அன்புள்ள அம்மாவுக்கு —
எம்.காம்., படித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், 27 வயது, பெண் நான். வயதான பெற்றோர், 25 வயதுள்ள ஒரு தங்கை அடங்கிய குடும்பத்துக்கு, என் வருமானம் தான் ஆதாரம்.
பி.ஏ., படித்த என் தங்கைக்கு, சரியான வேலை அமையவில்லை. தங்கையின் திருமணம் முடிந்த பிறகே, நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில், உறுதியாய் இருந்தேன்.
எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவரை, காதலிப்பதாக கூறினாள், தங்கை. அவரை பற்றி விசாரித்ததில், படித்து, நல்ல வேலையில் இருப்பதாக தெரிந்தது. எனவே, என் பெற்றோரை சமாதானப்படுத்தி, திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தேன்.
ஆனால், திருமணத்துக்கு முன்பே, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து விட்டனர். வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாள், தங்கை. இச்சமயத்தில், தங்கையை பெண் கேட்டு, துாரத்து சொந்தம் ஒருவர் வர, திருமணத்துக்கு சம்மதித்தாள்; திருமணமும் நல்லபடியாக முடிந்தது.
ஒரு மாதத்திற்கு பின், குடும்ப நண்பர் ஒருவரின் மகனுக்கு, என்னை, பெண் கேட்டு வந்தனர். என் பெற்றோருக்கு நான் மட்டுமே துணை என்பதை அறிந்து, பெற்றோரையும் ஆதரிப்பதாக வாக்கு கொடுத்தனர், மணமகனின் பெற்றோர். அடுத்த மாதமே மண நாள் குறிக்கப்பட்டது. குடும்பமே மகிழ்ச்சியில் இருந்தபோது, எங்கள் தலையில் இடி விழுந்தது.
ஒரு நாள் நள்ளிரவு, கண்ணீருடன் வீட்டிற்கு வந்தாள், தங்கை. என்ன என்று விசாரித்தபோது, 'திருமணத்துக்கு முன் யாரையாவது காதலித்து இருக்கிறாயா...' என்று கேட்டுள்ளார், அவள் கணவர். இவளும் முன்பின் யோசிக்காமல், தன் பழைய காதலை பற்றி சொல்லி, திருமணம் வரை வந்து, நின்று விட்டதாக கூறியுள்ளாள். அப்போது, பிடித்தது வினை.
தங்கையின் கணவர், தினமும் மது அருந்தி வந்து, அவளை அடித்து, உதைத்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இறுதியாக, வீட்டை விட்டே துரத்தியும் விட்டுள்ளார்.
நாங்களும், உறவினர்களும், எவ்வளவோ சொல்லி பார்த்தும், அவர் சமாதானமாகவில்லை. தங்கையும், பெற்றோரும் கவலையில் இருக்க, எனக்கு திருமணம் செய்து கொள்ள மனம் வரவில்லை. திருமணத்தை சிறிது காலத்துக்கு தள்ளி போட சொன்னால், மறுக்கிறார், மாப்பிள்ளை.
திருமணத்தை தள்ளி வைப்பதில் உறுதியாக இருப்பதா அல்லது என் பெற்றோருக்கு ஆதரவு கரம் நீட்டும் அந்த நல்லவனை, குறித்த நாளில் கைபிடிப்பதா என்று, தத்தளித்து கொண்டுள்ளேன்; குழப்பமாக இருக்கிறது.
எனக்கு நல்ல வழியை காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
திருமணமான புதிதில் மனைவியிடம், தன் காதல் பராக்கிரமங்களை மணிக்கணக்கில் கணவன் கூறி, 'நீ யாரையாவது காதலிக்கிறாயா... காதலித்திருந்தால் தயங்காமல், மறைக்காமல் சொல். நான் தப்பாக நினைக்க மாட்டேன். பின்னாளில் சொல்லிக் காட்ட மாட்டேன்...' என, வார்த்தை துாண்டில் போடுவர்.
நமக்கு வாய்த்த மனைவி, காதலில் சிக்கிக் கொள்ளாமல், புத்தம் புதிதாக, நமக்கே நமக்காக கிடைத்திருக்கிறாளா என, ஆழம் பார்ப்பர். அவர்களின் இனிப்பு வார்த்தைகளை நம்பி, மனைவியாகிய நீங்கள், உங்கள் காதலை உளறி கொட்டி விட்டால், அவ்வளவு தான்... அதன்பின் குடும்ப வாழ்க்கை, கொடிய நரகமாகி விடும்.
'உன் காதலனை போல முத்தமிடுகிறேனா... எல்லாவற்றிலும் நான் சிறந்தவனா அல்லது உன் காதலன் சிறந்தவனா...' என, கருந்தேள் போல, நொடிக்கு நொடி கொட்ட ஆரம்பித்து விடுவர்.
