அசை மாடுகள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2019
00:00

மந்தைவெளி பஸ் டிப்போவை கடக்கையில், சுசீலாவின் ஞாபகம் வந்தது. டிப்போவுக்கு எதிரிலிருந்தது, அடுக்குமாடி குடியிருப்பு. ஒரு எட்டு பார்த்து வரலாம் என்றெண்ணிய சபாபதி, சாலையை கடந்து, அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில், 205ம் எண், வீட்டு அழைப்பு மணியை அழுத்த, அடுத்த நொடி, கதவு திறந்து, வெளிப்பட்டாள், சுசீலா.
ஆச்சர்யத்தில் அவள் விழிகள் விரிந்தன.
''வா... வாண்ணே,'' அவசரமாய், 'கிரில்' கதவை திறந்து, வரவேற்றாள். காலை நேர வேலைப்பளுவில் அவள் முகம் களைத்து கிடந்தது.
''ஒரே ஊர்ல இருக்கோம்ன்னு தான் பேரு... பார்த்து ஓராண்டுக்கு மேல ஆயிடுச்சு... உக்காருண்ணே,'' என்றபடி, சோபாவில் கிடந்த தினசரிகளை ஒதுக்கி, அவரை அமர வைத்தாள்.
''நல்லா இருக்கியாம்மா?''
''இருக்கேண்ணே... நீ எப்படி இருக்கே... உன் மகன் சேகர், மருமக, புள்ளைங்கல்லாம் நல்லா இருக்காங்களா?''
''எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா... மந்தைவெளியில ஒரு சிநேகிதரை பார்க்க வந்தேன். காலையில வரலேன்னா, அவரை புடிக்க முடியாது,'' என்றவர், சுசீலா கொடுத்த தண்ணீரை பருகி, சுற்றும், முற்றும் பார்த்தார்.
''வீட்டுல யாருமில்லையா?''
''எல்லாரும், 7:30 மணிக்கே கிளம்பிடுவாங்கண்ணே... இந்த நேரத்துல, நான் மட்டுந்தான் வீட்டுல இருப்பேன்... அங்கேயும் அப்படித்தானே.''
தலையசைத்து, உயிர்ப்பில்லாமல் சிரித்தார், சபாபதி.
மனைவி கமலம் இறந்து, ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதில், தனித்து விடப்பட்டோமோ என்ற உணர்வு அவருக்குள்.
அவருடைய சின்னம்மா மகள், சுசீலா. சிறு வயதில் ஒன்றாக ஓடியாடி விளையாடியவர்கள். திருமணம், குழந்தை, குட்டி என்றான பின், பழைய ஒட்டுதலுடன் பழக வாய்ப்பில்லாமல் போனது. சென்னையில் இருந்தாலும், அடிக்கடி பார்த்து கொள்ள முடியாத சூழ்நிலை. ஒரு விசேஷம், வைபவம் என்றால் பார்த்து கொள்வதோடு சரி.
''சாப்புட வாண்ணே.''
ஏதோ யோசனையில் இருந்தவர், சுசீலாவின் குரலில் நினைவு கலைந்தார்.
''இன்னிக்கு யதேச்சையா, 'பாம்பே சட்னி' செஞ்சேன்... உனக்கு ரொம்ப புடிக்குமே... வா, வந்து சாப்புடு.''
சபாபதியால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை.
''உனக்கெதுக்கும்மா சிரமம்,'' என, பேருக்கு கேட்டு, தட்டின் முன் அமர்ந்தார்.
''ஒரு சிரமமுமில்ல... சாப்புடு.''
தட்டில் சூடான இட்லி வைத்து, சட்டினி ஊற்றினாள். பஞ்சு போல் மிருதுவாயிருந்தது, இட்லி. அளவான உப்பு, காரத்தோடு தேவாமிர்தமாய் சட்னி ருசிக்க, வழக்கத்துக்கு மாறாக அதிகமாகவே சாப்பிட்டார், சபாபதி.
அவர், இந்த மாதிரி சாப்பிட்டு, ஒரு ஆண்டுக்கு மேலாகி விட்டது. கமலம் இருந்த வரை, பார்த்து பார்த்து, பக்குவமாய் சமைப்பாள். அவள் போன பின், மருமகள் சமையலில் நாக்கு மரத்து போய் விட்டது.
