பிப்ரவரி 18, 1745 - அலெசாண்ட்ரோ வோல்ட்டா பிறந்த நாள்
மின்துறை உருவாகக் காரணமான இத்தாலி நாட்டு இயற்பியலாளர். மின் அழுத்த அலகு, 'வோல்ட்' எனவும், மின் அழுத்தத்தை அளக்கும் கருவி 'வோல்ட்மீட்டர்' எனவும் இவர் பெயரில் குறிக்கப்படுகிறது. மீத்தேன் வாயுவைக் கண்டறிந்தவரும் இவரே.
பிப்ரவரி 18, 1926 - வ.ஐ.சுப்பிரமணியம் பிறந்த நாள்
தமிழ் மொழியியல் அறிஞர், ஆய்வாளர். பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி இருக்கிறார். 'புறநானூற்றுச் சொல்லடைவுகள்' என்ற இவரது ஆய்வுநூல் குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 19, 1855 - உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த நாள்
'தமிழ்த் தாத்தா' என்று கொண்டாடப்படும் அறிஞர். பழந்தமிழ் ஏடுகளைச் சேகரித்துப் பதிப்பித்தார். அதற்காக 3000க்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் கையெழுத்துப் பிரதிகளையும் அரும்பாடுபட்டுச் சேகரித்தார்.
பிப்ரவரி 22, 1857 - பேடன் பவல் பிறந்த நாள்
இங்கிலாந்து இராணுவத்தின் படைத் தளபதி. இராணுவ அனுபவங்களால், 20 மாணவர்களைக் கொண்டு சாரணர் இயக்கத்தை உருவாக்கினார். 'ஸ்கௌட்டிங் ஃபார் பாய்ஸ்' (Scouting for Boys) என்ற நூலை எழுதியுள்ளார்.
பிப்ரவரி 22, 1898 - தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள்
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, 16 வயதிலேயே உயிர் நீத்த இளம் இந்திய வீராங்கனை. 'முதன் முதலில் எனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர் இவர் தான்' என்று மகாத்மா காந்தி வள்ளியம்மைக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிப்ரவரி 24, 1955 - ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த நாள்
டெக் துறையின் தீர்க்கதரிசி. ஆப்பிள் நிறுவனர்களின் ஒருவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். ஆப்பிளில் பல நவீன சாதனங்கள் உருவாக வழிகாட்டியவர்.