பறக்கும் கம்பளம்! (10)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:00

சென்றவாரம்: அக்னி அரக்கனை எப்படி கொல்வது என்பதை குறித்து சிந்தித்தான் கீர்த்தி. அப்போது இவற்றை ப்றறி, ஏதேனும் நுால்களில் எழுதப்பட்டிருக்கிறதா என ஆராய்ந்து பார்க்க, தங்கள் மூதாதையரின் நுால் நிலையத்திற்கு வந்தான். இனி -


பல மூதாதையர்களின் நுால் நிலையம் அது! இன்று, மிகச் சிறந்த அறிவாளியாக கீர்த்தி விளங்குகிறான் என்றால், அந்த நுால் நிலையம் தான் காரணம்.
அதில், பல, அபூர்வ நுால்கள் இருந்தன. அநேகமாக, அதிலுள்ள எல்லாவற்றையுமே அவன் படித்திருந்தான். மின்னல் வெட்டு போல, ஒரு எண்ணம் அவன் சிந்தையில் தோன்றியது.
அக்கினி அரக்கனை வெற்றி கொள்ள, அங்குள்ள புத்தகங்களில், ஏதாவது வழி வகை இருக்குமென்ற நம்பிக்கை ஏற்பட்டது.
நெருப்பு அரக்கனுக்கு எதிரி, பனி அரக்கன். அக்கினியில் வளர்ந்து வாழும் ஒரு மிருகம் இருக்கும் போது, நீரிலோ, பனியிலோ பிறந்து வளர்ந்து, வல்லமை பெற்ற, ஒரு மிருகம் இருக்க கூடாதா என்ன... 'பளிச்' என்று உதயமான, பனி அரக்கனின் நினைவு, ஏதோ ஒரு புத்தகத்தில், அப்படிப்பட்ட, குளிர் அரக்கனைப் பற்றி படித்தது, ஞாபகத்துக்கு வந்தது.
அந்தப் புத்தகம், அது எங்கே இருக்கும், இத்தனை நுால்களில், அதை தேடி, கண்டுபிடிக்க முயற்சிப்பது முட்டாள் தனமில்லையா...
கீர்த்தி என்ன முட்டாளா... பனி அரக்கன் என்ற ஒன்று இருக்குமானால், அதைக் காண்பதற்கான சாதனம் அவனிடம் இருக்கும் போது, புத்தகங்களை தேடுவது வீணல்லவா...
அடுத்த வினாடி, அவன் மந்திரப் பொருட்கள் குவிந்து கிடக்கும் அறைக்குள் இருந்தான். அங்கு, மேஜை மீது இருந்தது, நினைக்கும் காட்சியைக் காட்டும், 'பளிங்குக் கண்ணாடி உருண்டை!' அதன் முன் நின்ற கீர்த்தி, 'பனி அரக்கனை காண வேண்டும்' என்று நினைத்து, அதை வலது கையால், மூன்று முறை சுழற்றி, விரல்களால் சொடுக்கினான்.
அடுத்த வினாடி...
அந்தப் பளிங்குக் கண்ணாடி உருண்டையில், பல வண்ணக் கலவைகள் வேகமாகச் சுழன்றன. வானம், காடு, மலை, நதி, வயல், நாடு, நகரம் இப்படி, பல விதமான காட்சிகள் சுழன்று உறை பனியால் மூடிய ஒரு பிரதேசம் வந்தது.
எங்கும் ஒரே வெண்மை! அதன் நடுவில், நெடிதுயர்ந்து நின்றது ஒரு பெரிய மலை. மலையா அது... அசைகிறதே... அதென்ன... மலை தன்னைக் குலுக்கிக் கொள்ளுகிறதா... பனிப் பாறைகள், பாளம் பாளமாகப் பெயர்ந்து விழுகின்றனவே... மலைக்கு, இரண்டு கைகள், ஒரு தலை, இது மலையல்ல... மலை போன்ற கொடிய மிருகம். அதன் வாயில், பனிக்கட்டியில் செதுக்கியது போல், ஈட்டி ஈட்டியாக வெள்ளை வெளேர் என்ற பற்கள்.
சூரிய ஒளியில் அவை எப்படி ஜொலிக்கின்றன; ஒரு பெரிய பனிமலை நகருவது போல் நகர்ந்தது மிருகம்.
நீலக் கண்கள். இதைப் பார்த்தாலே, குளிரினால், உள்ளமும், உடலும் உறைந்து போகின்றனவே; கீர்த்தியின் பற்கள், அவன் அனுமதியில்லாமலே, 'தட... தட...' வென்று, நடுங்கி தாளிட்டன.