''இட்லி, பஞ்சு பஞ்சா இருக்கும்மா... கணக்கு வெச்சிக்காம சாப்புட்டுட்டேன்!''
''என்னண்ணே இது, சாதாரண இட்லி... இதையே இப்படி பாராட்டுற.''
''எங்க வீட்டுல, பாக்கெட் மாவு இட்லிதாம்மா... கல்லு, கல்லா அணுகுண்டு மாதிரி இருக்கும்... அதை சாப்புட்டு, சாப்புட்டு நாக்கு மரத்து போயிடுச்சு,'' என்ற சபாபதியின் குரலில் வருத்தம் தொனித்தது.
கணவனை ஒரு விபத்தில் பறிகொடுத்தவளுக்கு, பிள்ளை தான் எல்லாம். அவனை சிரமப்பட்டு வளர்த்து, படிக்க வைத்து, ஒரு நல்ல நிலைமைக்கு ஆளாக்கி விட்டவளுக்கு, இப்போதும் பொறுப்புகள் தீர்ந்தபாடில்லை.
பேரப் பிள்ளைகளை பராமரிப்பதும், வீட்டை நிர்வகிப்பதும் அவள் கையில். வேலைக்கு செல்லும் மருமகள், பொருளாதார ரீதியில் பலமென்றால், சுசீலா போன்ற மாமியார்கள், ஆணி வேர் போன்ற பலம்.
'வீட்டை நீங்க தான் அத்தை பார்த்துக்கணும்...' என்று சொல்லி விட்டாள், மருமகள்.
'அது, என் கடமை...' என்று சுசீலாவும், ஏற்றுக் கொண்டாள்.
''களைப்பா தெரியறியேம்மா... உடம்பு நல்லாயிருக்கு இல்ல?''
''உடம்புக்கு ஒண்ணுமில்லேண்ணே... நேரத்தோட எழுந்துக்கறேனில்ல... அதான், இப்புடி பேயறைஞ்ச மாதிரி இருக்கேன்... காலையில, 4:30க்கெல்லாம் எழுந்துக்கணும்... அப்ப தான் டிபன், சமையல் ரெண்டையும், 7:30க்குள்ள செஞ்சு முடிக்க முடியும்.
''மருமக, 6:00 மணிக்கு எழுந்து வருவா. பல நாள், அவ படுக்கவே, நடு ராத்திரியாயிடும். அவ்ளோ வேலை, அவளுக்கு. அவளை குறை சொல்ல முடியுமா...
''பிள்ளைகளை கிளப்ப தான், அவளுக்கு நேரம் சரியா இருக்கும்... அதுக்கு பிறகு அவ ஆபீசுக்கு போயிடுவா... 8:00 மணிக்கு, என் மகன் ஜீவாவும் போயிடுவான். அதுக்கப்புறம் தான் எனக்கு உட்கார கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்,'' என்றாள்.
''கஷ்டமா இல்லையாம்மா?''
''கஷ்டம்ன்னு நெனச்சா கஷ்டம், இல்லேன்னா இல்ல,'' என்றாள்.
''உன்னை மாதிரி தான், கமலமும். சளைக்காம உழைச்சா... சடுதியில போயி சேர்ந்துட்டா மவராசி... எனக்கு அந்த கொடுப்பினை இல்லாம போயிடுச்சு,'' என்றார், சபாபதி.
நெற்றி சுருங்க, அவரைப் பார்த்தாள், சுசீலா.
''எதுக்கு இப்படி பொலம்புற... வீட்டுல ஏதும் பிரச்னையா?''
''பேச்சு இருந்தாதானே பிரச்னை உருவாகும்... பேச்சே கெடையாது... பேரப் பசங்களுக்கு பள்ளிக்கூடம், 'டியூஷன்'னு நேரம் போயிடும்... தானுண்டு, தன், 'லேப்டாப்' உண்டுன்னு இருந்துடுவான், சேகர்.
