சிறு சேமிப்பின் அருமை!
மகனின் கல்வி செலவுக்காக, வசதியான நண்பரை சந்தித்து, உதவி கேட்டேன். அதற்கு அவர், 'இந்த, 30 வருஷ சம்பாத்தியத்தில் கொஞ்சம் சேமித்து வைத்திருந்தால், இந்த கஷ்டம் உனக்கு வந்திருக்காது; நான், உனக்கு பணம் தருகிறேன். ஆனால், நான்கு ரூபாய் வட்டிக்கு தான் தருவேன்...' என்றார்.
பின், ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, ஒரு லட்சம் ரூபாய்க்கு, வட்டியாக, 4,000 ரூபாயை எடுத்து, மீதி, 96 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். அவர், வட்டிக்கு பணம் கொடுத்தது, எனக்கு மிகவும் மன வருத்தத்தை கொடுத்தது.
ஏனென்றால், அவர் குடும்பம், கஷ்ட நிலையில் இருந்தபோது, நானும், பணம் கொடுத்து உதவி இருக்கிறேன்; ஆனால், வட்டியெல்லாம் வாங்கவில்லை.
சரியாக, 12 மாதங்கள் வட்டி கொடுத்து வந்த நான், 13வது மாதம், அசல், ஒரு லட்சம் ரூபாயை எடுத்துச் சென்று, அவரிடம் கொடுத்தேன். அதில், 96 ஆயிரம் ரூபாயை மட்டும் எடுத்து, நான் வட்டியாக கொடுத்த, 52 ஆயிரம் ரூபாயை, எனக்கே திருப்பி கொடுத்து விட்டார்.
'பணத்தை ஏன் திருப்பி தருகிறீர்கள்...' எனக் கேட்டேன். அதற்கு அவர், 'சேமிப்பின் பயனை, நீ தெரிந்து கொள்ள வேண்டுமென்று தான், அவ்வாறு செய்தேன்...' என்றார்.
அன்று முதல், நானும் சேமிக்க துவங்கி விட்டேன். எனக்கு தெரிந்தவர்களிடமும் இதுபற்றி சொல்லி, அவர்களையும் சேமிக்க வைத்துள்ளேன்!
— அ.சோமசுந்தரம், சென்னை.
மகன் வாழ்க்கையில் விளையாடிய, தந்தை!
தன் மகனுக்கு, பக்கத்து கிராமத்தில், பெண் பார்த்து, திருமணம் செய்து வைத்தார், நண்பர் ஒருவர். மிகவும் பிடிவாத குணம் படைத்தவர் அவர்; வீட்டில், அவர் வைத்தது தான் சட்டம். பிள்ளைகள் பெரியவர்களான பிறகும், அப்பா பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டார்கள். அப்பா என்றால், அத்தனை பயம் அவர்களுக்கு.
திருமணமான சில மாதங்களிலேயே நண்பருக்கும், பெண்ணின் தந்தைக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டது. இதை, கவுரவ பிரச்னையாக கருதிய நண்பர், எடுத்த முடிவு விபரீதமானது. தன் வீட்டில் வாழ வந்த பெண் என்றும் பாராமல், மகனிடமிருந்து, மருமகளை வலுக்கட்டாயமாக பிரித்து, தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டார்.
மனைவி மீது உயிரையே வைத்திருந்த அவன், தந்தையின் பிடிவாதத்துக்கும், அவள் மீதான பிரியத்துக்கும் இடையே தடுமாறினான். மகனின் அமைதியை தனக்கு சாதகமாக்கி, அடுத்து செய்த காரியம், இன்னும் கொடுமையானது. மகனை கட்டாயப்படுத்தி, அவன் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறவும் ஏற்பாடு செய்தார்.
மகனுக்கோ, மனைவியை பிரிய மனமில்லை; தந்தையை தட்டிக் கேட்கவும் திராணியில்லை. தந்தைக்கு தெரியாமல், கிராமத்துக்கு போகும் மகன், மனைவிக்கு தகவல் கொடுத்து வரச்சொல்லி, சந்தித்து பேசி வந்தான்.
