சரணாலயம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2018
00:00

சரவணனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தினமும் நடப்பது தான். மனைவி ரம்யாவின் பிடிவாதம், அவனுக்கு நன்றாக தெரிந்தது தான். சில விஷயங்களில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்க முடியாது. இதை அவளிடம் சொன்னால், 'இதெல்லாம், முடிவு எடுப்பதை தள்ளிப்போடும் தந்திரம்...' என்பாள்.
இன்று பெரும்பாலான வீடுகளில் நடப்பது தான். சரவணனின், அம்மா - அப்பாவை, முதியோர் இல்லத்திற்கு அனுப்ப வேண்டும்; அதுவும், அவள் பார்த்து வைத்துள்ள, மிக குறைந்த கட்டணம் வசூலிக்கும் முதியோர் இல்லத்தில், உடனடியாக சேர்க்க வேண்டும்.
உடன் பணி புரியும் தோழி அம்சாவின், மாமனார் - மாமியார் தங்க வைக்கப் பட்டிருந்த அதே இல்லம் தான். இந்த விஷயத்தில், அம்சா தான் அவளுக்கு குரு, வழிகாட்டி எல்லாம். தினமும் அவள் இதுபற்றி கேட்பதால், ரம்யாவுக்கு, இது, மானப் பிரச்னையாகி விட்டது.
தாம்பரம் அடுத்த பெருங்களத்துாரில், பள்ளி, மருத்துவமனை மற்றும் கடைகள் என, அனைத்து வசதிகளும் மிக அருகில் இருந்த, மூன்று படுக்கையறை உடைய, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை, பதிவு செய்திருந்தான், சரவணன். அவன் பெற்றோர், அவனுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்பியதால் தான், மூன்று படுக்கையறை குடியிருப்பு.
நகர் நடுவில் வீடு வாங்குவதென்றால், கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும். புறநகரில், குறைந்த விலையில் வாங்கி, கார், ஸ்கூட்டர் பயன்படுத்தி சமாளிக்கலாம். இரண்டு பேர் அலுவலகத்திலும், பெட்ரோலுக்கான உதவி தொகை உண்டு. குழந்தைகள் ரவி, வித்யாவுக்கு பள்ளிக்கூடம் மிக அருகில் இருந்தது; சேர்க்கை அனுமதிக்கும் ஏற்பாடு செய்தாகி விட்டது.
சரவணனுக்கு, ஒரு அண்ணன், ஒரு தங்கை. அண்ணன் ராஜு, துபாய்வாசி. குடும்பத்தோடு அங்கேயே குடியேறி விட்டான். அம்மா - அப்பா, அங்கு செல்ல வாய்ப்பில்லை. வெயில் அதிகம், கோவில், குளம் கிடையாது, இன்ன பிற காரணங்கள்.
தங்கை லட்சுமியை, பணக்கார இடத்தில் கொடுத்திருப்பதால், அடிக்கடி போய் பார்க்காமல் இருப்பது தான் கவுரவம். படிப்பு, திருமண செலவுகளை சரவணன் பெற்றோர் செய்ததால், தங்கைக்கும் பெற்றோரை பராமரிக்கும் பொறுப்பு உண்டு என்பது, ரம்யாவின் (பிடி)வாதம்.
அண்ணியின் கைங்கர்யத்தால், ரம்யாவின் பெற்றோர், முதியோர் இல்லத்தில் இருப்பது, அவள் வாதத்திற்கு வலு சேர்த்தது.
சரவணன் அணு குமுறையே வேறு. எந்த விஷயத்தையும் முழுமையாக பார்க்க வேண்டும். ஒரு சில நிகழ்வுகளின் அடிப்படையில், முடிவுகள் எடுக்கப்படக் கூடாது. அப்பாவுக்கு, குறைந்த ஓய்வூதிய தொகை. முதியோர் இல்லத்துக்கு போவதென்றால், வைப்பு தொகை மற்றும் மாத கட்டணத்தை, சரவணனோ, அவன் அண்ணனோ பொறுப்பேற்க வேண்டும். பெற்றோர் தன்னோடு இருக்கும்போது, ராஜுவிடமிருந்து பணம் எதிர்பார்ப்பது, அவனுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகள் இருவரும், தாத்தா - பாட்டி செல்லங்கள்.
