பறக்கும் கம்பளம் (20)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2019
00:00

சென்றவாரம்: தம்பிகளை உயிர்பித்த கீர்த்தி, அவர்களுடன் கம்பளத்தில் பறந்தான். இனி -

இன்ப வண்ணன், மோகனரங்கன் இருவரும் கம்பளத்தில் பயணம் செய்ததால், பிரமித்து போயினர். அதுமட்டுமல்ல; அந்த பிரதேசத்தில், ஏராளமான வீரர்கள், குதிரை, தேருடன் சிலைகளாக நின்ற காட்சி உறைய வைத்தது.
அங்கிருந்த, ஒரு கொடியின் இலையை பறித்த கீர்த்தி, தொன்னை போல உருவாக்கி, அதில், ஜீவ நீரை ஊற்றி, தம்பிகளிடம் கொடுத்தான்.
''இதிலிருந்து, ஒவ்வொரு துளி எடுத்து, சிலைகள் மீது தெளியுங்கள்...'' என்றான்.
தானும், மந்திர நீர் துளிகளைத் தெளித்து, சிலைகளை உயிர்ப்பித்தான்.
சலனமற்று, நிசப்தமாக கிடந்த, அந்த இடத்தில், கோலாகலம் ஏற்பட்டது. சிலைகளாக உறைந்திருந்த வீரர்கள், உயிர் பெற்றனர்.
குதிரைகள் கனைத்தன; வாள்கள் மின்னின; கவசங்களும், கேடயங்களும், 'கல...கல...'த்தன. அப்போதுதான் வந்து கூடியவர்களை போல, தங்கள் மொழிகளில் உற்சாகமாக கோஷமிட்டனர் வீரர்கள்.
உலக மொழிகள் அத்தனையையும் அறிந்த கீர்த்தி, அவர்களுடன் உரையாடி, விசித்திரபுரிக்கு விருந்தினராக அழைத்தான்.
''வாழ்க... வாழ்க... இளவரசர் கீர்த்தி வர்மர் வாழ்க...''
''பனி அரக்கனை மாய்த்த பராக்கிரமர் கீர்த்தி வர்மர் வாழ்க...''
''அக்கினி அரக்கனை அழித்த அற்புத வீரர் கீர்த்தி வர்மர் வாழ்க... வாழ்க...''
''எங்கள் உயிர் காத்த உத்தமர் வாழ்க...''
இப்படி, கோஷங்கள், வானை முட்டின. வீரர்கள் அணிவகுத்ததால், ஏற்பட்ட புழுதி படலம், விசித்திரபுரியை எட்டியது. வெள்ளமென வரும் வீரர்கள் போடும் கோஷங்களை கேட்ட மந்தஹாசர் மனதில், மகிழ்ச்சி பொங்கிற்று.
கீர்த்தியின் மீதிருந்த கோபமெல்லாம், அக்கினி அரக்கன் பிடியில், பனி அரக்கனது உடல் உருகியது போல, ஓடி மறைந்தது.
'இளவரசர்கள், மூன்று பேரும் வருகின்றனர்...' என்ற தகவல் கேட்டு, மந்தஹாசர் மகிழ்ந்து, தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.
மந்திர கம்பளத்தில், மங்களகிரிக்கு வந்தனர் இளவரசர்கள். மூவரையும், ஒரு சேரக் கண்ட, மாணிக்கவர்மர் திகைத்து நின்றார்.
நடந்த விவரத்தை, சுருக்கமாக விளக்கினான், கீர்த்தி; மகிழ்ச்சியால் மலர்ந்த முகத்துடன், கேட்டபடியே இருந்தாள் குந்தளவல்லி.
''தாமதிப்பதற்கில்லை; நீங்களும், குந்தளவல்லியும் எங்களோடு, விசித்திரபுரிக்கு வாருங்கள்; கம்பளத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்...'' என்றான் கீர்த்தி.
அவன் விருப்பப்படியே, இருவரும் மந்திர கம்பளத்தில் அமர்ந்தனர்; கீர்த்தியின் அருகில், அவன் கையை பிடித்தபடி, உட்கார்ந்திருந்தாள் குந்தளவல்லி. விசித்திரபுரி வந்து இறங்கிய இளவரசர்களை, சிலை நிலையில் இருந்து எழுந்து வந்திருந்த பல தேச ராஜகுமாரர்களும், வீரர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.
இன்பவண்ணனையும், மோகனரங்கனையும் அணைத்த, மந்தஹாசர் கண்ணீர் விட்டார். கீர்த்தியை, தழுவிய மந்தஹாசர், ''என்னை மன்னித்து, இந்த நாட்டின் அரச பொறுப்பை ஏற்றுக் கொள்...'' என்றார்.
குந்தளவல்லியை, வாழ்க்கை துணைவியாக ஏற்க, ஆசியும், அனுமதியும் வேண்டி தந்தையை வணங்கினான் கீர்த்தி. குந்தளவல்லியின் எழிலில், மகிழ்ந்துப் போனார் மந்தஹாசர்.
''நாளைக்கே... மூன்று மணவறைகள் தயாராகட்டும்; நாள், நட்சத்திரம், சம்பிரதாய சடங்குகள் எதுவும் வேண்டாம். மூன்று ராஜகுமாரர்களுக்கும் திருமணம்; தகுந்த ஏற்பாடு செய்யுங்கள். விருந்து பிரமாதமாக இருக்க வேண்டும்...'' என்று, மந்திரியிடம் ஆணையிட்டார் மந்தஹாசர்.
மறுநாள் -
