விவசாயம் தான். தொழுதுண்டு பின் செல்ல, நான் தயாரா இல்லை,'' என்று, 'பொல பொல'வென பொரிந்தான், திருமாறன்.
மகனின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்த, முருகேசனின் கண்கள் கலங்கின.
''தப்பு செய்ய பார்த்தேன்... பரம்பரை நிலத்தை விக்க பார்த்தேன்... நல்லவேளை, எனக்கு புத்தி சொல்லி, என் கண்ணை திறந்துட்ட,'' என்று மகனை கட்டிப்பிடித்தார்.
''உன் விருப்பம் போல, விவசாயத்தையே படி,'' என்று முதுகில் தட்டிக் கொடுத்தார், முருகேசன்.
''கண்டிப்பா நல்லா படிப்பேன்பா... குறைஞ்ச தண்ணீர்ல, இயற்கை விவசாயம் செய்யுறதுக்கு, நிச்சயமா ஆராய்ச்சி பண்ணுவேன்... நம்ம ஊர்ல இருக்குற எல்லா விவசாயிங்களையும் ஒருங்கிணைச்சு, ஒருங்கிணைந்த இயற்கை விவசாயத்த செஞ்சு, நம்ம ஊர, முன்மாதிரி கிராமமா மாத்திக் காட்டுவேன்...
''நோய் வந்த பிறகு தான், அதை தீர்க்க டாக்டர் வேணும்... மக்களுக்கு நோயே வராம இருக்க, நம்மால் நிச்சயம் முடியும்... ஏன்னா, உணவே மருந்து... அதை, ரசாயன உரம் இல்லாம, இயற்கை முறையிலே உற்பத்தி பண்ணுவோம்,'' என்றான், திருமாறன்.
மகனின் பேச்சை கேட்டு, உருகிய முருகேசன், சற்று ஆசுவாசப்படுத்தி, ''விவசாயம் செய்யுறதுன்னு முடிவெடுத்துட்ட... அப்புறம் எதுக்கு அத கல்லுாரியில போய் படிக்கணும்... உனக்கு எல்லாத்தையும் நான் சொல்லித் தரேன்,'' என்றார்.
''இல்லப்பா... ஒரு வீட்டை கொத்தனார் கட்டுறதுக்கும், 'இன்ஜினியர்' கட்டுறதுக்கும் வித்தியாசம் இருக்குப்பா... உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லணும்ன்னா, உங்க அனுபவத்துல, பூக்கள் எப்ப பூக்கும்ன்னு சொல்லுங்க,'' என்றான், திருமாறன்.
''வண்ணப் பூக்கள் பகல்லயும், அந்தியிலயும் பூக்கும்... வெள்ளை பூக்கள், ராத்திரியில பூக்கும்,'' என்றார்.
''ஏன் அப்படி பூக்குதுன்னு தெரியுமாப்பா?'' என்றான், திருமாறன்.
''அது இயற்கை... அத போய் ஏன்னு கேட்டா, என்னன்னு செல்றது?'' என்றார், முருகேசன்.
''ஏன்ங்கிற கேள்விக்கு பதில் சொல்லுற இடம் தான் கல்லுாரி. மகரந்த சேர்க்கைக்கு தேனீக்களையும், வண்ணத்து பூச்சிகளையும், தன்பால் இழுக்கறதுக்காக இயற்கையாவே அமைஞ்சதுப்பா,'' என்றான், திருமாறன்.
''மாப்புள... நிலத்தை விக்கிறதில்லைன்னு அவங்ககிட்ட சொல்லிடுங்க,'' எனக் கூறி, துண்டை உதறி தோளில் போட்டு, வயக்காட்டை நோக்கி கம்பீரமாக நடந்து சென்றார், முருகேசன்.

ஆர்.ஏ.ராஜேந்திரன்
வயது: 58, கல்வித் தகுதி: எம்.ஏ., தமிழ். பணி: தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளர். தற்போது வசிப்பது: கடலுார் துறைமுகம். கவிதை எழுதுவது, இவரது பொழுது போக்கு. கவிதை தொகுப்பு நுால் வெளியிட வேண்டும் என்பது லட்சியம். இவர் எழுதிய, முதல் சிறுகதை இது. இக்கதை, ஆறுதல் பரிசு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN from TAMILNADU - Bangalore,இந்தியா
04-டிச-201815:56:47 IST Report Abuse
INDIAN from TAMILNADU ஆர்.ஏ.ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றிகள் கோடி மிகவும் தேவையான அனைவரும் உணர வேண்டிய கதை .... கதை என்பதை விட கட்டி காக்க வேண்டிய பொக்கிஷம் ".......ஆனா, உங்க தலைமுறைய சேர்ந்த அப்பாங்க தான், தங்களோட பிள்ளைகளை படிக்க வைக்கிறதுல தான் கவுரவம் இருக்குன்னு, தப்பா நினைச்சு, விவசாயத்த சுருக்கிட்டீங்க" - இந்த ஒரு வாக்கியம் போதும் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X