முடிந்த வரை அவர்கள் உதவியாக இருந்தாலும், ரம்யாவுக்கு ஏனோ பிடிக்கவில்லை. சுதந்திரமாக, தன் குடும்பம் மட்டும் என்கிற வட்டத்திலிருந்து வெளியே வர விரும்பவில்லை. சினிமா, ஓட்டல் என, இஷ்டப்படி போக முடியாது. மருந்து, மாத்திரை, மருத்துவ பரிசோதனை என, கூடுதல் சுமைகளுக்காக தவிர்த்தாள்.
எவ்வளவு கஷ்டப்பட்டு, குடும்பத்தை முன்னேற்றினார், அப்பா என்பதை மறக்கவில்லை சரவணன். மிக ஏழ்மை நிலையில் இருந்தாலும், சிக்கனமாக குடும்பம் நடத்தி, மகன்கள் உயர் படிப்பும், அதன் மூலம் நல்ல வேலை கிடைப்பதை உறுதி செய்தவர். தங்கை லட்சுமிக்கும், பட்டப்படிப்பும், நல்ல குடும்பத்தில் வாழ்க்கையும் கிடைத்தது.
சரவணனின் கவனிப்பும், குழந்தைகளின் அன்பும், ரம்யாவின் மறைமுக பேச்சுகளை, பொருட்படுத்த விடாமல் செய்தது. குழந்தைகள் வளர்ப்பில், அவர்கள் உதவியால் தான் ரம்யா, விடுமுறை அதிகமாக எடுக்காமல் பணியில் உயர முடிந்தது. 'அது, அவர்கள் கடமைதானே...' என்று, முதியோர் இல்லம் அனுப்பும் முடிவால், சமாதானம் சொல்லிக் கொள்வாள். குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் அதிகமாக கொடுத்து, குண்டாக்கி விட்டனர் என்ற குற்றச்சாட்டு வேறு.
குடும்பத்தில் எந்த குழப்பமும் எழக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், அவன் பெற்றோர், முதியோர் இல்லம் செல்வதாக, சரவணனிடம் கூறி விட்டனர்.
முதியோர் இல்லம் அனுப்புவது தவிர, வேறு வழி உண்டா என, சரவணன் யோசித்தான். பெற்றோரிடம் பேசும்போது, வேறு சில ஏக்கங்களும் தெரிய வந்தது. அவற்றுக்கும் தீர்வு காண வேண்டும்.
'பெருங்களத்துார் குடியிருப்பு கிரஹப்பிரவேசம் வரை, பொறுமையாக இருக்க வேண்டும்...' என்று, ரம்யாவிடம் உறுதியாக கூறி விட்டான், சரவணன். மனதில் சில திட்டங்கள் உருப்பெற்றன. அதைப் பற்றி, ரம்யாவிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.
செயல் திட்டத்தின் முதல் படியாக, சென்னை சுற்றுபுறத்தில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு சென்று, வைப்புத் தொகை, மாத கட்டணம், மருத்துவம், மற்ற வசதிகள் குறித்து, தகவல் சேகரித்தான். சில இல்லங்களில், அங்கிருப்பவர்களிடம் பேச அனுமதித்தனர்.
வசதிகள், செலவு பற்றி யாரும் குறை சொல்லவில்லை. அவர்களின் ஏக்கம், உற்றார் - உறவினர்களை, குறிப்பாக, பேரன் - பேத்திகளை பார்ப்பதே அரிது. வெளிநாடுகளில் இருக்கும் பேரன் - பேத்திகளிடம் நெருக்கத்தை உணர முடியவில்லை. வயது முதிர்ந்த பெரியவர்கள் உடன் இருந்தாலும், வெறுமை, தாபம், ஆதங்கம் இருந்தது.
