பூக்களா சுமைகளா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2019
00:00

முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய அன்றைய நாளின் பொழுது, குயிலின் அழகான ஒற்றை ஆனந்த ராகத்துடன் விடிந்தது.
காபியை நீட்டினாள், அம்மா.
''முரளி... ராத்திரி ரொம்ப நேரம், 'லைட்' எரிஞ்சுதேப்பா உன் அறையில... துாக்கம் வரலியா, ஏதாவது யோசனையா,'' என்றாள் கனிவுடன்.
''ஆமாம்மா... யோசனை தான்... இன்னிக்கு ஒரு முக்கியமான முடிவு எடுக்கணும்... எச்.ஆர்., ஆன பின், நான் முடிவெடுக்கிற முதல் விஷயம்... 'சோஷியல் டீலிங்' என்னோட துறை... முதலில், பத்து லட்சம் நிதி உதவி பண்ணணும்,'' என்றான், முரளி.
''சரி!''
''அரசு உதவி பெண்கள் பள்ளி மற்றும் முதியோர் கண் மருத்துவ மனைன்னு, இந்த ரெண்டுல ஏதாவது ஒண்ணை தேர்வு பண்ணணும்... கம்பெனி, என்னை நம்பி பொறுப்பை கொடுத்திருக்கு... சரிம்மா, எனக்கு நம்பிக்கை இருக்கு, பாத்து சரியா பண்றேன்... அது சரி, நீ ஏம்மா கொஞ்சம், 'டல்'லா இருக்கே?''
''நம்ம ஊர் பத்தி நெனப்புதாம்பா... அதுலயும், வேலம்மா பொண்ணு, சுமதி நெனவு வந்துகிட்டே இருக்கு... போய் ஒரு எட்டு பாத்துட்டு வரணும்ன்னு இருக்கு... வெயில்ல ஒண்ணும் முடியல... பாவம் அவதான் வாழற வயசுல புருஷனை இழந்து, படாத பாடு பட்டா... அவ பொண்ணுக்கும் அதே மாதிரி ஆகிப் போச்சு...
''வசதி, வாய்ப்பு எதுவும் இல்லாத ஏழை குடும்பம்... அந்த பொண்ணு சுமதி, ஆடு மேய்ச்சுகிட்டு, களை பறிச்சுகிட்டு இருந்தது. பொறுப்பை முடிக்கிறேன் பேர்வழின்னு, சட்டு புட்டுன்னு குடிகார பயலுக்கு கட்டி வெச்சா வேலம்மா... எட்டே மாசத்துல, ஈரல் அழிஞ்சு, போய் சேந்துட்டான், புது மாப்பிள்ளை... இப்ப, அம்மாவும், பொண்ணும் என்ன பாடு படறாங்களோன்னு கவலையா இருக்குப்பா,'' என்றாள் அம்மா, கண்களில் ஈரத்துடன்.
''ஆமாம்மா... எனக்கும் வேலை, 'பிசி'ல மறந்தே போச்சு... நாம ஊர்ல இருந்தபோது, கழனி வேலை முழுக்க, அந்த வேலம்மாதானே பாக்கும்... பாவம், நல்ல மனசு அதுக்கு... சரிம்மா, இந்த வார கடைசியில செங்கத்துக்கு போயிட்டு வரேன்... நீ கவலைப்படாதே,'' என்றான்.
''நல்லதுப்பா... கண்டிப்பா போயிட்டு வாப்பா,'' என்றாள், அம்மா.
'அம்மா சொன்னது முற்றிலும் உண்மை தான். பெண் என்றால் சுமை தான், பொறுப்பு தான், கடமை தான். அப்படித்தான் நினைக்கின்றனர் எல்லாரும். பூ எப்படி சுமையாகும் அல்லது கல்யாணம் தான் எப்படி தீர்வாகும்; வாழ்க்கை என்பது வேறல்லவா...
'பாவம், அந்த சிறுமி சுமதி. சூது, வாது தெரியாமல், சுதந்திரமாக காற்று போல காடு, கழனி என்று சுற்றிக் கொண்டிருந்தது. சோளக் கதிரை பறித்து தின்று, மருதாணி இலை அரைத்து பூசி, தட்டார பூச்சிகளை துரத்தி, அதுபாட்டுக்கு ஆடுகளை மேய்த்து, ஏதோ ஒருவேளை வயிற்றுப்பாட்டுக்கு அம்மாவுக்கு உதவி செய்து கொண்டிருந்தது...' என, நினைத்துக் கொண்டான், முரளி.
