கடந்த இரண்டு வாரங்களாக எங்கள் பள்ளியில் புதிய பழக்கம் ஒன்று ஆரம்பித்திருக்கிறது. முன்பெல்லாம் மதிய உணவு இடைவேளைக்கான மணி அடித்தவுடன், நாங்கள் வகுப்புகளைவிட்டு வெளியே வந்துவிடுவோம். மைதானத்தில் இருக்கும் மரங்களுக்குக் கீழே குழுகுழுவாக உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவோம். இப்போது அதை எங்கள் பள்ளி நிறுத்திவிட்டது. வகுப்பிலேயே சாப்பிட வேண்டும். வகுப்பு ஆசிரியர் அந்தச் சாப்பாட்டு நேரத்திலும் எங்களோடுதான் இருப்பார்.
கொஞ்சம் இம்சையாக இருந்தது. ஒரே ஒரு செளகரியம், யாரோடு சேர்ந்து சாப்பிடவேண்டும் என்று விரும்புகிறோமோ அவர்கள் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொள்ளலாம். ஆனால், வகுப்பில்தான் சாப்பிட வேண்டும்.
இதேபோல், இரண்டு மூன்று தடவை ஒரு விஷயத்தை எங்கள் வகுப்பு ஆசிரியர் சொல்லிக்கொண்டே இருந்தார். “யார் உங்களைக் கேலி செய்தாலும், குத்திக் காட்டினாலும், எரிச்சல் மூட்டினாலும், சண்டைக்கு இழுத்தாலும், உடனே என்னிடம் வந்து சொல்லிவிடுங்கள்… நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.
இதுவரை யாரும் என்னை வம்புக்கு இழுத்ததில்லை. நானும் யாருடைய வம்புக்கும் போனதில்லை. அதனால், ஆசிரியரிடம் போய்ச் சொல்வதற்கு எந்த விஷயமுமில்லை. ஆச்சரியம் தரும் விதமாக, பலபேர் அவரிடம் போய் பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.
இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கூப்பிட்டு, வகுப்பு ஆசிரியர், பேசியதையும், எச்சரிக்கை விடுத்ததையும் பின்னால் தெரிந்துகொண்டேன்.
ஒருமாதிரி கதகதப்பாக இருப்பதாகத் தோன்றியது. ரொம்ப நெருக்கமாகவும் தோன்றியது. என் தோழர்கள் பலரது முகங்களில் ஒருவித நிம்மதி தெரிந்தது. எல்லாம் இந்த இரண்டு வாரங்களில் தான்.
“வம்புக்கு இழுப்பது, சண்டை போடுவது எல்லாம் இன்னிக்கு ஸ்கூல்கள்ல பெரிய பிரச்னை. இங்கிலீஷ்ல இதுக்கு புல்லியிங் (Bullying) என்று பேரு. யுனெஸ்கோகூட சமீபத்துல இதைப் பத்தி ஒரு சர்வே வெளியிட்டு இருக்கு…” என்று விளக்க ஆரம்பித்தார் உமா மிஸ்.
“ஓ! என்ன சொல்லி இருக்கு மிஸ்?”
“மூணு மாணவர்கள்ல ஒருத்தர் நிச்சயம் இதுமாதிரியான புல்லியிங்கால் பாதிக்கப்பட்டு இருக்காங்க. அதனால, அவங்க படிப்பு பாதிக்கப்படுது, மத்தவங்களோட பழகுற விதம் பாதிக்கப்படுது, எதிர்காலத்தைப் பத்திய நம்பிக்கையே பாதிக்கப்படுதுன்னு சொல்றாங்க.”
“ஏன் இப்படியெல்லாம் வம்புக்கு இழுக்கறாங்க மிஸ்?”
“இதுக்குச் சரியான விளக்கம் கிடையாது. ஆனால், அடுத்தவங்களைக் காயப்படுத்திப் பார்க்கறது மனுஷ சுபாவம். கிண்டல், கேலி, எரிச்சல் மூட்றது எல்லாம் இப்படி வந்ததுதான். இதையெல்லாம் தப்புன்னு யாரும் சொல்லிக் கொடுக்கறதில்ல. ஜாலியா எல்லோரும் சிரிச்சுட்டுப் போயிடுவாங்க. ஆனால், அதனால ஏராளமான பேர் பாதிக்கப்படறாங்க.”
“அதனால என்ன ஆகுது?”
“பலர் படிப்பையே கைவிட்டுடறாங்க. ஸ்கூலே வெறுத்துப் போகுது. நிறைய லீவா போடுவாங்க. ஸ்கூல் ரொம்ப அன்னியமா ஆயிடும். ஸ்கூல்ங்கற ஒரு சந்தோஷமான இடம். ஆனால், இப்படி சண்டை, கேலி, கிண்டல்ல பாதிக்கப்படறவங்களுக்கு, ஸ்கூலே ஒரு பெரிய டார்ச்சர் சென்டராக ஆயிடும். பயப்பட ஆரம்பிச்சுடுவாங்க.”
உமா மிஸ் சொல்லச் சொல்ல, எனக்கு பல நண்பர்கள் ஞாபகம் வந்தார்கள். வாயைத் திறந்து சொல்லாமல், மனசுக்குள்ளேயே மருகிக்கொண்டு, தங்கள் கஷ்டங்களைச் சுமந்துகொண்டு இருந்தார்கள்.
