மொபைல் கவரை கத்தியாக்கி கறி வெட்டுவது, ஸ்கூட்டர் டிசைனில் கழிப்பறை, முதுகு சொறிவதற்கு வாள், பாதங்களுக்கு மசாஜ் செய்துவிடும் கைகள் பொருத்தப்பட்ட இருக்கை... என நீளும் டஜன் கணக்கிலான வினோதக் கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரர் கங்க் சுவாய் (Geng Shuai). 31 வயதான கங்க், சீனாவின் வடக்குப் பகுதியான ஹெபேயில் வசித்து வருகிறார். பிளம்பராக வேலை செய்யும் இவர், வேலையின் சலிப்பை வெல்ல நினைத்தார். அதன் விளைவாகவே, இதுபோன்ற புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கத் தொடங்கினார். கங்க், தனது கண்டுபிடிப்புகளைக் காணொலியாக்கி அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். சீன ட்விட்டர் வலைத்தளமான வெய்போவில் (Weibo) பத்து லட்சம் பேர், கங்க் சுவாயைப் பின்தொடர்கின்றனர்.