ஒரு முறை, முரளி, தங்கள் வாழைக் கொல்லைக்கு காவலுக்கு போன போது, ஆவாரம் பூக்களை கை நிறைய பறித்து, எதிரில் வந்து கொண்டிருந்தாள், சுமதி. இவனை பார்த்ததும், அந்த பூ போலவே மலர்ந்து சிரித்தாள்.
'அண்ணா... ஆவாரம்பூல டீ போட்டு குடிச்சா, உடம்புக்கு ரொம்ப நல்லதாம்... எடுத்துட்டு போறீங்களா...' என்று நீட்டினாள்.
'சரிம்மா, எடுத்துக்கறேன்... நீ இப்படியே காடு, ஓடைன்னு சுத்திகிட்டிருந்தா போதுமா... பள்ளிக்கூடத்துக்கு போய் படிக்கலாம் தானே... அரசு பள்ளிக்கூடம், செங்கத்துல இருக்கில்லே... இலவசம் தானே... சீருடை, புத்தகம்ன்னு நாங்க வாங்கித் தருவோம்ல... என்னம்மா சுமதி சொல்றே...' என்றான் அக்கறையுடன், முரளி.
'பள்ளிக்கோடமா... எனக்கா... இல்லண்ணா, எனக்கு இப்புடி வனாந்தரமா சுத்தறது தான் புடிக்கும்... ஆடுங்க எவ்வளவு அன்பா இருக்கும் தெரியுமா... நீங்களும் ஆடு வாங்குங்கண்ணா... நான் மேய்ச்சு தரேன்...' அவள் சிரித்தாள்.
'லீவு நாள்ல ஆடு வேலை, மத்த நாள்ல படிப்பு வேலைன்னு வெச்சுக்க சுமதி... அப்ப தான் வாழ்க்கை நல்லா இருக்கும்!'
'இல்லண்ணா... இப்பவே வாழ்க்கை நல்லா தான் இருக்குது...' என்று சிரித்தபடி சொல்லி, பூக்களை அவன் கையில் திணித்து, ஓடினாள், சுமதி.
அதற்கு பின், அதை மறந்து போனான், முரளி.
திடீரென்று, சுமதிக்கு திருமணம் என்றனர். புகுந்த வீடு, ஏலகிரி என்றனர். ஊருக்கு போய், திருமணத்திற்கு, 5,000 ரூபாய் மொய் எழுதிவிட்டு வந்தாள், அம்மா.
எட்டே மாதங்களில், அந்த சோக செய்தி வந்தது. 'மாப்பிள்ளை பயல், போய் சேர்ந்து விட்டான்...' என்று.
அவனும், அம்மாவும் கிளம்பிப் போயினர். அம்மாவின் தோளில் சரிந்து, கதறி அழுதாள் வேலம்மா...
'பாவி... நானே எம்புள்ள வாழ்க்கய கெடுத்துப்புட்டேன்...' என்று விம்மினாள்.
அவன், சுமதியை பார்த்தான். இன்னும் குழந்தை போல தான் இருந்தாள். நிலைமையின் தீவிரம் புரிந்தும், புரியாமலும், தரையில் கைகளால் கோடு இழுத்துக் கொண்டிருந்தாள்.
'சுமதி...' என்றபடி மென்மையாக அழைத்து, 'இன்னும் ஒண்ணும் கெட்டுப் போகலே... சின்ன பொண்ணு தான் நீ... படிக்கலாம்... மனசு வெச்சா எல்லாம் நல்லா நடக்கும்... யோசிச்சு செய்மா... எந்த உதவி வேணும்னாலும் கேளு... அழாதே... கவலைப்படாதே...' என்றபோது, அவள் துடித்துப் போனவளாய், விக்கி விக்கி அழுதாள்.
மெல்ல எழுந்து திரும்பி வந்தான், முரளி.
அத்தோடு சரி, அவளை பார்க்கவே இல்லை.
'சே... நகரத்து பரபரப்பு வாழ்க்கை, நுண்ணுணர்வுகளையும் காவு வாங்கி விடுகிறது. மனதின் ஈரத்தை துடைத்து எறிந்து விடுகிறது. கண்ணுக்கு தெரியாத கழுமரம், தினம் தினம் நகரவாசிகளை மனச்சோர்வுக்கும், சிதைவுக்கும் ஆளாக்கி விடுகிறது...' என, பெருமூச்சு விட்டான் முரளி.
செங்கம் தாண்டி, கருப்பம்பட்டியை நோக்கி வண்டி விரைந்தது. பால் மணத்துடன் சோளக் கதிர்கள் ஆடிக்கொண்டிருந்தன. அந்த வெயிலையும் தாக்குப்பிடித்து, மஞ்சள் மலர்கள் பூத்துக் குலுங்கின.
