காதலிக்கவே பிறந்தேன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2019
00:00

'நுாறு ஆண்டுகள், பெருஞ்சோகத்திலும், கடும் துக்கத்திலும் மூழ்கிப் போன ஒருவனை, துப்பாக்கி முனையில், காதல் பாடல் பாட வைத்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது இளையராஜாவின் குரலில் கேட்கும், 'டூயட்' பாடல்கள். இளையராஜா, மிகச்சிறந்த இசை அமைப்பாளர். ஆனால், நல்ல பாடகர் அல்ல...' என, 'டுவிட்' செய்தான், திவாகர்.
திவாகர், வயது, 22. உயரம், 175 செ.மீ., மாநிறம். வகிடு இல்லாத தலைகேசம். 'டிரிம்' செய்யப்பட்ட மீசை. இரண்டாம் ஆண்டு, பல் மருத்துவம் படிப்பவன்.
மகனின் செய்கைகளை நோட்டமிட்டவாரே, காபியை எடுத்து வந்து வைத்தாள், அம்மா கவிதா.
''பேசாம இந்த, 'ஸ்மார்ட் போனை'யே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம்ன்னு நினைக்கிறேன்.''
''குட்டி, 'ஸ்மார்ட்போன்' - பேரனா அல்லது பேத்தியா பிறக்கும்... பரவாயில்லையா?''
''அம்மாகிட்டயே அசிங்கமா பேசுறியா?''
''சரிம்மா... பேச்சுக்கு எதிர் பேச்சு பேசியே பழக்கமா போயிருச்சு!''
குறுஞ்செய்தி வந்ததற்கு அடையாளமாக, 'ஸ்மார்ட்போன்' சிணுங்கியது; எடுத்து பார்த்தான். சாருலதா அனுப்பியிருந்தாள். அவள் பெயரை பார்த்ததுமே, முகம் மலர்ந்தது.
'மாரியப்பன் நகர் வீட்டுக்கு உடனே வா, அவசரம்...'
திவாகரும், சாருலதாவும், தம்பிமலை பல் மருத்துவ கல்லுாரியில் படிக்கின்றனர். திவாகரின் தந்தை, பல்கலையில் பணிபுரிகிறார். அதனால், பல்கலை குடியிருப்பிலிருந்து கல்லுாரிக்கு வருவான்.
புதுக்கோட்டைகாரி, சாருலதா விடுதியில் தங்கி படிக்காமல், ஒரு வீடு எடுத்து, சக தோழியர் மூவருடன் தங்கியிருக்கிறாள். நடிகை கேத்தரின் தெரசாவின் தங்கை போல் இருப்பாள், சாரு. அவளது, 20க்கும் மேற்பட்ட ஆண் நண்பர்களில் திவாகரும் ஒருவன்.
பைக்கை கிளப்பி, சீறி பாய்ந்தான், திவாகர். அவள் வீட்டுக்குள் போனான். அவனை கண்டதும், சாருவின் தோழியர் ஒதுங்கினர். இரண்டு, 'பொமேரியன்' நாய் குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள், சாரு. காலடி அரவம் கேட்டு ஏறிட்டாள். ''வாடா திவா... வா... வந்து எங்க கூட உக்காரு.''
அவள் எதிரே அமர்ந்தான். சாரு மீது, 'மைசூர் சாண்டல் சோப்' வாசனை அடித்தது.
''இந்தாடா ஒரு நாய் குட்டி. கொஞ்சு பார்ப்போம்!''
தயங்கினான், திவாகர். பொதுவாகவே அவனுக்கு, நாய்கள் என்றால் பிடிக்கவே பிடிக்காது.
''இதை நல்லா உத்துப்பாரு... வெள்ளை மல்லிகைப்பூ பந்து மாதிரி இல்ல... நகரும் ஐஸ்கிரீம் உருண்டை மாதிரி இல்ல?''
