பேராசிரியர் டாக்டர். எம். வீ. இராஜேந்திரன்
1916 - 1993
ஊர்: திருநெல்வேலி, தமிழகம்
துறை: விலங்கியல் பேராசிரியர், பாம்பு ஆராய்ச்சியாளர்
ஒருவருக்கு உயிரினங்கள் மீது ஆர்வம் இருக்குமானால், அவர் ஆய்வாளராக வருவார் என்று நினைப்பார்கள். ஆனால், உண்மையில், அவரால் இயற்கையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும். அதற்கு உதாரணம் பாம்பு ஆய்வாளர் ராஜேந்திரன்.
1951ஆம் ஆண்டு, ராஜேந்திரன், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் விலங்கியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். பேராசிரியர் பணியில் இருந்தபடியே, பாம்புகள் பற்றிய ஆய்வைச் செய்ய முடிவெடுத்தார்.
தமிழக, கேரள மலைகளில் வாழும் கேடையவாலிகள் (Shield tailed snakes) என்ற வகை பாம்பு பற்றி ஆய்வு செய்தார். 1974இல் ஆராய்ச்சிப் படிப்பை முடித்து, முனைவரானார். ஆய்வோடு மட்டும் அவர் தன் பங்களிப்பை நிறுத்திக்கொள்ளவில்லை. பாம்புகள் பற்றிய மூடநம்பிக்கைகளை விலக்கி, விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டார்.
பாம்புகளைப் பற்றி பள்ளிக்கூட வகுப்புகளில் நடத்தும் பாடங்கள், எளிய மக்களையும் சென்று சேரவேண்டும் என்பதில் சமரசமின்றி இருந்தார். இதற்காக, தமிழகத்தின் பாளையங்கோட்டையில் பாம்புப் பண்ணை ஒன்றையும் உருவாக்கினார். இந்த பாம்புப்பண்ணை, ராஜேந்திரனின் பெயரைச் சூழலியல் வட்டாரத்தில் பிரபலப்படுத்தியது.
1979 முதல் 1980 வரையிலான காலக்கட்டத்தில் சென்னை பாம்புப் பண்ணையில் இயக்குநராகப் பொறுப்பேற்றுச் செயற்பட்டார். தமிழகத்தில் பாம்புகள் குறித்த நூல்களும் ஆவணங்களும் குறைவு. ராஜேந்திரன் இக்குறையை அடையாளம் கண்டு, 'ஆடும் பாம்பு', 'நம் நாட்டுப் பாம்புகள்' என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள நச்சுள்ள, நச்சற்ற பாம்புகளின் தமிழ் மற்றும் அறிவியல் பெயர்களை நூலில் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார். பாம்பு ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் ராஜேந்திரனின் புத்தகம் உதவும்.
- முனைவர். ந.ச. மனோஜ்