''மருமக, ஆபீஸ் விட்டு வரவே, இரவு, 8:00 மணிக்கு மேலாயிடும். அதுக்கு பின், ஏனோதானோன்னு எதையோ செஞ்சு போடுவா அல்லது வரும்போதே ஓட்டல்லேருந்து எதையாவது வாங்கிட்டு வருவா... எல்லாரும் முழுங்கிட்டு படுத்துக்குவோம்... என்றவர், ''இப்பெல்லாம் பசிக்கு தான் சாப்புடுறேன்... ருசிக்கு சாப்புடுறதில்ல... அதெல்லாம் என் மனைவியோட போச்சு,'' என்றார், குரல் கம்ம.
அழைப்புமணி அடித்தது. சுசீலா கதவை திறக்க, வாசலில் பணிப்பெண்.
''இது, எங்கண்ணன். புரசைவாக்கத்துல இருக்காரு,'' என, பணிப்பெண்ணிடம் கூறினாள்.
அவளுக்கு, சபாபதியை அறிமுகப்படுத்தினாள், சுசீலா.
''அப்படீங்களா... நான் பாத்ததே இல்லையே,'' என்றாள்.
''வந்தாத்தானே பாக்கறதுக்கு... இன்னிக்கு தான் அவருக்கு வழி தெரிஞ்சிருக்கு,'' என்ற சுசீலா, அவளுக்கு, டீ போட்டு கொடுத்தாள்.
''உனக்கு காபி தானேண்ணே?'' சமையலறையில் இருந்தபடியே, கேட்டாள்.
''வேண்டாம்மா... இப்பெல்லாம் ரெண்டாவது காபி குடிக்கறதில்ல.''
''வந்த இடத்துல குடிக்கலாம்... தப்பில்ல,'' புதிதாக இறக்கிய, 'டிக்காஷனில்' காபி கலந்து தந்தாள்.
''நல்ல காபி பொடி... அருமையா இருக்கு,'' என்றார், சபாபதி.
''ஆமாண்ணே... வீட்டுக்கு பக்கத்துலேயே கடை இருக்கு... கேட்கும்போது, அரைச்சு தருவான்... அதான் மணமா இருக்கு,'' என்றாள்.
''அங்கே, 'இன்ஸ்டன்ட்' காபிதாம்மா... 'பில்டர்'ல போட்டு ஊத்தறதுக்கெல்லாம் அவளுக்கு நேரமில்ல,'' என்றார்.
''அது ஒண்ணும் பெரிய கம்பசூத்திரம் இல்லேண்ணே... நீயே கூட செய்யலாம்,'' என்றாள்.
சபாபதிக்கு முதன்முறையாக சுருக்கென்றிருந்தது.
''நான் போயி எப்புடி... எனக்கு பழக்கமே கெடையாதேம்மா,'' என்றார்.
''பழக்கப்படுத்திக்க வேண்டியது தான்... எனக்கு உடம்பு சரியில்லேன்னா, பாதி வேலை செஞ்சிடுவான், ஜீவா. ஆம்பளைய வேலை வாங்கக் கூடாதுன்னு அவளும் நெனக்க மாட்டா... நாம எதுக்கு வேலை செய்யணும்ன்னு இவனுக்கும் தோணாது... காலம் மாறிப் போச்சுண்ணே... காலத்துக்கு தகுந்தாப்ல நாமளும் வாழ பழகிக்கணும்,'' என்றாள்.
''நீ பழகிட்டியா?''
''அதனால தான் இந்த வீட்டுல நிலைச்சு இருக்கேன்... நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னா, யாரோடவும் சமரசமா போக முடியாதுண்ணே,'' என்றாள்.
சுசீலா பேசியபடியே, வேலைக்கார பெண்ணுக்கு உத்தரவுகள் பிறப்பித்தாள். ஆச்சர்யத்துடன் பார்த்தபடி அமர்ந்திருந்தார், சபாபதி.
''என்ன பாக்குற... என்னென்னமோ பேசறாளேன்னு ஆச்சரியமா இருக்கா... உண்மைய தான் சொல்றேன்... ஒரே வீட்டுல வாழ்ந்தாலும், ஒட்டாம உறவாடறது தான் இப்ப உள்ள கலாசாரம்... அதுக்கு ஒத்து போயிட்டா நமக்கு எந்த பிரச்னையுமில்ல,'' என்றாள்.
