இயக்குனர் பொறுப்பிலிருந்து, டி.பிரகாஷ் ராவ் விலகியதும், பீம்சிங்கை வைத்து, களத்துார் கண்ணம்மா படத்தை இயக்க, சம்மதிக்க வைத்தார், அப்பா. படப்பிடிப்பு நல்ல முறையில் நடந்த நிலையில், படத்தின் கதாசிரியர் ஜாவர் சீதாராமன், அப்பாவுக்கு போன் செய்து, 'முக்கிய விஷயமாக, உங்களை நான் சந்திக்க வேண்டும்...' என்றார்.
'என்ன விஷயமாக இருக்கும்...' என்று யோசித்தவர், எங்களிடம் அதுபற்றி தெரிவித்து, 'ஜாவர் சீதாராமனை சிறிது நேரத்தில் வரச்சொல்லி இருக்கிறேன்... நீங்களும் வந்து விடுங்கள்...' என்றார்.
அவர் வந்ததும், 'ஐயா... களத்துார் கண்ணம்மா கதையை, நான் உங்களிடம் சொன்னபோது, ஒரு விஷயத்தை சொல்லாமல் விட்டு விட்டேன். நோபடீஸ் சைல்ட் என்ற ஆங்கில படத்தை தழுவித்தான், நான் இந்த கதையை எழுதினேன். ஆங்கில படத்தை பார்த்த நான், நம் கலாசாரத்துக்கு தகுந்தபடி மாற்றம் செய்து, உங்களிடம் சொன்னேன்...
'சின்ன அண்ணாமலை தயாரித்து வரும், கடவுளின் குழந்தை படத்தில், சின்ன வேடம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த படத்தின் கதையை கேட்டபோது, அந்த கதையும், நம் கதையும், ஒரே மாதிரியாக இருப்பதை உணர்கிறேன்.
'உங்களிடம் கதை சொல்லி, இதே கதையம்சத்தில் உருவாகும் வேறு ஒரு படத்தில் நடிப்பதற்கு, எனக்கு இஷ்டமில்லை. ஒருவேளை, நான் விலகினாலும், அந்த கேரக்டருக்கு வேறு ஒருவரை வைத்து, அவர்கள் படத்தை முடிக்கத்தான் செய்வர்.
'ஆக, ஒரே நேரத்தில், ஒரே கதை அமைப்புள்ள இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்பதை, உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே வந்தேன். சொல்வதை சொல்லி விட்டேன். என்ன செய்ய வேண்டுமோ, அதை நீங்கள் செய்து கொள்ளுங்கள்...' என்று, ஒரு குண்டை துாக்கிப் போட்டார், ஜாவர் சீதாராமன்.
அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தோம்; ஆனால், அசரவில்லை அப்பா. படப்பிடிப்பை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டார். அசுர வேகத்தில் படப்பிடிப்பு நடந்து, 1960ல், களத்துார் கண்ணம்மா படம், முதலில் வெளியானது. மக்களின் அமோக வரவேற்பை பெற்று, மாபெரும் வெற்றி பெற்றது.
ஆனால், கடவுளின் குழந்தை படம், இரண்டு வாரம் கழித்து வெளிவந்து, எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை.
அந்த ஆண்டு வெளியான படங்களில், களத்துார் கண்ணம்மா படம், சிறந்த படத்திற்கான விருது பெற்றது. பிரதமர் நேரு முன்னிலையில், ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்க, நான் பெற்றுக் கொண்டேன்.
தமிழில் வெளியாகி, வெற்றி பெற்ற, களத்துார் கண்ணம்மா படத்தை, தெலுங்கில், மாவூரி அம்மாயி என்ற தலைப்பில், 'டப்பிங்' செய்தார், அப்பா. ஆந்திர மாநிலம், விஜயவாடாவில், 'விஜயா பிக்சர்ஸ்' வினியோக கம்பெனி உரிமையாளர், பூர்ண சந்திர ராவ், இந்த படத்தை வாங்கி, வெளியிட்டார்.
திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும், அமோக வரவேற்புடன், படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது.
'இவ்வளவு அருமையான படத்தை, நேரடியாக தெலுங்கில் எடுக்காமல், 'டப்பிங்' செய்து, வெளியிட்டிருக்கிறீர்களே... எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது. இந்த கதையை, தெலுங்கு நடிகர் - நடிகையரை வைத்து நேரடி தெலுங்கு படமாக தயாரித்து வெளியிடுங்கள்...' என்று அப்பாவிடம் வற்புறுத்த ஆரம்பித்து விட்டார், பூர்ண சந்திர ராவ்.