மவுனித்தான்.
''ஓ... உனக்கு நாய்கள்னாலே அலர்ஜி ஆச்சே... இவைகளை, சாதாரண நாய் குட்டின்னு நினைச்சியா... என் இதயத்தை இரண்டா பிரிச்சு, ஒரு ஆண் குட்டியும், பெண் குட்டியும் செஞ்சு வச்சிருக்கேன்.
''ஆண் குட்டியை, நான் வளர்க்க போறேன்... பெண் குட்டியை உனக்கு கொடுத்து, உன்னை வளர்க்க சொல்லலாம்ன்னு பார்த்தேன். நீதான் தயங்குறியே... பரவாயில்லை... வேற யார்கிட்டயாவது குடுத்து வளர்க்க சொல்லிக்கிறேன்!''
பதறினான், திவாகர்.
''எனக்கு, நாய்கள்னா அலர்ஜின்னு எவன் சொன்னான்... உன் இதயத்ல பாதியை வளர்க்க, எனக்கு கசக்குமா... கொடு, கொடு சாரு!''
''இதை குடுக்கறதுக்கு முன், சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன்... நீ, என்னை காதலிக்கறன்னு நல்லா தெரியும். உன் காதலை நான் ஒத்துக்க, ஒரு நிபந்தனை விதிக்கிறேன். இந்த நாய் குட்டியை, ஒரு ஆண்டு, நீ கண்ணும் கருத்துமா வளர்க்கணும்.
''நாய் வளர்க்க, ஜீவகாருண்யம், பொறுமை மிதமிஞ்சி இருக்கணும். ஒரு ஆண்டு முடிஞ்ச ஆறாவது நாள், நாயை எடுத்து வந்து காமி. அது ஆரோக்கியமா, அழகா, சிறப்பான பராமரிப்போட இருந்துச்சுன்னா, உன் காதலை ஏத்துக்கறேன்,'' என்றாள், சாரு.
''நாயை, ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கறேன்,'' என்றான், திவாகர்.
''இனி, அவைகளை நாய்... நாய்ன்னு கூப்பிட்டு இழிவுபடுத்தாதே... என் ஆண் குட்டிக்கு, 'ஆரவ்'ன்னு பெயர் வைக்கிறேன். உன்னுடைய பெண் குட்டிக்கு, 'ஓவியா'ன்னு பெயர் வைக்கிறேன். ஒரு ஆண்டு வளர்ப்புல, என், ஆரவ் செழிப்பா இருக்கிறானா அல்லது உன், ஓவியா செழிப்பா இருக்கிறாளான்னு பார்த்திருவோம்.''
ஒரு சிறு மூங்கில் கூடையில், ஓவியாவை வைத்து, நாட்டின் விலை உயர்ந்த விருதை, ஜனாதிபதி வழங்குவது போல நீட்டினாள், சாரு.
ஓவியாவை எடுத்து முத்தமிட்டான். அது, திவாவின் முகத்தை நக்கியது. ஓவியாவின் மீது வினோதமான வாசனை அடித்தது.
''ஓவியாவை வளர்க்க, உன் பெற்றோர் ஒத்துப்பாங்களா?'' என்றாள், சாரு.
''என் விருப்பத்தை ஒருநாளும் மறுக்க மாட்டாங்க, என் பெற்றோர்,'' என்றான்.
''பெஸ்ட் ஆப் லக், திவா!''
''நான் கிளம்புறேன், சாரு!''
ஓவியாவுடன், பல்கலை குடியிருப்புக்கு விரைந்தான், திவா.

''என்னடா இது, திவா?'' வினவினாள், அம்மா.
''பொமேரியனுக்கும், நாட்டு நாய்க்கும் பிறந்த, கலப்பினம், இந்த ஓவியா. இனி, நம்ம வீட்டு அங்கத்தினர்களில் ஒருத்தி.''