''யார் வீடு அண்ணே?'' என்ற ஆட்டோக்காரரிடம், ''வேலம்மான்னு ஒருத்தர்... வயக்காட்டுல வேலை செய்றவங்க... கரும்புலியம்மன் தெருவில வீடு,'' என்றான், முரளி.
''ஓ... சுமதியக்கா வீடா... வாங்க, வாங்க... பத்திரிகைகாரங்களா,'' என்று, முகம் மலர்ந்தார் அவர்.
''இல்லையே... ஏன்?'' என்றான், அவன் புரியாமல்.
''அட தெரியாதா உங்களுக்கு... சுமதியக்கா, இப்ப விருது வாங்கியிருக்கு... டில்லிக்கெல்லாம் போயிட்டு வந்தது... இறங்கலாம் சார், அக்கா வீடு வந்தாச்சு,'' என்றார்.
'என்ன... விருதா... டில்லியா... சுமதி அக்காவா...'
ஆட்டோவை அனுப்பி, நிமிர்ந்த போது தான் கவனித்தான்...
வேலம்மாவின் குடிசை, இப்போது மூன்று அடுக்கு வீடாக பளிச்சென்று மாறியிருந்தது. வாசலில் வேலி போட்டு, மூலிகைகள் போல என்னென்னவோ காய்த்துக் கொண்டிருந்தன.
''அண்ணா நீங்களா... வாங்கண்ணா... வாங்க... வாங்க,'' என்று உள்ளிருந்து ஓடி வந்தாள், சுமதி. மலர்ச்சியாக, உற்சாகமாக இருந்தாள். சிறுமி தோற்றம் மறைந்து, வனப்பும், கம்பீரமும், பெருமிதமும் கலந்த புதிய உருவத்தில் அழகாக நின்றாள்.
''சுமதி... நீயாம்மா... எப்படிம்மா இருக்கே... சாரிம்மா, இவ்வளவு நாளா வராம இருந்துட்டேன்,'' என்றான், முரளி.
''பரவால்லண்ணா... அதனால என்ன, நானே உங்களையும், அம்மாவையும் பாக்க வரணும்ன்னு இருந்தேண்ணா... ஏன் தெரியுமா... இது, நீங்க வழி காட்டிய வாழ்க்கை... உங்க அறிவுரை கொடுத்த வாழ்க்கை... ஆமாண்ணா, நீங்க கொடுத்த சந்தோஷம் இது... பெருமை இது,'' என்றவள், சட்டென்று கண்கலங்கினாள்.
''என்னம்மா சொல்றே... நானா... புரியலம்மா,'' என்றான், முரளி.
''ஆமாண்ணா... அன்னிக்கு நாங்க கலங்கி நின்னப்போ சொன்னீங்களே, 'படிப்பை விடாதே, பாஸ் பண்ணு... சுயமா யோசிச்சு முடிவெடு'ன்னு... யாரோ கண்ணை திறந்த மாதிரி இருந்துச்சுண்ணா... மத்தவங்க எல்லாம் மறு கல்யாணம் பண்ணலாம், இட்லி கடை போடலாம், கைம்பெண் மறு வாழ்வுன்னு பழைய பேச்சு பேசினாங்க...
''நீங்க தான் படி, நிறைய படி, பரீட்சை எழுது, மேலே வான்னு சொன்னீங்க... செங்கம் ஸ்கூல்ல சேந்தேன்... பிளஸ் 2 வரை படிச்சேன்... மதுராந்தகம் காலேஜ்ல, பி.எஸ்சி., முடிச்சேன்... வேலை சரியா கிடைக்கலே... ஆனா, நம்பிக்கை இருந்தது...
''புதுசா யோசனை வந்தது... மகளிர் சுய முன்னேற்றக் குழுவுல சேர்ந்து, வங்கியில கடன் வாங்கினேன்... ஆவாரம்பூ தேநீர், செம்பருத்தி தேநீர்ன்னு பொடிகள் தயார் செஞ்சேன்... செங்கல்பட்டு போய் சந்தைகள்ல சின்ன கடை போட்டு, விற்றேன்... மெல்ல மெல்ல விற்பனை, சூடு பிடிச்சது...
''அதை, 'வேலம்மாள் ஹெர்பல்'ன்னு பேர் பதிவு பண்ணி விரிவுபடுத்தினேன்... பூண்டு பொடி, கருஞ்சீரகப் பொடி, சிறு தானிய சத்து மாவுன்னு, தயார் பண்ணோம்... கலப்படம் இல்லே... இங்கேயே நம்ம கண்ணெதிர்ல விளையற பொருட்கள வெச்சு, தரமா செய்யறோம்...