'ஐயா... படம் வந்து, ரெண்டு வாரங்களாக நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை எப்படி மறுபடியும் தெலுங்கில் தயாரிப்பது...' எனக் கேட்டார், அப்பா.
'நீங்கள், சரி என்று சொல்லுங்கள். ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து தியேட்டர்களிலும் படத்தை உடனே நிறுத்தி விடுகிறேன்...' என்றார், பூர்ண சந்திர ராவ்.
கதையின் சிறப்பையும், மக்களிடம் இருந்த வரவேற்பையும் சீர்துாக்கி ஆராய்ந்தவர், மாவூரி அம்மாயி, 'டப்பிங்' படத்தை, அனைத்து தியேட்டர்களிலும், நிறுத்தச் சொல்லி விட்டார், அப்பா.
அதே, களத்துார் கண்ணம்மா படத்தை, மவுன விரதம் -மூக நோமு என்று தலைப்பு வைத்து, தெலுங்கில் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
படத்தை இயக்க, டி.யோகானந்தம் என்பவர் நியமிக்கப்பட்டார். 'டப்பிங்' படத்தில், சாவித்திரி இருந்ததால், அவருக்கு பதிலாக, ஜமுனா; டி.எஸ்.பாலையாவுக்கு பதிலாக, எஸ்.வி.ரங்காராவ்; தெலுங்கு தெரிந்த வேறொரு குழந்தை ஆகியோரை ஒப்பந்தம் செய்து, கதாநாயகனாக, பிரபல நடிகர், ஏ.நாகேஸ்வர ராவை ஒப்பந்தம் செய்ய சென்றோம்.
'டப்பிங் செய்து வெளியிட்ட படத்தை, எதற்கு திரும்ப எடுக்கிறீர்கள்...' எனக் கேட்டார், நாகேஸ்வர ராவ். தியேட்டர்களிலிருந்து படத்தை எடுத்ததற்கான காரணத்தை சொல்லி, படத்தை போட்டு காட்டினோம்.
படத்தை பார்த்த நாகேஸ்வர ராவ், திருப்தியாகி, நடிக்க ஒப்புக்கொண்டார். 'ஆனால், ஒரு கண்டிஷன்...' என்றார்.
'நான் சென்னையிலிருந்து குடிபெயர்ந்து, நிரந்தரமாக ஆந்திராவில் தங்கி விட்டேன். இங்கு, 'அன்னபூர்ணா' என்ற பெயரில், 'ஸ்டுடியோ' ஆரம்பித்திருக்கிறேன். ஆந்திர அரசும், இதற்கு அனுமதியளித்து, பல சலுகைகளையும் செய்து வருகிறது. அதனால், நான் சென்னைக்கு வந்து நடிக்க இயலாது. இங்கு, படப்பிடிப்பு நடக்கும் என்றால் நடிக்கிறேன். சம்மதமா...' எனக் கேட்டார், நாகேஸ்வர ராவ்.
சம்மதித்தார், அப்பா.
நாகேஸ்வர ராவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும், அன்னபூர்ணா ஸ்டுடியோவிலும், மற்ற காட்சிகளை, சென்னை, ஏவி.எம்., ஸ்டுடியோவிலும், ஒரே மாதத்தில் முடித்து, புதிய படமான, மூக நோமு படம், ஆந்திரா முழுவதும் திரையிடப்பட்டது. படம், 'ஹிட்' ஆகி, எல்லா தியேட்டர்களிலும், 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
நல்ல திரைப் படத்தை வரவேற்று, வெற்றி பெற செய்பவர்கள் மட்டுமல்ல, அப்படத்தை எடுத்த தயாரிப்பாளர் மீது, மதிப்பும், மரியாதையும் வைத்து வரவேற்று, பாராட்டும் நற்பண்பு மிகுந்தவர்கள், ஆந்திர மக்கள் என்பதை, இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
வாழ்க்கை படம், பிரமாண்ட வெற்றியாக அமைந்து, தமிழில் சக்கைபோடு போட்ட சமயம். அதை, தெலுங்கிலும், ஜீவிதம் என்ற பெயரில், வைஜெயந்தி மாலாவை வைத்து எடுத்து, பிரமாண்ட வெற்றியடைந்தது. வெளியிட்ட அனைத்து தியேட்டர்களிலும், 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த படத்தை, இந்தியில் எடுப்பதற்காக, என் அப்பாவும் - அம்மாவும், ரயிலில் மும்பைக்கு புறப்பட்டனர்.
— தொடரும்.
ஏவி.எம்.குமரன்