அடுத்த நடவடிக்கையாக, வெளியூர் பயணம் சென்று, பெற்றோரின் உடன்பிறப்புகள், அவர்களின் மகன் - மகள்கள், ரம்யாவின் பெற்றோர், அண்ணன், இன்னும் சில உறவுகளை சந்தித்தான், சரவணன். பெரும்பாலான வயதானோர், முதியோர் இல்லங்களில் இருந்தது, வருத்தத்தை கொடுத்தது.
மகன்களுடன் இருக்கும் சில பெற்றோர், 'முதியோர் இல்லங்களுக்கு போனால் பரவாயில்லை' என்று குறிப்பிட்டனர்; வீடுகளில் அவ்வளவு கசப்பு.
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில், சரவணனை வீட்டில் பார்க்கவே முடியாது. 'அலுவலக வேலையாக வெளியூர் பயணம்' என்று, ரம்யாவிடம் சொல்லி கிளம்பி விடுவான். பல பேரிடம் பேசினாலும், அவனுக்கு தேவையான தகவல்களை, மிக நாசுக்காக சேகரித்தான்; அண்ணன் ராஜுவுடன், பலமுறை பேசினான்.
ராஜு மற்றும் ரம்யாவின் அண்ணன், இன்னும் சிலர், சில விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளும்படி கூறினர். அவர்களின் பிரச்னைகளுக்கும், ஒரு தீர்வு கிடைக்கலாம் என்ற எண்ணம் தான்.
பெரும்பாலான பெற்றோர், முழு சம்மதத்துடன் முதியோர் இல்லங்களுக்கு செல்லவில்லை. சிலர் தவிர்க்க முடியாமலும், குறிப்பாக, வெளிநாடுகளில் மகன்கள் இருக்கும்போது, செலவை பார்த்தால், அதிக வித்தியாசம் இல்லாமல் இருந்தது. அதிக வைப்பு தொகை, பல லட்சங்கள், வட்டி இல்லாமல் செலவு... தவிர, பாதுகாப்பு மட்டுமே, 'ப்ளஸ் பாயின்ட்!' என, பல விஷயங்கள் இருப்பது, சரவணனுக்கு தெரிந்தது.
பெருங்களத்துார் குடியிருப்பு வளாகத்தில், அனைத்து வசதிகளும் உண்டு. சிறுவர், வயதானவர்களுக்காக பூங்கா, விளையாட இடம், மருத்துவ வசதிகள், சூப்பர் மார்க்கெட். அருகிலேயே மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள். மேலும், 20 லட்ச ரூபாய்க்கு, சிறிய வசதியான குடியிருப்புகளும்.
குடியிருப்பில் உள் வேலைகள் நடக்கும்போது, குழந்தைகளை, சரவணன் பெற்றோர் பார்த்துக் கொண்டதால், மேற்பார்வை பார்ப்பது எளிதாக இருந்தது.
கிரஹப்பிரவேச நன்னாள் வந்தது. சில மாதங்களாக, சரவணன் சந்தித்த உறவினர்கள், முதியோர் உட்பட அனைவரும் வந்திருந்தனர். சுப நிகழ்ச்சி, இனிதாக நடந்தது.
விடை பெறும் முன், 'மீதி நாலு கிரஹப்பிரவேசம், நாளை காலை, 7:00 மணிக்கு ஆரம்பம். எல்லாரும் தயாரா வந்துடுங்கோ...' என்று புரோகிதர் சொன்னதும், சரவணன், இன்னும் சில பேர் தவிர, மற்றவர்கள் ஆச்சரியமும், குழப்பமும் அடைந்தனர். 'இன்னும் நாலு வீடா... எப்படி, எங்கே?' என, வினவினர்.
