'அமெரிக்கா வேண்டாம் என்று ஐ.பி.எஸ். ஆனேன்!' - குக்கிராமப் பெண்ணின் சாதனைப் பயணம் | பட்டம் | PATTAM | tamil weekly supplements
'அமெரிக்கா வேண்டாம் என்று ஐ.பி.எஸ். ஆனேன்!' - குக்கிராமப் பெண்ணின் சாதனைப் பயணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 பிப்
2019
00:00

“நியூயார்க்கில் தங்கியிருந்தபோது, ஜன்னல் வழியே சாலையைப் பார்ப்பேன். மஞ்சள் பெட்டிகள் போல் கால்டாக்சிகள் சாலைகளில் ஊர்ந்து செல்லும். மக்கள் பரபரப்பாகச் சென்று கொண்டிருப்பார்கள். நமக்கு, அமெரிக்கா என்றாலே இந்தக் காட்சிகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், என் மனமோ தாய்நாட்டுக்காக ஏங்கும்.
என் தாயின் சிரிப்பு, பாட்டியின் அரவணைப்பு, ஊர் மக்களின் அன்பு எல்லாம் நினைவில் வந்துபோகும். துயருற்றவர்களின் கண்களில் வழியும் நீரை துடைப்பதுதான் உண்மையான மனத்திருப்தி என்ற காந்தியின் வார்த்தைகள், மீண்டும் என்னை இந்தியாவுக்கே அழைத்து வந்துவிட்டன” என்கிறார் இல்மா அஃப்ரோஸ் ஐ.பி.எஸ்.
உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத்தில் உள்ள குண்டார்க்கி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சாதனைப் பெண், இல்மா.

வாழ்வை மாற்றிய புற்றுநோய்
குடிமைத் தேர்வில் பங்கேற்ற இல்மா அஃப்ரோஸ், தேசிய அளவில் 217வது ரேங்க் பெற்று, ஐ.பி.எஸ். ஆகத் தேர்வாகியுள்ளார். அமெரிக்கக் கனவு தன்னை ஆட்கொண்டாலும், தன் ஆன்மா இந்தியாவிலேயே விருப்பம் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார் இல்மா அஃப்ரோஸ்.
“எனக்குப் 14 வயதாகும்போது, என் தந்தை புற்றுநோயால் இறந்தார். குடும்பத்தைத் தாங்கி நின்ற அவரின் இழப்பிலும், என் அம்மா நிலைகுலையவில்லை. திடமாக உழைத்து, என்னுடைய கல்விக்கு ஊக்குவித்தார். என் தம்பி, என்னுடைய திருமண வரதட்சணைக்காகப் பணம் சேர்க்கவில்லை. அந்தப் பணத்தை என் படிப்புக்காகச் செலவழித்தான். இன்று நான் ஐ.பி.எஸ் ஆக ஜெயிக்க, அதுவே முக்கிய காரணம்.

அறிவு ஒளி
என் இளநிலைக் கல்லூரிக் காலங்களை வாழ்வில் முக்கிய கட்டமாகக் கருதுகிறேன். புது டில்லியில் உள்ள, பிரபல செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில், பி.ஏ. தத்துவம் படித்தேன். இந்தியாவின் ஆறு தத்துவ சிந்தனைப் பள்ளிகளை அறியும் வாய்ப்பு அங்குதான் கிடைத்தது. வேற்றுமைகள் இருந்தாலும், அதை உள்ளடக்கியதுதான் இந்தியாவின் பலம். 'அறிவுதான் எல்லாவற்றுக்குமான ஒளி' என்கிறது கேன (Kena) உபநிடதம். என் சிந்தனைகளை விரிவாக்கிய பல சம்பவங்கள் அங்கு நிகழ்ந்தன. எங்கள் பேராசிரியர்கள் வகுப்பிலும், அதற்கு வெளியேயும் நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தார்கள்” என்றார்.

மக்கள் பணி
பின்னர், லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். அங்கு, நடந்த சித்தாந்த விவாதங்கள் இல்மாவின் அறிவை விரிவாக்கின. அதற்குப் பிறகு, இல்மாவுக்கு அமெரிக்காவின் மான்ஹன்டனில் வேலை கிடைக்க, அங்கு இடம்பெயர்ந்திருக்கிறார். பிடித்த வேலை, நல்ல சம்பளம் என வாழ்ந்தாலும், இல்மாவுக்கு மனத்தில் ஏனோ திருப்தி இல்லை.
"விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது, ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க, கண்புரை நீக்க அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும்படி வயதானவர்கள் கேட்டனர். நம் அமெரிக்க கனவைவிட, இங்கிருக்கும் வறியவர்களின், எளியவர்களின் துயரைத் துடைப்பதே சிறந்தது” என்ற முடிவுக்கு வந்தேன். அதன்பிறகு, யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பித்து, முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ். ஆகத் தேர்வு பெற்றேன்.

கடமை
'ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்' என்ற காந்தியின் கனவைச் செயலாற்றும் சிறு முயற்சியில் என்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். இந்திய அரசியலமைப்பு சாசனத்தைக் காப்பாற்றுவதுதான் என் கடமை” என்றார் இல்மா அஃப்ரோஸ்.

Advertisement

 

மேலும் பட்டம் செய்திகள்:



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X