“கரெக்டுதான் மிஸ். சுதர்சன் கூட மார்க் கம்மியாப் போச்சுன்னு ரொம்ப நொந்து போயிட்டான். 'என்ன மார்க் வாங்கினேன்'னு கேட்டுக் கேட்டே டார்ச்சர் செஞ்சதா சொல்வான் மிஸ்.”
“இது படிப்புல மட்டுமல்ல. ஒருத்தர் போடற டிரஸ், தோற்றம், நடக்கிற விதம், பேசற விதம் எல்லாத்தையும் கேலி பண்ணுவாங்க. இதனால எவ்வளவு மோசமான அவமானங்கள் ஏற்படும். தெரியுமா? பேச்சு, நடை, உடை, பாவனைகள் எல்லாம் இயற்கையா வருவது. அதுல ஏற்றத்தாழ்வு, சரி, தப்புன்னு எதுவும் இல்ல. ஆனால், கிண்டல் செய்யறவங்களுக்கு இதெல்லாம் தெரியாது. மத்தவங்களை மட்டம் தட்டுறதே பெரிய சாமர்த்தியம்னு நினைப்பாங்க. அடுத்தவங்களைப் பேசவிடாமல், தாங்கள் மட்டுமே பேசுவதுகூட ஒருவகையில புல்லியிங் தான்.”
“சரி மிஸ். எதுக்கு கிளாஸ்லேயே உட்கார்ந்து சாப்பிடச் சொல்றீங்க?”
“இதே பிரச்னைதான். பெங்களூருவுல தி டீச்சர் பெளண்டேஷன்னு ஓர் அமைப்பு இருக்கு. அவங்க செஞ்ச ஆய்வுல ஒரு விஷயத்தைக் கண்டுபிடிச்சு இருக்காங்க. மதியம் சாப்பிடும்போது பல பசங்க, ரொம்ப தனிமையை உணர்வதா சொல்லியிருக்காங்க. அதாவது, கூட யாரும் ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. பகிர்ந்துகொள்ள எதுவும் கிடையாது. அதேபோல், விளையாட்டு பீரியடிலும் யாரும் இவங்களைக் கவனிக்கறதே இல்லைன்னும் சொல்றாங்க.
நம்ம ஸ்கூல்லேயே இதையெல்லாம் பார்க்கலாம். ஒருசில பசங்கதான் குழுகுழுவா சாப்பிடுவாங்க. இன்னும் கொஞ்சம் பசங்க, தனியா உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருப்பாங்க. விளையாட்டுலேயும் அவங்களைச் சேர்த்துக்க மாட்டீங்க. அவங்ளோட மனநிலையை யோசிச்சுப் பாரு. எவ்வளவு பாடுபடும்?
அதனால்தான், கிளாஸ்லேயே எல்லா பசங்களும் சாப்பிடணும்னு மேனேஜ்மென்ட் சொல்லியிருக்கு. குறைந்தபட்சம் ஒருசில நட்புகளாவது கிடைக்கும் இல்லையா?”
“ஆனா மிஸ், இதுல அந்த பசங்கதான் வந்து சேர்ந்துக்கணுமே தவிர, நாங்களா போய் அவங்களல கூப்பிட்டுக்கிட்டே இருக்க முடியும்?”
“கரெக்டுதான். ஆனால், பல பசங்களுக்கு அடுத்தவங்களோட இயல்பா பழகத் தெரியாது. வீட்டுல சிங்கிள் பேரன்டா இருப்பாங்க. வேற ஏதாவது குடும்ப கஷ்டம் இருக்கும். அதெல்லாம் சேர்ந்துதான் ஒருத்தரை சமூகத்துல இயல்பாக பழக வைக்குது. அல்லது பழகவிடாமல் தடுக்குது. இதை ஒரு குறையாகப் பார்க்கக்கூடாது. அவங்களையும் எப்படி குரூப்புல சேர்த்துக்கறதுன்னு பார்க்கணும். இப்படி யோச்சுப் பாரு. உன்னை யாருமே கண்டுக்கல, உன்னுடைய திறமைகளை அங்கீகரிக்கல, ஒதுக்கிவெச்சு இருக்காங்கன்னா, அது எவ்வளவு வலிக்கும்? புறக்கணிப்புங்கறது மிகப்பெரிய துக்கம். அதைத்தான் சரிசெய்ய முயற்சி செய்யறோம்.”
ஒருகணம், உமா மிஸ் சொன்ன வலி என்னைத் திகைக்க வைத்துவிட்டது. நான் யோசிக்க ஆரம்பித்தேன்.
உங்கள் கவனத்துக்கு!
ஆசிரியர்களுக்கு
* ஏன் ஒரு மாணவர் தனிமை விரும்பியாக இருக்கிறார், பிற மாணவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அவரை மீட்கவேண்டும்.
* தோற்ற, உடல் குறைபாட்டைச் சொல்லி அழைப்பதையோ கேலி செய்வதையோ தடுக்கவேண்டும்.
மாணவர்களுக்கு
* தோற்ற, உடல் குறைபாடுகள் ஒரு பொருட்டே அல்ல. அதையும் மீறி சாதிக்க முடியும் என்பதை நீங்கள் நம்புங்கள்.
* உங்களுக்கென்று தனித்திறமை ஒன்றை வளர்த்துக்கொள்ளவும். எப்படிப்பட்ட குறையிருந்தாலும், அது உங்களுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துவிடும்.