கீர்த்தியின் கரத்தை, குந்தளவல்லியும், இன்பவண்ணன் கையை மஞ்சுளாவும், மோகனரங்கனை கனகாவும் பிடித்திருந்தனர்.
திருமணம் முடிந்து, கோவில் தரிசனத்துக்குச் சென்றனர். அப்போது, ரதம் ஒன்று, ராஜ வீதியில் புழுதியை கிளப்பியபடி வந்தது. அதில் இருந்தது மகாராணி ரத்னாவதிதான்!
மங்களகிரியிலிருந்து, சாலை மார்க்கமாக புறப்பட்டவள், அன்று தான், விசித்திரபுரிக்கு வந்து சேர்ந்தாள்.
ஊர்வலத்தை குறுக்கிட்ட ரதம் நிறுத்தப்பட்டது; அதிலிருந்து இறங்கி வந்த ராணி ரத்னாவதி, இளைய மகன்களை கண்டதும் மகிழ்ந்துப் போனாள்.
குந்தளவல்லியுடன், பாழடைந்த பழைய அரண்மனைக்கு போனான் கீர்த்தி. இப்போது, அது அத்தனை மோசமாக இல்லை. மன்னருடன் சமரசம் ஏற்பட்டு விட்டதால், கீர்த்தி வர்மனை விரும்பும் குடி படைகள், அரண்மனை நிர்வாகிகள் அங்கு திரும்பியிருந்தனர்.
அங்கு, 'கல...கல...'ப்பு கூடியது. இறந்து உயிர்பெற்ற பூனைக்குட்டி, வாலை நிமிர்த்தி, கீர்த்தியை வரவேற்றது. அவன் காலோடு, உடலை உரசி குலாவியது. அந்த அரண்மனையே தனக்கு சொந்தம் என்பது போல, கீர்த்தி, குந்தளவல்லிக்கு, வழிகாட்டியாக நடந்தது, பூனை.
குந்தளாவும், கீர்த்தியும் மகிழ மரத்தடியில் அமர்ந்திருந்தனர்.
''குந்தளா... உனக்கு மகிழ்ச்சி தானே...''
''மகிழ்ச்சி தான்...''
அப்படி கூறிய போது, குரலில், ஏதோ குறை இருப்பதாக பட்டது கீர்த்திக்கு.
''இல்லை... உன் குரலில் ஏதோ ஏக்கம் இழையோடுகிறது; பூரண மகிழ்ச்சியாக அது ஒலிக்கவில்லையே குந்தளா; மனம் திறந்து உண்மையை சொல்லு...''
அவனது அகன்ற மார்பில், முகம் பதித்து, ''என்னை போலவே, எல்லாரும் உங்களை விரும்பி நேசிக்க வேண்டும். நீங்கள் மன்னர் என்ற பயத்தினாலும், மதிப்பினாலும் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு குடிமகனும், உண்மையாகவே உங்களை நேசிக்க வேண்டும்...
''நீங்கள் மிக அறிவாளியாக, சாமர்த்தியம் மிக்கவராக இருப்பதால், அனைவருக்கும் பயம் தான் உள்ளது. எனவே, நினைத்ததை கொடுக்கும் மந்திர குல்லாயை அணிந்து, எல்லாரையும் போலவே, சாதாரண அறிவாளியாக மாற நினைத்து கொள்ளுங்கள். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும்; அதன்பின், எல்லாருமே பயத்தை விட்டு, உண்மையான அன்போடு உங்களை நேசிப்பர்...'' என்றாள்.
சில வினாடிகள் மவுனமாக இருந்தான் கீர்த்தி. பின், ''உன் விருப்பம் தான், இனி எனக்கு வாழ்க்கை நியதி! நீ விரும்பிய படியே ஆகட்டும்...'' என்று கூறி, கோட்டையின் வடக்கு வாசல் உப்பரிகையில், உச்சாணி அறைக்குப் போனான்.
நினைத்ததை நிறைவேற்றும் குல்லாயை அணிந்த கீர்த்தி, 'குந்தளா விரும்பியபடி மாறப் போவதில்லை; ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு ரகசியம் இருக்கும். அந்த ரகசியம் எனக்கு இதுவாக இருக்கட்டும்... மற்றவர்களை விட, அறிவாளியாகவோ, சாமர்த்தியக்காரனாகவோ பிறருக்கு நான் தோன்றக் கூடாது; அதே நேரத்தில், என் நிலையில் எந்த மாற்றமும் ஏற்பட கூடாது' என, நினைத்தான்.
அவன் விரும்பியபடியே, பிறர் மனதில் அவனை பற்றிய எண்ணமும், பயமும் மறைந்தன. அந்த அறையிலிருந்து, திரும்பி வந்தான். கீர்த்திவர்மன் அப்போது, அவனிடம் மகத்தான மாற்றம் ஏற்பட்டிருப்பதாக, எண்ணினாள் குந்தளவல்லி.
அவள் நினைத்தது போல, எல்லாருமே கீர்த்தியை நேசித்தனர்; மதித்தனர். ஆனால், கீர்த்தி எப்போதும் போல சாமர்த்தியமும், வீரமும், அறிவும் மிக்கவனாகவே விளங்கினான்.
விசித்திரபுரி ஆட்சியில், மிகவும் நேசிக்கப்பட்ட மன்னனாக, பின்னாளில் விளங்கினான் கீர்த்தி வர்மன். இவனது மகன் எப்படி இருந்தான்... அது, ஒரு சுவாரசியமான தனிக்கதை!
- தரை இறங்கியது கம்பளம்!

- வாண்டுமாமா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X