பாம்புகளில் கண்ணாடி விரியனும் மலைப்பாம்பும் ஒரு மாதிரி தெரியக்கூடும். கிராமத்தில் இவ்விரு பாம்புகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் சிலர் அதைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். மலைப்பாம்பு என்று நினைத்து கண்ணாடிவிரியனைப் பிடித்து, கடிபட்டவர்கள் உண்டு. அதனால், இவ்விரு பாம்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தெரிந்துகொள்வது அவசியம். அதன் முக்கியமான தோற்ற வேறுபாடுகளைப் பார்ப்போம்.
கண்ணாடிவிரியன் பாம்பிற்கு முக்கோண வடிவில் தலை இருக்கும். அதனுடைய கழுத்து, தலையைவிடச் சிறியது. உடல் முழுக்க, கருப்புநிற செதில் அமைப்பு சங்கலித் தொடர்போல் காணப்படும். மூக்குத் துவாரங்கள் பெரிதாக இருப்பதோடு, தோலும் வறண்டு காணப்படும்.
இந்திய மலைப்பாம்புகளின் உடலில் தலை முதல் வால் வரையிலும் முறையற்ற செதில் (Irregular blotches) அமைப்பு காணப்படும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் சில மலைப்பாம்புகளின் தோல் பளபளப்பாக இருக்கும்.
இந்தியாவில் 3 வகையான மலைப்பாம்புகள் உண்டு. இந்திய மலைப்பாம்பு, பர்மீஸ் மலைப்பாம்பு ரெட்டிகுலேட் மலைப்பாம்பு.
இதில் இந்திய மலைப்பாம்பு வகையை, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் தவிர பிற மாநிலங்களில் காணலாம். மற்ற இரண்டு வகைகள், வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே காணப்படுகின்றன.
மலைப்பாம்பின் உணவு
மலைப்பாம்புகள், மான்கள், காட்டுப் பன்றிகள், முயல்கள் போன்றவற்றை வேட்டையாடி உண்ணும். விழுங்கப்பட்ட உணவு செரிமானம் ஆக பல வாரங்களோ, மாதங்களோ ஆகலாம். அதனால், மலைப்பாம்புகள் பல நாட்கள் உணவின்றி வாழும்.
உணவுத் தட்டுப்பாட்டு அவலம்
மலைப்பாம்புகள் அடர்ந்த வனப்பகுதி, மழைக்காடுகளில்தான் வாழ்கின்றன.
உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்போது வேறுவழியின்றி மனிதர்கள் வாழும் கிராமப்புறங்களுக்கு வருகின்றன. அங்கு கோழி, ஆடு, நாய் போன்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணும்.
நச்சற்ற காயம்
இந்திய மலைப்பாம்புகள் நச்சற்றவை. ஆனாலும், அதன் வாயில் கூர்மையான பற்கள் இருப்பதால், வலியும், ரத்தக்கசிவும் இருக்கும். கடிபட்ட இடத்தில் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் இருக்கும். நச்சற்ற பாம்புகள் என்றாலும், மருத்துவரின் ஆலோசனை பெறுவது ஆரோக்கியத்திற்கு அவசியம்.
- முனைவர் ந.ச.மனோஜ்