கற்றுக் கொடுப்பதும், விட்டுக் கொடுப்பதும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2019
00:00

அன்று அலுவலகத்தில், தனக்கு அந்த அதிர்ச்சியான சம்பவம் நடக்குமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, சுரேஷ்.காலை, 11:00 மணிக்கு, 'அட்டெண்டர்' வந்து, ''முதலாளி உங்களை கூப்பிடுறார்,'' என்று சொன்னதும், சுரேஷுக்கு பதட்டம்.எழுந்து, சட்டையை இழுத்து விட்டு, கேசத்தை சரி செய்து, தொண்டையை செருமி, அவர் அறைக்கு சென்றான்.''வாங்க சுரேஷ்... உட்காருங்க,'' என்றார், கண்டிப்புக்கு பெயர் பெற்ற முதலாளி, பிரம்மானந்தம்.அமர்ந்தான். என்ன சொல்ல போகிறாரோ என்ற பதட்டம்.''உங்க வேலை பிடிச்சிருக்கு. வேலை நுணுக்கங்களை இத்தனை சீக்கிரம் கற்றதோடு, ஒழுங்கா செய்யறீங்க... சுந்தரத்தின் மாணவர், சொல்லவா வேண்டும்... பாராட்டுகள்... உங்களுக்கு புதிய பொறுப்புகள் கொடுத்து, கவுரவிக்க தீர்மானிச்சிருக்கேன்.''நாளையிலிருந்து சுந்தரத்தின் இருக்கையில் உட்காருறீங்க... 'மேனேஜர்' பதவி... 5,000 ரூபாய் கூடுதல் சம்பளம்... சந்தோஷம்தானே,'' என்று கூறினார். திகைத்தான், சுரேஷ்.''சார்... அப்படின்னா சுந்தரம் சார்,'' என்று தயக்கமாக கேட்டான்.''வேலையை விட்டு அனுப்பறோம்,'' என்று அதிரடியாக சொன்னார், பிரம்மானந்தம். ''அவர், நல்லாதானே வேலை பார்க்கிறார்... அவரை ஏன்,'' என்றான், சுரேஷ்.''விபரமா சொன்னா தான், அவர் வேலையை நீங்க செய்வீங்களோ... இது, நிர்வாகத்தின் தீர்மானம்... விசுவாசத்தை, நிறுவனத்துக்கு காட்டுங்க... தனி மனித துதி இங்கே கூடாது,'' என்று கடுமையாக சொன்னவர், ''ஒருநாள், 'டைம்' எடுத்துகிட்டு, நல்லா யோசிச்சு, உங்க பதிலை சொன்னா போதும்,'' என்று, சொல்லி, அனுப்பினார்.சோர்வுடன் வெளியில் வந்தான். சுந்தரம் சாரை பார்த்தான். அவர், தன் வேலையில் கவனமாக இருப்பதை கண்டு, ஏதும் பேசாமல் தன் இடத்துக்கு வந்தான். வேலையே ஓடவில்லை. சாப்பாடு நேரத்தில் தான் பேச முடிந்தது. முதலாளி தன்னை கூப்பிட்டு சொன்னதை, சங்கடத்துடன் அவருக்கு தெரிவித்தான், சுரேஷ்.''நல்ல வாய்ப்பு,'' என்றார், சுந்தரம்.அலறினான், சுரேஷ்.''தயவுசெய்து அப்படி சொல்லாதீங்க சார்... கோடி கொடுத்தாலும், உங்களுக்கு எதிரா ஒரு காரியமும் செய்ய மாட்டேன்... அவர், முதலாளியா இருக்கலாம். ஆனால், நீங்க என் குரு... நான் மண்ணு மாதிரி ஒண்ணும் தெரியாம ஊர் சுத்திகிட்டிருந்தேன். ''என்னை அழைத்து வந்து, வேலை கத்து கொடுத்த குரு சார்... உங்க அன்புக்கு பாத்திரமாக இருக்கிறேன் என்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி... நம்பிக்கை... நிம்மதி எல்லாமே... உங்களுக்கு எதிரா நான் இம்மியும் செயல்பட மாட்டேன்... கட்டாயப் படுத்தினால், விலகறேன் சார்,'' என்றான்.''ஒருநாள், 'டைம்' சொன்னாரா... 'வெய்ட்' பண்ணு,'' என்றார்.''