''இதை யாருடா குடுத்தா?''
''நம்ம சாருலதாம்மா... ஆரவ்வை அவ வளர்க்கறா, ஓவியாவ நாம வளர்க்க சொல்லிட்டா!''
''சாரு, ஒரு பன்னிக்குட்டிய குடுத்து வளர்க்க சொன்னாலும் வளப்பியாடா நீ!''
அசடு வழிந்தான், திவாகர்.
''ஓவியாவை நாம வளர்க்கறதுக்கு, அப்பா எதுவும் எதிர்ப்பு குரல் எழுப்பாம இருக்க, நீதான்மா பார்த்துக்கணும்!''
தலையாட்டினாள், கவிதா. ''இனி, ஓவியவோட, 'ஒன், டூ பாத்ரூம்' போனா, அள்ளி போடவே, எனக்கு நேரம் சரியா இருக்கும்.
''ஓவியாவை விட்டுட்டு ஒருநாள் கூட வெளியூர் போக முடியாது. ஒரு பச்சிளம் குழந்தையை, 24 மணி நேரமும் கண்ணும் கருத்துமா பார்த்துக்கற மாதிரி பார்க்கணும். பெத்த மகனுக்காக இதை கூட செய்ய மாட்டேனா!''
ஓவியாவை தலையில் வைத்து, வீடு முழுக்க ஓடினான், திவாகர்.
கால்நடை மருத்துவரை அணுகி, பல மருத்துவ ஆலோசனைகள் பெற்றான்.
தடுப்பூசி அட்டவணை கொடுத்தார். ஓவியாவுக்கு எதை சாப்பிட கொடுக்கலாம், எதை சாப்பிட கொடுக்க கூடாது என, அறிவுறுத்தினார். கழுத்துக்கு பட்டையும், அதனுடன் இணைந்த சங்கிலியும் வழங்கினார்.
''தம்பி... மனிதர்கள் போல, அன்பையும், பாசத்தையும் தன்னை வளர்ப்பவரிடம், நாய்கள் எதிர்பார்க்கும். அவைகளால் நம்மை போல பேச முடியாது. ஆனால், நாம் பேசுவதை குறுகிய காலத்தில் புரிந்து கொள்ளும். குறைந்தது, 100 தமிழ் வார்த்தைகளாவது, உங்க ஓவியாவுக்கு கத்து குடுங்க!''

கல்லுாரிக்கு போய் வரும் நேரம் தவிர, மீதி நேரத்தை ஓவியாவுடன் செலவழித்தான், திவா. 'ஸ்மார்ட் போனை' நோண்டுவது குறைந்தது. இரவில், தன் படுக்கையில் படுக்க வைத்துக் கொண்டான். ஓவியாவை லட்சக்கணக்கான வார்த்தைகளால் கொஞ்சினான்.
காலை மற்றும் மாலை ஒரு தடவை, 'வாக்கிங்' கூட்டி போனான். உட்கார், நில், நட, சாப்பிடு மற்றும் துாங்கு என, கட்டளை வார்த்தைகளை சொல்லிக் கொடுத்தான். கலப்பினம் என்பதால், நாட்டு நாய் குரலில் குரைத்தது.
'ஓவியாவுக்கு, பிரியாணியோ, பரோட்டாவோ தரக்கூடாது...' என, மருத்துவர் பணித்திருந்தார். அதையும் மீறி சில சமயங்களில் மட்டன் பிரியாணி ஊட்டினான், திவாகர்.
ஓவியாவை புகைப்படம் எடுத்து, சாருலதாவுக்கு, 'வாட்ஸ் - ஆப்'பில் அனுப்பினான். அவ்வப்போது சாருவின் வீட்டுக்கு போய், ஆரவ் எப்படி வளர்கிறது என, வேவு பார்த்தான்.
''என்ன சாரு... ஆரவை சங்கிலியால் கட்டி போடல.''
