“எவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்திருக்கிறோம் என்று நினைத்தால், எங்களுக்கே பெரும் பிரமிப்பு. முதலில், வீடற்ற எங்கள் பள்ளி மாணவர் ஒருவருக்கு, நிதி திரட்டி வீடு கட்டிக் கொடுத்தோம். அது கொடுத்த மனத்திருப்தி, இன்று எங்களை 100 வீடுகளை நோக்கி பயணிக்க வைத்திருக்கிறது” என்று பேசத் தொடங்கினார் லேடி கான்வென்ட் பள்ளித் தாளாளரான லிஸ்ஸி. கொச்சியில் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டி வழங்கி வருகிறது கேரளத்தின் கொச்சியிலுள்ள தொப்பும்பாடி லேடி கான்வென்ட் பள்ளி.
மாணவர்களுக்கு வீடு
“ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 'ஹவுஸ் சேலஞ்ச் புராஜக்ட்' என்ற திட்டத்தை வகுத்தோம். எங்கள் பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவர் ஒருவர், வீடில்லாமல் சிரமப்பட்டார். அவருக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவெடுத்தோம். பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் ஒத்துழைக்க, வீடு கட்டுவதற்கான வேலைகளைச் செய்தோம். கட்டிய வீட்டின் சாவியை அந்த ஏழை மாணவரிடம் ஒப்படைத்தபோது, பெரும் மனத்திருப்தியை உணர்ந்தோம்.
பின்னர், பள்ளியில் படிக்கும் வீடற்ற அடிப்படை வசதிகள் இல்லாத ஏழை மாணவர்கள் குறித்த தகவல்கள் எங்களுக்கு வரத்தொடங்கின. உணவு, உடை போன்று, வீடு என்பதும் ஒருவருக்கு அடிப்படைத் தேவை என்பதை உணர்ந்தோம். மேல்கூரையுடன் ஒரு வீடு கிடைக்காதா? என்ற ஏக்கத்தை வைத்துக்கொண்டு, பிள்ளைகளால் எப்படிப் படிக்க முடியும்? இதற்குத் தீர்வாகத்தான், 'ஹவுஸ் சேலஞ்ச் புராஜக்ட்' டுக்கு அடித்தளமிட்டோம்.
வரவேற்பு பெற்ற திட்டம்
மாணவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, ஏழைகளுக்கு வீடு கட்ட நிதி கொடுத்து கொண்டாடலாம் என்று அறிவித்தோம். இந்த அறிவிப்பால், ஆசிரியர்கள் மட்டுமன்றி, மாணவர்களும் பெருமளவில் உதவினார்கள். மாணவர்களின் பெற்றோர்கள் நாங்கள் பிரமிக்கும்படி, தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பணம் வசூலித்துக் கொடுத்தனர். இப்படியே அடுத்தடுத்த வீடுகளை விரைவாகக் கட்டத் தொடங்கினோம். மெல்ல எங்களது பணிகளால் கவரப்பட்ட பொதுமக்களும் நிதி உதவியோடு பொருட்களையும் வழங்கினர். இதனால், பணமாக மட்டுமன்றி, வீடு கட்டத் தேவையான மண், செங்கல் போன்ற பொருட்களும் எங்களுக்குக் கிடைத்தன.
தொடக்கத்தில் பயனாளிகளாக, பள்ளியில் படிக்கும் வீடற்ற மாணவர்கள் இருந்தார்கள். பிறகு, விதவைகள், மாற்றுத்திறனாளிகள் என்று எங்கள் உதவியை விரிவுபடுத்தினோம். கடந்த வாரம், 'ஹவுஸ் சேலஞ்ச் புராஜக்டின் கீழ் 100வது வீட்டைக் கட்டி முடித்தோம். இந்தப் பணியில் மாணவர்களின் பணி அளப்பரியது. நிதி திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்; அதோடு, கட்டி முடித்த வீடுகளுக்கான சாவிகளை, பயனாளிகளுக்கு வழங்குவதும் அவர்கள் தான்.
சமூகப் பொறுப்பு தரும் கல்வி
இப்படி, வகுப்பறையைத் தாண்டி, பொதுச்சேவையில் ஈடுபடுவது, அவர்களைப் பொறுப்புள்ள மனிதர்களாக்குகிறது. பகிர்ந்து வாழ்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியை நேரடியாக ருசித்துப் பார்க்கிறார்கள். மேலும் உதவ வேண்டும் என்று மாணவர்கள் ஊக்கம் பெறுகிறார்கள். வீடு கட்டுவது மட்டுமல்ல, கடந்த முறை கேரளத்தில் வெள்ளம் ஏற்பட்டபோதும் எங்கள் பள்ளி மாணவர்கள் பெரும் சேவையாற்றினார்கள். எர்ணாகுளத்தைச் சேர்ந்த 150 குடும்பங்களைத் தத்தெடுத்து, அவர்கள் மீண்டும் பழைய இயல்புநிலைக்குத் திரும்பும்வரை அவர்களுக்கு உறுதுணையாக நின்றோம். ” என்றார், லிஸ்ஸி.