ஒரு வினையெச்சச் சொல்லோடு 'என, என்று' ஆகிய இரண்டு சொற்கள் அடுத்து வருவதுண்டு. அப்படி வருகையில் என்ன செய்ய வேண்டும்?
'என' என்ற சொல் வருகையில், வருமொழி வல்லினத்தில் தொடங்கினால், அங்கே கட்டாயம் வலி மிகுவிக்க வேண்டும்.
பாடவெனப் பயின்றான் - இத்தொடரைப் பாருங்கள். பாட என்ற வினையெச்சத்தோடு 'என' என்ற சொல் வந்து 'பாடவென' (பாடுவதற்காக) என்று ஆகியிருக்கிறது. அதையடுத்து வல்லினத்தில் தொடங்கும் 'பயின்றான்' என்ற சொல் வந்தது. இப்போது வலி மிகுதல் வேண்டும்.
ஒரு வினையெச்சச் சொல், 'அ' என்ற ஈற்றோசையில் முடிந்தால், அங்கே வலி மிகும். ஓடச் சொன்னான், வரச் செய்தான் ஆகிய தொடர்கள் 'அ' என்ற ஈற்றோசையைக் கொண்டிருந்ததால் வலி மிகுந்து நின்றன. அதைப் போலவே, 'என' என்ற சொல்லும் 'அ' என்ற ஈற்றோசையோடு இருப்பதால், வல்லொற்றுப் போடுகிறோம்.
பாடவென, ஓடவென என்று வினையெச்சத்தை அடுத்துத்தான் 'என' என்ற சொல் வரவேண்டும் என்பதில்லை. முன்னொட்டாக வரும் சொல் எப்படி வேண்டுமாயினும் இருக்கலாம்.
கொல்லெனச் சிரித்தாள், சில்லெனப் பூத்தது -
இத்தொடர்களில் கொல், சில் ஆகிய சொற்கள் வந்திருக்கின்றன. இங்கும் வலி மிகுந்தது.
'என்று' என்ற சொல்லைப் பார்ப்போம். 'என்று' என்பது 'ன்று' என்று முடிவதால், அது மென்தொடர்க் குற்றியலுகரம் ஆகும். மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சத்தில் வலி மிகுதல் கூடாது (நின்று கண்டான், எழுந்து போனான்). அதனால் 'என்று' என்ற சொல்லை அடுத்து வருவது. வல்லினத்தில் தொடங்கும் வினைச்சொல். அங்கே வலி மிகுதல் கூடாது.
- மகுடேசுவரன்