'அக்கினி அரக்கனுக்கு ஏற்ற வல்லமை பெற்ற விரோதி தான் இந்தப் பனி அரக்கன்' என்ற மகிழ்ச்சியால், குழந்தையைப் போல, குதித்தான்.
'அக்கினி அரக்கனை அழிப்பதற்கான சூட்சுமத்தைக் கண்டு விட்டேன்; குந்தளவல்லியின் அந்த கரிய, பெரிய விழிகள் வியப்பிலும், மகிழ்ச்சியிலும் விரியும் அழகை பார்த்து விரைவிலேயே ஆனந்தம் படலாம்' என்று, தனக்கு தானே கூறிய கீர்த்தி, உருவத்தை மறைக்கும், மந்திர குல்லாயை அணிந்துக் கொண்டான்.
மந்திர காலணிகளையும் அணிந்து மந்திர வாளை இடையில் கட்டியபடி அக்கினி அரக்கனைச் சந்திக்க கிளம்பி விட்டான் கீர்த்தி வர்மன்.
'அக்கினி அரக்கன் வாழும் எரிமலைக்கு என்னை அழைத்துச் செல்...' என்று கூறி, தரையில், 'டக்... டக்... டக்...' என்று, மூன்று முறை தட்டினான். அடுத்த வினாடி, பறக்கும் பாதரட்சைகள், கீர்த்தியைக் சுமந்தபடி, வானில் பறந்தது.
தாங்க முடியாத தகிப்பு! பொறுக்க முடியாத புழுக்கம்...எரிமலையின் உக்கிரமான அனல் காற்று, உடம்பை தாக்காமல் இருக்குமா... எரிமலைக்கு அருகில், ஒரு குன்றின் மீது கீர்த்தியை கொண்டு போய் இறக்கியது அந்த காலணி.
அக்கினி அரக்கன் நீச்சலடிக்கும் எரிமலைக் குளம், 'தக... தக...'க்கும் கற்களைப் பந்தாடிக் கொண்டிருந்தது; அதிலிருந்து பறந்து வந்த சில கற்கள், மறைந்திருந்த கீர்த்தியின் மீதும் விழுந்தன.
'தள... தள...'க்கும் நெருப்புக் குழம்புக்குள், முக்குளித்து எழுந்த அக்கினி அரக்கனின், மூக்கு துவாரத்திலிருந்து, புகையும், தீ ஜ்வாலையும், நீராவியும் பீச்சியடித்தன.
வைர நெஞ்சம் கொண்ட வீரனையும், கதி கலங்க வைக்கும் காட்சியாக இருந்தது. அதைக் கொல்வதற்காக வந்த, எத்தனையோ பேர்களை தன் மூச்சுக் காற்றால் கருக்கி சாம்பலாக்கியிருந்தது அந்த மிருகம்.
எரிமலைக் குளத்தை அடுத்திருந்த மலைச்சுவர்களில், இப்படிக் கருகியவர்களின் சாம்பலும், எலும்பும் குவிந்து கிடந்தன.
உண்மையிலேயே என் சகோதரர்கள், இந்த மிருகத்தை சந்திக்க வந்திருப்பார்களேயானால், 'இந்த எலும்புகளில், என் சகோதரர்களின் எலும்பும் கூட இருக்கலாம்' என்று எண்ணமிட்ட படியே பார்த்தான் கீர்த்தி.
அக்கினி அரக்கனோ ஊர்க்குளத்தில், உல்லாசமாக நீந்தி மகிழும் வாத்தைப் போல, எரிமலைக் குழம்பில் மிதந்து, மகிழ்ந்துக் கொண்டிருந்தது!
'ஹே... ஹேய்...' என்று குரல் கொடுத்தான் கீர்த்தி. நெருப்புக் குழம்பிலிருந்து, தலையை உயர்த்தி உற்றுக் கேட்டது, அந்த மிருகம். அதன் கொம்புகள், 'தக... தக...'வென்று ஜொலித்தன; கண்களிலிருந்து, நெருப்புப் பொறி பீச்சியடித்தது.
''யாராது... என்னை இத்தனை துணிவுடன் கூப்பிட்டது...'' கடுங்கோபத்துடன் கர்ஜித்த போது, அதன் வாயிலிருந்து தீப்பந்தமாக, 'குப்... குப்...' என்று நெருப்பு, வழிந்தது.
''நான் தான்...'' என்றான் கீர்த்தி.
இப்படி மொட்டையாக அவன் பேசியது, இதுதான் முதல் முறை.