என்ன சொல்றீங்க... திடுதிப்புன்னு வேலையை விடப்போறேன்னு வந்து நிக்கறீங்க,'' பதற்றமாக கேட்டாள், உமா.''சுந்தரம் சாருக்கு எதிரா, என்னை களம் இறக்கறார் முதலாளி. சுந்தரம் சார் மீது, முதலாளிக்கு எதனாலோ வருத்தம்... நேரடியா பேச முடியாமல், என்னை வச்சு விளையாட பார்க்கறார்... நான் பலியாக தயாரில்லை... நாலு காசு அதிகம் கிடைக்குதுன்னு, குரு துரோகம் செய்ய மாட்டேன்,'' என்றான், தீர்க்கமாக.அப்பாவை வரவழைத்தாள், உமா.''ஒண்ணாம் தேதி சம்பளம் வரலைன்னா, வீடு ஸ்தம்பிச்சு போகும். பால் வாங்க முடியாது. 'சம்பளம் வந்ததும், கொடுக்கறேன்...'னு தெரு முழுக்க கடன் வாங்கி வச்சிருக்கேன்... குழந்தைகளை அடுத்த மாசம் ஸ்கூல்ல சேர்க்கணும்... அடுத்த வேலை, சட்டுன்னு கிடைச்சுடுமா... கிடைச்சாலும், இந்த சம்பளம் வருமா... அவருக்கு, சமாதானம் சொல்லுங்கப்பா... வேலைக்கு போக சொல்லுங்க,'' என்றாள்.''என்ன பிரச்னை மாப்ள,'' என்று கேட்க, நிதானமாக முழுவதையும் சொன்னான், சுரேஷ்.''மாப்ள... வீட்டு நிலையை சொல்றா உமா... அதே நேரம், நீங்க வேலையை விட நினைக்கறது தவறுன்னும் சொல்ல முடியாது... வேலையில் சேர்த்து, சொல்லிக் கொடுத்து, உங்களுக்கு பக்க பலமா இருந்து ஆதரிச்சவர் என்ற முறையில, சுந்தர் சார் மீது, நீங்க காட்டுற விசுவாசம் அற்புதம்... 'அவருக்கு எதிராக, அவரை பாதிக்கும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்...'னு சொல்றீங்க... பாருங்க, அந்த குணம் இந்த நாளில் யாருக்கு வரும்... உங்களுக்கு வந்திருக்கு, பெருமையா இருக்கு,'' என்றார்.''தாங்க்ஸ் மாமா... புரிஞ்சுகிட்டீங்களே,'' என்றான்.''அப்படியே இன்னும் ஒன்றையும் சொல்றேன், தப்பா எடுத்துக்க கூடாது... இன்றைக்கு, வாழ்க்கை என்பது மிகப்பெரிய போர்க்களமாகி விட்டது. எதற்காகவாவது, யாருடனாவது போராட வேண்டியிருக்கு... வாளை சுழற்றிகிட்டே இருந்தால் தான், களத்தில் நிற்க முடியும். வெற்றி கிடைக்கலைன்னாலும் தோற்றுப் போகாமல் இருக்கவாவது நாம் யுத்தம் செய்து கொண்டிருக்க வேண்டியிருக்கு... ''இதில், மயங்கினால், தயங்கினால், தலை போயிடும். இந்த சங்கடம், ஏதோ உங்களுக்கு மட்டும் இந்த காலத்தில் வந்ததா நினைக்க வேண்டாம். வந்த பிறகு தான் தெரிகிறது. தான் எதிர்க்க வேண்டியவர்கள் யார் என்று... ''குருவான பீஷ்மரும், துரோணாச்சாரியார் போன்ற ஆசிரியர்களையும் மற்றும் துரியோதன - துச்சாதனனோடு, 98 சகோதரர்கள், அவர்களின் பிள்ளைகள், வரிசை கட்டி நின்றனர். 'ஐயோ, இவர்களை எதிர்த்தா சண்டையிடுவேன்... இவர்களை கொன்று, அதனால் எனக்கு கிடைக்கும் வெற்றி அவசியம் தானா... இந்த போரும் வேண்டாம்... நான் போரிடவும் வேண்டாம்...' என்று மனம் தளர்ந்து, வில்லை கீழே போடுகிறான், அர்ஜுனன்.''