இரண்டு வினைச்சொற்கள் அடுத்தடுத்து வருவது வினையெச்சத் தொடர் ஆகும். அவ்விரண்டு சொற்களில் முதற்சொல் முழுமை பெறாமல், எஞ்சி இருத்தல் கட்டாயம். ஒரு வினையெச்சச் சொல்லின் கடைசி எழுத்தோசை என்ன என்று பார்த்து, அங்கே வலி மிகுவிக்க வேண்டும். கடைசி எழுத்தோசை என்பதை ஈற்றோசை, ஈற்றெழுத்து என இலக்கணத்தில் வழங்குவார்கள்.
அ, இ, உ ஆகிய மூன்று குறில்களும் ஒரு வினையெச்சச் சொல்லின் கடைசி எழுத்தாக அமையும்.
ஓடிப் போனான், கட்டிப் பிடித்தான், அழுத்தித் திறந்தான்- இத்தொடர்களைப் பாருங்கள். ஓடி, கட்டி, அழுத்தி போன்ற எச்சவினைகள் முதற்சொல்லாக அமைந்திருக்கின்றன. ஓடி என்பதன் கடைசி எழுத்தோசை இ. டி என்பது ட்+இ என்பதால் அதன் ஈற்றெழுத்தாக இ என்னும் எழுத்தைக் கருதலாம். அவ்வாறே கட்டி, அழுத்தி ஆகிய சொற்களின் ஈற்றோசையும் இ என்பதுதான்.
ஒரு வினையெச்சச் சொல்லின் ஈற்றெழுத்து இ என்று முடிந்து, இரண்டாம் சொல் ஒரு வினைச்சொல் வகைக்குள் அமைந்தால், அங்கே கட்டாயம் வலி மிகுதல் வேண்டும். மேற்சொன்ன எடுத்துக்காட்டுகளில் வலி மிகுந்திருக்கின்றன.
எ.கா:
அள்ளித் தின்றான்
முட்டித் தள்ளிய
பற்றிக் கொண்ட
பாடித் திரிந்த
அ என்ற ஈற்றோசையை உடைய வினையெச்சங்களும் இருக்கின்றன. வரச் சொன்னான், பாடக் கேட்டார்கள், நிற்கத் தெரிந்தது - இத்தொடர்களை எடுத்துக் கொள்ளுங்கள். முதற்சொற்களாய் அமைந்த எச்ச வினைகளான வர, பாட, நிற்க ஆகியவை அ என்ற ஈற்றோசையில் முடிந்தன.
அ என்ற ஈற்றோசையில் முடியும் வினையெச்சச் சொல்லை அடுத்து, வல்லினத்தில் தொடங்கும் வினைச்சொல் வகைகளில் ஒன்று வருமெனில், அங்கே கட்டாயம் வலி மிகும்.
மேலே கூறிய எடுத்துக் காட்டுகளில் வலி மிகுந்தன.
படித்த பாடம் என்பதில் முதலில் வரும் எச்சவினையான படித்த என்பது, அ என்ற ஈற்றோசையில் முடிந்தும் அங்கே ஏன் வலி மிகவில்லை? ஏனென்றால், படித்த என்பதை அடுத்து வந்தது பாடம் என்ற பெயர்ச்சொல்.
அ என்ற ஈற்றோசையில் முடியும் எச்சவினையை அடுத்தொரு பெயர்ச்சொல் வந்தால், அங்கே வலி மிகாது. வினைச்சொல் வந்தால்தான் வலி மிகும். இவ்வேறுபாடடை மறக்கக்கூடாது.
- மகுடேசுவரன்