தொடர் சந்திப்பு தந்த தைரியத்தில், தந்தைக்கு தெரியாமல், துணிந்து, தனி வீடு பார்த்தான். பெண் வீட்டார் சம்மதத்துடன், மனைவியை அழைத்து வந்து, தனிக்குடித்தனம் நடத்த ஆரம்பித்தான், மகன்.
விஷயம் தாமதமாக தான் தெரிய வந்தது, தந்தைக்கு. குடும்ப கவுரவம், அது, இது என்று மகனை மிரட்டி, மனதை கரைக்க பார்த்தார். எதற்கும் அவன் அசைந்து கொடுக்காததால், முதன் முதலில், தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
இப்போது, அவர்கள், இரண்டு குழந்தைக்கு பெற்றோராகி, அதே ஊரில், நலமுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
— சி.ரகுபதி, திருவண்ணாமலை.
'பாஸ்ட் புட்' பிரியரா நீங்கள்?
'பாஸ்ட் புட்' கடை வைத்திருந்த, என் நண்பனை சந்தித்தேன். அவன் கூறியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது...
அவன் கூறியது இதுதான்:
அன்றன்று வாங்கிய, 'சிக்கனை' மட்டுமே பயன்படுத்தாமல், 2 - 3 நாட்களுக்கு முன் வாங்கியதை, வினிகரில் கழுவி பயன்படுத்துவோம். இதனால், கெட்டு போன வாடை தெரியாது.
'சிக்கன் ப்ரைடு ரைஸ்' செய்யும்போது, தடை செய்யப்பட்ட ஆரஞ்சு பவுடரை பயன்படுத்தி, 'சிக்கனை' சிவப்பாக மாற்றுவோம். மேலும், 'சோயா சாஸ்' விலை அதிகமாக இருப்பதால், அத்துடன், தண்ணீரோ அல்லது ஒரு வாரத்துக்கு முன் உபயோகப்படுத்திய எண்ணெயையோ கலந்து கொள்வோம்.
சூரியகாந்தி எண்ணெய்க்கு பதிலாக, பாமாயிலை உபயோகிப்பதுடன், 'ப்ரைடு ரைஸ்' செய்யும்போது, சட்டியில் சாதம் ஒட்டாமல் இருக்க, அதிக அளவு பாமாயிலை சேர்ப்போம். மேலும், அந்த சட்டியை, ஒரு வாரத்துக்கு கழுவுவதில்லை. ஏனெனில், கழுவியபின் எண்ணெய் பசை போய் விட்டால், அடுத்த நாள், அதிக, 'காஸ்' விரயமாகும்.
உடலுக்கு கேடு உண்டாக்கும், 'மோனோசோடியம் க்ளூட்டமேட்' அதிகமாக பயன்படுத்துவோம். இதைத் தொட்டு நாக்கில் வைத்தால், அந்த இடம் மரத்து விடும்; சோதித்து பார்த்தால் தெரியும். வெள்ளை மிளகு துாளில், வெண்மை நிறத்துக்காக, கோல மாவு கலப்படம் செய்யப்படுகிறது; அதை தான் உபயோகிப்போம்.
குறைவான விலையில் கிடைக்கும், காலாவதியான, 'தக்காளி சாஸ்'களையே வாங்கிக் கொள்வோம். அதேபோல், 'சில்லி சாஸ்'சை முகர்ந்து பார்த்தால், கெட்ட வாடை அடிக்கும். மசாலா மணத்தில், எல்லாம் மறக்கடித்து விடும். ஐந்து நிமிடத்தில், எட்டு பிளேட் தயார் செய்து, ஒரு பிளேட், 50 ரூபாய் என, 400 ரூபாய் சம்பாதித்து விடுவோம்.
'பாஸ்ட் புட்' உணவு சாப்பிட்டு, என் வயிறு கெட்டு விட்டது. மற்றவர்களின் நலனையும் கெடுக்கும் இந்த வேலை வேண்டாம் என, மனசாட்சி உறுத்தவே, அதை மூடி, 12 ஆயிரம் சம்பளத்துக்கு, ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன், என்று கூறினான்.
— ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.