கேரளாவில், சாலைகள் பெரும்பாலும், ஏற்ற, இறக்கமாகவே காணப்படுகின்றன. நம் ஊர் போல, சமதளமாக இல்லை. 70 கி.மீ.,க்கு பின், நெரியமங்கலம் என்ற ஊரில், மலைப்பாதை துவங்கியது. வளைந்து, நெளிந்து ஏறும் மலை பாதையில், ஆங்காங்கே சிற்றருவிகளும், பேரருவிகளும் குறுக்கிடுகின்றன.
மழை வெள்ள பாதிப்புக்கு பின், மூணாறில், சுற்றுலா மீண்டுள்ளதை, ஏராளமான, சுற்றுலா பஸ், கார், வேன்களின் எண்ணிக்கை பறைசாற்றின. வழியில் குறுக்கிடும் அருவிகளை கண்டதும், வாகனங்களை நிறுத்தும் மக்கள், மொபைல் போன்களில் படம் மற்றும் 'வீடியோ' எடுத்து தள்ளுகின்றனர்.
மலை பாதையில், பல இடங்களில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால், பாதை துண்டிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இன்னும் சில இடங்களில், சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
பல இடங்களில், எந்த ரசாயனமும் கலக்காத, வீட்டிலேயே தயாரிக்கப்படும் சாக்லெட் தயாரிப்பு கூடங்கள் உள்ளன. இனிமையான பயணத்தை ரசித்தபடி, கடல் மட்டத்தில் இருந்து, 5,700 அடி உயரத்தில் உள்ள மூணாறை, பிற்பகல், 3:00 மணிக்கு அடைந்தோம்.
கேரளா சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான, 'டீ கவுன்டி ரிசார்ட்'டில் தங்கி, அன்றும், மறுநாளும், மூணாறை சுற்றி பார்த்தோம். வழிகாட்டி செபின், ஆங்கிலம் மற்றும் தமிழில், சரளமாக, மூணாறை பற்றி எடுத்துரைத்தார்.
நம் தேனி மாவட்டத்தை ஒட்டி, கேரளத்தின் தெற்கில், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது மூணாறு. இதை, 'தென்னகத்து காஷ்மீர்' என, அழைக்கின்றனர். முதிரப்புழை, நல்லதண்ணி மற்றும் குண்டலா ஆகிய, மூன்று ஆறுகள் கூடும் இடமே, மூணாறு.
மூணாறு பகுதிக்கு, பூஞ்சார் ராஜ வம்சம் மற்றும் ஆங்கிலேயர் வரும் முன், இப்பகுதி முழுவதும், 'முதுவான்' என்ற மலைவாழ் மக்களின் வசம் இருந்தது.
இவர்கள், பல நுாற்றாண்டுகளுக்கு முன், தமிழகத்தில், பாண்டியர், -சோழ மன்னர்கள் இடையே நடந்த போரின் தாக்கத்தை தாங்க முடியாமல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து தப்பி வந்த, வம்சாவளியை சேர்ந்தவர்கள்.
மலைவாழ் மக்கள் வசம் இருந்த மூணாறை, 12ம் நுாற்றாண்டில், பூஞ்சார் ராஜ குடும்பத்தினர், தங்கள் வசமாக்கினர். ஏறத்தாழ, 100 ஆண்டுகள், அவர்கள் ஆதிக்கத்தில் இருந்தது. இப்பகுதிக்கு வழிகாட்டியாக இருந்த மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த கண்ணன் மற்றும் தேவன் ஆகியோரின் நினைவாக, 'கண்ணன்- - தேவன் மலை' என, இது அழைக்கப்படுகிறது.
இவர்கள் பெயரிலேயே, 'டாடா' நிறுவனத்தின், 'கண்ணன் - தேவன்' தேயிலை தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
திருவிதாங்கூர் மீது, மைசூர் திப்பு சுல்தான் படையெடுத்த காலத்தில், ஆங்கிலேயர்கள் முதன் முறையாக, மூணாறை எட்டி பார்த்து, 'வாவ் லவ்லி பிளேஸ்...' என, வாய் பிளந்தனர். யுத்தம் முடிந்து, திப்பு சுல்தான் மைசூருக்கு வண்டி கட்டினாலும், ஆங்கிலேயர்கள், மூணாறை விட்டு பிரிய மனமின்றி, நங்கூரமிட்டனர்.