அப்போது, அர்ஜுனனுக்கு என்ன உபதேசித்தான், கண்ணன் என்பதை நான் சொல்லி, நீங்க தெரிஞ்சுக்க வேண்டியதில்லை. உங்களை உருவாக்கிய சுந்தரத்துக்கு, தன்னை எப்படி பாதுகாத்து நிலை நிறுத்திக்கணும்ன்னு தெரியாதா... அவர் இடத்துக்கு நீங்க போக மறுப்பதால், நடக்கிறது எதுவும் நின்று விட போவதில்லை. ''உங்களுக்கு பதிலா, வேறு நபரை அங்கே போட்டு, முதலாளி தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வார். வெளியேறும் சுந்தரம், தன் அனுபவத்தையும், தொடர்புகளையும் வைத்து வேறு வேலை தேடிக் கொள்ள முடியும். அதே நேரத்தில், உங்களுக்கும் ஒரு வேலை தேடி வைக்க அவரால் முடியுமான்னும் சொல்ல முடியாது... இதையெல்லாம் ஒருமுறை யோசிச்சு பாருங்க... அதன்பின், உங்களுக்கு எப்படி தோணுதோ அத செய்யுங்க,'' எனக் கூறி முடித்தார், மாமா.இரவு, துாக்கம் வரவில்லை, சுரேஷுக்கு. 'வேலையை விட்டால், குடும்பம் நெருக்கடியில் விழும். தாங்கிப் பிடிக்கும் நிலையில் இந்த பக்கம் அப்பாவோ, அந்த பக்கம் மாமனாரோ வசதியோடு இல்லை. உமாவுக்கு படிப்பு குறைவு. வேலைக்கு போக வாய்ப்பில்லை. எப்படி பார்த்தாலும், இந்த வேலை, 1ம் தேதி சம்பளம், அதி முக்கியம்.'அதற்காக, சுந்தரம் சாரை நகர்த்திவிட்டு, அவர் இருக்கையில் அமர, மனம் ஒப்புமா... அவர் என்ன நினைப்பார்... 'நீயா எனக்கு பகையா வரணும்...' என்று ஒரு வருத்தம் எழுந்தாலே, அது என்னை வாட்டி எடுத்து விடாதா... கடவுளே... இதற்கு ஒரு நல்ல தீர்வு சொல்லு...' என்று வேண்டினான்.மறுநாள், ஒரு முடிவுக்கு வந்தவன், விலகல் கடிதத்துடன் அலுவலகம் சென்றான். ஆனால், அதற்கு முன்பே சுந்தரம் சார், வேலையிலிருந்து விலகியது தெரிய வந்தது. மனம், கனத்து போனது சுரேஷுக்கு. அவர் வீட்டுக்கு விரைந்தான்.''சார்... எதற்காக இந்த காரியத்தை செய்தீங்க... எனக்காக விட்டுக்கொடுக்க நினைக்கறீங்களா,'' என்றான்.''அப்படி செய்தாலும், தப்பில்லைன்னு நினைக்கிறேன். ஆனால், நான் வேலையை விட, இது சரியான நேரம் சுரேஷ்... முதலாளிக்கு நான் என்னைக்கும் விசுவாசமான வேலையாளாக தான் இருந்திருக்கேன்... கம்பெனியின் வளர்ச்சிக்காக, பல ஆலோசனைகளை சொல்லி, வழிகாட்டி இருக்கிறேன்... ''நல்ல விஷயங்களை, அவரிடம் சண்டை போட்டு, சாதிச்சிருக்கேன்... நிறைவேத்தி இருக்கேன்... அவருக்கு, என்னை ரொம்பவே பிடிக்கும். என்றாலும், சூழ்நிலை மாற்றங்கள். புதிதாக அவர் குடும்பத்தை சேர்ந்தவர்களால் உண்டாகும் அழுத்தம் காரணமாக, சில வேலைகளை விருப்பம் இல்லாவிட்டாலும் செய்ய வேண்டிய சூழ்நிலை அவருக்கு...''சமீப காலமாக, நான் எது சொன்னாலும், அவர் பொருட்படுத்துவதில்லை; ஏற்றுக்கொள்வதும் இல்லை... மாறாக, என்னை அலட்சியப்படுத்தி வந்தார். எந்த நேரமும் நான் வெளியேற்றப் படுவேன்னு எதிர்பார்த்துகிட்டு இருந்தேன். அதை, நேற்று, நேரடியாக சொல்லிட்டார், முதலாளி. இனி, ஒரு நொடி நான் அங்கிருக்க முடியுமா... என் இடத்துக்கு யாரோ ஒருவர் வருவதை விட, என் அன்புக்குரிய, தகுதியுள்ள நீ வந்தால், நிர்வாகத்துக்கு நன்மையாக இருக்கும்... இது, என் ஆசை,'' என்றார்.''