''நான் தான் என்றால் யார்! இத்தனை துணிச்சலுள்ள, அந்த நரனை காண ஆசைப்படுகிறேன்...'' என்றபடி, அந்த திரவமான நெருப்பிலிருந்து, இன்னும் நிமிர்ந்து, உயர்ந்து, சுற்று முற்றும் பார்த்தது; அப்போது, அதற்கு நீண்ட பரந்த இறக்கைகள், இரண்டு இருப்பதைக் கண்டான் கீர்த்தி.
'எத்தனை பெரிய பயங்கரமான இறக்கைகள்; அப்படியானால், இதனால், பறக்கவும் முடியும் போல் இருக்கிறதே...' என்று நினைத்த போது, அவன் உடல், ஒரு கணம் நடுங்கி அடங்கிற்று.
அதே சமயத்தில், குரல் வந்த திசையைக் குறி வைத்து, அந்த அக்கினி அரக்கன், கீர்த்தியின் அருகே பறந்து வந்து, அமர்ந்தது. அதனால், கீர்த்தியைப் பார்க்க முடியவில்லை. ஒருவேளை பார்த்திருந்தால், தன் அகன்ற வாயை ஒருமுறை மூடி திறந்து நெருப்பை உமிழ்ந்து, அவனைச் சாம்பலாக்கியிருக்கும்.
உருவை மறைக்கும் குல்லா அணிந்திருந்தது கீர்த்திக்கு நல்லதாகப் போயிற்று. சற்றும் எதிர்பாராதபடி, அது பறந்து வந்து, அருகே அமர்ந்ததும், தவித்துப் போனாலும், அடுத்த வினாடியே, 'தட... தட...'வென்று மலையடி வாரத்தின் அருகில் போய் நின்று, மறுபடியும், ''ஹேய்...'' என்று குரல் கொடுத்தான்.
''என்ன விஷயம்... வெறுமனே, 'ஹேய்... ஹேய்...' என்று ஏன், அநாகரிகமாகக் கத்துற... கவுரவமுள்ள மனிதனாக, கவுரவமான முறையில் சொல்லு. நீ யார், எங்கிருக்கிறாய், எதற்காக வந்திருக்கிறாய்... பதில் சொல்லு...'' என்றது மிருகம்.
''நான், கவுரவமான முறையில் பதில் அளிக்கிறேன். நீயும் நாணயமாக, உன் இருப்பிடமான எரிமலைக் குழம்புள்ள குழிக்குப் போ...'' என்றான் கீர்த்தி.
அப்படியே, அது, தன் இருப்பிடத்துக்குப் போயிற்று. போகும் போது, அதன் நெருப்பு இறக்கைகளிலிருந்து கிளம்பிய ஜுவாலையின் உக்கிரம் தாங்காமல், வானத்தில் வெகு உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த, ஒரு பெரிய கழுகு, கருகி கரிக்கட்டியாக, 'க்ளிங்... க்ளாங்...' என்று கீர்த்தியின் அருகில் விழுந்தது.
நெருப்புக் குளத்தில் போய் அது விழுந்து, அதைக் கலக்கிய போது, அருகிலிருந்த மலைகள் அதிர்ந்தன. கீர்த்தி, அதன் மேலாகப் பறந்தபடி, ''பனி அரக்கனிடமிருந்து உனக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறேன்; அவரோடு போரிட திராணியில்லாத பயந்தாங்குளி நீ...'' என்றான் உரத்த குரலில்.
''என்னோடு போரிடவா... நான் பயப்படுகிறேனாமா... யார் அந்தப் பனி அரக்கன்... எங்கே இருக்கிறான் அந்த படா அரக்கன்...'' என்ற போது, அந்த எரிமலைக் குளமே, கொதித்துக் கொப்பளித்தது. 'திகு... திகு...' வென்று, தீ ஜுவாலையாகக் கொழுந்து விட்டு எரிந்தது.
''எவனாக இருந்தாலும் சரி, எங்கிருந்தாலும் சரி... அவனோடு போரிட்டு அவனைச் சாம்பலாக்குவேன்; வரச் சொல், உன் பனி அரக்கனை; பஸ்மமாக்கி விடுகிறேன்; என் ஒரு மூச்சிலயே...'' என்றது அக்கினி அரக்கன்.
''சவாலை நீ ஏற்று கொண்டதாக, இப்போதே பனி அரக்கனிடம் போய் சொல்லி, அழைத்து வருகிறேன்...'' என்று கூறி, பனி அரக்கனைச் சந்திக்க, கிளம்பினான் கீர்த்தி.
'பனியை உசுப்பி, கோபமடைய செய்தாக வேண்டும். பின், அக்கினியுடன் மோதுவதை, கண்டு ரசிக்க வேண்டும்' இதை நினைத்த போது, கீர்த்திக்கு சிரிப்பு வந்தது.
- தொடரும்...

- வாண்டுமாமா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X