எர்ன்ஸ்ட் ஹேக்கல்
16.2.1834 -- 9.8.1919
போட்ஸ்டம், ஜெர்மனி.
'மனித குலம் தோன்றியது ஆசியாவில்தான், அதிலும் குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்தில்தான்' என்பது ஹேக்கலின் கணிப்பு. உயிரினங்களின் பரிணாமக் கோட்பாட்டு வரலாற்றில், இவரது பங்களிப்பு முக்கியமானது. இதற்காகப் பல நாடுகளுக்குப் பயணித்து, ஆயிரக்கணக்கான புதிய உயிரினங்களைக் கண்டறிந்து பெயர் சூட்டினார். உயிரியல் தொடர்பான பல கலைச்சொற்களையும் அறிமுகம் செய்தது எர்ன்ஸ்ட் ஹேக்கலின் அசகாய சாதனை.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மருத்துவம் பயில பெர்லின் நகருக்குச் சென்றார். 1857இல் மருத்துவப் பட்டம் பெற்ற ஹேக்கல், சில காலம் மருத்துவராகப் பணிபுரிந்தார். விலங்கியல் ஆர்வமும் ஓவியம் வரையும் திறனும் அவருக்கு அதிகமாகவே இருந்தது. சார்லஸ் டார்வின் எழுதிய 'ஆன் தி ஆரிஜின் ஆஃப் ஸ்பீசீஸ்' (On the Origin of Species) என்ற நூலைப் படித்த பிறகு, உயிரியலில் கவனம் செலுத்தினார். 1861இல் விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
அதன் பிறகு ஹேக்கல், ஜேனா பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு உடற்கூறியல் பேராசிரியராக 47 ஆண்டுகள் பணியாற்றினார். உயிரினங்கள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக, 1866இல் கேனரி தீவுகளுக்குச் சென்றபோது டார்வினைச் சந்தித்தார்.
அறிவியல் அடிப்படையில் உயிரினங்களைப் பிரித்து, ஒரு செல் உயிரி, பல செல் உயிரி என, வகைப்படுத்தினார். பல வகை உயிரினங்கள் பற்றிய விவரங்களைச் சேகரித்துப் படங்களுடன் 'ஆர்ட் ஃபாம்ஸ் ஆஃப் நேச்சர்' (Art Forms of Nature) என்று நூலாக எழுதினார். தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கைத் தேடல்களுக்காக அர்ப்பணித்து, பல்வேறு உயிரினங்களைக் கண்டுபிடித்து, பெயரும் வைத்து இயற்கை நேய நண்பராக வாழ்ந்தவர் ஹேக்கல்.