உத்தரவுன்னு சொல்லுங்க... செய்யறேன்... அதுவும், இந்த, 50 வயசுல... இந்த வேலையை விட்டுட்டு நீங்க என்ன செய்வீங்க சார்,'' என்றான், சுரேஷ்.''ஒரு ஜன்னல் மூடினால், இன்னொரு ஜன்னல் திறக்கும் என்பது, இயற்கை விதி. என் விஷயத்தில் தாராளம். கதவே திறந்திருக்கு... ஆமாம்... என் பழைய நண்பர் ஒருவர், புது தொழில் துவங்கி, என்னை வரச்சொல்லி நீண்ட நாட்களாக கேட்டு கிட்டிருந்தார். அங்கே போக, நான் முடிவு பண்ணிட்டேன். அதனால் தான், உடனே ராஜினாமா கொடுத்தேன்... இன்னைக்கோ, நாளைக்கோ, நான் புது வேலையில் சேர்ந்து விடுவேன்... கவலைப்படாமல், உனக்கு கிடைத்த பொறுப்பை, நல்லவிதமாக செய்,'' என்றார்.''மாமனாரும் இப்படி தான் சொன்னார் சார்... 'உன் குருவுக்கு இருக்கும் அனுபவம், திறமைக்கு வேறு நல்ல வேலை கிடைச்சுடும்...'ன்னு. இப்ப மனசு, ஓரளவுக்கு சமாதானமாச்சு சார்,'' என்று, அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி, அலுவலகம் விரைந்தான், சுரேஷ்.மனைவி, தன்னை கவனித்துக் கொண்டிருப்பதை பார்த்து, ''என்ன செய்ய பார்வதி... சுரேஷ், ரொம்ப நல்லவன்... கொஞ்சம் அப்பாவி... என் மேல் விசுவாசம்... எனக்காக தலையை கூட கொடுப்பான்... இவனை போல பல பேரை வேலையில் சேர்த்து விட்டிருக்கேன். ''ஆனால், இவன் அளவுக்கு யாரும் என்கிட்ட அன்பாக இருந்ததில்லை... என் வேலையை அவனை பார்க்கும்படியும், சம்பளம் அதிகமா தர்றேன்னு சொல்லியிருக்கார், முதலாளி. 'கோடி கொடுத்தாலும் அந்த வேலையை செய்ய மாட்டேன்...'னு சட்டுன்னு ராஜினாமா செய்யறதா சொல்லிட்டு போயிட்டான்... ''இந்த வேலையை நம்பி தான், கல்யாணம் பண்ணிகிட்டான்... இந்த சம்பளத்தை நம்பி தான், குடும்பம் நடக்குது... திடீரென வேலையை விட்டால், குடும்பம் தள்ளாடிடும்... வளர வேண்டியவன்... வாழ வேண்டியவன்... ''அவனுக்கு, வேலையை கற்றுக்கொடுத்தது மட்டும் முக்கியமில்லை... ஒரு இக்கட்டு வரும்போது, அவனுக்காக நான் விட்டுக் கொடுப்பதும் முக்கியம்ன்னு நினைக்கிறேன். சரிதானே,'' என்றார்.''என்னால் புரிஞ்சுக்க முடியுதுங்க... 'நண்பர் கூப்பிட்டிருக்கார், அங்கே போறேன்...'னு நீங்க பொய் சொல்லி சமாதானம் பேசும்போதே புரிஞ்சுகிட்டேன்... ''ஒரு இக்கட்டுன்னு வரும்போது, இளைய தலைமுறைக்கு வழிவிட்டு விலகி நிற்பது தான், பெரியவர்களுக்கு அழகுன்னு காட்டிட்டிங்க... அதே சமயம், நமக்கும் சம்பளம் தேவைப்படுது... செலவுகள் இருக்கு... என்ன பண்ண போறீங்க,'' என்றாள்.''வேலை தேட போறேன்... வயசானால் என்ன... என் அனுபவத்துக்கும், எனக்கு இருக்கும் அறிவிற்கும் ஏதாவது ஒரு இடத்தில் வேலை கிடைக்காமலா போகும்... அதுவரை பழைய இடத்திலிருந்து வரும், 'செட்டில்மென்ட்' பணத்தை வச்சு காலத்தை ஓட்ட முடியாதா என்ன,'' என்று, அன்பு மனைவியை ஆறுதலாக அணைத்து கொண்டார், சுந்தரம்.