அதனால், எல்லா பெண்களுக்கும் பொதுவாக ஒரு அறிவுரை கூறுகிறேன்... கணவரிடம், ஒருநாளும் திருமணத்திற்கு முந்தைய எந்த ரகசியத்தையும், ஒரு வார்த்தை கூட சொல்லி விடாதீர்.
கணவருடன் வாழாமல், பிறந்த வீட்டுக்கு வந்துவிட்ட தங்கையை வைத்து, நீ திருமணம் செய்து கொள்வது, ஆக்கப்பூர்வமான விஷயமில்லை. திருமணம் வரை, அரசியல்வாதிகள் போல, ஆயிரம் வாக்குறுதிகளை அள்ளி வீசும் கணவன்மார்கள், திருமணத்திற்கு பின், முழு சுயநலமாய் நடந்து கொள்வர்.
அடுத்து நீ என்ன செய்ய வேண்டும்...
இறுதி உபாயமாக, இரு குடும்பத்து பெரியவர்களை வைத்து, தங்கை கணவரிடம், 'தங்கையின் காதல், வெறும் வார்த்தைகளுடன் முறிந்து விட்டது. கணவரிடம் உண்மையை மறைக்கக் கூடாது என்ற நேர்மையுடன், உங்களிடம் உண்மையை கூறியிருக்கிறாள்.
'அதற்கு, அவளுக்கு, அடி - உதை பரிசா... திருமணத்திற்கு பின், உங்களுக்கு லட்சம் சதவீதம் உண்மையாக இருக்கிறாள். குடி பழக்கத்தை கைவிட்டு, என் தங்கையுடன் குடும்பம் நடத்துங்கள்...' என, பேசு.
தங்கையின் கணவர் மிகவும் பிடிவாதம் பிடித்தால், முறைப்படி, குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனு கொடுங்கள். அந்த காலகட்டத்தில், தங்கைக்கு ஏதாவது வேலை தேடி கொடு. தொலைதுார கல்வி இயக்ககம் மூலம், உயர் கல்வி படிக்க ஏற்பாடு செய்.
தங்கையின் வாழ்க்கையை சீராக்க, உனக்கு, குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அவகாசம் தேவை. உனக்கு கணவராக வரப்போகிறவரிடம், 'திருமணத்தை, ஒரு ஆண்டு தள்ளிப் போடுவோம்...' எனக் கூறு. அவர், ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அவருடனான திருமணத்தை மறுபரிசீலனை செய்.
திருமணம் ரத்தாகி விட்டால் கவலைப்படாதே. வேறொரு நல்ல மாப்பிள்ளை கிடைப்பார். எத்தனையோ இடங்களில் திருமண பேச்சுவார்த்தை முறிந்து, பெண் ஒரு திசையிலும், ஆண் ஒரு திசையிலும் பயணப்பட்டு போய் விடுவர். அதன்பின், முறிந்த பேச்சுவார்த்தையை தொடர்வர். பிடிவாதங்களை கைவிட்டு, மணம் செய்து கொள்வர். அப்படி ஒரு வாய்ப்பு, உன் வாழ்விலும் அமையலாம்.
'நம் திருமணத்தை தள்ளி போட வேண்டாம். குறித்த நாளில் திருமணம் செய்து கொள்வோம். உன் தங்கை, பெற்றோர் வீட்டில் இருக்கட்டும். நாம் தனியாக வீடு எடுத்து, குடும்பம் நடத்துவோம். நம் இருவருக்கும் இடையில் வாய் வழி ஒப்பந்தம் செய்து கொள்வோம்.
'உன் மற்றும் என் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கி, உன் தங்கையின் வாழ்க்கையை புனரமைக்க செலவிடுவோம். தங்கைக்கு முறைப்படி விவாகரத்து கிடைத்த பின், அவளின் காதலன் திருமணம் ஆகாமல் இருந்து, அவளையே மணம் செய்து கொள்ள விரும்பினால், பச்சை கொடி காட்டுவோம்.
'என் வார்த்தைகளில் உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், உன் பணியிடத்தில், கடன் வாங்கு. என் பணியிடத்திலும், நான் கடன் வாங்கி, இரண்டு தொகைகளையும் தங்கையின் பெயரில், 'பிக்சட் டிபாசிட்' செய்வோம். அந்த பணம், தங்கையின் வாழ்க்கையை சீராக்க உதவும்...' என, உன்னவர் கூறினால், அவனுடைய ஆக்கப்பூர்வமான யோசனையை ஏற்றுக்கொள்.
தங்கையின் வாழ்க்கை எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன, என் சுயநலமே முக்கியம் என்றில்லாமல், திருமணத்தையே தள்ளிப்போட தயாராக இருக்கும், உன் தியாக உள்ளத்துக்கு தலை வணங்குகிறேன்.
உன் நல்ல மனதிற்கு, நல்லதே நடக்கும். தங்கையின் எதிர்காலமும், உன் திருமண வாழ்க்கையும், ஒளிமயமாக இருக்கும். முடிச்சுகள் அவிழும், கலங்காதே கண்மணி!
- என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.