''சாப்பாடு முடிந்ததும் பேசலாமே...'' சரவணன் முகத்தில், மர்ம புன்னகை.
வடை, பாயசத்துடன் விருந்து முடித்து, அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர். தன் முயற்சிகளை பற்றி சுருக்கமாக சொன்ன அவன், புரிதல்களை பற்றியும் விளக்கினான்...
குறிப்பாக, வயதானவர்களின் ஏக்கங்கள், பேரன் - பேத்திகளை பார்க்க முடியாதது, சொந்தங்களுடன் பழைய நினைவுகளில் திளைப்பது, புதிய நிகழ்வுகளை பகிர முடியாதது போன்றவை, பற்றியும் விளக்கினான்.
யாருமே நினைக்காத கோணம் அது. அவன் குரல், பல இடங்களில் தழுதழுத்தது.
''முதுமை தவிர்க்க முடியாத, நாம் சந்திக்க வேண்டியது. எதிர்காலத்தில் நமக்கும் ஒரு முன்னேற்பாடு வேண்டும். முத்தாய்ப்பாக, நம் பெற்றோர், நமக்கு செய்ததை லட்சங்களில் மதிப்பிட முடியாது. இப்போது, அவர்களுக்கு செய்வது, ஒரு அடையாள மரியாதையே.
''அதே குடியிருப்பு திட்டத்தில், நான்கு சிறிய குடியிருப்புகள் வாங்கி உள்ளோம். ராஜு, இரண்டு. 'அது, நல்ல முதலீடு...' என்றான். மேலும், இதுவரை பெற்றோருக்கு ஒன்றும் செய்யாததும் ஒரு காரணம். மைத்துனர், ஒன்றுவிட்ட சகோதரர்கள், இரண்டு. எல்லா வீடுகளிலும், எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
''குறிப்பாக, வயதானவர்களுக்கு உதவவும், பொது சமையலுக்கு பெண்மணிகள், மற்ற வேலைகளுக்கு பணியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என் பெற்றோர், ரம்யாவின் பெற்றோர், இவர்களின் உடன் பிறப்புகளுடன், மொத்தம் எட்டு தம்பதியர் தங்குவர். செலவுகளை பகிர, முழு மனதுடன் சம்பந்தப்பட்டோர் சம்மதித்துள்ளனர். அந்த நான்கு குடியிருப்பில் தான், நாளை கிரஹப்பிரவேசம்...'' என்றான்.
ஒரு கல்லில் பல மாங்காய், அடித்து விட்டான், சரவணன்.
'இப்படியும் ஒரு தீர்வு, அனைவரும் சந்தோஷப்படும்படி, யாருக்கும் எந்த சங்கடமும் இல்லாமல் இருப்பது பற்றி, இதுவரை யாரும் சிந்திக்கவே இல்லையே...' என, அனைவரும் கைதட்டி வரவேற்றனர். சிலர், கண்களில் கண்ணீர். யதார்த்தங்கள் புரிந்து கொள்ளப்பட்டன.
மறுநாள், நான்கு கிரஹப்பிரவேசமும் நல்லபடியாக நடந்தது.
இப்போது -
அலுவலகம் செல்லும் சரவணன் - ரம்யா போன்றோர், குழந்தைகள் பள்ளியிலிருந்து பத்திரமாக திரும்பினரா, ஏதாவது சாப்பிட்டனரா என்று கவலைப்பட தேவையில்லை. பல தாத்தா - பாட்டிகள் பொறுப்பாக கவனிக்கின்றனர். புராண, நீதி கதைகள் கேட்டு, குழந்தைகள் மகிழ்கின்றனர்.
