பருவச்சூழல் மாறுபாடுகளால் நமக்கே கடும் குளிரைத் தாங்க முடியவில்லை. தவளை, தேரை போன்ற நீர்வாழ் உயிரினங்கள் குளிர்காலத்தை எப்படிச் சமாளிக்கின்றன?
தவளை, தேரை போன்றவை இடும் முட்டைகள், குளிர்ச் சூழலில் பிரச்னைகளைச் சந்திக்கின்றன. குறிப்பாக, உறைபனிக் காலங்களில் குளத்தின் மேற்பரப்பில் இருக்கும் அவற்றின் முட்டைகள் குளிரைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சிதைந்து போகின்றன. அதேசமயம், குளத்தின் அடிப்பரப்பில் வாழும் தவளை, தேரை ஆகியவற்றின் முட்டைகள் ஓரளவு சமாளித்துக் கொண்டு உயிர் பிழைக்கின்றன.
நீரின் அடியில் தவளைகள்
குறிப்பிட்ட சில பல்லி இனங்களின் முட்டைகள் மற்றும் தவளைக் குடும்பத்தைச் சேர்ந்த தேரை போன்றவற்றின் முட்டைகள் கடுங்குளிரைத் தாங்கும் இயல்பைக் கூடுதலாகப் பெற்றுள்ளன.
பனிக்காலங்களில் தேரைகள் நீர்நிலைகளின் அடிப்பரப்பில் முட்டைகளை இட்டு, தங்களுடைய சந்ததிகளைக் காப்பாற்றிக் கொள்கின்றன. பொதுவாக, நீர்நிலைகளின் அடிப்பரப்பில் தவளைகள் வாழும்பொழுது இயக்க நிலையில் இருக்காது. அவை செயலற்ற நிலையில்தான் இருக்கும்.எனினும் அதன் சுவாசம் நிற்காது.
தவளைகள் சுவாசிப்பது எப்படி?
பொதுவாக நீர்வாழ் உயிரினங்கள், அதன் தோலின் வழியாகச் சுவாசிக்கின்றன. தவளைகள் வாழ்கின்ற நீர்நிலைகளின் ஆழ்பரப்பில் போதுமான ஆக்சிஜன் இருந்தால், உறைபனியிலும்கூட தவளைகள் வாழும்.
இதையும் மீறி தவளைகள் இறந்தால், அதற்குக் காரணம் நச்சு வாயுக்களே. நீர்நிலைகளில் மிதக்கும் இலைகளுக்கு இயற்கைச் சிதைவு (Natural decomposition) ஏற்படும். அதிலிருந்து வெளியாகும் நச்சு வாயுக்கள் நீர்நிலையின் தன்மையை மாற்றுகின்றன.
நச்சு வாயுக்கள் நீர்நிலையிலிருந்து வெளியேற முற்படும். ஆனால், உறைபனிக் காலங்களில் குளத்தின் மேற்பரப்பு முழுவதும் பனியால் மூடப்பட்டுவிடும்.
இதனால் நச்சு வாயுக்கள் குளத்தைவிட்டு வெளியேற முடியாமல் நீரில் கரையும். நீரில் கரைந்துள்ள இந்த நச்சு வாயுவை சுவாசிக்கும் தவளைகள், பரிதாபமாக இறந்து போகின்றன.
- சு.கவிதா