''தேவையில்ல... வீட்டுக்குள்ள அது சுதந்திரமா இருக்கு... 'ஒன், டூ பாத்ரூம்' வந்தா, தானே வெளில போய் இருந்திடும்... குத்துப் பாட்டுக்கு, 'டான்ஸ்' ஆட சொல்லிக் குடுத்திருக்கேன்.''
ஓவியா எப்படி வளர்கிறது என்பதை பார்க்க, திவாகர் வீட்டுக்கு வருவாள், சாருலதா.
''சாரு... திவாகர், எப்படி படிக்கிறான்... நீ எப்படி படிக்கிற?'' என்றாள், அம்மா.
''ரெண்டு பேரும் நல்லாதான் படிக்கிறோம். 'பிராக்டிகல்'ல தான், திவா கொஞ்சம் திணர்கிறான்!''
திவாகர், 365லிருந்து, 'கவுன்ட் டவுன்' ஆரம்பித்திருந்தான். 'ஹெட்போனில்' சதா காதல் பாட்டுகளே கேட்டான். திவாவின் முகத்தில், 'தேஜஸ்' கூடியிருந்தது. பல நேரங்களில் தனக்கு தானே பேசிக் கொண்டான். நடக்காமல் மிதந்தான்.
நாளாக நாளாக, சாருலதாவின் காதலை பெற, ஓவியாவை வளர்ப்பது போய், ஓவியாவின் மீது மெய்யான ஈடுபாடு பூத்தது. 'அடியேய்... வாடி... போடி...' என, கொஞ்சினான்.
ஒரு ஆண்டு ஆக, இன்னும் ஓரிரு நாட்களே இருந்தன. பரபரப்படைந்தவன், சாருலதா, காதலை அறிவித்து விட்டால், அதை எப்படி கொண்டாடுவது என, திட்டங்கள் போட்டான், திவாகர்.
'ஐ எம் வெயிட்டிங் பார் யுவர் டிக்ளரேஷன் சாரு...' என, சாருவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.

குளித்து, புத்தாடை உடுத்தி, ஓவியாவுடன் சாருவை பார்க்க கிளம்பினான். ஆரவ்வை துாக்கி வைத்தபடி, திவாகரை வரவேற்றாள், சாரு.
''ஓவியா வளர்ப்பில், நான் வெற்றி பெற்றதை அறிவி, சாரு!''
ஓவியாவை துாக்கி ஆராய்ந்தாள், சாரு.
''பிரமாதமா வளர்த்திருக்க திவா... வெரிகுட்!''
''என்னை காதலிக்கிறாய் என்பதை, உன் வாயால் அறிவி!''
விழுந்து விழுந்து சிரித்தாள், சாரு.
''எனக்கும், என் தோழிகளுக்கும் ஒரு பந்தயம்... 'காதலுக்காக, 'டைனோசர்' குட்டிய குடுத்து வளர்க்க சொன்னாலும் வளர்ப்பாங்க இன்றைய இளைஞர்கள்...'ன்னு சொன்னேன். தோழிகள் மறுத்தாங்க. இதோ, ஓவியாவை ஒரு வருஷமா வளர்த்துட்டு வந்திருக்க...
''பந்தயத்துல ஜெயிச்சிட்டேன்... பொதுவா, காதல்ல எனக்கு நம்பிக்கை கிடையாது... ஆண் நண்பர்கள் அனைவரும், எனக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்கிறேன்... சாரி, திவாகர். ஓவியாவை திருப்பி குடுத்திடு!''
''ஓவியாவுக்கு உன்னை மாதிரி நடிக்கவோ, சுயநலமா இருக்கவோ தெரியாது. 'வி லவ் ஈச் அதர்' குட்பை,'' என, ஓவியாவுடன் வெளியேறினான், திவாகர்.