''நடைமுறையில அது கஷ்டம் ஆச்சேம்மா,'' என்றார், சபாபதி.
''ஆரம்பத்துல கஷ்டமா இருக்கும்... அப்புறம், அதுவே பழகிடும்... இப்ப என்னையே எடுத்துக்க... யார், யாருக்கு என்னென்ன தேவையோ செஞ்சு கொடுப்பேன்... ஒரு கேள்வி கேட்க மாட்டேன்...
''அதனால, பேச்சு வார்த்தைக்கே இடமில்லாம, வீடு அமைதியா இருக்கும்... ஒரு வழியா எல்லாரும் போனதும், அக்கடான்னு உட்கார்ந்துடுவேன். 'டிவி'யில பழைய பாட்டு, சினிமா போட்டா கொஞ்ச நேரம் பார்ப்பேன்...கொஞ்ச நேரம் கண்ணை மூடி, பழைய நினைவுகள்ல மூழ்கிடுவேன்... சின்ன வயசுல அடிச்ச லுாட்டி, அவரோட வாழ்ந்த சுகமான நாட்கள்ன்னு சந்தோஷமான தருணங்கள் கண்ணுக்குள்ள விரியும்.
''நம்மள மாதிரி, முதுமை பருவத்துல இருக்கவங்க, அசை போடுற மாடுகளா இருக்கறதுதாண்ணே நல்லது... பழைய நினைவுகளை அசை போடுற அசை மாடுகள்... நடைமுறை வாழ்க்கையோட ஒத்துப்போக முடியாதவங்க, பழைய வாழ்க்கையை நெனச்சு ஆறுதல் அடைஞ்சிக்கணும்,'' என்றாள்.
''அப்ப , உனக்கும் ஒத்துப்போகலைன்னு ஒத்துக்கறியா?''
''ஒத்துப்போகுதா, போகலையான்னு நான் யோசிக்கறதே இல்ல... அவங்கவங்க வாழ்க்கை, அவங்கவங்களோட தனிப்பட்ட விருப்பம்... அதை மாத்தவோ, திருத்தவோ நமக்கு உரிமையில்ல...
''இந்த கரையில நின்னுகிட்டு, ஆத்தோட அந்த கரையில நடக்கறதை வேடிக்கை பார்க்குற மனோபாவத்தோட இருந்துடணும்... அப்ப தான் எந்த கோளாறும் இல்லாம நாள் ஓடும்... புரியுதாண்ணே,'' என்றாள்.
''புரியுதும்மா,'' என்று, பெரிதாக தலையாட்டினார், சபாபதி.
''அப்புறம்... சாப்பாட்டை பெரிய விஷயமா நெனக்காதே... சின்ன வயசுல நாம சாப்புடாத சாப்பாடா... நச்சில்லாத காத்தை சுவாசிச்சு, கல்கண்டாட்டம் ருசிக்கிற தண்ணி குடிச்சு, ரசாயன கலப்பில்லாத காய்கறிங்க சாப்புட்டு வளர்ந்தவங்க நாம... இப்ப நாம சாப்புடற சாப்பாடு, நம் வாழ்நாளை கடத்தத்தான்...
''அதனால, மருமக, பாக்கெட் மாவுல இட்லி ஊத்தி கொடுக்கறாளேன்னு கோவிச்சுக்காதே... ரெண்டு இட்லி சாப்புட்டுட்டு, தெரு முனையில இருக்கற பொட்டிக்கடையில ஒரு வாழைப்பழம் வாங்கி தின்னுக்கோ... பசி அடங்கிடும்... அவ்ளோ தான் வாழ்க்கை,'' என்றாள்.
பிரமிப்புடன் அவளையே பார்த்தார், சபாபதி.
அதிகம் படிக்காதவள். கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். மகனை முன்னிட்டே சென்னைக்கு வந்தாள். இன்று, பெரிய வேதாந்தி போல் பேசுகிறாள். சிறுவயதில் தொட்டதற்கெல்லாம் அழுவாள். 'அழுமூஞ்சி சுசீலா...' என்று எல்லாரும் அவளை கிண்டலடிப்பர்...