படுதலம் சுகுமாரன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
07-ஜன-201907:54:20 IST Report Abuse
Manian இந்த கதையில் ஒரே ஒரு நெருடல்தான். ''என்ன செய்ய பார்வதி... சுரேஷ், ரொம்ப நல்லவன்... கொஞ்சம் அப்பாவி... என் மேல் விசுவாசம்... எனக்காக தலையை கூட கொடுப்பான்... இவனை போல பல பேரை வேலையில் சேர்த்து விட்டிருக்கேன். ''ஆனால், இவன் அளவுக்கு யாரும் என்கிட்ட அன்பாக இருந்ததில்லை... என் வேலையை அவனை பார்க்கும்படியும், சம்பளம் அதிகமா தர்றேன்னு சொல்லியிருக்கார், முதலாளி. 'கோடி கொடுத்தாலும் அந்த வேலையை செய்ய மாட்டேன்...'னு சட்டுன்னு ராஜினாமா செய்யறதா சொல்லிட்டு போயிட்டான்... ''இந்த வேலையை நம்பி தான், கல்யாணம் பண்ணிகிட்டான்... இந்த சம்பளத்தை நம்பி தான், குடும்பம் நடக்குது... திடீரென வேலையை விட்டால், குடும்பம் தள்ளாடிடும்... வளர வேண்டியவன்... வாழ வேண்டியவன்... ''அவனுக்கு, வேலையை கற்றுக்கொடுத்தது மட்டும் முக்கியமில்லை... ஒரு இக்கட்டு வரும்போது, அவனுக்காக நான் விட்டுக் கொடுப்பதும் முக்கியம்ன்னு நினைக்கிறேன். சரிதானே,'' என்றார்.'' என்று சொல்லும் ஒருவர் கையில் இன்னொரூ வேலை இல்லாமல் வேலைய விட்டார் என்றால், அவரின் உலக அனுபவம் எப்படி அவருக்கு உதவும். சுரிஷிற்கு உதவுவது வேறு, வேலையை உதறுவது வேறு. எங்கோ ஒதைக்குதே தனக்கு வழிகாட்டி என்றாலும் , தன் குடும்பத்தை நடுத்தெருவில் விடுபவன், வெறும் உணர்ச்சியால் நடப்பவன் என்பதும் சிந்திக்கும் திறமை அற்றவன் என்பதும் சரியில்லை.
Rate this:
Share this comment
K.Saravanan - mumbai ,இந்தியா
09-ஜன-201912:16:28 IST Report Abuse
K.Saravananஎப்படியும் அவருக்கு வேலை போகத்தான் போகிறது. அவர் முடிவு சரியெனவே படுகிறது. படுதலம் சுகுமாரன் கதைகள் எப்போதுமே சற்று லாஜிக் உடன் தான் இருக்கும்....
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
10-ஜன-201914:21:05 IST Report Abuse
Manianசுரேஷின் நண்பன் ராஜன், ஒரு புது கம்பனி ஆரம்பிக்கிறேன். அதில் பங்குதாதாக சேருங்கள். முதல் போட வேண்டாம். , உங்கள் அனுபவம், மேற்பார்வை தேவை ஏன்றான். . இப்படி சொல்லி, அதனாலே, , உடனே வருமானம் இல்லாவிடடாலும் வேலையை விடடேன் என்று சொல்லி இருந்தால், கதையை வருங்கால மாணவர்களுக்கு வழி கட்டியாகி இருக்கும். மேல் நாடுகளில் இது நடக்கிறது. வேலை பெய்வது, அவர் முடிவு புதிய சிந்தனையை உண்டாக்குவதாக இருந்தால், பேனா, வாளை விட கூர்மையானது என்பது பளிச்சிடும்...
Rate this:
Share this comment
Cancel
Being Justice - chennai ,இந்தியா
06-ஜன-201910:38:19 IST Report Abuse
Being Justice தனியார் நிறுவனங்களில் உள்ள மாற்ற முடியாத சூழ்நிலை. சம்பளமும் வேலையும் அதிகம் தான் என்றாலும் பணியின் ஸ்திரத்தன்மை கிடையாது. சில காலம் சமாளிக்க சேமிப்பு இருந்தால் மட்டுமே முடியும் அதே நேரம் அடுத்த வேலையும் கிடைக்க வேண்டும். எவ்வளவு காலம் பணிசெய்ய வேண்டி வரும் என்றும் தெரியாது. நிலையற்ற வாழ்க்கை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X