கடவுள் துதிகள் கற்றுக் கொண்டனர். அவர்கள் மேற்பார்வையில் விளையாடினர். 'பிட்ஸா, பர்கர்' மோகத்திலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான சத்து மாவு உருண்டை, கடலை உருண்டை, பலவிதமான அப்பம், முறுக்கு மற்றும் சீடை என, விதவிதமான நொறுக்கு தீனிகளை ரசித்து உண்டனர்; உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படவில்லை.
அப்படி ஏதாவது காய்ச்சல், வயிற்று வலி வந்தால், உடனே பாட்டி வைத்தியம்; தேவைப்பட்டால், ஆங்கில வைத்தியம். அந்த, குடியிருப்பு வளாகத்தில் இருந்த மற்ற இளம் தம்பதியர் குழந்தைகளும் பயன் பெற்றனர் என்பது, கூடுதல் சிறப்பு.
நடை பயிற்சி மற்றும் முடிந்தளவு உடற்பயிற்சி செய்து, உடல்நலத்தை பேணினர், பெரியவர்கள். வீட்டுக்கு தேவையான உதவிகளும் கிடைத்தன. நெருங்கிய சுற்றம், பேரன் - பேத்திகளுடன் வாழ்வது, நிம்மதியையும், சந்தோஷத்தையும் வாரி வழங்கியது.
ரம்யா போன்றவர்கள், முதியோர்களை பாரமாக பார்க்காமல், அவர்களால் கிடைக்கும் உதவிகளை உணர்ந்து, அணுகுமுறையை மாற்றிக் கொண்டனர்; மரியாதையும் கொடுத்தனர். எங்கும், என்றும் மகிழ்ச்சி தான்.
சரவணனின் முயற்சி, வயதானவர்களுக்கு ஒரு சரணாலயம் உருவாக்கித் தந்தது. அதை அவர்கள், 'சர(வ)ணாலயம்' என்று அன்பாக, செல்லமாக அழைத்தனர் என்று, சொல்லவும் வேண்டுமா!

எஸ்.கோபாலகிருஷ்ணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
02-டிச-201813:42:07 IST Report Abuse
Girija இப்பேற்பட்ட கிராதிகள் இப்போது என்ன செய்வார்கள் தெரியுமா? ஏங்க இந்த பக்கத்துல இந்த மாதிரி வீடுகளுக்கு வாடகை அதிகம் கிடைக்குதாம், பேசாம உங்க அப்பா அம்மாவை ஆசிரமத்தில் சேர்த்துட்டு அந்த வீட்டை வாடகைக்கு விடலாம்ங்க, வாடகை பணத்துல நம்ப இ எம் ஐ யை சுலபமா கட்டிடலாம் இப்போ எல்லாம் தனியா இருக்கிற வயசானவங்களை குறிவைச்சுத்தான் கொள்ளை நடக்குதாம் என்று சொல்வார்கள்.
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
03-டிச-201812:28:12 IST Report Abuse
Manianஅதை திருப்பி, எனக்கு வேலை போச்சுன்னா அப்படி செய்யலாம். ஆனா வர்ற வாடகை பணத்திலேதான் குடும்பம் நடத்தணும், உங்கப்பாவிடம் வரத்தடிச்சினை கேக்கவேண்டியிருக்குமே என்று ஒரு குண்டை போடலாமே ரம்யா அடங்கி விடுவாள். ஆனால் சரவணனுக்கு தைரியம் வருமா?...
Rate this:
Share this comment
Cancel
Siva -  ( Posted via: Dinamalar Android App )
02-டிச-201809:18:05 IST Report Abuse
Siva But on seeing this amount of cost for the new house, the lady should already accepted to make them stay with them
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
03-டிச-201812:30:54 IST Report Abuse
Manianஅயோ,அவோலோ புத்தி இருந்தா ரம்யா சரவணன் போன்ற ஆளையா கெட்டிக்கிடுவா? கோடிஸ்சுவரநை கட்டிகிட்டு, வேலைகாரர்கள் மூலம் மாமியா -மாமனாரை கவனிச்சுக்கிடுவாளே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X