அப்படிப்பட்டவள், இன்று, ஒரு குடும்பத்தை சிதறாமல் நிர்வகிக்கிறாள்; வாழ்க்கை தத்துவம் பற்றி பெரிதாக பேசுகிறாள். ஐம்பதை கடந்தவளுக்கே இவ்வளவு முதிர்ச்சியா என்று, சபாபதிக்கு ஆச்சர்யமாக இருந்தது.
'பொம்பள புள்ளைய அதிகம் படிக்க வெச்சா தலைக்கனம் ஏறிடும், சபா. அதனால தான் பத்தாவதோட நிறுத்திட்டேன்...' என்று, சித்தப்பா ஒருமுறை பேச்சுவாக்கில் சொன்னபோது, சபாபதிக்கு வருத்தமாக இருந்தது.
பின்னொரு நாளில், சுசீலாவின் கணவர் அகால மரணம் அடைந்தபோது, சித்தப்பாவின் மேல் இமாலய கோபம் வந்தது.
'சுசீலாவை படிக்க வெச்சிருந்தா, மாப்ள வேலைய அவளுக்கு போட்டு கொடுத்திருப்பாங்க... அவளும் தைரியமா வாழ வழி கெடைச்சிருக்கும்... அநியாயமா அவ படிப்பை பாதியில நிறுத்தி பாதகம் செஞ்சிட்டாரே சித்தப்பா...' என்று புலம்பி தீர்த்தார்.
ஆனால், படித்திருந்தால் கூட, அவள் இவ்வளவு தெளிவாய் இருப்பாளா என்று எண்ணும்படியாக அப்படியொரு தெளிவு, நறுவிசு; பிரமிப்பாக இருந்தது, சபாபதிக்கு.
''சரிம்மா... நான் கெளம்பறேன்,'' எழுந்தார், சபாபதி.
''நிம்மதியா இருண்ணே... பிள்ளையா இருந்தாலும் அவன்கிட்ட ரொம்ப எதிர்பார்க்க கூடாது... தினமும் சாயங்காலம் ஆபீஸ் விட்டு வீட்டுக்குள்ள நுழையும்போதே , 'எப்படி இருக்கேம்மா...'ன்னு கேட்பான், ஜீவா.
''நல்லா இருந்தாலும், இல்லேன்னாலும், 'நல்லாயிருக்கேன்டா...'ன்னு சிரிச்சிகிட்டே சொல்லுவேன்... நிம்மதியா போயிடுவான். அதை விட்டுட்டு, அவன் நம்மளை தாங்குவான்னு நெனச்சு, 'உடம்பே முடியலடா...'ன்னு உள்ளதை சொன்னா, 'நாளைக்கு போயி, டாக்டர்கிட்ட காட்டும்மா...'ன்னு சொல்லிட்டு போயிடுவான். நமக்கு பொசுக்குன்னு ஆயிடும்... எதுக்கு இதெல்லாம்,'' என்றாள்.
''அதுவும் சரி தான்,'' என்றவர், மூக்குக்கண்ணாடியை துடைத்து மாட்டிக் கொண்டார்.
''பொதுவா ஆம்பளைங்க, 'அட்ஜஸ்ட்' பண்ணிகிட்டு இருந்துடுவாங்க... பொம்பளைங்களால அது முடியாதுன்னு சொல்லுவாங்க... உன்னைப் பார்த்த பின், அது தப்புன்னு தோணுது... நீ சாதாரண மனுஷி இல்லேம்மா... யதார்த்தத்த புரிஞ்சிகிட்டு வாழுற அற்புத மனுஷி,'' என்றார்.
''அற்புத மனுஷின்னு ஒசரத்துல துாக்கி வெச்சிட்டியே... உண்மைய சொல்லணும்ன்னா, நானும் பாசத்துக்கு ஏங்குற அற்ப மனுஷி தான். அது எனக்கு கெடைக்குற இடத்துல நானும் கொட்டுவேன்... வேணாங்குற இடத்துல சீந்தக்கூட மாட்டேன்.
