கும்பகோணத்தில், மாசி மகம், மிகவும் விசேஷம். அன்று, புனிதநதி தேவியர் எல்லாம், மகாமக குளத்திற்கு நீராட வருவதாக ஐதீகம். எனவே, இந்நாளில், இங்கு நீராடினால் அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும்.
மகாமக குளக்கரையில், 16 மண்டபங்கள் உள்ளன. மாசி மகத்தன்று, கும்பகோணத்திலுள்ள, 12 சிவன் கோவில்களில் இருந்து சுவாமிகள், இந்த மண்டபங்களுக்கு எழுந்தருளுவர்.
கும்பகோணம் கும்பேஸ்வரர், சோமேஸ்வரர், நாகேஸ்வரர், பாணபுரீஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், சாக்கோட்டை அமிர்தகலச நாதர், கொட்டையூர் கோடீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர் மற்றும் காளஹஸ்தீஸ்வரர் கோவில்களிலிருந்து சிவனும், ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து, காமாட்சியம்மனும் இந்த குளத்தில் எழுந்தருளுவர்.
இது தவிர, சாரங்கபாணி, சக்ரபாணி, ராமசாமி, ஆதிவராகப் பெருமாள் மற்றும் ராஜகோபால சுவாமி ஆகியோர், பெருமாள் கோவில்களில் இருந்து காவிரிக்கரைக்கு, தீர்த்தவாரிக்காக செல்வர்.
ஆக, குளத்தில் எழுந்தருளும் ஒரே அம்பாள், ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலிலுள்ள காமாட்சி மட்டுமே. விஸ்வகர்ம சமுதாய மக்களால், இந்த கோவில் உருவாக்கப்பட்டது.
கும்பகோணத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டதால், ஒரு காளியின் சிலையையே உருவாக்கி, அதை இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த காளிக்கு, 'ராகு கால காளிகா பரமேஸ்வரி' என்று பெயர். இவளுக்கு, இந்த கோவிலில் தனி சன்னிதி உள்ளது.
பொதுவாக, காளியின் முன் சிம்ம வாகனமே வைக்கப்படும். இங்கு, நந்தி வாகனம் உள்ளது. அம்பாள் சிவாம்சம் பொருந்தியவள் என்பதால், இந்த ஏற்பாடு. இந்த கோவிலில் காமாட்சியம்மனும், ஏகாம்பரேஸ்வரரும் அருள் செய்கின்றனர்.
சுவாமியை விட, அம்பாளுக்கே மரியாதை அதிகம். இவர்கள் இருவரையும் விட, காளிகா பரமேஸ்வரிக்கு மதிப்பு கூடுதல். இவளது சன்னிதியில் தான், பக்தர்கள் கூட்டம் அலைமோதும்; தினமும், ராகு கால பூஜை நடப்பது விசேஷம்.
ராகு - கேது தோஷத்தால் திருமணத்தடை ஏற்படும் பெண்கள், தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், ஜாதகத்தில், ராகு - கேதுவின் இருப்பிடத்தால் மாங்கல்யத்துக்கு இடையூறு வருமோ என, நினைக்கும், சுமங்கலிகளும், இவளது சன்னிதிக்கு ஒருமுறை வந்தாலே, அந்த தோஷம் நீங்கி விடும் என, நம்புகின்றனர்.
அசுரனை வதம் செய்யும் கோலத்தில், எட்டு கரங்களுடன் அஷ்டபுஜ காளியாக, கத்தி, கேடயம் தாங்கியிருக்கிறாள். காளிகா பரமேஸ்வரி சன்னிதி முன், அஷ்டலட்சுமி சன்னிதி இருக்கிறது.
இந்த கோவிலில், புரட்டாசி மாதம், பூரம் நட்சத்திரத்தன்று, சுமங்கலி ஆராதனை நடக்கிறது. ஆடி கடைசி வெள்ளியன்று, திருவிளக்கு பூஜை நடக்கும்.
கும்பகோணம் நாகேஸ்வரர் கீழவீதியில் உள்ள இந்த கோவில், பெண்களின், 'ஸ்பெஷல்' கோவிலாகத் திகழ்ந்து, பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கிறது. மாசி மகத்தன்று இந்த அம்பாளை மகாமகக் குளக்கரையில் வணங்குவது, இரட்டிப்பு பலன் தரும்.
தி. செல்லப்பா