''வைத்திய பொடி, ஆயுர்வேத பொடி, 'டயட்' பொடின்னு இப்ப, 'வேலம்மாள் ஹெர்பல்' ரொம்ப பெரிய அளவுல போயிருக்குண்ணா... தரக்கட்டுப்பாடுல முதல் இடம் பிடிச்சதால, ஜனாதிபதி விருது கொடுத்தாங்க... இப்ப, கல் செக்கு ஆலை வச்சிருக்கேன்... நுாறு பெண்கள் வேலை செய்யறாங்கண்ணா,'' எனக் கூறி முடித்தாள், சுமதி.
திகைத்து நின்றான், முரளி.
சுமதி சொல்லியது காதுகளில் விழுந்தாலும், இதயம் நெகிழ்ந்து உருகியது.
'பெண் கல்வி... அதற்கு இத்தனை மகத்துவமா... ஒரு பெண், கல்வியறிவு பெற்றால், அது, ஒரு சமுதாய முன்னேற்றத்திற்கு சமானமா... ஏட்டுக் கல்வி என்பதை தாண்டி, நம்பிக்கை வெளிச்சத்தை எடுத்து வருமா... பெண் சக்தி, மகத்தான எழுச்சியுடன் பெண் குலத்தையே வாழ வைக்குமா... என்ன அற்புதம் இது, பூமியின் அடியில் சென்று, ஒரு விதை, மண்ணை துளைத்து மேலே வருவதை போல...' என, வியந்தான் முரளி.
''அண்ணா அண்ணா... என்னண்ணா பாக்கறீங்க... உள்ளே வாங்கண்ணா,'' சிரித்தாள், சுமதி.
''எனக்கும் தெளிவு வந்தாச்சும்மா சுமதி... ஒரு, எச்.ஆரா., முடிவு எடுத்துட்டேன்... அரசு பெண்கள் பள்ளிக்கு தான், எங்க கம்பெனி நிதி அளிக்கப் போகுது,'' என்ற அவன் வார்த்தைகளை, அவள் திகைப்புடன் பார்த்தாள்.

- வானதி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
17-ஜன-201921:25:59 IST Report Abuse
Rajesh அருமை, அருமை, அருமை, வாழ்த்துக்கள். அருமையான கதை, நிஜத்திலும் நம்மை போன்றவர்கள் உதவி மற்றும் ஒத்துழைப்பால் நிச்சயமாக நிஜமாகும்.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
16-ஜன-201913:21:30 IST Report Abuse
pattikkaattaan "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு " என்று அடக்கி வைத்திருந்தனர் ... இனி அது முடியாது .. பெண் கல்வியே நாட்டை உயர்த்தும்
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
17-ஜன-201903:12:59 IST Report Abuse
Manianதோழிகள் இல்லாத காலத்தில், ஜனத்தொகை இருந்த காலத்தில், வீட்டு வேலையாட்களை (அகம்)- வெளி வேலைகளை(பிரும்ம) என்று பங்கிடடனர். அது நாளவாடத்தில் ஆணாதிக்கமாகவே விட்ட்து. அதுதான் இப்பொது மாறுகிறது. மாதா-பிதா என்றுதானே ஆரம்பிக்கிறது. காலமாறக்க் கொடுமை. ஆங்கிலேயரின் ஆண்வாரிசு சட்டம், ஏழைமை என்று பல காரங்கள்- அவை தெளிவாக ஆராயப்படவில்லை ....
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
13-ஜன-201907:06:42 IST Report Abuse
Manian இது ஒரு சிந்தனையை தூண்டும் கதை. இதுதான் தற்போது தேவை. பெண்கள் முன்னேறாத வரை நாடு முன்னேறாது. "பெண் பள்ளி வளர்க' என்று ஔவ்வையர் இப்படி சொல்லி இருந்தால் 'பெண் கல்வி உயர, பெண் சக்தி உயரரும், பெண் சக்தி உயர, சமூகம் உயரும், சமூகம் உயர நாடு உயரும்" மன்னா( திருடர்கள் கழக மன்னர்கள் இல்லை) என்று நவீன ஔவையார் சொல்லி இருப்பாரே. வயதானவர்களுக்கு மருத்துவ வசதியும் தேவை. ஆனால் அவரகள் அதிகம் விலை பெறாத காசுகள் ( அவமான படுத்தவில்லை) ஆனால் அவர்களையும் பராமரிக்க வருங்கால பெண்களும் தேவைதானே. இது ஆக்கபூர்வமான , அறிவுபூர்ணமான பெண் கல்வி சிந்தனை. இது பெருக வேண்டும். நன்றி வானதி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X