''பேரப் புள்ளைங்கன்னா எனக்கு உசிரு... அதுங்களுக்கும் எம்மேல அவ்ளோ பிரியம்... இப்ப நான் சொன்ன ஒட்டி, ஒட்டாம நிக்கிறது, காலத்துக்கு தகுந்த மாதிரி வாழறதெல்லாம் வாழ்நாளை கடத்தத்தான்; சண்டை, சச்சரவில்லாம சமரசமா வாழத்தான். ஆனா, இந்த உசிரு தேங்கி நிக்கிறது, என் பேரப் புள்ளைங்களால தான்,'' என்றாள்.
இதைச் சொன்னபோது, சுசீலாவின் கண்கள் பனித்தன; சபாபதிக்கு புரிந்தது.
''பஸ் டிப்போ ஓரமா, நுங்கு வெச்சு வித்துகிட்டிருக்காங்க... நுங்குன்னா சின்ன பேரனுக்கு ரொம்பப் புடிக்கும்... நான் வாங்கிட்டு அப்புடியே கெளம்புறேன்,'' என்றவர், மெதுவாக, ''பில்டர்ல காபி துாளை போட்டு, பச்சைத்தண்ணி ஊத்தணுமா, வெந்நீர் ஊத்தணுமா?''
''வெந்நீரு தான்,'' என்ற சுசீலா, வாய் பொத்தி சிரித்தாள்.

ஐ.கிருத்திகா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanaa - Afghanistan,ஆப்கானிஸ்தான்
13-பிப்-201912:29:37 IST Report Abuse
Saravanaa மிகவும் அருமையான கதை மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் ஐ.கிருத்திகா
Rate this:
Share this comment
Cancel
Saravanaa - Afghanistan,ஆப்கானிஸ்தான்
13-பிப்-201912:23:34 IST Report Abuse
Saravanaa மிகவும் அருமையான கதை..வாழ்த்துக்கள் ஐ.கிருத்திகா .. மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்..
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
12-பிப்-201900:03:24 IST Report Abuse
Manian சிறு வயது முதல் ஆன் பிள்ளைகளுக்கும் சமையல் காரு தர வேண்டும். தில் கேவலம் ஒன்றும் இல்லை. வயதான பின்னும் சோம்பேறித்தம், புதிதிக கற்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வருவதில்லை என்பது கேள்வி. "அகலாது அணுகாது தீ கைவர போல்" என்று சொல்வார்கள்- தீ கிடடே போனால் சுடும், தள்ளி போனால் சூடு தராது அதுபோலவே உறவுகளும் நண்பர்களும். சபாபதி போன்றவர்களுக்கு ஆண் நண்பர்களும் இல்லையா? ஆரம்பம் முதல் வீட்டிலே மனைவிக்கு முடிந்த அளவு உதவி செய்திருந்தால் இந்த சுய பச்சாதாப நிலை வராது. மேலும், வயது மஃமுதிந்தவர்கள் பிறை தங்களை கவனிக்க வேண்டும் என்று ஏன் எண்ணுகிறார்கள்?. அவர்கள்தானே இளையவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். சப்பாத்தி அந்த காலத்து ஆளு என்று கதை சொல்கிறது. அவர் இப்படி சொல்லி இருக்கலாமே- நானே எல்லாம் செய்துக்கலாம் என்று நினைக்கிறன், ஆனால் தவறு நடந்து மருமகள் கோவித்து கொள்வாளோ என்று பயமாக இருக்கிறது. அப்போ, தங்கை என்ன சொல்லி இருப்பாள்- இது பாருங்க அண்ணா, மருமகள் கிடடே , தாயி, என்ன எனா சீனா சீனா உதவி வேண்டும் என்று சொல்லம்மா. நீயும் என் பெண் தானே என்றால், அவள் வழி காடி இருப்பாள்(பொதுவாக). அப்படி கதை போயிருந்தால் சிலருக்காவது ஒரு படிப்பினையாக இருக்குமே சுசிலா சில உண்மைகளை சொன்னது நிஜ வாழ்க்கையில் மனது முதிர்ச்சி அடைந்தவர்கள் செய்வதே. பேரின்-பாடி அனுப்புக்கு ஈடு உண்டோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X