கடந்த, 1880ல், ஆங்கிலேயர், ஏ.எச்.ஷார்ப் என்பவர், முதலில் இங்கு தேயிலை செடிகளை நட்டார். அது செழித்து வளரவே, அப்படியே வேர் பிடித்தனர். பல தலைமுறைகளாக, ஆங்கிலேயர்கள், தேயிலைத் தோட்டங்களை வளர்த்து, வணிகம் செய்தனர். தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்கு, தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர்.
இதற்காகவே, அப்போது, திருச்சியில் சிறப்பு மையம் அமைத்து, ஆட்கள் தேர்வும் நடந்துள்ளது. இவர்களின் உழைப்பால், மூணாறு என்ற ஊர் உருவானது. மூணாறை சுற்றிலும், 16 தேயிலை தொழிற்சாலைகளை உருவாக்கினர், ஆங்கிலேயர்கள்.
-- தொடரும்
டீயின்றி அமையாது உலகு!
மூணாறில், திரும்பிய திசையெங்கும் தேயிலை தோட்டங்கள் தான். மேட்டுப்பட்டி அணை பகுதியில் மட்டும், யூகலிப்டஸ் மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. அரிசி, பருப்பு, காய்கறி, 'பிராய்லர்' கோழிகள் என, அனைத்தும், தமிழகத்தில் இருந்து, தேனி மாவட்டம் வழியாகவே இங்கு வருகின்றன.
வழிகாட்டியாக வந்த செபின், மூணாறைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் மூணாறிலேயே வசிக்கிறது. ஆயினும், மாதத்தின் பல நாட்கள், வழிகாட்டியாக, மாநிலம் முழுவதும் சுற்றி வருவதாக தெரிவித்தார். 'இங்கு தயாரிக்கப்படும் தேயிலை, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது...' என, பெருமையாக தெரிவித்தார், செபின்.
அதற்கு, 'எங்கள் ஊர் திருவள்ளுவர், 'நீரின்றி அமையாது உலகு' எனக் கூறியதை போல, 'டீயின்றி அமையாது உலகு' எனச் சொல்லுங்கள்...' என்றதும், 'அதே சாரே...' என, சிரித்தார், செபின்.
டீ மியூசியம்!
இங்குள்ள, நல்ல தண்ணி எஸ்டேட்டில், 'டாடா' நிறுவனத்தின், 'கண்ணன் - தேவன் டீ மியூசியம்' உள்ளது. தினமும், காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை திறந்திருக்கும்; திங்கட் கிழமை விடுமுறை. இங்கு, மூணாறுக்கு தேயிலை வந்த வரலாறு, அதன் வளர்ச்சி, வர்த்தகம் பற்றிய புகைப்பட கண்காட்சி உள்ளது. இது பற்றி, ஆங்கிலத்தில், கறுப்பு, வெள்ளையில், 'டாக்குமென்டரி' படமும் காட்டுகின்றனர்.
டீ மியூசியத்தில், தேயிலை இலைகள் இயந்திரத்தில் அரைபட்டு, பதப்படுத்தப்பட்டு, துாளாக மாற்றப்படுவதை, செயல் விளக்கமாக காட்டுகின்றனர். பறிக்கப்பட்ட இலைகள், முதலில், பெரிய ஜல்லடை போன்ற, 'டிரே'யில் போடப்பட்டு, கீழிருந்து பீய்ச்சி அடிக்கப்படும் வேகமான காற்று மூலம் உலர வைக்கப்படுகிறது.
பின், இயந்திரத்தில் அரைபட்டு, பச்சையாக மருதாணி போல வருவதை முகர்ந்தால், கொஞ்சம் கூட டீ துாளின் வாசனை தெரிவதில்லை. பின், மற்றொரு இயந்திரத்தில் உலர வைக்கப்பட்டு, அரைபட்டு, இறுதியில் தேயிலை துாளாகவும், கழிவுகளாகவும் வெளி வருகிறது.
மியூசியத்திலேயே, டீ துாள் விற்பனை மையமும் உள்ளது. கிரீன் டீ, மூலிகை டீ என, பல்வேறு வகைகளை விற்பனைக்கு வைத்துள்ளனர். வரிசையில் நின்று, கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர், சுற்றுலா பயணியர்.
டீ மியூசியத்திற்கு நுழைவு கட்டணம், பெரியவர்களுக்கு, 125 ரூபாயும், சிறுவர் - சிறுமியருக்கு, 40 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இது கொஞ்சம் அல்ல; அதிகம் தான். சில சுற்றுலா பயணியர், கட்டணத்தை கேட்டதும், 'டீ மியூசியம் போர்டு' அருகில் நின்று, 'செல்பி' எடுத்து, நடையை கட்டுகின்றனர்.
எஸ்.ஜெயசங்கர நாராயணன்