ஒரு வாரம் சென்றது-
இன்னொரு வகுப்பு தோழி மாலினி, ''திவா... இந்த பூனை குட்டியை, நீ ஒரு வருஷம் வளர்த்து காமிச்சிட்டா, உன்னை காதலிக்க ஒத்துக்குவேன்,'' என்றாள்.
''அம்மா தாயே... காதலுக்கு பூனை வளர்க்கவோ, கிளி வளர்க்கவோ, இனி நான் தயாரில்லை. ஒரு ஓவியா போதும் எனக்கு,'' என, ஓவியாவை இறுக கட்டிக் கொண்டான்.
அவனுக்கு ஆறுதல் கூறுவது போல, அவனது முகத்தை நாக்கால் தொடர்ந்து நக்கி, வித்தியாசமான குரலில் ஆறுதல் கூறியது.

ஆர்னிகா நாசர்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan Raman - Neyveli ,இந்தியா
21-பிப்-201916:55:10 IST Report Abuse
Saravanan Raman 17.02.2019 வாரமலர் இதழில் வெளியான, ஆர்னிகா நாசர் எழுதிய 'காதலிக்கவே பிறந்தேன்' சிறுகதையைப் படித்தேன். இக்கதையில் வரும் கதாநாயகன் திவாகர் தான், 'மரை கழண்ட கேஸ்'-ன்னு பார்த்தா, அவன் அம்மாவும் 'லூசு'தானா? குறைந்தப்பட்சம் ஒரு வாரமோ - இல்ல - அதிகப்பட்சம் ஒரு மாசமோ கூட கிடையாதாம் ஒரு வருஷம் முழுக்க ஒரு பெண் நாயை வளர்த்தால், உன் காதலை ஏத்துப்பேன்னு ஒரு கிறுக்கி சொல்லுவாளாம் படிக்காத ஒரு தற்குறி கூட இதை ஏத்துக்க மாட்டான். ஆனா, தம்பிமலை பல்கலைகழகத்திலே, அதுவும் மெடிக்கல் படிக்கிற ஒரு மெண்டலு, இதையே நம்பி, ஒரு வருஷம் பூரா நாயிக்கு கக்கா எடுத்துப்போட்டு, வளர்த்து அத ஆளாக்கி விட்டுட்டு, காதலி கிட்ட போய், உன்னோட வாயால, காதலை அறிவி… அறிவின்னு கேட்டானாம் அவ ஏமாத்திட்டாளாம் அந்த நாய், அவனுக்கு ஆறுதல் கூறுவது போல அவனது முகத்தை நாக்கால் தொடர்ந்து நக்கி வித்தியாசமான குரலில் ஆறுதல் கூறியது- ன்னு ஒரு பைனல் டச் வேற அட பைத்தியம் பெத்த பைத்தியங்களா
Rate this:
Cancel
Prasanna -  ( Posted via: Dinamalar Android App )
18-பிப்-201911:27:46 IST Report Abuse
Prasanna Nonsense
Rate this:
Girija - Chennai,இந்தியா
19-பிப்-201901:12:54 IST Report Abuse
Girijaweasted my time on reading this...
Rate this:
Manian - Chennai,இந்தியா
20-பிப்-201905:11:58 IST Report Abuse
Manianஇப்படியும் போலி கல்வி கற்றத்தக்க பட்டப் படிப்பாளிகள் நிறைய இருப்பார்கள் என்று கதை சொல்கிறது. நாயை வளர்தாள்தான் காதல் என்று சொல்பவளை புரிந்து கொள்ள முடியாதவனுக்கு, தானும் நாய் போல் நடத்தபடுவேனோ என்று சந்தேகம் கூட வரவில்லையா? அதுவம் பல காதல் உள்ள பெண்ணை தேடிப்போனவனின் அறிவை என்னா என்று சொல்ல? எதோ சினிமாவில், காமெடி நடிகன் செய்ததாக இருந்தால் ஒரு வேலை சிரிக்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X